Home FREE NOVELSசாபமாய் வந்த என் உயிரே CH 5

சாபமாய் வந்த என் உயிரே CH 5

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 5: அவ செத்துட்டா

போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னுடன் ஒரு கான்ஸ்டபிளையும், விஜயின் மேனேஜர் தினேஷையும் அழைத்துக் கொண்டு அவனது காரில் விழுந்து அடிபட்டு அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த முதியவரை காணச் சென்றார். 

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே ஒரு மறைவான இடத்தில் காத்திருந்த விஜயின் தம்பி சஞ்சயின் ஆட்கள் ஃபோனில் தினேஷ் இன்ஸ்பெக்டர் உடன் எங்கேயோ செல்வதாக அவனிடம் சொல்ல, சஞ்சய் அவர்களை தினேஷை ஃபாலோ செய்ய சொன்னான்.

அதனால் அவனது ஆட்களும் இன்ஸ்பெக்டரை பின் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள். அது அரசு மருத்துவமனை என்பதால் அவர்களை பின் தொடர்வோ, அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்கவோ சஞ்சயின் ஆட்களுக்கு சிரமமாக இருக்கவில்லை. அடிபட்டு கிடந்த முதியவர் மயக்கம் தெளிந்து சற்று நார்மல் ஆகி தன் அருகில் இருந்த நர்ஸ் இடம் “என்ன இங்க யாரு மா கொண்டு வந்து அட்மிட் பண்ணது?” என்று கேட்டு கொண்டு இருக்க,

இன்ஸ்பெக்டர் உடன் அவர் அட்மிட் செய்யப்பட்டு இருந்த அறைக்குள் நுழைந்த தினேஷ் “எங்க பாஸ் தான் ஐயா உங்கள இங்க அட்மிட் பண்ணது.” என்று சொல்ல, குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தார் அந்த முதியவர்.

தினேஷ் போலீஸ் உடன் வருவதால் அவர் சற்று பதட்டம் அடைந்து விட, அதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் “போலீஸ் ஐ பார்த்தவுடனே இப்ப எதுக்கு நீங்க டென்ஷன் ஆக்குறீங்க? நீங்க ஏதோ ராத்திரி நேரத்துல கண்ணு தெரியாம வந்து ஆக்டர் விஜய் குருமூர்த்தி கார்ல விழுந்துட்டீங்க. அத பக்கத்து வீட்ல இருந்த ஒரு பாப்பா பாத்துட்டு அவர் தான் உங்களை ஆக்சிடென்ட் பண்ணிட்டாருன்னு தப்பா நினைச்சுக்கிட்டா. அந்த பொண்ணோட அப்பன் ஏதோ உங்களுக்கு தெரிஞ்சவனாம்.

அந்த சின்ன புள்ள சொல்றத கேட்டுக்கிட்டு அவர் மேல கேஸ் கொடுத்தே தீருவேன் என்று ஒத்த கால்ல நிக்கிறான். நீங்களே சொல்லுங்க. இந்த காலத்துல சாதாரண பட்டவனே எங்கேயாவது போய் ஆக்சிடென்ட் பண்ண உடனே அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகி ஓடி போய்விடுவான். விஜய் சார் எவ்வளவு பெரிய ஹீரோ! அவர் நீங்க தெரியாம வந்து விழுந்திருந்தாலும் உங்களை காப்பாத்தணும்னு நினைச்சு, ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி அது வர்ற வரைக்கும் உங்களுக்காக வெயிட் பண்ணி இருக்காரு. ஆனா இந்த பத்திரிகைக்காரனுங்க நியூஸ்காக கண்டபடி எதை எதையோ சொன்னதால மக்கள் இதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. சரி அதெல்லாம் விடுங்க. 

விஜய் சார் உங்களை ஆக்சிடென்ட் பண்ணல. நீங்க தான் தெரியாம அவர் கார்ல போய் விழுந்துட்டீங்கன்னு நீங்க ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டா இது எல்லாமே சரியாயிடும். ஆனா விஜய் சாருக்கு எவ்வளவு நல்ல மனசு பாருங்க! உங்கள அவரோட கெஸ்ட் ஹவுஸில் வைத்து உங்களுக்குன்னு தனியா ஒரு நர்ஸ் போட்டு நீங்க சரியாக வரைக்கும் உங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க அவர் அரேஞ்ச் பண்ணி இருக்காரு. அது மட்டும் இல்லாம நீங்க சாகுற வரைக்கும் அங்கே தங்கிக்கலாம். மாசம் மாசம் உங்களுக்கு 50,000 பணமும் கிடைக்கும்.

இதையெல்லாம் செய்யற நல்ல மனசு வேற யாருக்கு வரும் சொல்லுங்க? ஏதோ விஜய் சார் மாதிரி நல்லவர் கண்ணில பட்டதுனால தான் இன்னிக்கி நீங்க உயிர் பொழைச்சு இருக்கீங்க.” என்று விஜய் எப்படியும் தன்னை ஹெவியாக கவனிப்பான் என்ற நம்பிக்கையில் சில பல பிட்டுகளை போட்டு “என்ன பெருசு! இது தானே நடந்துச்சு! அப்படி தான் நீ சொல்லணும். இத சொன்னா தான் உனக்கு இதெல்லாம் கிடைக்கும்.” என்று சொல்லாமல் அந்த முதியவரிடம் சொன்னார்.

அந்த முதியவரின் வயதிற்க்கும்  அனுபவத்திற்கும் இவன் உருட்டுவது எல்லாம் அவருக்கு புரியாதா என்ன? அவரது கை கால் நன்றாக இருந்து அவர் இரப்பகலாக சம்பாதித்தாலும் கூட அவரால் மாதம் 50 ஆயிரம் என்பதை கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. அது மட்டும் இன்றி ஒரு நடிகரின் கெஸ்ட் ஹவுஸ் என்றால் அதில் எத்தனை வசதிகள் இருக்கும்? இதில் தான் உயிரோடு இருக்கும் வரை தன்னை பார்த்துக் கொள்ள வேறு ஒரு நர்ஸ் இருக்கப் போகிறாள் என்றால் இந்த ஆக்சிடென்ட் நடந்தது கூட நல்லது தான் என்று நினைத்து சந்தோஷப்பட்ட அந்த பெரியவர் இன்ஸ்பெக்டரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு, “நான் தான் சார் கண்ணு தெரியாம போய் அவர் கார்ல விழுந்துட்டேன். அந்த மனுஷன் எவ்வளவு நல்லவரா இருந்தா, என்னால அவருக்கு இவ்ளோ பிரச்சனை வந்து இருந்தும், எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்யணும்னு நினைப்பாரு! அவர் எனக்கு சாமி மாதிரி. எங்க இருந்தாலும் அவர் நல்லா இருக்கணும். நான் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடுங்க.” என்று சொல்ல, “எப்பா சாமி ஒரு வழியா இந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சு.” என்று நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டான் தினேஷ்.

தான் சொன்னதை புரிந்து கொண்டு அந்த பெரியவர் ஈசியாக தன் வழிக்கு வந்து விட்டதால், அவர் சொன்னதை வாக்கு மூலமாக கான்ஸ்டெபிலை வைத்து எழுதி அந்த முதியவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு தினேஷ் உடன் ஸ்டேஷனுக்கு சென்றார் இன்ஸ்பெக்டர். இந்த மொத்த காட்சியையும் வீடியோவாக எடுத்து சஞ்சயின் ஆட்கள் அவனுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை தன் அம்மாவிடம் போட்டுக் காட்டிய சஞ்சய் “இத வச்சுக்கிட்டு இப்ப என்ன மாம் பண்றது?” என்று எரிச்சலுடன் கேட்டான்.

“ஹாஸ்பிடலுக்கு விஜயையும் வந்திருந்தா பிரச்சனை பெருசாகி இருக்கும் டா. ஆனா இந்த இன்ஸ்பெக்டர் இடையில புகுந்து எல்லாத்தையும் நாசுக்காக ஹேண்டில் பண்ணி கெடுத்து விட்டுட்டான். இருந்தாலும் இதுல அவன் பேசுறத வச்சு, விஜய் ஆக்சிடென்ட் பண்ணிட்டு இன்ஸ்பெக்டர் கைக்குள்ள போட்டுக்கிட்டு அந்த கிழவனுக்கு பணத்தை காட்டி அவன் வாயாலயே விஜய் மேல தப்பு இல்லை என்று சொல்ல வைத்துவிட்டான் என்று வேணா இந்த வீடியோவை பிரஸ் -ல குடுத்து போட சொல்லலாம். அந்த கிழவன் நேரடியா வந்து விஜய் மேல தப்பு இல்லைன்னு இன்னொரு தடவை ஸ்ட்ராங் ஆ சொன்னா, இந்த பிரச்சனை ஈசியா சால்வு ஆகிடும் தான். இருந்தாலும் விஜய் தான் அந்த ஆக்சிடென்ட் ஐ எப்படியும்  பண்ணி இருப்பான். பணத்தை குடுத்து எல்லாத்தையும் சமாளிச்சுட்டானு மக்கள் நினைப்பாங்க இல்ல அது நமக்கு போதும். அவன் வேற எதுலயும் மாட்டாமையா போயிடுவான்? அப்புறம் பாத்துக்கலாம். நான் சொன்ன மாதிரி சொல்லி யாருக்கும் தெரியாம இதை மீடியாவுக்கு அனுப்பி விடு. இன்னிக்கி இன்டர்நெட் Full ஆ விஜய் ஓட பெயர் நாரிக்கிட்டே இருக்கணும்.” என்ற வனிதா வில்லத்தனமாக சிரித்தாள். 

போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த இன்ஸ்பெக்டர் விஜய் இடம் நடந்ததை சொல்லி, அவன் மீது குற்றம் சொன்ன அந்த குட்டி பாப்பாவின் அப்பாவிடமும் முதியவர் தன் மீது தான் தவறு இருக்கிறது என்று ஒப்பு கொண்டதாக சொல்லி சமாளித்து விஜய் மீது கேஸ் போடாமல் அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்து விட்டார். அவர் சொன்னதைப் போலவே இந்த பிரச்சினையை அவர் சுமுகமாக முடித்து விட்டதால் மகிழ்ந்த விஜய் “தேங்க்ஸ் சார்” என்று அவரை கட்டிப்பிடித்து சொன்னவன் தினேஷை பார்த்து “இவரோட அக்கவுண்ட் டீடைல்ஸ் ஐ வாங்கி இவர் அக்கவுண்டுக்கு ஒரு 10 லேக்ஸ் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிவிடு.” என்று சாதாரணமாக சொன்னான்.

“பெரிய மனுஷங்கன்னா பெரிய மனுஷங்க தான்யா. ஒரு மணி நேரத்துல அசால்ட்டா எடுத்து பத்து லட்ச ரூபாய் கொடுக்கிறான். கடவுளே இனிமே இவனுக்கு இந்த மாதிரி எந்த பிரச்சனை வந்தாலும் அந்த பிரச்சனை எல்லாமே என்னோட ஸ்டேஷன் லிமிட்ல தான் நடக்கணும்.” என்று நினைத்த அந்த இன்ஸ்பெக்டர், “தேங்க்ஸ் சார். நான் உங்களோட பெரிய fan. உங்க கூட சேர்ந்து ஒரே ஒரு செல்பி மட்டும் எடுத்துக்குவா? நான் வீட்ல போய் என் பொண்டாட்டி கிட்ட காட்டுனா அவ ரொம்ப சந்தோஷப்படவா.” என்று சொல்ல, சிரித்த முகமாக “Why not?” என்று கேட்ட விஜய் அவரது தோள்களில் கை போட்டு அவருடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டான். 

விஜய் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வருவதற்குள் வனிதா சொல்லி சஞ்சய் பரப்பி விட்ட அந்த செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத்தீயை போல பரவத் தொடங்கியது. அதன் வீரியத்தால் வெளிநாட்டில் இருந்த அவனது அப்பா குருமூர்த்திக்கு கூட அந்த தகவல் தெரிய வந்து விட, 

உடனே அந்த செய்திகளை பரவாமல் தடுக்க சொல்லி தனது PR டீமிற்கு உத்தரவிட்ட குருமூர்த்தி, விஜய்க்கு கால் செய்து “அங்க என்ன நடக்குது விஜய்? நீ சேர்மன் ஆக போற டைம்ல இப்படி தான் Careless ஆ இருப்பியா? இந்த நியூஸ் ஐ எல்லாம் பார்த்தா நம்ம ஷேர் ஹோல்டர்ஸ்க்கு உன் மேல நெகட்டிவ் இம்ப்ரஷன் வந்துராதா?” என்று கோபமாக கேட்க, “அச்சோ அப்பா இப்ப தான் அந்த பிரச்சனையை முடிச்சேன். அதுக்குள்ள எந்த பரதேசியோ இந்த வீடியோவை எடுத்து வேணும்னே ரிலீஸ் பண்ணி என் பெயரை கெடுக்க பார்க்கிறான். அவன் எவனா இருந்தாலும் நான் விடமாட்டேன். 

நீங்க போன் ஜ வைங்க. நான் இன்னும் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கேன். இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை நான் பார்த்துக்கிறேன். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. Bye.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்த விஜய், 

இன்ஸ்பெக்டர் இடம் “நீங்க ஹாஸ்பிடல்ல பேசினத எவனோ வீடியோவா எடுத்து ரிலீஸ் பண்ணிட்டான். இப்ப என்ன பண்றது?” என்று கோபமாக கேட்க, “சார் என்னோட இத்தனை வருஷம் சர்வீஸ்ல இந்த மாதிரி நான் எத்தனைய பார்த்திருப்பேன்! கைல போன வச்சிக்கிட்டு எவனாவது காவாலி பையன் வீடியோ எடுத்து மீடியாவுக்கு குடுத்து இருப்பான். உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க இப்ப ஆளே இல்ல.

இனிமே இது என் பிரச்சனை நான் பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க.” என்ற இன்ஸ்பெக்டர் அவனை அனுப்பிவிட்டு, ஏற்கனவே வனிதா சொன்னதை போல ஈசியாக அந்த பிரச்சனையை முடித்து வைத்து விட்டார்.

ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த விஜய்க்கு மண்டை காய்ந்தது. சிறிது நேரத்திற்கு முன் தன் கையில் இரண்டு அவார்டுகளை வைத்துக்கொண்டு அவன் எவ்வளவு சந்தோஷமாக இருந்தானோ, அதைவிட பல மடங்கு அவனுக்கு தன் பெயரை கெடுக்க நினைப்பவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்களை இல்லாமல் செய்து விட வேண்டும் என்ற கோபம் கொழுந்தபட்டு எரிந்து கொண்டு இருந்தது. 

விஜய்யை தனியாக விடக்கூடாது என்று நினைத்த தினேஷ் அவனுக்கு முன்னே சென்று அவனது காரில் ஏறி டிரைவர் சீட்டில் அமர்ந்தவன், “சார் ப்ளீஸ் சார் நான் டிரைவ் பண்றேன்.” என்று கெஞ்ச, அவனுக்கு இருந்த கடுப்பில் அவனுக்கும் கார் ஓட்டும் எண்ணம் இல்லாமல் போய்விட, “சரி ஓட்டி தொல.” என்ற விஜய் அந்த காரின் பின் சீட்டின் கதவை திறந்து உள்ளே ஏறி அமர்ந்தான்.

தினேஷ் விஜயின் அப்பா வீடான குரு பேலஸ் -க்கு செல்லும் வழியில் சென்று கொண்டு இருப்பதை கவனித்த விஜய், “அங்க வேண்டாம் டா. என்னோட வில்லாவுக்கு போ.” என்று சொல்ல, சரி என்ற தினேஷ் அடுத்த அரை மணி நேரத்தில் விஜய்க்கு சொந்தமான ஒரு வில்லா வீட்டிற்கு சென்று அந்த வீட்டின் வாசலில் காரை நிறுத்தி இருந்தான்.

காரில் இருந்து இறங்கி வேகமாக உள்ளே சென்ற விஜய் தன் சட்டையை கழட்டி தரையில் விட்டெறிந்தவன், “உச்..!! அடிச்ச போதை எல்லாம் இறங்கிடுச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன். எந்த நாசமா போனவனுக்கு பொருக்கலைன்னு தெரியல. டேய் கிழவா! கரெக்டா நான் குடிச்சிட்டு ரோட்ல போகும் போது தான் நியும் ரோட்ல வருவியா? ஏன் டா கருமம் எனக்குன்னே வரீங்க!” என்று புலம்பியவன், நேராக அங்கிருந்த மினி பாருக்கு சென்று மீண்டும் குடிக்க தொடங்கினான்.

“இவர் இப்படி குடிச்சு குடிச்சு உடம்ப கெடுத்துக்கிறாரே!” என்று நினைத்த தினேஷுக்கு சென்று அவனை தடுக்க வேண்டும் என்று தான் இருந்தது. 

ஆனால் அவன் மீது இருக்கும் பயத்தில் அவனிடம் எதுவும் பேசாமல் ஹாலிற்கு வந்து அவர்களுக்கான உணவை Chef இடம் தயாரிக்க சொல்லிவிட்டு உஷ் என்று சோபாவில் வந்து அமர்ந்தான். அவன் ஒரு நொடி கூட, அப்படி ரிலாக்ஸ் ஆக இருந்திருக்க மாட்டான். அதற்குள் அவனது ஃபோன் ஒலித்தது.

அந்த காலை அட்டென்ட் செய்து தினேஷ் பேச, மறுமுனையில் இருந்தவன் சொன்னதைக் கேட்டு அவனது முகம் வாடிவிட்டது. 

இந்த நேரத்தில் இதை போய் விஜய் இடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. 

“நான் இத அவருக்காக இப்ப சொல்லாம விட்டா, அப்புறம் அவர் என்னை சும்மா விட மாட்டாரு.” என்று நினைத்த தினேஷ் தன் தைரியம் அனைத்தையும் திரட்டி கொண்டு பாருக்கு சென்று அங்கே குடித்துக் கொண்டு இருந்த விஜய் இடம் “சார் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.” என்று இழுக்க, “டேய் எரிச்சல் மயிரை கிளப்பாம சீக்கிரம் சொல்லிட்டு போ டா.” என்று விஜய் கத்த, “சார் பிரியா மேடம் இறந்துட்டாங்களாம்.” என்று திக்கி திணறி சொன்னான் தினேஷ்.  

– காதல் மலரும்🌹

You may also like

Leave a Comment

About Me

Featured