அத்தியாயம் 10: இவரை எப்படி எழுப்புறது?
ஏற்கனவே தனக்காக அரேஞ்ச் செய்து வைக்கப்பட்டிருந்த இரவு உடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமில் உள்ள சேஞ்சிங் ஏரியாவிற்கு சென்றாள் தேன்மொழி. அவளுக்கு தன் அம்மாவையும் தம்பியையும் இப்போதே சென்று பார்க்க வேண்டும் போல இருந்தது.
ஆனால் அது அவளால் முடியாதே… அதனால் அழுது கொண்டே தனது ஆடையை மாற்றியவள், எப்படியும் அங்கே கேமரா இருக்காது என்ற தைரியத்தில் சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்து தன் முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதாள்.
தன்னை காப்பாற்ற இங்கு யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்கு தோன்றியது. ஆனால் அப்படி ஒருத்தர் யார் இருக்கிறார்? அவள் எங்கே இருக்கிறாள்? என்று இன்னும் அவளுக்கே தெரியவில்லை.
இதில் அவளை யாரோ ஒருவர் தேடி கண்டுபிடித்து இங்கே வந்து காப்பாற்றுவது எல்லாம் முடியாத காரியம் தானே?
அதை நினைத்து பார்த்து மனமுடைந்த தேன்மொழி “நான் இங்க இருந்து எவ்வளவு கத்தி கதறனாலும் வெளிய இருந்து யாரும் என்ன வந்து காப்பாற்ற போறது இல்லை என்று எனக்கு நல்லா தெரியும். ஆனா எப்படியாவது இங்க இருந்து தப்பிச்சு போயிட்டா நல்லா இருக்கும்னு என்னால நினைக்காம இருக்க முடியலையே!
எப்படி யோசிச்சு பார்த்தாலும் என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. கடவுள்னு ஒருத்தர் இருக்கிறது உண்மையா இருந்தா, இப்படி ஒரு கஷ்டத்தை ஏன் எனக்கு கொடுக்கணும்?
சின்ன வயசுல நான் அப்பா எங்கன்னு கேட்கும் போது, அம்மா, அப்ப சாமி கிட்ட போய்ட்டாங்கன்னு சொல்லி இனிமே அவரும் நமக்கு சாமி மாதிரி தான்னு சொல்லுவாங்க.
நானும் அதை நம்பி உங்களையும் சாமி மாதிரி தானே கும்பிட்டேன் அப்பா! கடைசியில நான் கும்பிட்ட அந்த கடவுளும் என்னை காப்பாத்தல. நீங்களும் என்ன கை விட்டுட்டீங்க இல்ல!” என்று நினைத்து உள்ளே அமர்ந்து வெகு நேரமாக கதறி அழுதாள்.
அப்போது அங்கே அவளை தேடிக் கொண்டு வந்த நான்சி “மேடம் நீங்க ரொம்ப நேரமா உள்ள இருக்கீங்கன்னு உங்களுக்கு என்ன ஆச்சுன்னு என்ன பார்த்துட்டு வர சொன்னாங்க.
இனிமே நீங்க ரெஸ்ட் ரூம் போகணும்னா கூட தனியா போக கூடாதுன்னு மிஸ்ஸஸ். பிரதாப் சொல்லிட்டாங்க.
நீங்க இந்த ரூம்ல இருக்கும்போது, எப்பவுமே நான் உங்க கூட தான் இருக்கணுமாம். அங்க அர்ஜுன் சாரை தனியா விட்டுட்டு நம்ம ரெண்டு பேரும் இங்க ரொம்ப நேரம் இருக்கிறது நல்லது இல்ல.
அதான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டீங்க இல்ல.. ப்ளீஸ் வெளிய வாங்க மேடம்!” என்று சொல்லி அவளை அழைத்து சென்றாள்.
வந்த கோபத்திற்கு அந்த நர்ஸ் நான்சியின் தலை முடியைப் பிடித்து எதிரில் இருந்த சுவற்றில் வைத்து நங் நங்கென்று இடித்து தன்னை இப்படி கட்டளையிடும் அவளது வாயை அடித்து உடைக்க வேண்டும் போல அவளுக்கு இருந்தது.
பின் “நம்ம எதுக்கு இவள போய் அடிச்சுக்கிட்டு! இவ ஜஸ்ட் இங்க வேலை பாக்குறவ!
அவங்க இவளுக்கு குடுக்கிற வேலையை செய்யுறா. இதுல நம்ம கோவப்படுறதுக்கு ஒன்னும் இல்ல.” என்று நினைத்து தன்னை சமாதானப்படுத்திக் கொண்ட தேன்மொழி எழுந்து அவளுடன் சென்றாள்.
அர்ஜுனின் குயின் சைஸ் பெட்டில் அவளை அமர வைத்த நான்சி நட்புடன் கட்டியணைத்து “Happy married life Mrs. Arjun. இந்த லைஃப் எப்படி ஸ்டார்ட் ஆகியிருந்தாலும், பியூச்சர்ல நீங்க நல்லா இருப்பீங்க.
எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. And God bless you. அர்ஜுன் சாருக்கு சீக்கிரம் சரியாயிட்டா, எல்லாமே மாறிடும்.
சோ அவருக்கு சரியாகனும்னு நீங்க பிரே பண்ணிக்கோங்க. நானும் உங்க ரெண்டு பேருக்காக prey பண்ணிக்கிறேன். குட் நைட்.” என்று சொல்லிவிட்டு அங்கே தனக்காக ஒதுக்கப்பட்டு இருந்த சிறிய அறைக்கு சென்று விட்டாள்.
தேன்மொழி சோர்வாக இருந்ததால் வேறு வழி இல்லாமல் அப்படியே கோமாவில் அசைவின்றி கிடந்த அர்ஜுனனின் அருகில் படுத்துக் கொண்டாள்.
ஆக்சிஜன் மாஸ்க் மாட்டப்பட்டு இருந்த அவனது முகத்தை இப்போது அவளால் நெருக்கத்தில் காண முடிந்தது. ஜனனி சொன்னதைப்போல இவனுக்கு 40 வயதாகி இருக்கும் என்று இப்போதும் அவளால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் அவன் அத்தனை அழகாக இருந்தான்.
அதனால் சில நிமிடங்கள் வரை அவனது முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த தேன்மொழி “அந்த நர்ஸ் பொண்ணு சொல்லிட்டு போன மாதிரி இவர் நார்மல் ஆனா தான் என் வாழ்க்கை மாறுவதற்கு ஏதாவது சான்ஸ் கொஞ்சமாவது இருக்கும்.
இவரோட ஒய்ஃப் என்ன மாதிரியே இருந்திருக்காங்க. அதனால தான் அவங்க வீட்ல இருக்கிறவங்க என்ன இவருக்கு மேரேஜ் பண்ணி வச்சிருக்காங்க.
இவர் அந்த அளவுக்கு அவர் வைஃபை லவ் பண்ணி இருந்தா, அவங்களை மாதிரியே எத்தனை பேர் இருந்தாலும், கண்டிப்பா அவங்களையெல்லாம் தன் வைஃபா ஏத்துக்க மாட்டாரு.
அப்படி ஒன்னு நடந்தா மட்டும் தான், இங்க இருந்து என்னால தப்பிச்சு போக முடியும். சோ அட்லீஸ்ட் எனக்காகவாவது நீங்க சீக்கிரம் கண் முழிக்கணும் அர்ஜுன் சார் ப்ளீஸ்!
அங்க எனக்காக என் ஃபேமிலி ஃபிரண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நான் திரும்ப போகணும்.” என்று தனக்குள் அவனிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள்.
இப்படி அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்ததால் தன்னை மீறி அவன் முகத்தை தொட்டுப் பார்த்தாள் தேன்மொழி. அந்த தருணம் அவள் அவளாகவே இல்லை.
அவளையும் மீறி அவள் மனதில் ஏதோ ஒரு பரிச்சயமான உணர்வு ஏற்பட்டது. ஒருவேளை அந்த உணர்வு அவள் கழுத்தில் தொங்கும் தாலி ஏற்படுத்திய பந்தமாக கூட இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கும் நிலையில் அவள் இல்லை.
தனது அறையில் உள்ள சோஃபாவில் அமர்ந்து லேப்டாப்பில் அங்கே நடப்பதை லைவில் சிசிடிவி கேமரா வழியாக பார்த்துக் கொண்டிருந்த ஜானகி “கொஞ்சம் அடம் பிடிச்சாலும், இந்த பொண்ணு பரவால்ல பிராக்டிகலா யோசிக்க ஆரம்பிச்சிட்டா.
இப்படியே போனா இன்னும் கொஞ்ச நாள்ல இங்க இருக்கிற எல்லாத்துக்கும் இவ பழகிடுவா. இன்னும் ரெண்டு மாசத்துல என் பையன் முழுசா சரியாயிடுவான்னு நான் இப்ப முழுமனசா நம்புறேன்.” என்று நினைத்து கண் கலங்கினாள்.
பின் இன்று நடந்ததும் போதும், அதைத் தான் பார்த்ததும் போதும் என்று நினைத்து லேப்டாப்பை ஷட் டவுன் செய்துவிட்டு சென்று படுத்தாள்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு இன்று தான் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அதனால் உடனே ஆழ்ந்த நித்திரைக்கு சென்றாள் ஜானகி.
அங்கே சென்னையில் விடியற்காலை நேரத்தில் உதையா மற்றும் ஆதவனுடன் தேன்மொழியைப் பற்றி அவள் காணாமல் போன இடத்தில் ஏதாவது தகவல் கிடைக்கிறதா? என்று தேடிக் கொண்டு இருந்தாள் விஜயா.
அவர்கள் மூவரும் தனித்தனியாக பிரிந்து தேடியதில் ஸ்ட்ரீட் லேம்ப்பின் அருகே ஒரு தோடு கிடப்பதை கண்ட உதையா கீழே குனிந்து அதை எடுத்துப் பார்த்தான்.
இதற்கு முன் அந்த அழகிய வெள்ளை நிற ஜிமிக்கியை எங்கேயோ பார்த்ததை போல அவனுக்கு ஒரு உணர்வு தோன்ற, அதை எடுத்துக் கொண்டு வேகமாக விஜயாவிடம் சென்று “அம்மா…
இங்க பாருங்க.. இது தேனோடது தானே!
அவ இத போட்டு நான் பார்த்து இருக்கேன்.” என்றான்.
பதட்டத்துடன் அதை தன் கையில் வாங்கி பார்த்த விஜயா கண்ணீருடன் “ஆமா ஆமா உதையா.. இது தேன்மொழியோட தோடு தான்.
நியூ இயர் வரப்போகுதுன்னு போன வாரம் தான் நானும் அவளும் கடைக்கு போய் இந்த தோட்டை வாங்குனோம்.
இது இங்க கிடக்குதுன்னா, என் பொண்ணு எங்க இருக்கான்னு தெரியலையே..!!
ஐயோ தேனு.. எங்கடி இருக்க? ஏண்டி இப்படி அம்மாவை தனியா தவிக்க விட்டுட்டு போன?” என்று அழ தொடங்கி விட்டாள்.
ஆதரவாக விஜயாவை அனைத்துக் கொண்ட உதையா “பயப்படாதீங்க அம்மா, நம்ம தேனு ரொம்ப நல்ல பொண்ணு.
அவளுக்கு தப்பா எதுவும் நடக்காது. இங்க எந்தெந்த வீட்ல சிசிடிவி கேமரா இருக்குன்னு நான் பார்த்து வைத்து விட்டேன்.
காலைல விடிஞ்சதுக்கப்புறம் நம்ம இங்க வந்து தேனு காணாம போனதை பற்றி சொல்லி அந்த வீட்டுக்காரங்க கிட்ட சிசிடிவி ஃபுட்டேஜை காட்ட சொல்லி கேட்டு பாக்கலாம்.
அவனுங்க தேனை கடத்திட்டு போன காரோட நம்பர் மட்டும் என்னன்னு தெரிஞ்சுட்டா போதும். என்ன பண்ணியாவது நான் அவனுங்க யாருன்னு கண்டு பிடிச்சிடுவேன்.” என்று உறுதியாக சொல்லி அவளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்றான்.
விஜயாவிற்கு வலுக்கட்டாயமாக கொஞ்சம் உணவையும், ரெகுலராக அவள் சாப்பிடும் மருந்து மாத்திரைகளையும் கொடுத்து அவளை உதையா படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான்.
அப்போது அவனை அணைத்துக் கொண்ட ஆதவன் “அம்மா பக்கத்துல இருந்ததுனால நான் கஷ்டப்பட்டு என்னை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு வெளிய பயத்தை காட்டாம இருக்கேன் அண்ணா.
ஆனா நெஜமாவே எனக்கும் ரொம்ப பயமா தான் இருக்கு. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் ஒரு பொண்ணு காணாம போனாலே, அதுக்குள்ள அவளுக்கு என்ன வேணாலும் ஆகலாம்.
தேன்மொழி காணாம போய் ரொம்ப நேரம் ஆகுது. இந்த போலீஸ்காரணங்களும் எதுவும் பண்ற மாதிரி தெரியல.
அவள பத்தி பெருசா நமக்கும் எதுவும் தெரியல. நம்ம எப்படி அவளை கண்டுபிடிக்க போறோம்? அவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா, கண்டிப்பா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அண்ணா.” என்று சொல்லிவிட்டு அழுதான்.
உதையாவின் கண்களும் கலங்கியது. அவனும் அதே மனநிலையில் தான் இருந்தான். அவனது தேன்மொழி இல்லாத இந்த வாழ்க்கையை அவனால் எப்படி வாழ முடியும்?
ஆனால் இப்போது அவனும் உடைந்து விட்டால், ஆதவனையும் விஜயாவையும் யார் தேற்றுவது? அதனால் தன் பற்களை கடித்து அழுகையை விழுங்கிய உதையா “ஒன்னும் ஆகாது. ஒரு பர்சன்ட் கூட நீ நெகட்டிவா யோசிக்க கூடாது ஆதி.
அவளுக்கு எதுவும் தப்பா நடக்காது. நடக்கவும் கூடாது. நீ அந்த கடவுளை நம்பு. நானும் நம்புறேன். அந்த நம்பிக்கையில தான் இப்படி நார்மலா நின்னு உன் கிட்ட பேசிட்டு இருக்கேன்.” என்று சொல்லி அவனை சமாதானப்படுத்தினான்.
தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட ஆதவன் “அண்ணா.. நான் இப்படி கேட்கிறேன்னு கோச்சுக்காதீங்க.
தேனு கிடைக்கிற வரைக்கும் நீங்க இங்கயே இருக்கீங்களா ப்ளீஸ்? நீங்க எங்க கூட இருந்தா, எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கு.” என்று சொல்ல,
“நான் எப்படி டா இந்த மாதிரி சூழ்நிலையில உங்களை தனியா விட்டுட்டு போவேன்? இந்த எல்லா பிரச்சனையும் முடிஞ்சு தேன்மொழி திரும்பி வர்ற வரைக்கும் நான் உங்க கூட இங்க தான் இருப்பேன். ஓகேவா?” என்று உதையா கேட்க, “தேங்க்ஸ் அண்ணா.” என்ற ஆதவன் அவனை அணைத்துக் கொண்டான்.
– மீண்டும் வருவாள்.. ❤️
(என்னை பிரதிலிப்பியில் ஃபாலோ செய்து சப்போர்ட் செய்யுங்கள்.)