Chapter 9

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
“டேய் டேய்!!!! இப்ப இந்த ரூம கிளீன் பண்றது ரொம்ப அவசியமா??? ஏன்டா இப்படி பண்ற….. இங்கிருந்து என்னடா ஒரு அஞ்சு நிமிஷம் தாண்டா வண்டில ஆஃபீஸுக்கு போறதுக்கு…. கீழ ரூம்ல கொண்டு போய் விட்டுருவோம் டா” என்று சரவணன் ஆதங்கத்தில் பேச, அபிலாஷ் குறுக்கிட்டு, “உனக்கு என்ன அவ்ளோ கரிசனம் அந்த பொண்ணு மேல” என்று கேட்டான்.

“இல்ல உங்களுக்கு புரியலையா…. என்ன இருந்தாலும் அவளும் ஒரு பொண்ணு டா… அதுவும் ஆப்ரேஷன் எல்லாம் முடிச்சிட்டு வந்திருக்குற பொண்ணு டா…. ஏன்டா இப்படி பண்ணனும்…. இங்க எந்த வசதியும் இல்ல…. ஒரே ஒரு ரூம் இவ்ளோ தான் இருக்கு…. இங்க ஃபேன் தேவபடாது…. ஆனா, லைட் கூட இல்ல… எதுவுமே இல்ல…. வாலன்டியரா வரவங்க எல்லாருக்கும் தானே கிராமத்தில உள்ள எல்லாரும் சேர்ந்து ரூம்ஸ் கட்டினாங்க…. இங்கே ஏன் வெச்சுக்கணும்” என்று சரவணன் கோபத்தில் கேட்டான்.

“போனது என் தங்கச்சி தானே…. நீ அப்படி தான் பேசுவ” என்று விக்ரம் கோபத்தில் பேச, “விக்கி நீ கோபத்துல இருக்கன்னு என்ன வேணா பேசலாம்னு அர்த்தம் கிடையாது….. நான் மூணு மணி நேரம் அந்த பொண்ணு கூட ட்ராவல் பண்ணிட்டு வந்து இருக்கேன்…. அவகிட்ட பேசின வரைக்கும் ரொம்ப அமைதியான பொண்ணா தெரியுறா…. எனக்கென்னமோ அவ மேல தப்பு இருக்கும்னு தோணல” என்று சரவணன் கூறினான்.

“உனக்கு யாரு மேலயும் தப்பு தோணாது….. நீ எப்படித் தான் மதர் தெரேசாவா வாழ்ந்துட்டு இருக்கேனு எனக்கு தெரியல சரவணா…. நீயும் நானும் போய் பார்த்தோமா இல்லையா சிசிடிவி ஃபூட்டேஜ…. அந்த பார்க்கிங்கில் அவ்வளவு இருட்டுன்றதால நமக்கு மூஞ்சி தெரியல…. ஆனா, அப்புவோட டிரஸ்ஸ வெச்சி தான் நம்ம கண்டுபிடிச்சோம்…. ரொம்ப வற்புறுத்தி தானே ஒரு பொண்ணு அப்புவ கார்ல ஏத்தினா…. எதுக்கு ஏத்தினா…. என்ன நடந்ததுன்னு எதுவுமே தெரியல…. அவ மட்டும் அன்னிக்கு கூட்டிட்டு போகாம இருந்திருந்தா, அந்த ஆக்சிடென்ட் நடந்திருக்காதுல…. ரொம்ப வலுக்கட்டாயமா கூட்டிட்டு போயிட்டு ஆக்சிடென்ட் பண்ணதும் இல்லாம…. எல்லாத்தையும் மறந்துட்டாளா இல்ல மறந்துட்ட மாதிரி நடிக்கிறாளான்னு கூட எனக்கு தெரியல இப்ப வந்து” என்று அபிலாஷ் கூறினான்.

“உங்களுக்கு இப்ப நான் என்ன சொன்னாலும் நான் புதுசா வந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்றேன்னு நீங்க ரெண்டு பேரும் நினைப்பீங்க…. ஆனா, அபர்ணா போனதுக்கு எனக்கு எவ்வளவு வருத்தம் இருக்குன்னு எனக்கு தெரியும்…. ஆனா, அதுக்காக இவளை இப்படி கஷ்டப்படுத்தணும்னு நான் மட்டும் இல்ல அபர்ணா கூட நினைக்க மாட்டா… அப்படி நினைக்கிறவளா இருந்தா கடைசி நேரத்துல விக்ரம் அவளுக்கு ஃபோன் பண்ணும் போது கூட தேவைப்பட்டா என் உறுப்புகள இவங்களுக்கு குடுத்துடுங்கன்னு ஏன் சொல்லணும்…. வற்புறுத்தி கூட்டிட்டு போனா, கூட்டிட்டு போனவ எப்படி போனா என்னன்னு தானே கடைசி நிமிஷத்துல யோசிப்போம்…. அதை விட்டுட்டு அபர்ணாவே அவளை காப்பாத்துங்க அப்படின்னு ஏன் சொல்லணும்” என்று சரவணன் கேட்க, இருவரும் அமைதியாக இருந்தனர்.

“நீ இப்படி ஏதாவது இங்க பேசிட்டே இருப்ப ஒன்னு வேலைய பண்ணு இல்லன்னா வெளியே போ” என்று விக்ரம் கூற, “இங்க இருந்தா என் வாய் பேச தான் செய்யும்… நான் வெளியவே போறேன் போடா” என்று சரவணன் வெளியே சென்றான்.

வள்ளி, ஸ்ரீனிவாசன், கவிதா மற்றும் சனந்தா வீட்டு வாசலில் இருக்கும் திண்ணை மீது அமர்ந்து கொண்டிருந்தனர். “உங்க ஊர் எதுப்பா??. உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கீங்க??” என்று வள்ளி கேட்க, “நான் அம்மா அப்பா தம்பி மட்டும் தான்… தம்பி வெளிநாட்டுல படிச்சிட்டு இருக்கான்…. நானும் படிப்பு முடிச்சுட்டு என்னோட சீனியர்ஸ் கூட சேர்ந்து வேலை பார்த்துட்டு இருக்கேன்… நாங்க கோயம்புத்தூர்ல இருக்கோம்” என்று சனந்தா கூறினாள்.

“நீங்க வேலை பார்த்துட்டு இருந்தா எப்படி இங்க வாலன்டியரா வர முடியும்?” என்று கவிதா கேட்க, “எங்களுடையது ரெகுலர் வேலை எல்லாம் இல்ல… சீனியர்ஸ் அவங்க கூட சேர்ந்து ஃபுட் இன்ஸ்ஃபெக்ஷன ஒரு சர்விஸ் மாதிரி ஒரு டீம் ஃபார்ம் பண்ணி பண்ணிட்டு இருக்கோம்” என்று சனந்தா கூற, “அப்படியா!!! என்ன எல்லாம் பண்ணுவீங்க??” என்று உற்சாகத்தில் ஸ்ரீனிவாசன் கேட்டார்.

“ஒரு சில இடத்துல அது ஹோட்டலா இருக்கலாம், ஸ்கூலா இருக்கலாம், காலேஜா இருக்கலாம், இல்ல ஹாஸ்டஸா கூட இருக்கலாம், எங்க வேணாலும் ஃபுட் அவங்களுக்கு சரியா இல்லனா கவர்மெண்ட்க்கு கொண்டு போவாங்க… அவங்களுடைய பிரச்சனைய அங்க தீர்க்க முடியல அப்படின்னா…. அது எங்களுக்கு வரும்…. எங்களுக்கு வந்ததுன்னா நாங்க இன்ஸ்பெக்ஷனுக்கு போயிட்டு அங்க எல்லாத்தையும் பார்த்துட்டு…. டெஸ்டிங்கு அனுப்பிட்டு அதுக்கு அப்புறமா நாங்க பிரஷர் குடுப்போம், அது எப்படின்னா சோஷியல் மீடியால போஸ்ட் பண்ணி பிரஷர் குடுப்போம், அதே மாதிரி ஃபுட் இன்ஸ்பெக்ஷன் போர்டுக்கு எங்களுடைய டீம் மூலமாக நாங்க திருப்பி அந்த கேஸ் ஃபைல் பண்ணி கவர்மெண்ட்ல இருந்து வர மாதிரி பண்ணோம்னா ஓரளவுக்கு பிரச்சனைகள் தீரும்” என்று சனந்தா கூறினாள்.

“ஓ!!! இப்படியும் இருக்காம்மா?” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “ம்ம்… ஆமா…. அங்கிள்… இது நான் காலேஜ்ல படிக்கும் போதே எங்க சீனியர்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க…. இன்னும் கொஞ்சம் விவரமா எனக்கு படிக்கணும்னு ஆர்வம் இருந்துதுனால நான் நியூயார்க்ல ஒரு கோர்ஸ் முடிச்சுட்டு…. அதுக்கப்புறம் வந்து தான் அவங்க கூட சேர்ந்து இந்த வேலையை பார்க்க ஆரம்பிச்சேன்” என்று சனந்தா கூறினாள்.

“இவ்ளோ படிச்சிருக்கலம்மா ஒரு நல்ல வேலைக்கு போலாமே” என்று வள்ளி கேட்க, “போகணும் தான் ஆன்ட்டி… ஒரு ரீசர்ச் பண்ணிட்டு இருக்கேன் அந்த ரீசர்ச் முடிச்சிட்டு பி.ஹெச்.டி முடிச்சுட்டு அதுக்கப்புறம் ஒரு ரெகுலர் வேலைக்கு போக வேண்டியது தான்” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம்…. சரி சரி…. இருங்க பசங்களுக்கு ஒரு டீ மட்டும் போட்டு குடுத்துட்டு வந்துடுறேன்” என்று வள்ளி கூறி, சைகையில் ஸ்ரீனிவாசனை உள்ளே வருமாறு அழைத்து இருவரும் உள்ளே சென்றனர்.

“என்ன வள்ளி என்ன வேணும்??” என்று ஸ்ரீனிவாசன் கேட்க, “என்னங்க அந்த பொண்ணு நல்ல வசதியான குடும்பத்தில இருந்து வந்திருக்கும் போல…. இவ்வளவு படிப்பு படிச்சிருக்கு வேலைக்கு கூட போகாம இந்த மாதிரி சேவை எல்லாம் பண்ணுதுன்னா அப்போ அவங்க எல்லாம் நல்ல வசதியான குடும்பமா தான் இருக்கும் போல…. அந்த பொண்ண கொண்டு போய் பின்னால ரூம்ல தங்க வெக்கிறேன்னு சொல்றாங்க விக்ரம்… அவனை என்னன்னு நான் சொல்லறதுன்னே தெரியலையே… இங்கே வீட்டிலேயே ரூம் இருக்கு இங்கையாவது லைட் இருக்கும்… நம்ம ஊருக்கு ஃபேன் தேவையில்ல…. ஆனா, லைட்டாவது வேணும்ல… இருட்டுல கஷ்டமா இருக்கும்ல அந்த பொண்ணுக்கு” என்று வள்ளி முறையிட்டார்.

“எனக்கும் அது புரியல மா… அவன் இவ்ளோ கோவப்பட்டு இப்ப தான் பார்க்குறேன்….. அதான் என்ன பேசுறதுன்னு எனக்கும் தெரியல அவன் கிட்ட… அதனால தான் அமைதியா இருந்தேன்…. அவனே அதுக்கான பதிலையும் சொல்லுவான் மா.. அவன் இதெல்லாம் பண்றான்னா ஏதாவது காரணம் இருக்கும்னு தான் நினைக்கிறேன்” என்று ஸ்ரீனிவாசன் கூறினான்.

“என்ன காரணமா வேணா இருக்கட்டும்… எதுக்கு இந்த பொண்ணு இங்க வந்து இவ்வளவு கஷ்டப்படணும் எனக்கு பார்க்க கஷ்டமா இருக்குங்க” என்று வள்ளி கூற, “சரி நான் அவளுக்கு தேவையான டார்ச் லைட் தற்காப்புக்காக அவளுக்கு நம்ம வெச்சிருக்க அந்த ஊசி கத்தி இது எல்லாத்தையும் கொண்டு போய் குடுக்கிறேன்… நீ ரொம்ப யோசிக்காத… கொஞ்ச நாள் கழிச்சு அவனே சரி ஆகுவான்… அப்ப வேணா நம்ம வீட்டுல இல்லன்னா கீழ ரூம்ல தங்க வெக்கலாம்” என்று ஸ்ரீனிவாசன் கூறி சென்றார்.

“உங்க பேர் என்ன?” என்று சனந்தா கேட்க, “என் பேரு கவிதா” என்று கூறினாள். “இவ்ளோ படிச்சிட்டு இங்க எதுக்கு வந்து இருக்கீங்க” என்று கவிதா தயக்கத்துடன் கேட்க, “எனக்கு இதெல்லாம் பண்ண பிடிக்கும் அதனால தான்…. இப்படி ஒரு ஆஃபர் இருக்குன்னு எங்க ஃபேமிலி ஃபிரண்ட் ஒரு அங்கிள் அவர் சொன்னதும் நான் சரின்னு ஒத்துக்கிட்டேன்” என்று சனந்தா பட்டும் படாமலும் கூறினாள்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் சரவணன் இவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டான். “என்ன அண்ணா க்ளீன் பண்ணாம இங்க வந்துட்டீங்க?” என்று கவிதா கேட்க, “ஒன்னும் இல்லம்மா அவங்களே பண்றாங்க அதனால நான் வந்துட்டேன்” என்று சரவணன் கூறினான்.

ஸ்ரீனிவாசன் ஒரு துணி பையில் டார்ச் லைட் சிறிய கத்தி ஊசி நூல் காட்டன் ரோல் ஒரு சிறிய ஆயின்மென்ட் என அனைத்தும் கொண்டு வந்து சனந்தாவிடம் கொடுக்க, “என்ன அங்கிள் இது?” என்று சனந்தா கேட்டாள்.

“இது இங்க யாரு வந்தாலும் இத நாங்க குடுக்கிறது தான்மா… இது எல்லாரும் கிட்டயும் இருக்கும்” என்று ஸ்ரீனிவாசன் கொடுக்க, “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்!!!” என்று சனந்தா கூறினாள்.

“மாமா இது அபர்ணாவோட டார்ச் இதை…” என்று கவிதா கேட்பதற்குள், “இப்போதைக்கு இது தான்மா இருக்கு… அந்த ரூம்ல ஒரு லைட் கூட இருக்காது அதனால இப்போதைக்கு இதை குடுத்து இருக்கேன்… இத வெச்சுக்கட்டும் நாளைக்கு கீழே ஆஃபீஸ்ல இருந்து கொண்டு வர சொல்றேன் புதுசு” என்று ஸ்ரீனிவாசன் கூற, கவிதாவுக்கு முகமே மாறிவிட்டது. “பரவால்ல அங்கிள் இதுவே போதும் புதுசு வேண்டாம்” என்று சனந்தா கூறினாள்.

“கவிதா ரொம்ப தாமதிக்காத எனக்கு என்னமோ இந்த பொண்ணு வந்ததிலிருந்து ரொம்ப குழப்பமா இருக்கு…. அதுவும் இல்லாம அவ நல்ல படிச்சிருக்கா…. அதுலயும் இவ ரொம்ப அழகா இருக்கா…. இது எல்லாத்தையும் தாண்டி அந்த பாட்டி வேற வந்து இவளை பார்த்து பேசிட்டு போயிருக்காங்க… ரொம்ப தாமதிக்காத கவிதா” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள் கவிதா.

“இந்தாங்க பா டீ குடிச்சிட்டு வேலைய பாருங்க…. ஆமா, சரவணா எங்க?” என்று வள்ளி கேட்க, “அவனால வேல செய்ய முடியலன்னு வெளிய தான் போனான் மா… வாசல்ல உக்காந்து இருப்பான் பாருங்க” என்று விக்ரம் கூற, “சரி அவனுக்கு குடுத்துக்கிறேன்” என்று வள்ளி சரவணனை தேடி செல்ல, “என்னடா நீ இங்க வந்து உட்கார்ந்து இருக்க?? வீட்டுக்குள்ள நீ போனதையே பார்க்கலையே” என்று வள்ளி கேட்க, “நான் வீட்டுக்குள்ள வரல சைடு வழில வந்தேன் அதான் நீங்க பார்த்து இருக்க மாட்டீங்க…. அதுவும் இல்லாம காலைல வண்டி ஓட்டிட்டு வந்ததுனால டயர்டா இருக்கேன் அது தான்” என்று சரவணன் கூறினான்.

“இந்தா கவிதா உனக்கும் டீ போட்டு இருக்கேன் குடிச்சிட்டு, அப்பா ஃபோன் பண்ணாரு நீ வீட்டுக்கு கிளம்பு இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்ட ஆரம்பிச்சிரும்” என்று வள்ளி கூற, சரிங்க அத்தை என்று தலையை அசைத்தாள் கவிதா. சனந்தா அவளின் வீட்டிற்கு பேசிவிட்டு வருவதாக கூறி மொட்டை மாடிக்கு சென்றாள்.

“சரவணா!!! அந்த பொண்ணு நல்ல வசதியான பொண்ணா இருக்கும் போலயே எப்படி இங்க தங்குவா?? என்று வள்ளி கேட்க, “நீ இதையே பேசிட்டு இருக்காத வள்ளி…. அவங்களா விருப்பப்பட்டு வரர்து தான் வாலன்டியர் எல்லாம்…. இதெல்லாம் அவங்க தெரிஞ்சு தான் வருவாங்க” என்று ஸ்ரீனிவாசன் கூறவும் வள்ளி அமைதியாகிவிட்டார்.

“என் கிட்ட காலையில வரும் போது ஒன்னு சொன்னா மா அந்த பொண்ணு… எங்க அப்பா நல்லாவே சம்பாதிச்சு இருக்காரு இப்ப நான் சம்பாரிச்சு தான் குடும்பத்தை காப்பாத்தணும்னு இல்ல, அதுவும் இல்லாம எனக்கு இப்ப இந்த சேவை பண்றது ரீசர்ச் பண்றது எல்லாம் புடிச்சிருக்கு… அதனால பண்றேன் அப்படின்னு சொன்னா… எனக்கு அத கேட்டப்ப தான் நம்ம அப்பு மாதிரியே எனக்கு தோணுச்சு அந்த பொண்ண இப்படி பேசினப்போ, இப்ப எல்லாம் காசு இருந்துச்சுன்னா ஒன்னு அத அழிக்க பார்ப்பாங்க ஊதாரியா சுத்திட்டு…. இல்லேன்னா பிசினஸ்ல போய் உக்காந்து செட்டில் ஆகுறதுக்கு பார்ப்பாங்க…. ஆனா, இந்த பொண்ணு அப்படி யோசிக்கல” என்று சரவணன் கூறினான்.

“ஆமாம் பா இப்ப தான் எங்க கிட்ட பேசிட்டு இருந்தா… என்ன வேலை பண்ற என்ன ஏதுன்னு கேட்டதுக்கு ரொம்ப தன்மையா தான் பதில் சொன்னா அந்த பொண்ணு…. நல்ல படிச்சிருக்கா அழகாவும் இருக்காடா… எல்லாதுக்கும் மேல அவ செய்யுற வேல அப்பாவுக்கு பிடிச்ச ஒன்னு…. அப்ப அவளும் நம்மள மாதிரி தான யோசிப்பா” என்று வள்ளி கூறினார்.

“நீங்க என்ன அந்த பொண்ணு வந்ததும் அவள பத்தியே கேட்குறீங்க… சரி இல்லையே… ஏன் விக்ரமுக்கு எதும் பிளான் பண்றீங்களா??” என்று சரவணன் கேலியாக கேட்க, “ஏன் என்ன தப்பு” என்று வள்ளி கூற, “ஓஓஓ!! அப்படி வரீங்களா!!” என்று சரவணன் கேலியாக கூறினான்.

“இதெல்லாம் நம்ம கையில இல்ல… அதுவும் இல்லாம அந்த பாட்டிமா என்ன சொன்னாங்க… விக்ரமோட மனசு வேற எங்கேயோ இருக்குன்னு சொன்னாங்கல…. அவனோட முடிவு தான்” என்று ஸ்ரீனிவாசன் கூற, “நம்ம ஆசப்படுறதுல ஒன்னும் தப்பில்லையே” என்று வள்ளி கூறினார். இந்த உரையாடல் நடந்துக் கொண்டிருக்க கவிதாவின் முகம் மாறியது. “சரிங்க அத்தை நான் கிளம்புறேன்… ஏதாவது ஹெல்ப்னா கூப்பிடுங்க” என்று கூறி கவிதா புறப்பட்டாள்.

சனந்தா ஃபோன் பேசி முடித்ததும், சிறிது நேரம் மாடியில் நின்று அந்த இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள். சிறு சத்தம் கேட்டு கீழே பார்க்க, விக்ரம் மற்றும் அபிலாஷ் ரூமை விட்டு வெளியே வந்து அங்கே இருக்கும் தொட்டியில் கை கால் முகத்தை கழுவிக் கொண்டிருந்தனர். சனந்தா மேல இருந்து விக்ரமை பார்க்க, என்ன உணர்ந்தானோ என்னவோ விக்ரமும் சட்டென்று அவளை பார்க்க, இருவரும் அவர்களை அறியாமலேயே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல.
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 9
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.