CHAPTER-5

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
அறையில் அர்ஜுனும் லிங்கேஷ்வரும் பேசிக்கொண்டிருக்க, இங்கு ஹாலில் அமர்ந்திருந்த அர்ஜுனின் நண்பன் ஒருவன், "அப்பிடி என்ன ரெண்டு பேரும் இரகசியம் பேசிகிட்டிருக்காங்க? உள்ள போய் ரொம்ப நேரமாச்சு, இன்னும் வரல?" என்று கூற,

அதற்கு மற்றொருவன், "நமக்குதா தெரியுமே. பாஸுக்கு அர்ஜுன் எப்பவுமே ஸ்பெஷல்தா. என்னதா நம்ப எல்லாரையும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணாலும், அவன்மேல கொஞ்சம் அதிக‌மாதா பாசம் வெச்சுருக்காரு." என்று கூற,

அதை கேட்ட சந்ரா, "அப்பிடியா? ஏ?" என்று புரியாமல் கேட்க,

அதற்கு அவன், "பிக்காஸ் நாங்க பாஸ் குடுக்குற வேலைய வேலையா பாப்போம். ஆனா அவன் மட்டுந்தா அத கடமையா பாப்பான்." என்று கூற, அதை கேட்ட சந்ரா மேலும் கேள்வியுட‌ன் அவனை பார்த்தாள்.

அதற்கு மற்றொருவன், "ஆமா. அவன் ஆப்பிஸ்ல வாங்குற சேலரியோட செரி. அதுக்கு எடையில பாஸ் சொல்ற வேலைக்கெல்லாம், ஐ மீன் அவுட் ஆஃப் தி ஆப்பிஸ் வேலைக்கேல்லாம் அவன் பணம் வாங்கவே மாட்டான். பாஸ் எவ்ளோ கம்பல் பண்ணாலும் மறுத்திருவான்." என்று கூற,

அதை கேட்ட சந்ரா ஆச்சரியத்துடன், "அப்பிடியா?" என்று கேட்க,

அதற்கு அவன், "ஆமா. அத பத்தி நாங்களே அவங்கிட்ட கேட்டிருக்கோம். ஏன்டா வர்ற லக்ஷ்மிய வேண்டான்னு சொல்ற, நீ செஞ்ச வேலைக்கான சம்பளம்தான? வாங்கிக்க வேண்டியதுதான அப்பிடின்னதுக்கு, அவன் என்ன சொன்னான் தெரியுமா?" என்று கூற‌, அதற்கு சந்ரா மேலும் அவனை கேள்வியுடன் பார்த்தாள்.

சில தினங்களுக்கு முன் இதே கேள்வியை இவன் அர்ஜுனிடம் கேட்டபோது அர்ஜுன் அவனிடம், "ஆப்பிஸ்குள்ள வேலதா ஃபர்ஸ்ட். சோ பாசம், பந்தமெல்லாம் அங்க பாக்க கூடாது. அதுதா ஆபிஸ் எதிக்ஸ். அங்க அவரு பாஸ் நா எம்ப்லாயீ அவ்ளோதா எங்க ரிலேஷன்ஷிப். ஆனா அதெல்லாம் ஆப்பிஸோட‌ முடிஞ்ச‌து. வெளியில‌ வ‌ந்துட்டா ஆப்பிஸ் சமாச்சரத்துக்கெல்லாம் எடம் கெடையாது. அதுதா என்னோட எதிக்ஸ். இங்க நா அவர பாஸா இல்ல, எனக்கு வாழ்க்க குடுத்த என்னோட தெய்வமாதா பாக்குறேன். பாஸ்கிட்ட சம்பளம் வாங்கலாம், ஆனா தெய்வத்துகிட்ட? என்னிக்குமே தெய்வத்துக்கு பண்றதெல்லாம் கணக்கு பாக்கவே கூடாது. இப்ப‌ நா அவருக்கு பண்றதெல்லாம் ரொம்பவே கம்மி. யாருமே இல்லாத எனக்கு அவருதா எல்லாமா இருந்திருக்காரு. அவ‌ருக்காக‌ இதுக்குமேலையும் ப‌ண்ணுவேன்." என்று கூறியிருந்தான்.

அதை சந்ராவிடம் கூறி முடித்தவன், "எங்களுக்கு கூட அம்மா, அப்பா அப்ற‌ம் சொந்தம்னு சொல்லிக்க கொஞ்ச பேரு இருக்காங்க. ஆனா அவனுக்கு, சொந்தம்னு சொல்லிக்க எங்க பாஸ தவர‌ வேற யாரும் இல்ல." என்றான்.

சந்ரா, "அப்போ அர்ஜுனோட ஃபேமிலி?" என்று கேட்க,

"இருந்தாங்க. ஆனா இப்ப இல்ல." என்றான்.

அதை கேட்டு அதிர்ந்த சந்ரா, "அவங்களுக்கு என்ன ஆச்சு?" என்று கேட்க,

"செரி விடுங்க‌. நா பாட்டுக்கு ஏதேதோ சொல்லி, உங்க‌ள‌ அப்ஸ‌ட் ப‌ண்ணிகிட்டிருக்கேன்." என்று கூற‌,

ச‌ந்ரா, "இல்ல‌ நீங்க‌ சொல்லுங்க‌. அர்ஜுனோட‌ அப்பா, அம்மாவுக்கு என்ன‌ ஆச்சு?" என்று ஆர்வ‌மாக‌ கேட்க‌,

அத‌ற்குமேல் கூறாம‌ல் இருக்க‌ வேண்டாம் என்று எண்ணிய‌வ‌ன், "அர்ஜுனோட‌ அப்பா விக்னேஷ் குமார், பாஸோட க்ளோஸ் ஃபிரண்ட். அவரும் ஒரு மிகப்பெரிய பிஸ்னஸ்மேன். அவருக்கும் நெறைய ஜுவல்லரி அன்டு கன்ஸ்ட்ரக்ஷன் பிஸ்னஸ் எல்லாம் இருந்துச்சு." என்று கூற,

சந்ரா, "இருந்துச்சா? அப்போ இப்போ இல்லையா?" என்று கேட்க,

"இருந்துச்சு. ஆனா திடீர்னு நடந்த ஒரு ஏக்ஸிடன்ட்டுல அவரு எறந்துட்டாரு. அதுக்கறம் அவரோட மொத்த பிஸ்னஸையும் பாஸ்தா பாத்துக்குறாரு." என்றான்.

சந்ரா, "அப்பாவா? ஏ? அர்ஜுன் அத பாத்துக்கலையா?" என்று கேட்க,

"அப்போ அவனுக்கு வெறும் ஏழு வயசுதா. அந்த நெலமையில அப்பா, அம்மாவ எழந்துட்டு, அவனால என்ன பண்ண முடியும் சொல்லுங்க?" என்று கூற, அதை கேட்ட சந்ராவிற்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

"அன்னியிலிருந்து ஜெகதீஷ் சாரோட பிஸ்னஸ மட்டும் இல்ல, அர்ஜுனையும் பாஸ்தா பாத்துகிட்டாரு." என்றான்.

சந்ரா, "இதெல்லா ஏ அப்பா எங்கிட்ட சொல்லவே இல்ல? செரி இப்பதா அர்ஜுனுக்கு மெச்சூரிட்டி வந்திருச்சே. இப்பக்கூட அவரு அவங்க அப்பா பிஸ்னஸ பாத்துக்கலாமே? ஏ பண்ணல?" என்று கேட்க,

"அத நீங்க பாஸ்கிட்டதா கேக்கணும். பிக்காஸ் இதெல்லாம் எனக்கு பாஸ் சொல்லிதா தெரியும். அர்ஜுன்கூட இதெல்லாம் எங்ககிட்ட ஷேர் பண்ணதில்ல." என்றான். அதை கேட்ட சந்ராவிற்கு மேலும் வியப்பாக இருந்தது.

"அதனாலதா அவனுக்கு பாஸ்னா உயிரு. அன்டு பாஸ்க்கும் அவன்மேல அவ்ளோ பாசம்." என்றான்.

அதை கேட்ட சந்ராவிற்கு மேலும் சில சந்தேகங்கள் எழ, அவற்றை கேட்க வரும் முன் அர்ஜுனும் லிங்கேஷ்வரனும் அங்கு வந்துவிட்ட‌னர்.

அவர்களை பார்த்தவ‌ன் ச‌ட்டென்று அமைதியாகிவிட, லிங்கேஷ்வரனோ அவர்களை பார்த்து, "என்னடா என்னமோ பேசிகிட்டிருந்தீங்க, இப்போ எங்கள பாத்ததும் அமைதியாயிட்டீங்க?" என்று கேட்க,

அதற்கு ஒருவன், "அதெல்லாம் ஒன்னும் இல்ல பாஸ். நாங்க சும்மா கேஷுவலாதா பேசிகிட்டிருந்தோம். செரி நாங்க கெளம்புறோம். நாம ஆப்பிஸ்ல மீட் பண்ணலாம் பாஸ்." என்றான்.

லிங்கேஷ்வரன், "செரி ஓகே. பாத்து போங்க." என்றார்.

அதற்கு அனைவரும் சந்ராவிடமும் கூறிவிட்டு விடைப்பெற்றனர்.

பிறகு அர்ஜுன், "ஓகே பாஸ். நானும் அப்பிடியே கெளம்புறேன்." என்று கூற,

லிங்கேஷ்வரன், "எங்க ஆப்பிஸ்தான?" என்று கேட்க,

அர்ஜுன், "ஆமா பாஸ். ஏ என‌க்கு வேற எதாவது வேல இருக்கா பாஸ்?" என்று கேட்க,

லிங்கேஷ்வரன், "இல்ல இல்ல. வா நாம சேந்தே ஆப்பிஸ் போலாம்." என்று கூற, அதை கேட்ட சந்ராவிற்கு இப்பொழுதான் அவர்கள் கூறிய அனைத்தும் உண்மை என்று புரிந்தது.

அர்ஜுன், "இல்ல பாஸ். நீங்க போங்க. நா பின்னாடி வர்றேன்." என்றான்.

லிங்கேஷ்வரன், "நீ என்கூடதா வர்ற. வா போலாம்." என்று அவனை அழைத்து செல்ல, அப்போது சந்ராவை பார்த்து, "செரிமா நாங்க போயிட்டு வர்றோம். நீ பத்தரமா இரு." என்று கூற,

சந்ரா, "ம்ம் செரிப்பா." என்றாள்.

பிறகு அர்ஜுனும் அவளை பார்த்து, "வ‌ர்றேங்க." என்று கூற, அதற்கும் சந்ரா சிறு புன்னகையுடன் சரி என்று தலையசைத்தாள்.

அப்போது லிங்கேஷ்வரன் அர்ஜுனிட‌ம், "இன்னும் என்ன வாங்க போங்கன்னு பேசிகிட்டிருக்க? ஃபிரண்ட்லியா வா போன்னு கூப்புடு." என்று கூற, அதற்கு அர்ஜுன் தயக்கத்துடன் சரி என்று தலையசைத்தான்.

பிறகு அப்படியே சந்ராவை பார்த்த லிங்கேஷ்வரன், "உனக்கும்தான் சந்ரா." என்றார். அதற்கு சந்ராவும் சரி என்று தலையசைத்தாள்.

பிறகு லிங்கேஷ்வரன், "செரி ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு. நாங்க கெளம்புறோம்." என்று கூறி அர்ஜுனுடன் அங்கிருந்து கிளம்பினார்.

அப்போது அவ‌ர்க‌ள் ஒன்றாக‌ செல்வ‌தை பார்த்து புன்ன‌கைத்த‌ ச‌ந்ரா, மற்றவர்கள் கிளம்புகிறேன் என்று கூறும்போது, பத்திரம் என்று மட்டும் கூறியவர் அர்ஜுனை மட்டும் தன்னுடனே அழைத்து செல்லுகிறார் என்னும்போதே அவ‌ர்க‌ளுக்கிடையில் உள்ள‌ உற‌வை ந‌ன்றாய் புரிந்துக்கொண்டாள். ஏனோ அவ‌ளை அறியாம‌லே இந்த‌ உற‌வு நீடிக்க‌ வேண்டும் என்று ஆசையும் கொண்டாள். அதோடு அர்ஜுனை ப‌ற்றி மேலும் தெரிந்துக்கொள்ள‌ வேண்டும் என்று எண்ணினாள்.

இங்கு வாசலை தாண்டும்போது அர்ஜுனை பார்த்த லிங்கேஷ்வர், "நா சொன்னது நியாபகம் இருக்கில்ல அர்ஜுன்?" என்று கேட்க,

அர்ஜுன், "எஸ் பாஸ்." என்றான்.

லிங்கேஷ்வரன், "என்ன?" என்று புருவங்களை குறுக்க,

அதற்கு தலை சொறிந்தபடி தயங்கியவன், "நியாபகம் இருக்கு... மாமா." என்றான்.

அதை கேட்டு புன்னகைத்தவர், "தட்ஸ் குட். வா போலாம்." என்று கூறி காரில் ஏறி புறப்பட்டனர்.

அத‌ன் பிற‌கு அலுவ‌ல‌க‌ம் சென்ற‌ இருவ‌ரும், அங்குள்ள‌ வேலைக‌ளில் மூழ்கிவிட‌, நேர‌ம் சென்ற‌தே தெரிய‌வில்லை.

சாய‌ங்கால‌ நேர‌ம் 5 ம‌ணி அள‌வில், அர்ஜுன் த‌ன்னுடைய‌ இன்றைய‌ வேலையை முடித்துவிட்டு லிங்கேஷ்வ‌ர‌னிட‌ம் கூற‌, அவ‌ரோ த‌ன‌க்கு இன்னும் சிறிது வேலை இருப்ப‌தால், அவ‌னை ம‌ட்டும் வீட்டிற்கு ப‌த்திர‌மாக‌ செல் என்று கூறிவிட்டார். அதை கேட்ட‌ அர்ஜுனும் அவ‌னுடைய‌ ந‌ண்ப‌ர்க‌ளும் ஒன்றாக‌ கிள‌ம்பி அவ‌ர‌வ‌ர் வீட்டிற்கு சென்றுவிட்ட‌ன‌ர்.

இங்கு த‌ன் வீட்டிற்கு வ‌ந்த‌ அர்ஜுன், வ‌ழ‌க்க‌ம்போல் நாளை அலுவ‌ல‌க‌த்தில் செய்ய‌ வேண்டிய‌ எல்லா வேலைக‌ளையும் அட்ட‌வ‌ணையிட்டு கொண்டிருக்க‌, அப்போது ச‌ட்டென்று அவ‌ன் நினைவுக‌ளில் வ‌ந்து சென்றாள் ச‌ந்ரா.

அதை உண‌ர்ந்து திடுக்கிட்டவ‌ன், பிற‌கு மீண்டும் த‌ன் வேலையில் ஈடுப‌ட‌ முய‌ற்சிக்க‌, அவ‌னின் நினைவுக‌ளோ எங்கு சென்றாலும் இறுதியில் ச‌ந்ராவிட‌மே வ‌ந்து நின்ற‌து. ஏனோ அவ‌ளை க‌ண்ட‌திலிருந்து அவ‌ன் ம‌ன‌ம் இவ்வாறுதான் அலைபாய்ந்துக் கொண்டிருந்த‌து. ஆனாலும் த‌ன் பாஸிற்காக‌ த‌ன் ம‌ன‌தை க‌ட்டுப்ப‌டுத்தி வைத்திருந்தான். ஆனால் இன்று அவ‌ரே அவ‌ளை திரும‌ண‌ம் செய்துக்கொள் என்று கூறிய‌து, அவ‌னுக்கு ஒருப‌க்க‌ம் ஆச்ச‌ரிய‌த்தை கொடுத்தாலும், ம‌ற்றொரு ப‌க்க‌ம் இத‌ற்கான‌ உண‌ர்வு காத‌ல் என்று அவ‌னே இன்னும் உண‌ராத‌ போது, அவ‌ன் ம‌ன‌தில் ஒரு வித‌ த‌ய‌க்க‌மும் இருந்த‌து. இப்ப‌டி த‌ன் உண‌ர்க‌ள் ஒரு ப‌க்க‌மும், அவ‌ளின் நினைவுக‌ள் ம‌றுப‌க்க‌மும் என்று த‌த்த‌ழித்துக்கொண்டிருந்தான் அர்ஜுன்.

இங்கு அடுத்த‌ அரை ம‌ணி நேர‌த்திலேயே த‌ன்னுடைய‌ வேலைக‌ளை முடித்துவிட்டு வீட்டிற்கு புற‌ப்ப‌ட்டார் லிங்கேஷ்வ‌ர‌ன். அவ‌ரின் எண்ண‌ம் முழுக்க‌ வீட்டிற்கு சென்ற‌தும், ச‌ந்ராவிட‌ம் அர்ஜுனை ப‌ற்றி பேசி, திரும‌ண‌த்திற்கு ச‌ம்ம‌ட‌ம் வாங்கும் எண்ண‌த்திலேயே இருந்த‌து.

இங்கு வீட்டிலிருந்து ச‌ந்ராவோ, அத‌ன் பிற‌கு அர்ஜுனின் வாழ்வில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று த‌ன் த‌ந்தை வ‌ந்த‌வுட‌ன் கேட்டுவிட‌ வேண்டும் என்று காத்திருந்தாள்.

இப்ப‌டி அர்ஜுன் ஒரு புற‌ம் ச‌ந்ராவின் நினைவுக‌ளில் மூழ்கியிருக்க‌, ம‌ற்றொரு புற‌ம் ச‌ந்ராவோ அர்ஜுனை ப‌ற்றிய‌ நினைவுக‌ளில் மூழ்கியிருக்க‌, இங்கு லிங்கேஷ்வ‌ரனும் அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் எவ்வாறு இணைப்ப‌து என்ற‌ யோச‌னையில் மூழ்கியிருக்க‌, விதியோ வேறு ஒன்று நினைத்த‌து.

இப்ப‌டியே நேர‌ம் சென்றுவிட‌, அடுத்த‌ நான்கு ம‌ணி நேர‌ம் க‌ழித்து அவ‌னுடைய‌ கைப்பேசி ஒலித்த‌து. உட‌னே அவ‌ற்றை அட்ட‌ன் செய்து காதில் வைத்த‌வ‌ன், அதில் கேட்ட‌ செய்தியை கேட்டு அதிர்ந்து த‌ன் மொபைலை கீழே போட்டுவிட்டான்.

அதே செய்தி அர்ஜுனின் ந‌ண்ப‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் வ‌ந்து சேர‌, அனைவ‌ருமே மிகுந்த‌ அதிர்ச்சிய‌டைந்த‌ன‌ர். அடுத்த‌ நொடி ச‌ற்றும் தாம‌திக்காம‌ல் அங்கிருந்து புற‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், நேராக‌ அருகிலிருந்த த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னையை வ‌ந்த‌டைந்த‌ன‌ர்.

பிற‌கு ஐவ‌ரும் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ரிச‌ப்ஷ‌னில் த‌க‌வ‌லை விசாரித்துவிட்டு உள்ளே சென்று ஐ.சி.யூவை பார்க்க‌, அங்கிருந்து வெளிவ‌ந்த‌ ம‌ருத்துவ‌ரிட‌ம் ப‌த‌ற்ற‌மாக‌ விசாரித்தான் அர்ஜுன்.

"டாக்ட‌ர் என்ன‌ ஆச்சு?" என்று மிகுந்த‌ ப‌த‌ற்ற‌த்துட‌ன் விசாரிக்க‌,

அத‌ற்கு ம‌ருத்துவ‌ர், "சாரி எங்க‌ளால‌ காப்பாத்த‌ முடிய‌ல‌." என்றார்.

அதை கேட்ட‌ ஐவ‌ருக்குமே பேர‌திர்ச்சியாக‌ இருக்க‌, த‌லையில் இடிவிழுந்த‌துப்போல் நின்ற‌ன‌ர்.

இங்கு அதே மருத்துவமனையை விட்டு வெளியில் வ‌ரும்போது, ச‌ற்று த‌ள்ளி அருகிலிருந்த ஒரு சிவன் கோவிலில், க‌ண்க‌ளில் வ‌லியும் வேத‌னையும் நிறைந்து சிவ‌ந்த‌ப‌டி நின்றுகொண்டிருந்த ச‌ந்ரா, அழுதுக்கொண்டே தன் முன்பு சிலையாய் நிற்கும் சிவ‌னிட‌ம், "என் அப்ப‌ா உங்க‌ளுக்கு என்ன‌ ப‌ாவ‌ம் ப‌ண்ணாரு? எப்ப‌வும் எல்லாத்தையும் விட‌ உங்க‌ள‌தான‌ பெருசா நென‌ச்சாரு? உங்க‌ அனும‌தி வாங்காம‌ எதையும் செஞ்ச‌தில்ல‌ அவ‌ரு. உங்க‌மேல‌ அவ்ளோ ப‌க்தியா இருந்த‌ அவ‌ர‌ எதுக்காக‌ சாக‌விட்டீங்க‌?" என்று ஆத‌ங்க‌மாக‌ க‌த்தினாள்.

பிற‌கு க‌ண்க‌ளை துடைத்த‌வ‌ள் கோப‌மாக‌, "ஓஹோ! அத‌னால‌தா அவ‌ர‌ உங்க‌கிட்டையே எடுத்துகிட்டீங்க‌ளா? இப்பிடி உங்க‌ளுக்கு புடிச்ச‌வ‌ங்க‌ளெல்லா நீங்க‌ளே எடுத்துகிட்டா, அவ‌ங்க‌ள‌ ந‌ம்பி இருக்குற‌வ‌ங்க‌ளோட‌ நெல‌ம‌ என்ன‌ன்னு யோசிச்சீங்க‌ளா? உங்க‌ளுக்கு எத‌ ப‌த்தியுமே க‌வ‌ல‌ இல்ல‌ல்ல‌?" என்று ஆத‌ங்க‌மாக‌ க‌த்தி அழுத‌வ‌ள், அவ‌ரின் சிலையை உற்று நோக்கிய‌ப‌டி வேத‌னையுட‌ன், "சின்ன‌ வ‌ய‌சுல‌ இருந்து என‌க்கு சொந்த‌மான‌ எல்லாத்தையும் எங்கிட்டிருந்து ப‌றிச்சுட்டீங்க‌. இப்போ க‌டைசியா என‌க்குன்னு இருந்த‌ ஒரே சொந்த‌ம் என் அப்பாதா. அவ‌ரையும் எங்கிட்டிருந்து ப‌றிச்சுட்டீங்க‌. இன்னும் எங்கிட்ட‌ இருந்து ப‌றிக்க‌ என் உயிர் ம‌ட்டுந்தா இருக்கு. அத‌ ம‌ட்டும் ஏ விட்டு வெச்சிருக்கீங்க‌? அதையும் எடுத்துக்கோங்க‌." என்று க‌த்தினாள்.

பிற‌கு உடைந்துப்போய் க‌த‌றி அழுத‌வ‌ள், "எங்கிட்ட‌ இப்ப‌ எதுவுமே இல்ல‌. என‌க்குன்னு இப்போ யாருமே இல்ல‌. அப்பிடி இருக்கும்போது நா ம‌ட்டும் ஏ இன்னும் உயிரோட‌ இருக்கேன்? என்னையும் எடுத்துக்கோங்க‌ ப்ளீஸ். என்னால‌ இங்க‌ த‌னியா வாழ‌ முடியாது." என்று க‌த‌றி அழுத‌ப‌டியே த‌ரையில் விழுந்த‌வ‌ள், "யாருமே இல்லாம‌ வாழுற‌ வாழ்க்க‌ ந‌ர‌க‌ம். ப்ளீஸ் என் உயிரையும் ப‌றிச்சிருங்க‌. என‌க்குன்னு இருந்த‌ எல்லாரும் போன‌துக்க‌ப்ற‌ம் நா ம‌ட்டும் ஏ உயிரோட‌ இருக்கேன்? ப்ளீஸ் என்னையும் எடுத்துக்கோங்க‌" என்று கூறி க‌த‌றி அழ,

"உன‌க்காக‌ இன்னும் ஒரு உயிர் இருக்கு." என்று ஒரு குர‌ல் கேட்க‌,

அதை கேட்டு உட‌னே திரும்பினாள் ச‌ந்ரா. "உன‌க்காக‌ யாருமே இல்ல‌ன்னு நீ நெனைக்கிற‌து த‌ப்பு." என்ற‌ப‌டி அங்கு வ‌ந்தார் அந்த‌ அகோரி சாமியார்.

அவ‌ரை பார்த்த‌தும் எழுந்த‌ நின்ற‌ ச‌ந்ரா, அவ‌ரை இக்கோவிலில் இருப்ப‌வ‌ர் என்று எண்ணிய‌வ‌ள், குழ‌ப்ப‌த்துட‌ன் அவ‌ரை பார்த்து, "நீங்க‌ என்ன‌ சொல்றீங்க‌? என‌க்காக‌ யாரு இருக்கான்னு சொல்றீங்க‌? என‌க்காக‌ இருந்த‌ எல்லாருமே என்ன‌விட்டு போயிட்டாங்க‌. இப்ப‌ நா த‌னி ம‌ர‌ம். அதுக்கு கார‌ண‌ம் இதோ உங்க‌ சிவ‌ பெருமான்தா." என்று ஆத‌ங்க‌மாக‌ சிவ‌னை நோக்கி கை நீட்டிய‌வ‌ள், "அவ‌ருதா எங்கிட்ட‌ இருந்து எல்லாத்தையும் ப‌றிச்சுட்டாரு" என்று கூறி உடைந்து போய் அழுதாள்.

அத‌ற்கு சாமியார், "நீ த‌னி ம‌ர‌ம் இல்ல‌. உன‌க்காக‌ இன்னும் ஒரு உயிர் இருக்கு." என்றார்.

அதை கேட்ட‌ ச‌ந்ரா அதிர்ச்சியுட‌ன் அவ‌ரை பார்த்து, "தெரிஞ்சுதா சொல்றீங்க‌ளா சாமிஜி? என‌க்காக‌ இருந்த‌ ஒரே ஒருத்த‌ரும் இப்போ என்ன‌விட்டு போயிட்டாரு." என்று கூறி அழ‌ ஆர‌ம்பித்தாள்.

சாமியார், "உன‌க்காக‌ இன்னும் ஒரு உயிர் இந்த‌ பூமியில‌ இருக்கு. அது உன‌க்காக‌வே இருக்கு." என்று கூற‌,

ச‌ந்ரா, "யார‌ ப‌த்தி சொல்றீங்க‌?" என்று புரியாம‌ல் கேட்க‌,

சாமியார், "அத‌ ப‌த்தி தெரிய‌ வேண்டிய‌ நேர‌ம் இது இல்ல‌. ஆனா இது உண்ம‌. உன‌க்காக‌ ஒரு உயிர் இருக்கு. ஆனா அந்த‌ உயிரும் இப்ப‌ ஆப‌த்துல‌ இருக்கு." என்று கூற‌, அடுத்த‌ நொடி அதிர்ச்சிய‌டைந்தாள் ச‌ந்ரா.

சாமிய‌ர், "அந்த‌ உயிர‌ உன்னால‌ ம‌ட்டுந்தா இப்ப‌ காப்ப‌த்த‌ முடியும். அத‌ சொல்ல‌தா அந்த‌ ஈச‌ன் என்ன‌ இங்க‌ அனுப்பியிருக்காரு. நா வ‌ந்த‌வேல‌ முடிஞ்ச‌து." என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அவ‌ர் கூறிய‌தில் குழ‌ம்பி நின்ற‌ ச‌ந்ராவோ, "ஹ‌லோ சாமிஜி நில்லுங்க‌. என்ன‌ சொல்றீங்க‌? என‌க்கு எதுவும் புரிய‌ல‌. யாரு அது?" என்று கேட்ட‌ப‌டி அவ‌ர் பின்னாலே செல்ல‌,

அவ‌ரோ ச‌ற்றும் அவ‌ளை திரும்பி பார்க்காம‌ல், "அந்த‌ உயிர் யாருன்னு கூடிய‌ சீக்கிர‌மே உன‌க்கு தெரிய‌ வ‌ரும். உன் கண்ணு முன்னாடியே அந்த உயிர் பிரியும். அப்போ உன் க‌ண்க‌ள்ல‌ குற்ற உணர்வு நெற‌ஞ்சிருக்கும், உன் கைக‌ள்ல‌ இர‌த்த கர ப‌டிஞ்சிருக்கும். அதுதா உன‌க்கான‌ அடையாள‌ம். அப்போ நீயா என்ன‌ தேடி இங்க‌ வ‌ருவ‌." என்று கூறிய‌ப‌டி சென்றுவிட்டார்.

அவ‌ரை பின் தொட‌ர்ந்து வ‌ந்த‌ ச‌ந்ராவால் அவ‌ர் எங்கு சென்றார் என்று க‌ண்டுபிடிக்க‌வே முடிய‌வில்லை. அங்கும் இங்கு தேடி பார்த்த‌வ‌ள், பிற‌கு பெரும் குழ‌ப்ப‌த்தில் ஆழ்ந்தாள். அவ‌ர் கூறிய‌து போல் த‌னக்காக‌ உண்மையிலேயே இன்னும் ஒரு உயிர் இந்த‌ பூமியில் இருக்கிற‌தென்றால் அது யாராக‌ இருக்கும் என்ற‌ கேள்விக்கு ப‌தில் தேடும் முன், அதே உயிருக்கு ஆப‌த்து என்று அவ‌ர் கூறிய‌துதான் அவ‌ளை ப‌ய‌த்தில் ஆழ்த்திய‌து. அவ‌ரை த‌ன்னால்தான் காப்பாற்ற‌ முடியும் என்று கூறியவர் தன் முன்னாலே அந்த உயிர் பிரியும் என்று ஏன் கூறினார்? அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளாலும் குழம்பியவளுக்கு, அவ‌ர் கூறிய‌து மீண்டும் மீண்டும் காதுக‌ளில் ஒலிக்க‌, அது யாராக‌ இருக்கும் என்று தீவிர‌மாக‌ யோசிக்க‌ ஆர‌ம்பித்தாள் ச‌ந்ரா.

- ஜென்மம் தொட‌ரும்....
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-5
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.