Chapter-4

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
அத்தியாயம் 4: நான் உன் யாழினி இல்ல..!!!!

பிரியாவும், ராகுலும், இந்த ஊரில் தான் அவர்கள் இனி தங்கப் போவதாக தங்களிடம் சொல்லி இருந்ததால், அவர்கள் எங்கே தங்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருந்த இசை, அதை பிரியாவிடம் கேட்டான்.

பிரியாவே திக்கு தெரியாத காட்டில் தன் தம்பியோடு மாட்டி கொண்டு தவிப்பதைப் போல் வெறுமையாக உணர்ந்து கொண்டு இருக்கும் இந்நிலையில் அவனுக்கு என்ன பதில் சொல்வாள்..??

அதனால் அவனை பார்த்து விரக்தி புன்னகை ஒன்றை சிந்தியவள், “நோ ஐடியா. ஏதாவது பட்ஜெட் ஃபிரண்ட்லியா வீடு ரென்ட்டுக்கு கிடைக்குதான்னு பாக்கணும்." என்றாள்.



இசை தன் வீட்டிலேயே பிரியாவையும், ராகுலையும், தங்கிக் தங்கிக் கொள்ளும்படி சொல்ல நினைத்தான்.

ஆனால் இப்போது அவன் அவளிடம் அப்படி சொன்னால் எங்கே அவள் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ, என்ற தயக்கமும் அவனுக்கு இருந்தது.

இருந்தாலும் அவள் தனியாக தன் தம்பியை மட்டும் வைத்து கொண்டு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினாலும், அது மட்டும் அவளுக்கு பாதுகாப்பாக இருக்குமா..?? என்று நினைத்துப் பார்த்தவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “இஃப் யூ டோன்ட் மைண்ட், செகண்ட் ஃப்ளோர்ல இருக்கிற வீடு காலியா தான் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் அங்க தங்கிறீங்களா..??" என்று சிறு தயக்கத்துடனே கேட்டான்.



பிரியா “இல்ல வேண்டாம். அது எல்லாம் சரியா இருக்காது. நான் பர்ஸ்ட் ஏதாவது ஒரு ஜாப் தேடணும்.

அப்புறம் என் வொர்க் பிளேஸ்க்கு பக்கத்துல இருக்கிற மாதிரி நான் ஏதாவது ஒரு வீடு பாத்துக்கிறேன்." என்று அவசரமான குரலில் சொல்லி அவனுடைய கோரிக்கையை மறுத்து விட்டாள்.

இசை பிரியா அவனுடைய கோரிக்கையை மறுத்து விட்டதால், சோகமாக தன் முகத்தை வைத்து கொண்டு அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“இது நம்ம ரெஸ்டாரன்ட் தான் மா.

அவன் சொன்ன மாதிரி செகண்ட் ஃப்ளோர் ஃபிரீயா தான் இருக்கு.

நாங்க அங்க ரெஸ்டாரண்டுக்கு வாங்குன கிரசரி ஐட்டம்ஸை தான் சும்மா போட்டு வச்சிருக்கோம்.

நீங்க அங்க தங்குற மாதிரி இருந்தா, உடனே அந்த இடத்தை நாங்க கிளீன் பண்ணி குடுத்திடுறோம்.

நாங்க ரெண்டு பேரும் பசங்களா இருக்கறதுனால உனக்கு இங்க தங்கறதுக்கு சங்கடமா இருக்குன்னா சொல்லு...

நாங்க வேணா நைட்டு மட்டும் எங்க பிரெண்ட் வீட்ல போய் படுத்துகிறோம்.

ஆனா அப்படி இருந்தாலும், நீங்க தனியா இருக்கிறதும் சேஃப்டி இல்லையே..!!" என்று சொன்ன ஜீவாவின் குரலில் உண்மையான அக்கறை தெரிந்தது.

“ஐயோ..!! நான் அதுக்கு எல்லாம் யோசிக்கல அண்ணா. எதுக்கு எங்களால உங்களுக்கு தேவை இல்லாத சிரமம்ன்னு தான் நினைச்சேன்.” என்று பிரியா சொல்ல,



“ஆமா..!!! நாங்க எதுக்கு உங்களைய பாத்து பயப்படனும்..??

எங்க ரெண்டு பேருக்குமே கராத்தே, கும்ஃபு எல்லாம் நல்லா தெரியும்.

நீங்க ரெண்டு பேருமே ரொம்ப ஒல்லியா, காத்தடிச்சா உடனே பறக்குற மாதிரி இருக்கீங்க.

உங்கள மாதிரி பத்து பேர் வந்தாலும் பிரியாவே அவங்கள ஒத்தையா சமாளிப்பா." என்று நக்கலாக சொல்லிவிட்டு சிரித்தான் ராகுல்.

“சும்மா இரு டா. இத எல்லாம் அவங்க உன் கிட்ட இப்ப கேட்டாங்களா..??" என்று சொல்லி தன் தம்பியை அதட்டினாள் பிரியா.

“அட பரவால்ல விடு.

மாமா மச்சான்னா இப்டி தான், உரிமையா நக்கலா பேசி விளையாண்டுட்டு இருப்பாங்க.

அத எல்லாம் நீ கண்டுக்காத." என்று சிரித்துக் கொண்டே சொன்னான் இசை.

“பிரியா...!!! இவன் இன்னொரு தடவ என்னை மச்சானு சொன்னான்னா..

கண்டிப்பா நான் இவன தூக்கி போட்டு அடிச்சிடுவேன்.

அப்புறம் ஏன் அடிச்சேன்னு நீ் என்ன கேக்க கூடாது பாத்துக்கோ." என்று பிரியாவை பார்த்து கோபமாக சொன்னான் ராகுல்.

இசையை பார்த்து முறைத்த பிரியா “நான் உங்க கிட்ட நம்ப ஃபிரண்ட்ஸ் ஆ இருக்கலாம்ன்னு மட்டும் தான் சொன்னேன்.

அதுக்காக இப்படி எல்லாம் அட்வான்டேஜ் எடுத்துக்கிறது உங்களுக்கே நல்லா இருக்கா..??

அதான் அவன் நீங்க அவன இப்டி கூப்பிடுறது பிடிக்கலைன்னு சொல்லிக்கிட்டே இருக்கான்ல...

அப்புறம் ஏன் திரும்பத் திரும்ப அதையே பண்றீங்க..???" என்றாள்.

“ஓகே சாரி..!!! சாரி..!! கோபப்படாத.

இனிமே நான் உன் தம்பியை, ராகுல் சாருன்னு கூப்பிடுறேன். ஓகே வா...???" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் இசை.

பிரியா மீண்டும் அவனை முறைத்துப் பார்த்தாள்.

அதைக் கண்டு கொள்ளாத இசை, சிரித்த முகத்தோடு அவளை சைட் அடித்துக் கொண்டு இருந்தான்.

யாழினியின் இந்த முகத்தை அவன் இத்தனை நாளாக மிகவும் மிஸ் செய்து இருந்தான்.

இப்போது யாழினி போல் இருக்கும் பிரியா, தன்னுடன் அமர்ந்து பேசி கொண்டு இருப்பது அவனுக்கு கனவு போல் இருந்தது.

அதனால் தன் கண்கள் முழுவதும் யாழினியின் முகத்தை பதித்து, நிரப்பி கொள்ள நினைத்தவன் போல, பிரியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் இசை.

ஜீவா இசையின் சைகைகளால் பிரியா கோபப்படுவதை கவனித்தவன் இசையை பார்த்து, “ஏன் டா.. செத்த வாய வச்சிக்கிட்டு சும்மா இரேன் டா...!!" என்றான்.

“நானெல்லாம் எதுவும் பண்ணல.

உன் தங்கச்சி தான் எல்லாத்துக்கும் கோச்சுகிறா...!!" என்று பிரியாவின் முன்னேயே அவளை பற்றி ஜீவாவிடம் கம்ப்ளைன்ட் செய்தான் இசை.

இசையை கோபமாக பார்த்த பிரியா, “ஏய்.. அப்ப என்ன பாத்தா உனக்கு சண்டைக்காரி மாதிரி இருக்கா.?? சண்டை போடுறது தான் என் வேலையா என்ன..??" என்று கேட்டாள்.

இசை அவளுக்கு பதில் சொல்வதற்காக தன் வாயை திறந்தான்.

அதை கவனித்த ஜீவா அவன் வாயை தன் கையால் பொத்தி, “டேய்... கம்முனு இரு. இதுக்கு மேல நீ வாய தொறந்து ஒரு வார்த்தை பேசினாலும், நானே சுடு தண்ணிய புடிச்சு உன் மூஞ்சில ஊத்துருவேன் பாத்துக்கோ..!!" என்றான்.

அதனால், இசை அமைதியாகி விட்டான்.

பின் பிரியாவை பார்த்த ஜீவா “நீ என்ன படிச்சிருக்கேன்னு சொல்லு மா.

நான் எனக்கு தெரிஞ்ச பக்கம் எங்கேயாவது ஜாப் வேக்கன்சி இருக்கான்னு பாத்து சொல்றேன்.” என்று சொல்ல,

“பி.பி.ஏ. கம்ப்ளீட் பண்ணி இருக்கேன் அண்ணா." என்று சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள் அவள்.

“ஓகே. உனக்கு கம்ப்யூட்டர் யூஸ் பண்ண தெரியுமா மா..??” என்று ஜீவா கேட்க,

பிரியா ஜீவாவிற்கு பதில் சொல்வதற்கு முன் முந்திக் கொண்ட ராகுல், “என்ன இப்படி கேக்குறீங்க..?? பிரியா யூனிவர்சிட்டி கோல்டு மெடலிஸ்ட் தெரியுமா..??

அது மட்டும் இல்லாம அவ நிறைய ப்ரொபஷனல் அண்ட் ஸ்கில் பேஸ்ட் கோர்சஸ் எல்லாம் முடிச்சு சர்டிபிகேட் வாங்கி இருக்கா.” என்று பெருமையாக சொன்னான்.

“பரவாயில்லையே...!! புத்திசாலி பொண்ணு தான்.

அப்போ உனக்கு நல்ல வேலையாவே கிடைக்கும் மா. நீ கவலைப்படாத." என்று நம்பிக்கையுடன் சொன்னான் ஜீவா.

அதுவரை இவர்கள் பேசி கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த இசை, அவர்களுடைய பேச்சில் குறுக்கிட்டான்.

ஆர்வமான கண்களோடு பிரியாவை பார்த்தவன், “நீ பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் தானே படிச்சிருக்க..!!!

நம்ப ரெஸ்டாரண்டுக்கு ஒரு மேனேஜர் வேணும்.

பேசாம நீ இங்கவே ஜாயின் பண்ணுறியா..??

உனக்கு இங்க அக்கமடேசன்ஸ் இருக்கு.

உனக்கு ஃப்ரியா ஃபுட்டும், ஷெல்ட்டரும், குடுத்துடறோம்.

சோ, நீ இங்க ஆக்வேர்ட் ஆ ஃபீல் பண்ணாம தங்கலாம்." என்று அவசரமான குரலில் சொன்னான்.

இசை சொன்னதைக் கேட்டு அவன் காலை நங்கென்று மிதித்த ஜீவா அவன் காதில் மெதுவாக, “நம்மளே நம்ப ரெஸ்டாரன்ட் லாஸ்ல போகுதுன்னு அடுத்த மாசத்துல இருந்து கவிதா அக்காவையே வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்லலாம்ன்னு தானே பேசிட்டு இருந்தோம்..??

இப்ப நீ பாட்டுக்கு இந்த பொண்ண இங்க மேனேஜரா ஜாயின் பண்ண சொல்ற..??

மாசம் மாசம் நம்ம எப்படி டா அவளுக்கு சேலரி குடுப்போம்..??" என்று கேட்டான்.

இசை பிரியாவிற்கு கேட்காத வண்ணம் மெதுவான குரலில்.. ஜீவாவின் காதுகளில், “அவ பி.பி.ஏ. கோல்ட் மெடலிஸ்ட் தானே...!!! நம்ப தான் ஆர்வ கோளாறுல ரெஸ்டாரன்ட் ஸ்டார்ட் பண்ணி அத எப்படி மெயின்டைன் பண்றதுன்னு தெரியாம லாஸ்ல நடத்திட்டு இருக்கோம்.

அவளோட பிசினஸ் பிரைன யூஸ் பண்ணி நமக்கு அவ பிராஃபிட் வர்ற மாதிரி பண்ணுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

அவளால நமக்கு ப்ராஃபிட் இல்லைனா கூட, நான் என் சொத்த வித்தாவது அவளுக்கு சம்பளம் குடுப்பேன்.

எனக்கு அவ என் கூட இருக்கணும், அவ்ளோ தான். என்னால மறுபடியும் என் யாழினிய மிஸ் பண்ண முடியாது டா." என்றான்.

“இதற்கு மேல் தான் என்ன சொன்னாலும் இசை அவனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று அறிந்திருந்த ஜீவா பிரியாவை பார்த்து,

“அவன் சொன்ன மாதிரி நாங்களும் மேனேஜரை தான் தேடிட்டு இருந்தோம்.

நீ இங்கயே ஜாயின் பண்ணிரு மா.

அண்ட் நீ ரென்ட்டுக்கு வெளியில வீடு தேடுனாலும் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.

ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஆ ஃபேமிலியா போனாலே தெரியாதவங்களுக்கு, வெளியூர் காரங்களுக்கு, எல்லாம் வீடு தர மாட்டாங்க.

ராகுல் வேற நல்ல ஹைட்டா இருக்கான்.

இவன நீ உன்ன விட சின்ன பையன், உன் தம்பின்னு சொன்னா கூட சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க.

கண்டிப்பா தப்பா தான் நினைப்பாங்க.

கண்டவங்க கிட்ட போய் நீ உன் சுச்சுவேஷனை சொல்லி எதுக்கு மா வீடு கேட்டு அலையணும்...??

நீ இங்கயே இருக்கிறத பத்தி யோசிச்சு பாரு." என்றான் ஜீவா.

“அதெல்லாம் சரி தான், இப்ப நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குள்ள என்ன பேசிக்கிட்டீங்க..??

எனக்கு இந்த ஜாபை தர்யதுல உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்கா..??

போனா போகுதுன்னு.. எங்க மேல இறக்கப்பட்டு எல்லாம் எனக்கு இந்த ஜாபை நீங்க தர வேண்டாம்.

எங்களால எங்களை பாத்துக்க முடியும்." என்று உறுதியான குரலில் சொன்னாள் பிரியா‌.

“அப்படி எல்லாம் இல்ல. ஆக்சுவலி வீ நீட் யூ.

உன்ன மாதிரி இவ்ளோ திறமை இருக்கிற பொண்ண வேற எங்க போய் நாங்க கண்டுபிடிக்க முடியும்...??

நாங்க உனக்கு எவ்ளோ சேலரி குடுக்கலாம்ன்னு தான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்." என்று தன் வாய்க்கு வந்ததை அவளிடம் சொல்லி சமாளித்தான் இசை.

“ஓகே... தென்... நீங்க எனக்கு எவ்ளோ சேலரி ஆஃபர் பண்றீங்க..??" என்று கூர்மையான கண்களுடன் அவனைப் பார்த்து கேட்டாள் பிரியா.

அவர்கள் இப்போது இருக்கும் நிலைக்கு அவனால் பிரியாவிற்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் கொடுப்பதே அவனுக்கு கடினம் தான்.

இருந்தாலும், அவளை மேனேஜர் என்று சொல்லிவிட்டு அவளுடைய சம்பளம் வெறும் பத்தாயிரம் தான் என்று சொல்ல அவனுக்கே கேவலமாக இருந்தது.

அதனால், 15,000 என்று வேகமாக சொல்லிவிட்டான்.

“ஏன் டா வர்ற பிராஃப்பிட்ல அடுத்த மாசத்துக்கு கிராசரி ஐட்டம்ஸ் வாங்குறதுக்கே காசு தங்குமானு கூட தெரியல...

இதுல நீ பாட்டுக்கு என்ன டா 15,000 அவளுக்கு சம்பளம் தரேன்னு சொல்ற...??" என்று தன் மனதிற்குள் நினைத்த ஜீவா இசையையே பார்த்து வைத்தான்.



பிரியா அமைதியாக தன் நிலைமையை பற்றி யோசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

15,000 என்பது அவளுக்கு இதுனாள் வரை ஒரு சாதாரண தொகையாக தான் இருந்தது.

ஈசியாக ஷாப்பிங்க்காக சில மணி நேரங்களில் அவள் அந்த தொகையை செலவிட்டு இருக்கிறாள்.

ஆனால் இப்போது அந்த 15 ஆயிரம் ரூபாய் அவள் இருக்கும் இந்த நிலையில் அவளுக்கு பெரிய தொகையாக தான் தெரிந்தது.

இவர்களிடம் அவள் இந்த வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டாலும் வேறு எங்கு சென்று வேலை தேடுவது என்று அவளுக்கு தெரியவில்லை.

அதனால், என்ன முடிவெடுப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

இசை பிரியா தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக எதையோ யோசித்துக் கொண்டு இருந்ததால் அவன் சொன்ன சம்பளம் அவளுக்கு மிகவும் குறைவாக தோன்றுகிறது போல என்று நினைத்து தனக்குள் வருத்தப்பட்டு சோகமான குரலில், “உன் கிட்ட சொல்றதுக்கு என்ன....

நான் ஃபிராங்க்காவே சொல்றேன் பிரியா.

எனக்கும் உனக்கு நிறைய சம்பளம் குடுக்கணும்ன்னு ஆசையா தான் இருக்கு.

ஆனா என்ன பண்றது...!! ஏன்னு தெரியல இப்ப கொஞ்ச நாளா நம்ம ரெஸ்டாரன்ட் லாஸ்ல தான் போயிட்டு இருக்கு.

சோ என்னால உனக்கு இப்போ இவ்ளோ சம்பளம் தான் குடுக்க முடியும்.

பட் நீ இப்ப இங்க வந்ததுக்கு அப்புறம் எனக்கு ஒரு பெரிய பலமும் நம்பிக்கையும், வந்த மாதிரி இருக்கு.

பிராஃபிட் வர ஆரம்பிச்சுருச்சுன்னா கண்டிப்பா நான் உனக்கு இன்கிரிமென்ட் போடுறேன்.

நான் என்ன போடறது..!! இது நம்ம ரெஸ்டாரன்ட்.

நீதானே மேனேஜர்...

உனக்கு எவ்ளோ சம்பளம் வேணும்னு நீயே டிசைட் பண்ணிக்கோ." என்று தன் மனதில் இருந்து உண்மையாகவும், நேர்மையாகவும், பேசினான்.

“உங்களுக்கு இருக்கிற கஷ்டத்துக்கு உங்களுக்கு மேனேஜரே தேவை இல்லையே..!!

அப்புறம் ஏன் என்ன ஹையர் பண்றீங்க..????" என்று குழப்பமான குரலில் கேட்டாள் பிரியா.“

“ஏன்னா... நான் மறுபடியும் என் யாழினிய இழக்கிறதுக்கு விரும்பல." என்று உறுதியான குரலில் சொன்னான் இசை.

“நான் சொல்றத நீ நல்லா தெளிவா கேட்டுக்கோ இசை.

நான் உன் யாழினி இல்ல.

என்னால யாழினியாக முடியாது.

நான் பிரியா. முதல்ல என் முகத்துக்குள்ள யாழினிய தேடுறத நிறுத்து.

நீ இங்க தேடுனா உனக்கு யாழினி கிடைக்க மாட்டா." என்று உறுதியான குரலில் சொன்னாள் பிரியா. அவள் குரலில் லேசான கோபம் தெரிந்தது.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-4
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.