CHAPTER-37

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
அன்று ஒரு அழ‌கான‌ காலை நேர‌ம், முழுதாய் விரிந்திருந்த‌ பூ ஒன்றின் மீது மொட்டு மொட்டாய் பூத்திருந்த ப‌னி துளிக‌ள் அனைத்தையும் முழுதாய் அந்த‌ சூரிய‌ன் உறிஞ்சியிருக்க‌, அப்ப‌டியே மேலே அந்த‌ ஒரு பூ ம‌ட்டும‌ல்ல‌ ப‌ல்வேறு வ‌கையான‌ பூக்க‌ள் ப‌ல்வேறு வ‌ண்ண‌ங்க‌ளில் அவ்விட‌ம் முழுக்க‌ நிறைந்திருந்தது. அப்படியே அந்த‌ ப‌ர‌ந்து விரிந்த‌ ப‌குதி மொத்த‌மும் ப‌ல்லாயிர‌ க‌ண‌க்கான‌ த‌வ‌ர‌ங்க‌ளும் அதனுள் ப‌ல்வேறு வ‌கையான‌ பூச்சிக‌ளும் ப‌ற‌வைக‌ளும், சில‌ உயிரின‌ங்க‌ளும் கூட‌ நிறைந்திருக்க‌, அப்ப‌டியே வெளியே அத‌ன் முக‌ப்பு ப‌க்க‌த்தில் National Botanical Research Institute என்ற‌ பெரிய பெய‌ர்ப‌ல‌கை பச்சை நிறத்தில் மின்னியது.

இது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாகும். இந்த‌ ப‌ர‌ந்து விரிந்த‌ பூங்காவில், சுமார் 7000 தாவர வகைகள், அதில் 2000-க்கும் மேற்ப‌ட்ட‌ ம‌ல‌ர் வ‌கைக‌ள் என்று நாம் இது வ‌ரை கண்ட‌ ம‌ற்றும் க‌ண்டிராத‌ ப‌ல்வேறு வ‌கை த‌வ‌ர‌ங்க‌ளும் ப‌ல்வேறு வ‌கையான‌ ப‌ற‌வைக‌ள் ம‌ற்றும் உயிரின‌ங்க‌ளும் குவிந்து கிடக்க, அவ்விடம் மொத்தமும் முழு இயற்கை சூழலில் அத்தனை அழகாய் காட்சியளித்தது.

அதனை காண சுற்றுலா பயணிகள் நிறைய பேர் வந்து குவிந்திருக்க, பொது மக்களால் நிரம்பி வழிந்த அந்த பூங்காவின் ஒரு ப‌குதி மட்டும் யாருமே இல்லாமல் முழு அமைதி நிலவியது. அந்த‌ குறிப்பிட்ட‌ இட‌த்தை ஆராய்ச்சிக்காக‌ லீசுக்கு வாங்கியிருந்தான் ஒருவ‌ன்.

அந்த‌ ஒருவ‌ன் முன்புதான் இப்போது கார்ட‌ன் மேன‌ஜ‌ர் ம‌ற்றும் இர‌ண்டு அதிகாரிக‌ள் த‌லை குனிந்து நின்றிருக்க‌, அவ‌ர்க‌ளை தீயாய் முறைத்த‌ப‌டி நின்றிருந்தான் ருதன்.

அவ‌ன் அன‌ல் பார்வையில் அவ‌ர்க‌ள் ச‌ற்றும் நிமிராது எச்சிலை கூட்டி விழுங்க‌, "யாரு முன்னாடி நிக்கிறீங்க‌ன்னு தெரியுதா?" என்று அழுத்தி கேட்டான் ருத‌ன்.

"சாரி சார்." என்று மேன‌ஜ‌ர் ப‌த‌ற்ற‌மாய் கூற‌, அவ‌னை அழுத்த‌மாய் பார்த்து, "நா கேட்ட‌ கேள்விக்கு ப‌தில்." என்றான் ருத‌ன்.

அதில் அவ‌னோ ச‌ற்றும் பார்வையை நிமிர்த்தாம‌ல் த‌ய‌க்க‌மாய் இத‌ழ் திற‌ந்து, "சி.இ.ஓ ஆஃப் யுவ‌ர் ப‌யோடெக் க‌ம்ப்.." என்று கூற‌ வ‌ர‌, உட‌னே த‌ன் க‌ர‌ம் நீட்டி த‌டுத்தான் ருத‌ன்.

அதில் அவ‌ன் திடுக்கிட்டு நிமிர‌, "எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு குவாலிஃபைட் ப்ளான்ட் ஜெனிட்டிக் சைன்டிஸ்ட்." என்றான் அழுத்த‌மாக‌.

அதில் அவ‌ன் மீண்டும் த‌லை குனிய‌, "சோ என்ன‌ ப‌ண்ண‌னும்னு என‌க்கே சொல்லாத‌ புரியுதா?" என்றான் அழுத்த‌மாக‌.

அதில் அவ‌னும் ச‌ரியென்று ப‌த‌ற்ற‌மாய் த‌லைய‌சைக்க‌, "இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல‌ நா கேட்ட‌து என் கையில‌ இருக்க‌ணும்." என்றான் அழுத்த‌மாக‌.

அதில் அவ‌ன் ப‌த‌றி நிமிர‌, "ஃபாஸ்ட்" என்றான் ச‌த்த‌மாக‌. அதில் திடுக்கிட்டு திரும்பி வேக‌மாய் ஓட‌ ஆர‌ம்பித்தான் அந்த‌ மேனேஜ‌ர்.

அதை பார்த்த‌ ம‌ற்ற‌ அதிகாரிக‌ள் இருவ‌ரும் ப‌த‌ற்ற‌த்தில் அமைதியாய் நிற்க‌, இப்போது அவ‌ர்க‌ளின் ப‌க்க‌ம் திரும்பிய‌து ருத‌னின் பார்வை.

அதில் ச‌ட்டென்று அவ‌ர்க‌ளின் இத‌ய‌ம் நின்று துடிக்க‌, அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் கூர்மையாய் பார்த்து, "ஆல் maintenance logs properly updated-ஆ இருக்கா?” என்று கேட்டான் ருத‌ன்.

அதில் திடுக்கிட்டு நிமிர்ந்த‌ ஒருவ‌ன், "ய‌..யா சார். ஆல் maintenance logs daily basis-ல update ப‌ண்ணிருக்கோம். Any discrepancies இருந்தா immediate note பண்ணி report ப‌ண்ணிருவோம்." என்று கூற‌, அதில் த‌லைய‌சைத்துவிட்டு லேசாய் பின்னால் திரும்பிய‌ ருத‌ன், "சேம்பில்ஸ் க‌லைக்ட் ப‌ண்ணியாச்சா?" என்று கேட்டான்.

அங்கே க்ள‌வுஸ் போட்டு தாவ‌ர‌ மாதிரிக‌ளை க‌வ‌னமாய் எடுத்துக்கொண்டிருந்த‌ யோகி, "இதோ பாஸ் டூ மினிட்ஸ்" என்றான்.

அதில் திரும்பி முன்னால் இருந்த‌ தாவ‌ர‌ங்க‌ளை பார்த்தவ‌ன், "இதோட cross-breeding success rate என்ன?” என்று கேட்டான் ருத‌ன்.

அத‌ற்கு அவ‌ர்க‌ளும் ப‌திலை கூற‌, அதில் புருவம் சுழித்து எதையோ யோசித்தபடியே முன்னால் நடந்தவன் அடுத்து எதோ கேட்க வர அவன் கைப்பேசி ஒலித்தது.

அதில் அவன் நிறுத்தி தன் மொபைலை எடுத்து காதில் வைத்து, "ஹலோ!" என்றான். அந்த பக்கம் என்ன கூறினார்களோ அடுத்த நொடியே, "வாட்?" என்று கத்தினான் ருதன். அதில் இங்கிருந்த அதிகாரிகள் அதிர்ந்து அவனை பார்க்க, யோகியோ பட்டென்று திரும்பி அவனை பார்த்தான்.

அவனோ அத்தனை கோபமாய், "அது வ‌ரைக்கும் What the hell did you plug?" என்று ஒரு பூவை இறுக்கி பிடிக்க‌, அது அவ‌ன் உள்ள‌ங்கைக்குள் முழுதாய் க‌ச‌ங்கியிருந்த‌து.

"சாரி பாஸ் அது.." என்று அந்த‌ ப‌க்க‌ம் கூற‌ வ‌ர‌, "கான்ச‌ன்ட்ரேஷ‌னோட‌ வேல‌ செய்யுற‌தா இருந்தா ம‌ட்டும் இரு. இல்ல‌ன்னா இப்ப‌வே.." என்று கூற வர, அவ‌ன் முக‌த்தில் ப‌ட‌ர்ந்த‌து ஒரு ப‌ட்டு துப்ப‌ட்டா.

அதில் அப்ப‌டியே அமைதியாகிவிட்ட‌வ‌னின் உட‌ல் மொத்த‌மும் இள‌க‌, அந்த‌ துப்பாட்டாவோடு உர‌சி மூடிய‌து அவ‌ன் இமைக‌ள். அவ‌னின் திடீர் அமைதியில் ஃபோனின் அந்த‌ ப‌க்க‌ம் இருந்த‌வ‌னோ, "சார்?" என்று த‌ய‌க்க‌மாய் அழைக்க‌, அவ‌னிட‌ம் க‌வ‌ன‌த்தை ப‌ற்றி பேசிக்கொண்டிருந்த‌வ‌னோ இப்போது முழுதாய் க‌வ‌ன‌த்தை தொலைத்திருந்தான்.

இத்த‌னை வ‌ருடத்தில் எத்த‌னையோ பூக்க‌ளின் வாச‌த்தை ஆராய்ந்திருக்கிறான். எத்த‌னையோ வாச‌னை திர‌விய‌ங்க‌ளை உருவாக்கியிருக்கிறான். ஆனால் முத‌ல் முறையாய் ஒரு வாச‌ம் அவ‌ன் நாசிக்குள் புகுந்து உட‌ல் முழுதும் நிர‌ம்பி புதுவித‌ சிலிர்வை கொடுக்க‌, சுக‌மாய் பின்னிருந்த‌ பூவேலியில் சாய்ந்தான். அதில் அவ‌ன் உட‌ல் அந்த‌ மெல்லிய‌ ப‌ட்டாடையை விட‌ லேசாய் மாறியிருக்க‌, அப்ப‌டியே அவ‌ன் இறுக்க‌ம் மொத்த‌மும் த‌ள‌ர்ந்து அவ‌ன் கைவிர‌ல்க‌ளுள் சிக்கியிருந்த‌ பூ மெல்ல‌ விடுப‌ட‌, அவ‌ன் முக‌த்திலிருந்த‌ ப‌ட்டு துப்ப‌ட்டாவும் மெல்ல‌ வில‌கி சென்ற‌து.

அதில் மெல்லிய‌தாய் புருவ‌ம் குறுகி அந்த‌ வாச‌னை வில‌கும் திசையோடே திரும்பியவன் மெதுவாய் இமை பிரிக்க‌, அத‌ன் ந‌டுவே காற்றில் அலையாய் அசைந்தாடி வில‌கி சென்ற‌து அந்த‌ ப‌ட்டு துப்ப‌ட்டா.

அதில் தானாய் இவ‌னின் கால்க‌ளும் அத‌னை நோக்கி ந‌க‌ர‌, இடையில் வ‌ந்த‌ ம‌ர‌க்கிளை இடையே தெரிந்த‌து அவ‌ளின் கார் கூந்த‌ல். அதை அவ‌ள் விர‌ல்க‌ள் மெதுவாய் வில‌க்கி காதோர‌ம் சொருக‌, அந்த‌ மிருதுவான காது ம‌ட‌லின் கீழ் அசைந்தாடிய‌து ஒரு வெள்ளி நிற‌ தொங்க‌ட்டா. அதில் இவ‌ன் விழியில் மெல்லிய‌தாய் இர‌ச‌னை எட்டி பார்க்க‌, புருவ‌த்தை குறுக்கி அவ‌ள் முக‌ம் பார்க்க‌ சுவார‌சியமாய் முன்னால் சாய்ந்தான். அந்த‌ நொடியே அவ‌ளும் திரும்ப‌, அந்த‌ இலைக‌ளின் இடைவெளியில் அழ‌காய் வ‌ந்து நின்ற‌து அவ‌ளின் இரு க‌ருவிழிக‌ள்.

அதில் இவ‌ன் விழிக‌ள் இர‌ச‌னையாய் விரிய‌, அவ‌ளோ கீழிருந்த‌ பூவை காண‌ விழியை இற‌க்க‌, அந்த‌ விழிக‌ளின் மீதிருந்த‌ அட‌ர்ந்த‌ இமை குடைக‌ள் அழ‌காய் க‌விழ்ந்த‌தில், இவ‌ன் புருவ‌ங்க‌ள் இர‌ச‌னையாய் விரிந்து தளர்ந்தத‌து.

அவ‌ளோ அப்ப‌டியே அங்கிருந்து ந‌க‌ர‌, இவ‌னின் ம‌ன‌மும் சேர்ந்து ந‌க‌ர‌, இவன் கால்க‌ளும் அவ‌ள் பின்னாலே ந‌க‌ர்ந்த‌து. அந்த‌ பூவேலிக்கு பின்னால் கருநீல ஆடையில் பெண்ணவள் அழகாய் நகர்ந்து செல்ல, அந்த‌ சிறு சிறு இடைவெளியில் அரைகுறையாய் தெரிந்த அவ‌ளின் உருவ‌த்தை இர‌ச‌னையாய் பார்த்த‌ப‌டியே இந்த‌ ப‌க்க‌ம் இவ‌னும் நட‌ந்தான்.

அப்ப‌டியே கீழே அவ‌ளின் பாத‌ங்க‌ள் ச‌ருகுக‌ளில் ப‌திந்து ந‌ட‌க்கும் ச‌த்த‌ம், இவ‌ன் காதுக‌ளையும் சுவார‌சிய‌மாக்கிய‌து. ஏனோ தென்ற‌லில் அசைந்தாடும் இலைக‌ளின் ஓசையைவிட‌ மென்மையான‌ ஓசை, அவ‌ளின் ஒவ்வொரு அடியிலும் இருந்த‌து.

அதில் அவ‌ன் குனிந்து அந்த‌ பாத‌ங்க‌ளை பார்க்க‌, அங்கே ஹீல்ஸ் எதுவும் இல்லாது ஃப்ளாட்டான‌ அணிக‌ல‌னுள் ம‌றைத்து வைத்த‌ வெண்ணை துண்டாய் ப‌திந்து ந‌ட‌ந்த‌ பாத‌ங்க‌ள், அப்ப‌டியே ஒரு இட‌த்தில் நின்ற‌து.

அதில் இவ‌னும் அப்ப‌டியே நின்றுவிட‌, அவ‌ளோ த‌ன் கூந்த‌லை ஒதுக்கிய‌ப‌டி மெதுவாய் குனிந்தாள். அதில் இவ‌னும் மெல்ல‌ த‌லையை சாய்த்து புருவ‌த்தை சுழிக்க‌, அந்த‌ பூவேலியில் இவ‌ன் ப‌க்க‌மிருந்த‌ அழ‌கிய‌ பூ ஒன்றை ப‌றிக்க‌ அவ‌ள் பிஞ்சு விர‌ல்க‌ள் உள்ளே நுழைந்த‌து. அதில் இவ‌ன் இத‌ழ்க‌ள் மெல்லிய‌தாய் வ‌ளைய‌, திடீரென்று அவ‌ள் விரலை முள் கிழித்திருக்க, ச‌ட்டென்று க‌ர‌த்தை உருவினாள். அதில் இவ‌ன் திடுக்கிட்டு ஒரு இலையை வில‌க்க‌, அவ‌ள் பிஞ்சு விரலில் சிவ‌ப்பாய் ஒரு இர‌த்த‌ மொட்டு வெளி வ‌ந்திருந்த‌து. அதை அப்ப‌டியே அவ‌ளின் இத‌ழ்க‌ளுள் புகுத்திக்கொள்ள‌, அப்போதே தெரிந்த‌ அவ‌ளின் செவ்வித‌ழ்க‌ளில் இவ‌ன் விழிக‌ள் முழுதாய் உறைந்த‌து.

எந்த‌ ஒரு பூவித‌ழிலுமே காணாத‌ மென்மை, எந்த‌ ஒரு பூவித‌ழிலும் காணாத‌ அந்த‌ மென் வ‌ரிக‌ள் இந்த‌ செவ்வித‌ழ்க‌ளில் அத்த‌னை அழ‌காய் வ‌ளைந்து வ‌ரைந்திருப்ப‌து எவ்வாறு என்று அவ‌ன் அறிவியல் மனம் ஆராய துவங்கியது. அப்ப‌டியே அவ‌ன் அருகிலிருந்த‌ ஈர‌ பூவொன்றை வில‌க்க‌, அங்கே அவ‌ளின் துப்ப‌ட்டா வில‌கிய‌ மார்பு குழியில் பொத்தென்று விழுந்த‌து ஒரு நீர் துளி. அதில் ச‌ட்டென்று இவ‌ன் இமைக‌ள் மூடி திற‌க்க‌, அந்த‌ குழிக்குள் மெதுவாய் வ‌ழிந்து சென்ற‌து அந்த‌ நீர் துளி. ஒரு ம‌டித்த‌ இலையின் ந‌டுவே வ‌ழியும் ப‌னி துளியில் இல்லாத‌ அழ‌கு இவ‌ள் ப‌ழ‌ குழியில் ஆராய்ந்த‌து அவ‌ன் ம‌ன‌து.

அங்கே த‌ன் துப்பாட்ட‌வை இழுத்து மூடிய‌வ‌ள், மெதுவாய் நிமிர‌, இவ‌னுமே மெதுவாய் அவ‌ள் முக‌த்த‌ருகே இருந்த‌ கொடியை வில‌க்க‌, அவ‌ளின் முக‌ம் முழுதாய் தெரியும் நொடி ச‌ட்டென்று அவ‌ளை பிடித்து திருப்பியிருந்தாள் அவ‌ள் தோழி.

மீண்டும் அவ‌ள் பின் ம‌ண்டையே அவ‌னுக்கு தெரிய‌, அவ‌ள் முன் நின்றிருந்த‌வ‌ளோ, "இங்க‌ என்ன‌ ப‌ண்ணிட்டிருக்க‌ வா." என்று இழுத்து சென்றாள். அவ‌ளும் அப்ப‌டியே அவ‌ளுட‌ன் சென்றிருக்க‌, இவ‌னுள் மெல்லிய‌தாய் ஒரு ஏமாற்ற‌ம். அதில் புரியாது த‌ன்னையே சுவார‌சிய‌மாய் பார்த்துக்கொண்ட‌வ‌னின் முக‌த்தில் மெதுவாய் இர‌ச‌னை பூச‌, "பாஸ்" என்றான் யோகி.

அதில் சற்றும் அவளிடமிருந்து பார்வையை விலக்காமல், "யார் அவ‌?" என்று அத்த‌னை மென்மை‌யாய் கேட்டான்.

"யாரு பாஸ்" என்று இவ‌ன் புரியாது அவ்விட‌த்தை பார்க்க‌, அவர்களின் பின்புறம்தான் இவனுக்கும் தெரிந்தது.

"அவ‌ங்க‌ காலேஜ் ஸ்டூட‌ன்ட் சார். ப்ராஜ‌க்ட் விஷ‌ய‌மா வ‌ந்திருங்காக‌." என்றபடி அங்கு வந்தான் கார்ட‌ன் அதிகாரி.

அதில் அவ‌ன் இர‌ச‌னை மேலும் அதிக‌ரிக்க‌, இந்த‌ வேலி இடைவெளியில் அங்கே தூர‌மாய் சென்றுக்கொண்டிருந்த‌வ‌ளின் பின் உருவ‌த்தில் இவ‌ன் இத‌ழ்க‌ள் அழ‌காய் வ‌ளைந்த‌து.

"இந்த‌ பூவேலியோட‌ உங்க‌ ரிச‌ர்ச் லேன்ட் முடியுது. சோ இதுக்கு அந்த‌ ப‌க்க‌ம் ம‌ட்டுந்தா இருப்பாங்க‌. ந‌ம‌க்கு எந்த‌ டிஸ்ட‌ர்ப‌ன்ஸும் இருக்காது டோன்ட் வ‌ரி சார்." என்று இவ‌ன் கூற‌, "ஓ ஐ சி.." என்ற‌ப‌டி அவ‌ள் ப‌றிக்க‌ முய‌ன்ற‌ அந்த‌ பூவை மெதுவாய் ப‌றித்து எடுத்தான் ருதன்.

"பாஸ்!" என்று யோகி த‌ய‌க்க‌மாய் அழைக்க, "ம்ம்" என்றவனின் பார்வை அந்த பூவில் குவிந்திருந்தது.

"சேம்பிள் க‌லைக்ட் ப‌ண்ணியாச்சு பாஸ். லேப் போலாமா?" என்று அவன் கேட்க‌, அதில் இர‌ச‌னையாய் அந்த‌ பூவையே ஆராய்ச்சியாய் பார்த்திருந்தவன், "போ வ‌ர்றேன்" என்றான் ருத‌ன்.

"ஆங்?" என்று அவ‌ன் விழிக்க‌, அவ‌னோ அந்த‌ பூவோடு அப்ப‌டியே அவ‌னை க‌ட‌ந்து சென்றிருந்தான்.

அதில் அப்ப‌டியே திரும்பி அவ‌னையே பார்த்த‌ப‌டி நின்ற‌வ‌ன், குனிந்து த‌ன் கையிலிருந்த‌ சேம்பிள்க‌ளையும் பார்த்து குழ‌ப்ப‌மாய் ம‌ண்டையை சொரிந்தான்.

இங்கே அவ‌ளின் தோழியோடு சென்ற‌ அமீராவோ அங்கே வேறு எதையோ பார்த்து முக‌ம் ம‌ல‌ர்ந்து, "ஹேய் ஒரு நிமிஷ‌ம்" என்ற‌ப‌டி அவ‌ச‌ர‌மாய் வில‌கி ஓட‌, "இவ‌ள‌ வெச்சுக்கிட்டு" என்று நெற்றியில் அடித்துக்கொண்டாள் தோழி.

அவ‌ளோ அங்கிருந்த‌ பூக்க‌ளின் அருகே சென்று, அங்கிருந்த‌ வ‌ண்ண‌த்து பூச்சி ஒன்றை பிடிக்க‌ முய‌ல‌, அதுவோ பட்டென்று அங்கிருந்து ப‌ற‌ந்து சென்றது. அதில் அழ‌காய் புன்ன‌கைத்தவ‌ள், அது விட்டு சென்ற பூவை விர‌லில் நிமிர்த்தி அத‌ற்கு மெல்லிய‌தாய் முத்த‌மிட‌, திடீரென்று அவ‌ள் க‌ர‌த்தில் ஏதோ வித்தியாச‌மாய் ஊறிய‌து. அதில் அவ‌ள் புரியாது பூவின் அடியில் பார்க்க‌, அங்கே புழு ஒன்று நெளிந்துக்கொண்டு இருந்த‌து.

அதில் விழியை அக‌ல‌ விரித்து "அ..!" என்று அல‌றிய‌டித்து திரும்பியவள், பின்னிருந்த‌ அக‌ண்ட‌ மார்புக்குள் மொத்த‌மாய் புகுந்திருந்தாள்.

அடுத்த‌ நொடி ப‌ட‌ப‌ட‌வென்று அங்கிருந்த‌ மொத்த‌ வ‌ண்ண‌த்து பூச்சிக‌ளும் எழும்பி ப‌ற‌க்க‌, அத‌ன் ந‌டுவே முழுதாய் உறைந்த‌ நிலையில் நின்றிருந்தான் ருத‌ன். அவ‌ன் மார்பு ச‌ட்டைக்குள் ந‌டுங்கிய‌ப‌டி ஒளிந்திருந்தாள் அமீரா. அதில் அப்ப‌டியே குனிந்து பார்த்த‌வ‌னுக்கோ இத்த‌னை நேர‌ம் ஒவ்வொன்றாய் இர‌சித்து அனுப‌வித்த‌ அழ‌கு மொத்த‌மும் பூக்குவிய‌லாய் த‌ன் மார்புக்குள் த‌ஞ்ச‌ம் புகுந்திருக்க‌வும், இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடித்து இத‌ழ்க‌ள் அழ‌காய் வ‌ளைந்த‌து.

இதுவ‌ரை இர‌சிக்கின்ற‌ அனைத்தையுமே த‌ன‌தாக்கி கொண்டே பழக்கப்பட்ட அவ‌ன் ம‌ன‌ம், இப்போது அவ‌ளை அள்ளி தூக்கிக்கொள்ள‌ துடிக்க, அவ‌ன் க‌ர‌ங்க‌ள் இர‌ண்டும் அப்ப‌டியே அவ‌ளை த‌ன‌க்குள் வைத்து இறுக்க‌மாய் மூட‌ போக‌, ப‌ட்டென்று அவ‌ளை பிடித்திழுத்திருந்தாள் தோழி.

அதில் திடுக்கிட்டு அவ‌ன் குனிந்து பார்க்கும் நொடி அவ‌ள் காணாம‌ல் போயிருக்க‌, புரியாது நிமிர்ந்து வேக‌மாய் சுற்றி அவ‌ளை தேடினான்.

இங்கே அவ‌ளை இழுத்து வ‌ந்து நிறுத்திய‌ தோழி, "லூசா நீ? ப‌ய‌த்துல‌ என்ன‌ ப‌ண்றோம்னே தெரியாதா உன‌க்கு?" என்று கேட்க‌, அவ‌ளோ பத‌ற்ற‌மாய் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ப‌துப்போல் புரியாது விழிக்க‌, அதில் தன் த‌லையில் அடித்துக்கொண்டவ‌ள், "அங்க‌ அந்த‌ வாத்தி ந‌ம்ப‌ள‌ தேடிகிட்டு இருக்கு வா மொத‌ல்ல‌." என்று இழுத்து சென்றிருந்தாள் தோழி.

அதை பின்னிருந்து பார்த்துக்கொண்டிருந்த‌ ருத‌னின் விழிக‌ளில் மீண்டும் அவ‌ளின் பின்னுருவ‌ம் ம‌ட்டுமே தெரிய‌, அந்த விழிகளில் கோபம் நிறைந்தது.

இங்கே க‌ல்லூரி ஆசிரியையும் ம‌ற்ற‌ மாண‌விக‌ளும் இருக்கும் இட‌த்தில் வ‌ந்து சேர்ந்த‌ அமீரா, "சாரி மேம் நா.." என்று கூற வர, "சும்மா சும்மா சாக்கு சொல்லாத அமீரா. உன் அப்பாக்கு யாரு பதில் சொல்வா?" என்று கேட்க, அப்பா என்ற வார்த்தையில் சட்டென்று இவள் உடல் அதிர்வை உணர்ந்தது.

இன்று ஒருநாள் தான் அந்த ஒருவரின் நினைவே இல்லாமல் அவள் முகத்தில் புன்னகை இருந்தது. இப்போது அதுவும் அப்படியே சுருங்கி மறைந்துவிட, வாடலாய் முகத்தை தாழ்த்தினாள் அமீரா.

"இனி என் கண் பார்வையிலயேதா நீ இருக்கணும் புரிஞ்சதா?" என்று அவர் கூற, இங்கே ஒருவனின் கண் பார்வையோ அந்த ஆசிரியைதான் எரித்து பார்த்தது.

"ஓகே மேம்." என்று அவள் தலையை தாழ்த்தியபடியே கூற, அதில் புருவத்தை குறுக்கிய இவனுக்கோ அவளின் தோழியின் கொண்டை அவள் முகத்தை மறைத்திருந்தது. அதில் கடுப்பாகிய இவனோ அந்த மொத்த கூட்டத்தையும் அனலாய் முறைத்தபடியே அருகிலிருந்த பூந்தொட்டிக்குள் கரத்தை நுழைத்தான்.

"சரி இங்கிருக்குற ட்ரீஸ் பத்தி நோட்ஸ் எடுத்துக்கோங்க." என்று ஆசிரியை அதை பற்றி கூற ஆரம்பிக்க, மற்றவர்களும் வேகமாய் அதை நோட் செய்ய ஆரம்பித்தனர். அப்ப‌டியே அந்த‌ இட‌த்திற்கு மேலே ஒரு விரிந்த‌ ம‌ர‌த்தில் பெரிதாய் தொங்கிக் கொண்டிருந்த‌து ஒரு தேன் கூடு.

அதில் லட்சக்கணக்காண தேனீக்க‌ள் கொத்தாய் ஒரே இடத்தில் குவிந்திருக்க‌, அங்கே குறிப்பார்த்து பாய்ந்து அடித்தது ஒரு கூலாங்க‌ல். அது ப‌ட்ட அடுத்த நொடி அந்த‌ தேனீ கூட்ட‌ம் மொத்தமும் சிதறி க‌லைய‌, அப்படியே கீழிருந்த‌வ‌ர்க‌ளுக்கு வித்தியாச‌மாய் ஏதோ ச‌த்த‌ம் வந்தது.

அதில் மற்றவர்கள் புரியாது புருவம் குறுக்க ஆசிரியரோ சத்தம் வரும் திசையில் மேலே பார்க்க, அடுத்த நொடி சட்டென்று பின்னால் நகர்ந்து அக‌ல‌ விழி விரித்து, "கேர்ள்ஸ் ரன் ஃபாஸ்ட்" என்று கத்தினார்.

அதில் திடுக்கிட்டு அனைவரும் மேலே பார்க்க, அங்கே தேனீ கூட்ட‌ம் மொத்தமும் ப‌டையோடு தங்க‌ளை நோக்கி பாய்ந்து வ‌ர சிதறி ஓட ஆம்பித்தனர். அதில் திடுக்கிட்டு சுற்றி பார்த்த அமீராவோ அப்போதே பதறி மேலே பார்க்க, அடுத்த நொடி அகல விழி விரித்து அப்படியே உறைந்திருந்தாள்.

அதற்குள் மொத்த தேனீ கூட்டமும் அவளை மொய்த்து கொண்டு மோதும் நேரம், பயந்து வேகமாய் அவள் முகத்தை திருப்ப, சட்டென்று அவனின் கருப்பு கோட்டை விரித்துக்கொண்டு அவளை முழுதாய் மூடி தன் மார்புக்குள் கொண்டு வந்தவன், பொத்தென்று அங்கிருந்த‌ குள‌த்திற்குள் விழுந்திருந்தான் ருத‌ன்.

அந்த‌ ச‌த்த‌த்தில் சித‌றி ஓடிக்கொண்டிருந்த‌ அனைவ‌ரும் திரும்பி பார்க்க‌, இருவ‌ருமே அந்த‌ குள‌த்திற்குள் காணாம‌ல் போயிருந்த‌ன‌ர்.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-37
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.