Chapter-3

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
அத்தியாயம்: 3


ஆபீசுக்கு தன் ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்த ரதிக்கு யாரோ ஒருவன் வலியில் முனகியபடி உதவி கேட்பது போல இருந்தது. அதனால் தன் ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கையில் pepper ஸ்பிரே உடன் ஒரு புதருக்கு பின்னே சென்று பார்க்கிறாள் அவள். அங்கே முப்பது வயது மதிக்கத்தக்க பார்ப்பதற்கே ஹீரோ போல handsomeஆக இருந்த இளைஞன் ஒருவன் தலையில் அடிபட்டு அவனது வயிற்றில் யாரோ கத்தியால் குத்தி இருந்ததால் தன் ஒரு கையால் வயிற்றை பிடித்துக் கொண்டு அரை மயக்கத்தில் கிடந்தான். அவனது வெள்ளை சட்டை முழுவதும் ரத்த சிவப்பாக மாறி இருந்தது. உயிருக்கு போராடும் நிலையில் அவனது உதடுகள் “ஹெல்ப்...!! எனக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க..!!" என்று மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.


அதை பார்த்த உடனேயே ரதியின் நெஞ்சமெல்லாம் பதறியது. இதுவரை இப்படி யாரும் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவள் நேரில் கண்டதில்லை என்பதால் அவளது கண்கள் தானாக கலங்கி விட, வேகமாக அவன் அருகில் சென்று “யார் சார் நீங்க... உங்களுக்கு என்ன ஆச்சு? உங்களை யார் இப்படி பண்ணது?" என்று உடைந்த குரலில் பதட்டமாக கேட்டாள். அவனுக்கு தன் கண்கள் சொருகி மயக்கம் வருவதைப் போல இருந்தது. ஆனால் அவளது குரல் அவனுக்குள் ஏதோ ஒரு புதிய நம்பிக்கையை கொடுக்க அரைகுறையாக தன் கண்களைத் திறந்து தன் முன்னே இருந்தவளை பார்த்தான். அவளது கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளி அவனது முகத்தில் பட்டு தெறித்தது.


“உங்களுக்கு ஒன்னும் ஆகாது சார் பயப்படாதீங்க. நான் உங்களை எப்படியாவது காப்பாற்றுவேன். இருங்க, நான் இப்பவே ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி வர வச்சு உங்கள ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் அட்மிட் பண்றேன்." என்று சிறு சிம்பல்களுடன் அழுது கொண்டே சொன்ன ரதி அவனை நேராக தூக்கி அமர வைத்து தனது துப்பட்டாவை கழட்டி அதை இரண்டாக கிழித்து அவனது வயிற்றிலும், தலையிலும் இரத்தப்போக்கை நிறுத்துவதற்காக கட்டிவிட்டு உடனே ஆம்புலன்ஸ்க்கு கால் செய்தாள்.


தனக்காக அவள் இவ்வளவு பதறுவதையும், அவளது கலங்கிய கண்களையும், டெடி பியர் போல க்யூட் ஆக இருந்த அவளையும் பார்த்தபடி தன் கண்களை மூடிய அந்த இளைஞன் மயங்கி கீழே சரிந்தான். அதை பார்த்தவுடன் பதறிப் போன ரதி அவனது உடலைக் குலுக்கி, “சார்... சார்... கண்ணை முழிச்சு பாருங்க சார்..!! நான் பேசறது உங்களுக்கு கேக்குதா?" என்று கேட்டுவிட்டு தரையில் அமர்ந்தவள், அவனை தூக்கி தன் மடியில் போட்டுக்கொண்டு அவனுக்கு மயக்கம் தெளிய வேண்டும் என்பதற்காக அவனது கன்னத்தில் தட்டினாள்.


ஆனால் ஒன்றும் பயனில்லை. அவனது முகம் தொங்கிவிட்டது. அதனால் அவன் இறந்து விட்டானோ என்று நினைத்து பதறிய ரதி அவனை மீண்டும் தரையில் படுக்க வைத்துவிட்டு ஓடி சென்று தனது ஸ்கூட்டிக்குள் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தாள். அப்போதும் அந்த இளைஞன் பேச்சு மூச்சின்றி கிடந்தான்.


அதனால் இன்னும் பயந்து போன ரதி முதலில் இவனுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது இங்கே இவன் இப்படி கிடப்பதை inform செய்ய வேண்டும் என்று நினைத்து அவனது பேண்ட் பாக்கெட்டில் மொபைல் போன் இருக்கிறதா என்று தேடினாள். ஆனால் அங்கே ஒரே ஒரு பர்ஸ் மட்டும் தான் இருந்தது. அதனால் வேகமாக அதை எடுத்து அவள் திறந்து பார்க்க, அதற்குள் இறந்து போன அவனது அம்மாவின் பழைய புகைப்படம் இருந்தது. அந்த புகைப்படத்தில் அவனது அம்மா அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதை எல்லாம் பார்க்க அதிக நேரம் இல்லை என்பதால் உருப்படியாக வேறு ஏதேனும் அதில் இருக்கிறதா என்று தேடினாள்.


அதற்குள் விக்ரம் குருமூர்த்தி என்ற பெயர் அச்சிடப்பட்ட பிளாட்டினம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் 4, 5 இருந்தது. அதனால் கடுப்பான ரதி அந்த பர்ஸை கிழித்துவிடும் வேகத்தில் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று தேடினாள். அப்போது அவள் கண்களில் விக்ரம் குருமூர்த்தி, CEO of Guru industries என்ற பெயரில் ஒரு பிசினஸ் கார்டு தென்பட்டது. அதில் மேனேஜர் ஆகாஷ் என்று போட்டு ஒரு நம்பர் இருந்தது. அதனால் உடனே அந்த நம்பருக்கு கால் செய்தாள் ரதி.


அவசரமாக எங்கேயோ தன் காரில் சென்று கொண்டிருந்த ஆகாஷ் தெரியாத நம்பரில் இருந்து தனக்கு கால் வருவதால் அதை புறக்கணித்துவிட்டு சாலையில் தனது கவனத்தை செலுத்தினான். இருப்பினும் மீண்டும் மீண்டும் ரதி அவனுக்கு கால் செய்து கொண்டே இருக்க கடுப்பான ஆகாஷ், “ஹலோ..!! யாரது..? அறிவில்லையா உங்களுக்கு? யாராவது கால கட் பண்ணா அவங்க பிஸியா இருப்பாங்கன்னு நினைச்சுட்டு மறுபடியும் மறுபடியும் கூப்பிடக்கூடாதுன்னு தெரியாதா?" என்று அவன் எரிந்து விழ, “சார்.. சார்.. இங்கே ஒருத்தர் அடிப்பட்டு பேச்சு மூச்சு இல்லாம மயக்கமா கிடைக்கிறாரு. அவர் பர்ஸ்ல இருந்த காட்டுல உங்க நம்பர் மேனேஜர் என்று போட்டு இருந்துச்சு. அதான் உங்களுக்கு கால் பண்ணேன்." என்று ரதி அவசரமான குரலில் சொல்ல, ஷாக் ஆகி தனது காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் ஆகாஷ். பின் “அவர் எப்படி இருக்காரு? அவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? அவர் பேர் என்னன்னு உங்க கிட்ட சொன்னாரா?" என்று அவன் ரதியிடம் அடிக்கடுக்காக கேள்விகள் கேட்டான்.


அதற்கு சில நொடிகள் யோசித்த ரதி பின் ஏதோ ஞாபகம் வந்தவளாக, “அவர் யாருன்னு எனக்கு தெரியல சார். ஆனா அவர் பர்ஸில இருந்த Bank Cardsல விக்ரம் குருமூர்த்தின்னு போட்டு இருந்துச்சு." என்று சொல்ல, அப்படி என்றால் கண்டிப்பாக அது தனது பாஸாக தான் இருக்கும் என்று நினைத்து பதறிய ஆகாஷ், “மேடம் ப்ளீஸ் அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க. நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நான் உடனே அங்க வரேன். அவருக்கு எதுவும் ஆகாம பாத்துக்கோங்க." என்று அவசரமாக சொன்னவன், அவள் இருக்கும் இடத்தை கேட்டு தெரிந்து கொண்டு வேகமாக தன் காரில் பறந்தான்.


மயங்கி கிடப்பவனை கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்த ரதி, “இவர் பெயர் விக்ரம் குருமூர்த்தி போல..!! இவரை யார் இப்படி பண்ணாங்கன்னு தெரியலையே..!! பார்க்க இவர் அப்படி ஒன்றும் மோசமான ஆள் மாதிரி தெரியல. ஆனா இவருக்கு கூட எதிரிங்க இருக்காங்க. கடவுளே இவருக்கு எதுவும் ஆகாம நீ தான் காப்பாத்தணும்" என்று நினைத்து வேண்டிக் கொண்டவள், மீண்டும் கண்ணீருடன் அவனை மயக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வர போராடிக் கொண்டிருந்தாள். இப்படியாக தனக்காக அவள் செய்யும் ஒவ்வொன்றையும் ஓரமாக நின்று மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக்கொண்டு கூர்மையான விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்.


அவனது உடலைவிட்டு அவனது ஆத்மா பிரிந்து வந்துவிட்டது. அப்படி என்றால் அவன் இறந்து விட்டானா இல்லையா என்றெல்லாம் கூட யோசிக்காமல், தனக்காக உருகும் ரதியை தான் அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கே ஆம்புலன்ஸ் வருவதற்குள் ஆகாஷ் ஒரு டாக்டருடன் தனது காரில் வந்து விட, அவனும் அவனுடன் வந்த டாக்டரும் விக்ரமைத் தூக்கி காரில் போட்டுவிட்டு ரதியிடம் இருந்த அவனது உடைமைகள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு “இவர பத்தி உங்ககிட்ட யாராவது கேட்டா எதுவும் தெரியாதுன்னு சொல்லிடுங்க. நீங்க இவரை பார்க்கலன்னு நினைச்சுக்கோங்க." என்றுவிட்டு அங்கிருந்து வந்த தடம் தெரியாமல் காரில் வேகமாக பறந்து சென்று விட்டார்கள். அதனால் மீண்டும் ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து வர வேண்டாம் என்று சொல்லிய ரதி, மெதுவாக நடந்து தனது ஸ்கூட்டியின் அருகே சென்றாள்.




அவளது மனம் கனத்தது. இன்னும் அவளது இதயம் படபடவென துடித்துக் கொண்டு இருக்க, நொடிக்கு ஒரு முறை அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அதனால் அதே யோசனையுடன் அவள் தனது ஸ்கூட்டியில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்ய, இப்போது எங்கே செல்ல வேண்டும் என்று அவளுக்கு தெரியவில்லை. அவளுக்கு ஆபிஸ் செல்லும் மனநிலையும் இல்லை, வீட்டிற்கு செல்லவும் பிடிக்கவில்லை. அதனால் அவள் அருகில் உள்ள Beachஜ நோக்கி தனது வண்டியை திருப்பினாள்.


இதுவரை ஓரமாக நின்று அவளை கவனித்துக் கொண்டிருந்த விக்ரமிற்கு ரதி ஒரு இன்ட்ரஸ்டிங்கான கேரக்டராக தெரிய, அவளைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தானும் சென்று அவள் பின்னே ஸ்கூட்டியில் அமர்ந்து கொண்டான். தன் பின்னே இப்படி ஒரு ஆத்மா அமர்ந்திருக்கிறது என்று தெரியாமல் தன் ஸ்கூ
ட்டியில் சென்று கொண்டு இருந்தாள் ரதி.

தொடரும்..

amazon-ல் படிக்க..

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-3
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.