Chapter-3

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம் 3: இதுக்கு பேரு கல்யாணமா?

சில மணி நேரத்திற்கு முன்பு..


6:00 மணிக்கே‌ பள்ளியில் இருந்து பேருந்து மூலமாக தங்களது வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய தனது மகள் தேன்மொழி இரவு 8 மணி ஆகியும் இன்னும் வீடு திரும்பாதால் பயத்தில் இருந்தாள் அவளது அம்மா விஜயா.

ஏற்கனவே அவள் வீட்டிற்கு டியூஷன் படிக்க வந்த மாணவர்கள் அனைவரையும் அவரவரது வீட்டிற்கு அனுப்பி விட்டு அவர்களது தெருமுனை வரை சென்று தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் “நம்ம தேன் மொழிய பாத்தீங்களா? பஸ் ஏறிட்டேன். ஸ்டாப்பிங்ல வந்து இறங்கிட்டேன்னு ஃபோன் பண்ணி சொன்னப் பிள்ளைய இன்னும் ஆளைக் காணோம்.

நீங்க யாராவது பாத்தீங்களா? அவ பக்கத்துல எங்கேயாவது போறேன்னு உங்க கிட்ட எதுவும் சொல்லிட்டு போனாளா?” என்றெல்லாம் விசாரித்து பார்த்து விட்டாள். ஆனால் தேன்மொழியைப் பற்றி அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனால் உடனே பயந்து போய் காலேஜ் சார்பில் வெளியூருக்கு கபடி விளையாட சென்றிருந்த தனது இளைய மகன் ஆதவனுக்கு கால் செய்த விஜயா “டேய் உங்க அக்காவை ஆள காணோம் டா. எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு.

என் கிட்ட சொல்லாம அவ எங்கேயும் வெளிய போற ஆளும் இல்ல.‌ நான் ஆறு மணியில இருந்து அவளை தேடிட்டு இருக்கேன். இப்ப ரொம்ப நேரம் ஆகுது. இன்னும் ஆள காணோம். நான் விசாரிச்சு பார்த்த வரைக்கும், ஒருத்தர் கூட அவள பாத்ததா சொல்ல மாட்டேங்கறாங்க டா ஆதவா.. என் மனசு கிடந்து பதறுது டா.

ஐயோ.. நான் பெத்த மகளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே.. நீயும் பக்கத்துல இல்லாம எனக்கு கையும் ஓட மாட்டேங்குது காலும் ஓட மாட்டேங்குது. நீ உடனே கிளம்பி சென்னைக்கு வா டா.” என்று சொல்லிவிட்டு அழுதாள்.

“அம்மா நீ ஒன்னும் பதட்டப்படாத. தெருமுனை வரைக்கும் வந்த அக்கா.. எங்க போக போகுது? அவ ஃப்ரெண்ட் யாராவது கால் பண்ணி திடீர்னு வர சொல்லி இருப்பாங்க. அதான் அவ சொல்லாம கிளம்பி போயிருப்பா.

ஃபோன்ல சார்ஜ் இல்லாம சுவிட்ச் ஆஃப் ஆகிருக்கும். அதுக்கெல்லாம் ஏன் மா பயப்படுற? நாளைக்கு காலையில எனக்கு ஒரு முக்கியமான கபடி மேட்ச் இருக்கு. அத விட்டுட்டு இப்ப என்னால உடனே இப்படி அங்க கிளம்பி வர முடியும்? நீ இன்னும் கொஞ்ச நேரம் பாரு.

நானும் அவளோட ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் கால் பண்ணி அவளை பத்தி ஏதாவது தெரியுமான்னு கேட்டு பார்க்கிறேன். இன்னைக்கு நைட்டுக்குள்ள தேனு வீட்டுக்கு வரலைன்னா, நான் கிளம்பி வந்துடறேன் காலைல. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. நீ பயப்படாத, நான் அவ ஃபிரெண்ட்ஸ் கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன். நீ வை” என்று சொல்லிவிட்டு தன் அம்மாவின் அழைப்பை துண்டித்தான் ஆதவன்.

பின் அவனது காண்டாக்ட் லிஸ்டில் இருந்த தேன் மொழியின் நண்பர்கள் அனைவருக்கும் அவளைப் பற்றி ஏதேனும் தகவல் தெரியுமா? என்று ஃபோன் செய்து விசாரித்தான்.‌ அவர்கள் அனைவரும் ஒன்றைப் போலவே “தேன் மொழியா? அவ எப்பவோ ஸ்கூல்ல இருந்து கிளம்பிட்டாளே..
இப்ப வந்து அவளை பத்தி கேக்குற? எனக்கு எதுவும் தெரியாதே!
அவ என் கிட்ட எதுவும் சொல்லல.” என்றே பதிலளித்தார்கள்.

அதனால் தனது அக்காவை பற்றி யோசித்துப் பார்த்து பயந்து போன ஆதவன் “என்ன இது? எங்க போனா அவ? ஸ்கூல்ல இருந்து கிளம்பி தெருமுனை வரைக்கும் வந்தவ ஏன் வீட்டுக்கு வரல? அப்படியெல்லாம் அம்மாவுக்கு தெரியாம பொறுப்பில்லாம எதையும் செய்ற ஆள் இல்லையே அவ...

அம்மா இப்படி பயப்படுறத பார்த்தா, எனக்கும் ஏதோ சரி இல்லைன்னு தான் தோணுது. முதல்ல தேனுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்கணும். இந்த கபடி மேட்சை அடுத்த வருஷம் கூட விளையாடிகலாம். இப்ப தேனு எங்க இருக்கான்னு கண்டு பிடிக்கிறது தான் முக்கியம்.‌

அட்லீஸ்ட் அவ கிட்ட போன்லையாவது பேசுனா தான் நம்மளால நிம்மதியா இருக்க முடியும்.” என்று நினைத்து தனது குழுவினரிடமும், அவர்களது டீமின் கோச்சிடமும் சொல்லிவிட்டு நைட்டே சென்னைக்கு பஸ் ஏறினான்.

அவன் கிளம்பி இங்கே வருவதாக சொன்னதால் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாலும், தன் மகளுக்கு என்ன ஆனது என்று தெரியாததால் அதீத பதட்டத்தில் இருந்த விஜயா தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து தேன் மொழியை தேடி பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அங்கே..‌

“நான் எங்க வீட்டுக்கு போகணும். என்ன கொண்டு போய் விடுங்க.” என்று சொல்லி கத்தி அடம் பிடித்துக் கொண்டு இருந்த தேன் மொழியின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அவளை வீல் சேரில் அமர வைத்த ஆகாஷ் “உங்களுக்கு உயிரோட இருக்கணும்னு ஆசை இருந்தா நாங்க என்ன சொல்றோமோ அதை மட்டும் செய்யுங்க.” என்று தனது கணீர் குரலில் வில்லத்தனமாக சொன்னான்.

அதனால் பயந்து போன தேன் மொழி விழிகள் விரிய கலங்கிய கண்களுடன் வாயடைத்து போய் அவனை பார்க்க, “அவங்க கிட்ட இவ்ளோ ஹார்சா பிஹேவ் பண்ணனுமா ஆகாஷ்?” என்று கேட்டாள் அவன் மனைவி லிண்டா.

அவர்களது 3 மூன்று வயது சிறுவனான மகிழன் என்ற மகிழ் தன் அப்பா துப்பாக்கியை வைத்து ஒரு பெண்ணை மிரட்டுவதை பயத்துடன் பார்த்துக் கொண்டு
இருந்தான்.

அதை கவனித்த ஆகாஷ் மீண்டும் தனது துப்பாக்கியை கோட் பாக்கெட்டுக்குள் வைத்துவிட்டு தேன் மொழியின் காதோரம் “இங்க சின்ன குழந்தைங்க எல்லாரும் இருக்காங்க. அவங்க முன்னாடி நீங்க தேவை இல்லாம சீன் கிரியேட் பண்ணனும்னு நினைச்சீங்கன்னா, இந்த சீனை நான் என் ஸ்டைல்ல முடிச்சு வைக்க வேண்டியது இருக்கும். So keep quiet and do what we say. I hope you understand.” என்று கிசுகிசுத்தான்.

அதுவரை பயத்துடனேயே ஆகாஷை பார்த்துக் கொண்டிருந்த மகிழ் “டாடி.. இஸ் எவ்ரிதிங் ஓகே?” என்று திக்கி தினரி கேட்க, சிரித்த முகமாக அவன் அருகில் சென்ற ஆகாஷ் அவனை தூக்கிக் கொண்டு “yeah.. everything is okay my little boy. டாடி ஜஸ்ட் உன்னோட நியூ ஆன்ட்டி கூட விளையாடிட்டு இருந்தேன். இதெல்லாம் சும்மா ஃப்பிராங்க்.” என்று சொல்லி சமாளித்தான்.

“ஓ.. இது ஃப்பிராங்க்கா..?? நான் கூட நீங்க நெஜமாவே அவங்கள சூட் பண்ண போறீங்கன்னு நினைச்சு பயந்துட்டேன்.” என்று தனது மழலை குரலில் சொல்லிவிட்டு மகிழன் சிரிக்க, “லின்.. லேட் ஆகுதுல்ல.. அண்ணிய பத்திரமா கூட்டிட்டு வா. அவங்களுக்கு கால் வலில.. சோ அவங்க வீல் சேர்லையே இருக்கட்டும். ‌‌ ஒன்னும் பிரச்சனை இல்ல.” என்று தன் மனைவி லிண்டாவை பார்த்து சொன்னான் ஆகாஷ்.

சரி என்று தலையாட்டிய லிண்டா தேன்மொழி அமர்ந்திருந்த வீல் சேரை தள்ளிக் கொண்டு வெளியே செல்ல, மற்றவர்கள் அனைவரும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். மகிழனை தூக்கி வைத்திருந்த ஆகாஷ் தேன் மொழியின் அருகிலேயே நடந்து வந்து கொண்டு இருந்தான்‌. ‌

அந்த அப்பாவி சிறு பெண்ணின் இதயம் பந்தயத்தில் ஓடும் குதிரையை விட பல மடங்கு வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. “என்ன டா நடக்குது இங்க? இவன் எவன்னே தெரியல.. துப்பாக்கிய வச்சு சுட்டுருவேன். ஒழுங்கா நான் சொல்றதை எல்லாம் செய்யணும்னு சொல்லி மிரட்டுகிறான்.

அந்த குழந்தை அப்பான்னு கூப்பிட்டு.. பயத்துல பேசின உடனே அன்னியன் கேரக்டர்ல இருந்து அம்பியா மாறி அந்த சின்ன பையன் கிட்ட பாசமா பேசுறான். இது சரியான பைத்தியக்கார குடும்பமா இருக்குமோ?” என்று நினைத்த தேன் மொழி அவள் முன்னே தெரிந்த காட்சிகளை தனக்கு இருந்த குழப்பங்கள், பயம், கவலைகள் என அனைத்தையும் மீறி தனது வாயை பிளந்து கொண்டு பார்த்தாள்.

அவள் முன்னே எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறத்தில் அவள் போட்டோவில் பார்த்த தாஜ்மஹாலுக்கு உள்ளே இருப்பதைப் போல நேர்த்தியான பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட சுவர்கள் விண்ணை தொடும் அளவிற்கு மேலே நீண்டு இருக்க, சீலிங்கில் கூட அலங்கார விளக்குகள் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு பார்ப்பதற்கே மாளிகை போல இருந்தது அந்த விசாலமான ஹால்.

அதன் ஒவ்வொரு மூலையிலும் பலவண்ண ஃபிரஷ் ஆன பூக்களால் அலங்கரிக்கப்பட்டு லைட் டெக்கரேஷன்களுடன் அந்த மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. இதுவரை இப்படியான இடத்தை எல்லாம் அவள் டிவியில் தான் பார்த்திருக்கிறாள்.

அப்படி அவள் டிவியில் பார்த்த பணக்காரர்கள் வசிக்கும் மாளிகையை விட, இப்போது அவள் இருக்கும் மாளிகை அனைத்தையும் விட சிறந்தது என்று உறுதியாக அவளால் சொல்ல முடிந்தது. அதை அவளது கண்கள் அவளையும் மீறி கண்டு ரசித்து கொண்டு இருக்க, “ஏய் லூசு.. என்ன டி பண்ணிட்டு இருக்க? நீ என்ன இங்க இந்த பேலசை சுத்தி பார்க்க டூர் வந்திருக்கியா?

இந்த கூட்டம் உன்னை கடத்திட்டு வந்திருக்கு. உன்ன வேற கல்யாணம் பொண்ணு மாதிரி ரெடி பண்ணி வச்சிருக்கானுங்க. அவனுங்க சொல்றத எல்லாம் நீ கேட்கணும்னு வேற துப்பாக்கிய வச்சு மிரட்டுறானுங்க. இப்ப என்ன பண்றதுன்னு யோசிக்கிறதை விட்டுட்டு.. நீ என்ன இந்த இடத்தை பார்த்து ரசிச்சிட்டு இருக்க?” என்று கேட்டு அவளை பயமுறுத்திய அவளது மனசாட்சி மானசீகமாக அவளை காரி துப்பியது.


அவளது கண்களில் தெரிந்த மரண பீதியை கண்ட பாட்டி அவள் அருகில் சென்று ஆதரவாக அவளது கையை பிடித்துக் கொண்டு “இன்னைக்கு உனக்கும் என் பேரனுக்கும் இங்க கல்யாணம் நடக்கப்போகுது. இந்த நாளுக்காக தான் நாங்க ரொம்ப வருஷமா காத்துட்டு இருக்கோம்.

நான் உன்ன விட வயசுல பெரியவளா இருந்தாலும், நீ எங்களுக்காக இப்ப செய்ய போறது பெரிய தியாகம். அதை மனசுல வச்சு நான் உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன் மா தேன்மொழி. எங்களுக்காக தயவுசெஞ்சு இந்த கல்யாணத்தை முழு மனசோட சந்தோஷமா பண்ணிக்கோ.

நீ இந்த கல்யாணத்தை மனசார ஏத்துக்கிட்டா தான், இங்க எல்லாமே மாறும். அந்த மாற்றத்துக்காக தான் நாங்க எல்லாரும் ரொம்ப நல்லா வெயிட் பண்ணிட்டு இருக்கோம். எங்களுக்காக நீ இதை செஞ்சா, பிரதி உபகரமா நீ என்ன கேட்டாலும் நாங்க உனக்காக அதை செய்வோம்." என்றாள்.

பாட்டி வயதில் பெரியவர் என்பதாலும், ஆகாஷ் அருகில் நின்று தன்னையே முறைத்து பார்த்துக் கொண்டு இருந்ததாலும், பயத்தில் தேன் மொழிக்கு பேச்சே வரவில்லை. இருப்பினும் “இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு சத்தியமா ஒன்னும் புரியல. என்னமோ கனவு உலகத்துல இருக்கிற மாதிரி இருக்கு.

எனக்கே தெரியாம என்ன கடத்திக் கொண்டு வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க இவங்க!
எனக்கு இவங்க இப்டி கல்யாணம் பண்ணி வைக்கிறதுனால இவங்களுக்கு என்ன நல்லது நடக்க போகுது? இப்ப யாரை என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க?

ஐயோ கடவுளே..‌

எனக்கு ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது. நீதான் இந்த பணக்கார கும்பல் கிட்ட இருந்து என்னை காப்பாத்தணும்.” என்று நினைத்தாள். அவள் கண்களின் ஓரமாக நீர் பெருக்கெடுத்தது.

தொடரும்..

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-3
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.