CHAPTER-24

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
இங்கே இருட்டில் ஓடி வ‌ந்துக்கொண்டிருந்த‌வ‌ள் புரியாது சுற்றி பார்க்க‌, திடீரென்று அங்கிருந்து தெரு விள‌க்கு எரிந்த‌து. அதில் ச‌ட்டென்று நிமிர்ந்து பார்க்க‌, அத‌ன் வெளிச்ச‌த்தில் அவ்விட‌மே இப்போது தெளிவாய் தெரிய சுற்றியும் பார்த்தாள். ஏதோ ஒரு பால‌த்தின் மீது நின்றிருந்தாள்.

"டேய் அங்க‌ இருக்காடா" என்ற‌ப‌டி ஒருவ‌ன் க‌த்த‌, அதில் திடுக்கிட்டு திரும்பிய‌வ‌ள், வேக‌மாய் திரும்பி ஓட‌ ஆர‌ம்பிக்க‌, த‌டுக்கிவிட்டு குப்புற‌ விழுந்தாள். காலில் ப‌ல‌த்த‌ அடிப்ப‌ட்டு, "ஆ!" என்று காலை அழுத்தி பிடித்த‌வ‌ள், இறுக்கி விழி மூடி க‌ண்ணீரை வெளியேற்ற‌, "மாட்டுன‌டி" என்று நெருங்கினான் ஒருவ‌ன்.

அதில் ச‌ட்டென்று நிமிர்ந்து பார்த்த‌வள் ப‌ய‌ந்து ந‌டுங்கிய‌ப‌டி பின்னால் ந‌க‌ர‌, ‌அவளின் வியர்த்த தொண்டை பயத்தில் ஏறி இறங்க, அவ‌ளை விழுங்கும் பார்வை பார்த்த‌ப‌டியே நெருங்கி வ‌ந்த‌வ‌ன், "உன்ன‌ முழுசா திண்ணுட்டு உன் அப்ப‌னுக்கு பார்ச‌ல் அனுப்பி வெக்கிறேன்டி." என்று பல்லை கடித்து அவ‌ளின் கூந்த‌லை பிடிக்க‌ வ‌ந்த‌ நொடி, அவ‌ன் நெஞ்சிலேயே ப‌ல‌மாய் உதைத்த‌து ஒரு பூட்ஸ் பாத‌ம். அடுத்த‌ நொடி அவ‌ன் ப‌ற‌ந்து சென்று பின்னால் விழ‌, அவ‌ன் கையிலிருந்த‌ ம‌து பாட்டில் காற்றில் சுழ‌ல‌, அதை அழுத்தி பிடித்த‌து ஒரு க‌ர‌ம்.

"யார்ரா நீ?" என்று ம‌ற்றொருவ‌ன் அவ‌னை அடிக்க‌ வ‌ர‌, அதே பாட்டிலை அவ‌ன் முக‌த்தில் ப‌ல‌மாய் அடித்து உடைத்திருந்தான் அவ‌ன். அடித்த‌ வேகத்தில் அவன் முக‌மும் சேர்ந்து நொறுங்கி க‌ண்ணாடியும் இர‌த்த‌முமாக‌ தெறித்து சித‌ற‌, அந்த சிவந்த சிதறல்களுக்கு ந‌டுவே சிவ‌ந்த‌ அன‌லாய் தெரிந்த‌து ருத‌ன் முக‌ம்.

அந்த‌ முக‌த்தின் முன் அப்ப‌டியே ச‌ரிந்து பொத்தென்று விழுந்தான் அவ‌ன். அதில் திடுக்கிட்டு பின்னால் ந‌க‌ர்ந்த‌ அமீரா, ந‌டுக்க‌மாய் நிமிர்ந்து பார்க்க‌, த‌ன‌க்கு அர‌ணாய் நிற்ப‌வ‌னின் முதுகு ப‌க்க‌ம் ம‌ட்டுமே தெரிந்த‌து.

அதில் அவ‌ள் புரியாது மேலும் ந‌டுங்கிய‌ப‌டி கீழே பார்க்க‌, அவ‌ள் முன் அசைவின்றி விழுந்து கிட‌ப்ப‌வ‌னின் விழிக‌ள் திற‌ந்து விழிக்க‌ரு மேல் நோக்கி சென்றிருக்க‌, அவ‌ன் சிதைந்த‌ முக‌மெங்கும் ஒழுகிய‌ இர‌த்த‌ம் சாலையை ந‌னைத்த‌து. அதை பார்த்து அர‌ண்டு உறைந்திருந்த‌ ம‌ற்ற‌ மூவ‌ரும், "டேய் ராகுல்.." என்று அதிர்வாய் உச்ச‌ரிக்கும் முன், அந்த‌ முக‌த்தை அழுத்தி மிதித்தது ருத‌னின் கருப்பு பூட்ஸ் பாத‌ம். அதில் அவ‌ர்க‌ள் அதிர்ந்து நிமிர்ந்து ருத‌னை பார்க்க‌, அவ‌னோ விழியில் மேலும் அன‌லை கூட்டி, த‌ன் கால‌டியிலிருந்த‌ அவ‌ன் முக‌த்தை த‌ரைக்குள் புதைக்கும் அள‌விற்கு அழுத்தி மிதித்து முன்னால் வ‌ந்தான்.

அதில் அன்னிச்சையாய் பின்னால் ந‌க‌ர்ந்த‌வ‌ர்க‌ள், "ந‌..நாங்க‌ யாருன்னு தெரியாம‌ வெச்சுக்காத‌.." என்று ந‌டுங்கிய‌ குர‌லில் கூற‌, அவ‌ர்க‌ளை நோக்கி அடுத்த‌ அடியை அழுத்த‌மாய் எடுத்து வைத்த‌வ‌ன், "யாரு?" என்று அழுத்தி கேட்டான் ருத‌ன்.

அவ‌ன் க‌ண்ணில் இருந்த‌ அன‌லில் இவ‌ர்க‌ள் த‌டுமாறி எச்சில் விழுங்க‌, அவ‌ர்க‌ளை அழுத்த‌மாய் பார்த்தப‌டியே முன்னால் வ‌ந்த‌வ‌ன், "என் கார‌ தொட்ட‌து யாரு?" என்று மேலும் அழுத்தி கேட்டான்.

அதில் ஒரு நொடி அவ‌ர்க‌ள் புரியாது விழிக்க‌, அப்போதே அடுத்த‌ தெருவிள‌க்கு எரிய‌, ப‌ட்டென்று திரும்பின‌ர். அங்கே திடீரென்று வ‌ந்த‌ வெளிச்ச‌த்தில் ந‌டுநாய‌க‌மாய் நின்றிருந்த‌து ருத‌னின் Black Rolls-Royce Ghost கார்.

அதில் இவ‌ர்க‌ள் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, அத‌ன் முக‌ப்பு க‌ண்ணாடியில் இவ‌ர்க‌ளின் ம‌துபாட்டில் உடைந்து சித‌றியிருந்த‌து.

ச‌ற்று முன் அமீராவின் த‌லைக்கு குறி வைத்து வீசிய‌ பாட்டிலை , இடையில் ஒரு கார் வ‌ந்து இடித்து சென்ற‌தே, அந்த‌ காரே இதுதான். அதை பார்த்த‌ அமீராவின் விழிக‌ளும் அக‌ல‌ விரிய‌, அப்படியென்றால் இவன் தன்னை காப்பாற்ற வரவில்லையா என்று யோசிக்கும்போதே, பொத்தென்று அவ‌ள் கால‌ருகே வ‌ந்து விழுந்தான் ம‌ற்றொருவ‌ன். அதில் ப‌ட்டென்று பின்னால் ந‌க‌ர்ந்த‌வ‌ள், நிமிர்ந்து ருத‌னை பார்க்க‌, அப்போதும் முதுகு பக்கமே தெரிந்தவன், அடுத்து ஒருவ‌னின் க‌ர‌த்தை உடைத்திருக்க‌, அந்த‌ க‌ர‌த்திலிருந்த‌ க‌த்தி பொத்தென்று கீழே விழுந்த‌து. அதில் ச‌ட்டென்று கீழே பார்த்த‌வ‌ளின் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, ப‌ய‌ந்து வேக‌மாய் பின்னால் ந‌க‌ர்ந்தாள் இவ‌ள்.

இவ‌னோ கையை உடைத்துவிட்ட‌வ‌னின் அடிவ‌யிற்றில் ஓங்கி உதைக்க‌, அவ‌ன் வாயில் இர‌த்த‌ம் பீச்சிட‌ முதுகை வ‌ளைத்துக்கொண்டு முன்னால் வ‌ந்த‌வ‌ன், பொத்தென்று த‌ரையில் விழ‌, ச‌ட்டென்று முக‌த்தை திருப்பி விழியை இறுக்கி மூடிக்கொண்டாள் அமீரா.

அவ‌ள் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, அடுத்தடுத்து கேட்ட‌ ச‌த்த‌த்தில் அர‌ண்டு விழியை திற‌க்க‌, அவ‌ள் க‌ண்ணில் விழுந்த‌தோ ருத‌னின் அந்த‌ க‌ருப்பு கோஸ்ட் கார்தான். அதில் அவ‌ள் புருவ‌ங்க‌ள் விரிய‌, அதுவே இப்போது பாதுகாப்பான‌ இட‌மாய் அவ‌ள் விழியில் ப‌திந்த‌து. அதில் த‌ன் அடிப்ப‌ட்ட‌ காலை அழுத்தி பிடித்து எழுந்த‌வ‌ள், வ‌லியை பொறுத்துக்கொண்டு க‌டின‌ப்ப‌ட்டு நகர்ந்து அத‌ன் அருகில் சென்றாள்.

அதை பார்த்தபடியே விழி விரித்து நின்றிருந்த ஒருவ‌னின் க‌ருவிழிய‌ருகே நின்றிருந்த‌து கூரிய‌ பாட்டில் துண்டு. அதில் அவ‌ன் இமைக‌ள் விரிந்து விழிக்க‌ரு பெரிதாக‌, அந்த‌ விழிக்கரு திரையில் அன‌லாய் நின்ற‌து ருத‌ன் முக‌ம்.

அதில் இவ‌ன் உட‌ல் விய‌ர்த்து எச்சிலை விழுங்க‌, "யாரு?" என்று உருமினான் ருத‌ன்.

அதில் அவ‌னும் கூறுவதற்காக இத‌ழை பிரிக்க‌ வ‌ர‌, ச‌த‌க்கென்று அருகிலிருந்த‌வ‌னின் க‌ழுத்தில் க‌ண்ணாடியை இற‌க்கியிருந்தான் ருத‌ன். அதில் சட்டென்று விழிக‌ள் பிதுங்கியவனின் கழுத்தில் குருதி வழிய, அவன் கையில் ஓங்கியிருந்த பாட்டில் மெதுவாய் சரிந்து விழுந்த நொடி, ச‌த‌க்கென்று க‌ண்ணாடியை உருவியிருந்தான் ருத‌ன்.

அதில் அவ‌ன் சுருண்டு அப்ப‌டியே ச‌ரிந்து விழ‌, ருதனின் பார்வையோ இன்னுமே இந்த ஒருவனின் மீதுதான் அழுத்தமாய் பதிந்திருந்தது. அதில் அர‌ண்டு நின்றிருந்த‌ இவ‌னோ ஏறி இற‌ங்கிய‌ த‌ன் தொண்டையில் வார்த்தை வெளி வ‌ராம‌ல், ந‌டுங்கிய‌ த‌ன் க‌ர‌த்தை மெதுவாய் உய‌ர்த்தி ஒருவ‌னை கை காட்ட‌, அதில் ருத‌னின் க‌ண்கள் மேலும் சிவந்த எரிம‌லையாய் அவ‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌, அங்கே த‌ரையில் கிட‌ந்த‌வ‌னோ ப‌ய‌ந்து பின்னால் ந‌க‌ர்ந்த‌ப‌டி, "இ..இங்க‌ பாரு.. டேமேஜுக்கு எவ்ளோ ப‌ண‌ம் வேணுன்னாலும் குடுத்த‌ர்றேன்.." என்று த‌டுமாறி கூற‌, அதில் ருத‌னின் பார்வை மேலும் அன‌லை க‌க்க‌, "இ..இல்ல‌ன்னா புது கார்கூட‌.." என்று கூறும் முன் அவ‌னை நோக்கி அடியெடுத்து வைத்தான் ருத‌ன்.

அதில் அவ‌ன் பயந்து அவ‌ச‌ர‌மாய் எழுந்து ஓட‌ ஆர‌ம்பிக்க‌, அதில் அடுத்த‌ அடியை அக‌ல‌மாய் வைத்து த‌ரையில் எட்டி ஒரு உதை உதைத்தான் ருத‌ன். அதில் கீழிருந்த‌ அந்த‌ ம‌து பாட்டில் பாய்ந்து சென்று அவ‌ன் ம‌ண்டையில் அடித்து சித‌ற‌, பொத்தென்று அந்த‌ க‌ர‌ண்ட் ம‌ர‌த்தில் சாய்ந்தான் அவ‌ன். அவ‌ன் உட‌லெங்கும் சித‌றிய‌ ம‌து, அவ‌ன் ஆடையை ந‌னைத்திருக்க‌, அடுத்த‌ நொடியே த‌ன் கையிலிருந்த‌ க‌ண்ணாடி துண்டை வீசியெறிந்தான் ருத‌ன். அது பாய்ந்து சென்று மேலிருந்த‌ க‌ர‌ண்ட் க‌ம்பியில் சொருகி தீப்பொறிக‌ள் அவ‌ன் மீது விழ‌, குப்பென்று தீ ப‌ற்றிய‌து.

அதில் அதிர்ந்து உத‌றி, "ஆ..!" என்று அல‌றிய‌வ‌ன், வேக‌மாய் ஓட‌ ஆர‌ம்பிக்க‌, அத‌ற்குள் அவ‌ன் க‌ழுத்தெல்லாம் தீ ப‌ர‌வி முக‌த்திற்கு வ‌ரும் நேர‌ம், க‌த்தி க‌த‌றிய‌ப‌டி எகுறி அந்த‌ பால‌த்தை தாண்டி த‌ண்ணீருக்குள் குதித்திருந்தான் அவ‌ன்.

அதை குரோத‌மாய் இரசித்தது ருத‌னின் விழிக‌ள். "பாஸ்" என்ற‌ குர‌லில் மெதுவாய் த‌ன் க‌ர‌ங்க‌ளை விரிக்க, விரிந்த‌ க‌ர‌த்தின் வ‌ழியே அவ‌னுடைய‌ க‌ருப்பு கோட்டை மாட்டிவிட்டான் யோகி.

அதில் தோள்க‌ளை உத‌றி அதை ச‌ரியாய் அணிந்துக்கொண்ட‌வ‌ன், அப்ப‌டியே திரும்பி த‌ன் காருக்கு சென்றான்.

பின்னாலே யோகியும் வேக‌மாய் வ‌ந்து அவ‌னுக்கான‌ க‌த‌வை திற‌ந்துவிட‌ போக‌, "மொத‌ல்ல‌ அத‌ க்ளீன் ப‌ண்ணு." என்ற‌ப‌டி ருத‌னே க‌த‌வை திற‌ந்தான்.

அடுத்த‌ நொடி உள்ளிருந்து பொத்தென்று அவ‌ன் மீது விழுந்தாள் அமீரா. அதில் அவ‌ன் திடுக்கிட்டு அவ‌ளை தாங்கி பிடிக்க‌, அவ‌ன் மார்பின் மீது ம‌ய‌ங்கி கிட‌ந்த‌வ‌ளின் நாசியில் முத‌ல் முறையாய் ஒரு ஆட‌வ‌னின் வாச‌ம் ஏற‌, அவ‌ள் விழிக‌ள் மெதுவாய் அசைந்து பிரிந்த‌து. ம‌ங்கிய‌ அவ‌ள் விழிகளில் ம‌ங்க‌லாய் அவ‌ன் உருவ‌ம், மெல்ல‌ தெளிவாக‌, அழகாய் தோன்றிய அந்த‌ ஆண‌ழ‌க‌னின் முக‌ம் அவ‌ள் விழி திரையில் ப‌திந்த‌து.

அன்றுதான் அவ‌னை பார்த்தேன். அன்றே என் இத‌ய‌ம் கூறாம‌ல் போன‌து, அவ‌ன்தான் என்ன‌வ‌ன் என்று.

என்ற‌ வ‌ரிக‌ளை ப‌டித்துக்கொண்டிருந்த‌ அமீராவின் இத‌ய‌ம் துடிப்பை அதிக‌ரிக்க‌, இத‌ழ்க‌ள் அழ‌காய் வ‌ளைந்த‌து.

- நொடிகள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-24
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.