CHAPTER- 23

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
மெத்தையில் உடலை குறுக்கி விழி மூடி அழுதுக் கொண்டிருந்தவள், எவ்வளவு நேரம் அப்படியே அழுதுக் கொண்டிருந்தாளோ, அவளையறியாமலே மெல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.

அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவள், எத்தனை நேரம் உறங்கி கிடந்தாளோ, பொழிச்சென்று அவள் முகத்தில் தண்ணீர் ஊற்றப்பட, சட்டென்று இவள் கையிலிருந்த டைரியிலும் நீர் சிந்தியது.

அதில் சட்டென்று நிகழ் உலகிற்கு வந்து திடுக்கிட்டவள் நிமிர்ந்து பார்க்க, வேகமாய் விலகி நின்ற யோகி, "சாரி மேடம். கால் ஸ்லிப் ஆகிருச்சு." என்றபடி கையிலிருந்த உணவையும் நீரையும் அந்த மேசையில் வைத்துவிட்டு, அவசரமாய் டிஷூவை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதற்குள் அவசரமாய் அந்த டைரியிலிருந்த நீரை கையால் துடைத்துக்கொண்டிருந்தவள், அவன் நீட்டிய டிஷூவையும் வாங்கி துடைக்க‌ ஆர‌ம்பிக்க‌, அந்த பக்கத்திலிருந்த எழுத்துக்கள் மொத்தமும் அழிந்து டிஷூவில் அப்பிக்கொண்டது. அதில் அதிர்வாய் டிஷூவை பார்த்துவிட்டு அதை பார்த்தவள், வேகமாய் அதை கரத்தால் சுத்தம் செய்து பார்க்க, சுத்தமாக பயனில்லை. இரண்டு மூன்று பக்கம் மொத்தமாய் அழிந்திருந்தது.

அதில் பதறி அடுத்தடுத்த பக்கத்தை திருப்ப, கெட்டி பேப்பர் என்பதால் மற்ற பக்கங்களுக்கு பெரிதாய் பாதிப்பில்லை, எழுத்துக்கள் தெளிவாய் தெரிந்தன. "சாரி மேடம்." என்று வாடினான் யோகி. அதில் நிமிர்ந்து அவனை முறைத்தவள், "இப்ப நா கேட்டனா? எடுத்துட்டு போங்க." என்று கூறிவிட்டு மீண்டும் குனிந்து இருக்கின்ற மிச்சத்தை படிக்க போக, சட்டென்று அதை பிடுங்கினான் யோகி.

அதில் அவள் வேகமாய் நிமிர்ந்து அவனை பார்க்க, அவனோ அதை மூடி மேசையில் வைத்துவிட்டு, அருகிலிருந்த உணவை எடுத்து அவள் கையில் திணித்தான். அதை திடுக்கிட்டு பிடித்தவள் வேகமாய் நிமிர்ந்து, "நாந்தா வேண்டான்னு.." என்று கூற‌ வ‌ர‌, "பாஸோட ஆடர்." என்றான் யோகி.

அதில் சட்டென்று அவள் அமைதியாகி விழிக்க, "உங்கள சாப்பட வெக்கலன்னா, என்ன பரலோகத்து அனுப்பிருவாரு." என்றான் யோகி.

அதில் குனிந்து உணவை பார்த்தவள், யோசனையாய் புருவத்தை குறுக்கி, "பரவால்ல நா அப்றமாக்கூட‌.." என்று கூற வர, "ப்ளீஸ் மேடம். மொதல்ல சாப்புடுங்க. அது வரைக்கும் நானே வேணுன்னா ஃப்ளேஷ் பேக் சொல்றேன்." என்றான்.

அதில் புருவத்தை தளர்த்தி யோசித்தவளுக்கு இதுவும் சரியென்று பட, மெதுவாய் சரியென்று தலையசைத்தாள்.

"வாங்க வந்து இப்பிடி உக்காருங்க." என்று அவன் மெத்தையை சரிசெய்து அவளுக்கு வ‌ழிவிட, அவளும் எழுந்து வந்து மெத்தையில் அமர்ந்தாள்.

அவனோ வில‌கி அருகிலிருந்த மேசையில் ஏறி அமர்ந்து, "சொல்லுங்க மேடம். நா உங்களுக்கு எதுல இருந்து சொல்லட்டும்?" என்று கேட்க, "ஆரம்பத்துல இருந்து." என்றாள் அவள்.

அதில் சில நொடிகள் அமைதியாய் யோசித்தவன், ஒரு மெல்லிய‌ மூச்சை இழுத்து விட்டு, "உங்க கத ஆரம்பிச்ச அந்த நாள். கண்டிப்பா எனக்குமே மறக்க முடியாத நாள்தா." என்று கூற, இவளோ புரியாது புருவத்தை சுழிக்க, "அன்னிக்கு பாஸ்க்கு ரொம்ப ஸ்பெஷலான நாள்." என்று கூற, அந்த நாள் அவன் கண்முன் விரிந்தது.

அந்த‌ அக‌ண்டு விரிந்த நீல‌ வானில், வெள்ளை மேக‌ங்க‌ள் சூரிய‌னை முழுதாய் ம‌றைத்து அத‌ன் நிழ‌ல்க‌ள் ம‌ண்ணை மூடியிருக்க‌, அந்த‌ ம‌ண்ணின் புழுதியை கிள‌ப்பிய‌ப‌டி பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த‌து ஒரு குதிரை.

"குதிரையா?" என்று அமீரா புரியாது கேட்க, "ம்ம். அன்னிக்கு அவரோட ஃபஸ்ட் ஹார்ஸ் ரேஸ்" என்றான் யோகி.

அதில் வியப்பாய் விழி விரித்தவளுக்கோ, சற்று முன் படித்த அந்த கதையின் ராஜகுமாரன்தான் கண்முன் வந்து செல்ல, இங்கே குதிரையிலிருந்த அவ‌னுமே பின்னிருந்து பார்க்க‌ ராஜ‌குமாரனை போல‌வே த‌ன் நீண்ட சிகைகள் காற்றில் பறக்க, அந்த‌ காற்றை கிழித்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தான்.

அந்த‌ பிரம்மாண்ட மைதானத்தை சுற்றியும் மக்களின் கூச்சல் சத்தம், கத்தல், கைத்தட்டல் என்று அத்தனை ஆராவாரத்திற்கு நடுவே, அனைவரின் பார்வையும் அந்த ஒருவன் மீதே குவிந்திருக்க, அவனை நம்பி முதலீடு செய்த வி.ஐ.பிகளும் கையிலிருந்த மதுவை ருசித்தபடி அவனையே சிறு க‌ளிப்புட‌ன் பார்த்திருக்க, அதையெல்லாம் உண‌ர்ந்து இவ‌னின் இத‌ழ்க‌ள் க‌ர்வ‌மாய் வ‌ளைய‌, கையிலிருந்த குதிரை கயிறை (Reins) ஒரு உதறு உதறி வேகத்தை கூட்டினான். அதில் அதுவோ மேலும் சீறி பாய்ந்துக்கொண்டு ப‌ற‌க்க‌, தனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்தவனின் குதிரையை வேக‌மாய் நெருங்கியது.

"கமான் கமான்" என்று இந்த வி.ஐ.பி ஒருவன் இதழ் நுனியில் கூறிக்கொண்டிருக்க, அங்கே அவனும் தனக்கு முன்னால் சென்றுக்கொண்டிருந்த குதிரையை நெருங்கி தாண்ட போகும் நேரம், மீண்டும் அது வேகமெடுத்து இவ‌னை முந்தி சென்றது.

அதில் பல்லை கடித்தவன், தன் கையிலிருந்த சாட்டை குச்சியில் (Whip Stick) த‌ன் குதிரையை மேலும் வேகமாய் அடித்து வேகத்தை கூட்ட, அதுவும் வேக‌மெடுத்து முன்னிருந்த அந்த‌ குதிரையை முந்திக்கொண்டு தாண்டுகின்ற‌ நொடி, அனல் பார்வையாய் அந்த குதிரையையே பார்த்தவன், த‌ன் கையிலிருந்த‌ அதே வைப் ஸ்டிக்கை சுழற்றி அந்த‌ குதிரையின் கண்ணிலேயே அடித்தான்.

அதில் திடீரென்று தடுமாறிய குதிரை வேகமாய் முன்ன‌ங்கால்களை தூக்கி கணைக்க, அத‌ன் மீதிருந்த‌வ‌னோ ச‌ரிந்து பொத்தென்று ம‌ண்ணில் விழுந்தான். அதில் ஏளன புன்னகையாய் த‌ன் நீண்ட‌ சிகையை கோதிய‌ இவ‌னோ, உட‌னே தன் குதிரையின் வேகத்தை கூட்டி முன்னால் சென்றுவிட, இங்கே குப்புற விழுந்தவனின் விரல்கள் மண்ணை இறுக்கி பிடித்தது.

"ஹார்ஸ் ஏற தெரிஞ்சவன்லா ரேஸ் பண்ண‌னும்னு நெனச்சா இப்பிடித்தா." என்று ந‌க்கலாய் மதுவை சுவைத்தான் வி.ஐ.பி ஒருவ‌ன்.

இங்கே மணலை இறுக்கி பிடித்தபடி மெதுவாய் நிமிர்ந்த‌வ‌ன், தன் கண்ணிலிருந்த சேஃப்ட்டி க்ளாஸை இறுக்கி பிடித்து கழ‌ற்ற‌, அந்த‌ இரு விழிகளில் அப்படியொரு அனல். அந்த அன‌ல் பார்வையை அப்ப‌டியே திருப்பி த‌ன்ன‌ருகிலிருந்த‌ குதிரையின் விழிக‌ளை பார்க்க‌, அவ‌ன் பார்வையின் அழுத்த‌ம் புரிந்த‌ அவ‌னின் க‌ருப்பு குதிரை, உட‌னே வேக‌மெடுத்து முன்னால் ஓடிய‌து.

அதில் அழுத்த‌மாய் ம‌ண்ணில் க‌ர‌த்தை புதைத்து மெதுவாய் உட‌லை தூக்கி எழுந்தவ‌ன், த‌ன் க‌ருப்பு ஆடையில் ஒட்டியிருந்த‌ ம‌ண்ணை த‌ட்டிவிட்டப‌டி நிமிர்ந்து நின்று த‌ன் தலையிலிருந்த சேஃப்ட்டி ஹெல்மெட்டையும் அழுத்தி பிடித்து கழற்ற, அப்போது திடீரென்று அடித்த‌ காற்றில் அவ‌னின் சிறிய‌ முன் சிகைக‌ள் அலை அலையாய் அசைந்தாடியது. அப்ப‌டியே அந்த‌ ஹெல்ம‌ட்டை இற‌க்க‌, அவ‌ன் க‌ன்ன‌ம் கோவத்தில் இறுக‌, அங்கிருந்த கருந்தாடியோ அளவாய் ட்ரிம் செய்திருந்த‌து. அத‌ன‌ருகே இருந்த அவ‌ன் காதில் கருப்பு கடுக்கன் மின்ன, அப்ப‌டியே ஹெல்மட்டை வீசிவிட்டு, கழுத்திலிருந்த கருப்பு செயினை கட்டை விரலில் இழுத்து முன்னால்விட, ஆர் என்ற கருப்பு எழுத்து அவ‌ன் நெஞ்சில் விழுந்து மின்னியது.

அதை இறுக்கி பிடித்து தன் ஒற்றை காலை அப்படியே வளைத்து பின்னால் வைத்த‌வ‌ன், முக‌த்தை லேசாய் பின்னால் திருப்ப, அந்த‌ பாதி தெரிந்த‌ முக‌த்திலேயே அப்ப‌டியொரு அன‌ல். அந்த‌ அன‌ல் முக‌த்தில் இருந்த‌ அன‌ல் விழிதிரையில் புழுதி மூட்ட‌மாய் தெரிய‌, கிட்டத்தட்ட ப‌தினைந்து குதிரைகள் அவனை நோக்கி புய‌லாய் வந்துக்கொண்டிருந்தது.

அதில் அப்ப‌டியே த‌லையை முன்னால் திருப்பி அனல் விழிகளை கூர்மையாக்கியவன், கையிலிருந்த‌ க‌ருப்பு க்ள‌வுஸை க‌ழ‌ற்றி வீசிவிட்டு, அதே கைக‌ளை வேகமாய் வீசி முன்னால் ஓட‌ ஆர‌ம்பிக்க‌, "செத்தீங்க‌டா." என்றான் இங்கே கூட்ட‌த்திலிருந்த‌ யோகி.

இங்கே கால்களை அகல வைத்து அதிவேக‌மாய் ஓட‌ ஆர‌ம்பித்த‌வ‌னை பின்னால் வ‌ந்த‌ குதிரைக‌ள் நெருங்கி அப்ப‌டியே க‌ட‌ந்து செல்ல‌, ச‌ட்டென்று அதில் ஒருவ‌னின் பின் ச‌ட்டையை கொத்தாய் பிடித்து கீழே இழுத்திருந்தான் இவ‌ன். அதில் அவ‌ன் பொத்தென்று குதிரையோடு சேர்த்து ம‌ண்ணில் விழுந்து புழுதியை கிள‌ப்ப‌, விழுந்த‌வனின் முதுகு த‌ண்டில் கால் வைத்து எகுறி அந்த‌ புழுதி புகையை கிழித்துக்கொண்டு வெளி வ‌ந்த‌வ‌னின் உருவம் இப்போது முழுதாய் தெரிய, பின்னிருந்த‌ மேக‌ங்க‌ளும் வில‌கி வெளிப்ப‌ட்ட‌ அந்த‌ கொதிக்கும் சூரிய‌னின் அன‌ல் முக‌த்திற்கு நிக‌ராய் இருந்த‌து அவ‌ன் முக‌ம்.

அப்படியே பாய்ந்து த‌ன்னுடைய க‌ருப்பு குதிரையில் பொத்தென்று அம‌ர்ந்துவிட்டவ‌ன், அதன் கயிறை இழுத்து வேகத்தை கூட்ட, இங்கிருந்த‌ வி.ஐ.பி ஒருவ‌ன் க்ளாஸை இற‌க்கிவிட்டு விழியை விரித்து முகத்தை முன்னால் கொண்டு வந்தான்.

இங்கே மேலும் மேலும் வேக‌த்தை கூட்டிய‌வ‌னின் விழிகள் தன் முன்னால் சென்றுக்கொண்டிருந்த‌ அந்த‌ நீண்ட‌ சிகைக்கார‌னை ம‌ட்டுமே அனலாய் துளைத்துக்கொண்டிருக்க‌, வேகமாய் அவனை நெருங்கினான். அப்ப‌டியே நெருங்கி அவ‌னுக்கு நிக‌ராய் வ‌ந்த‌ நொடி, அதை உணர்ந்த அவனும் புரியாது திரும்பி பார்க்க‌, அடுத்த‌ நொடி ச‌ட்டென்று அவ‌ன் விழி விரிக்கும் முன், ப‌ட்டென்று அவ‌ன் நீண்ட‌ சிகையை கொத்தாய் பிடித்து இழுத்திருந்தான் ருத‌ன்.

"ஆ!" என்ற க‌த்த‌லுட‌ன் அவ‌ன் பொத்தென்று ச‌ரிந்து குதிரைக்கு பின்னால் விழ‌, அவ‌ன் பிடித்திருந்த‌ குதிரை க‌யிறும் அவ‌ன் கையோடு வ‌ந்து காற்றில் ப‌ற‌ந்த‌து. அதை த‌ன் பூட்ஸ் காலால் எட்டி உதைத்து கேட்ச் செய்த‌ ருத‌ன், அதை கீழே கிட‌ந்த‌ அவ‌ன் க‌ழுத்திலேயே போட்டு சுற்றி, ச‌ட்டென்று த‌ன் குதிரையின் வேக‌த்தை கூட்டினான். அது மேலும் ப‌ாய்ந்துக்கொண்டு ஓட‌, கீழே இவ‌னின் க‌ழுத்து இறுக்கி க‌த்த‌ முடியாம‌ல் துள்ளிய‌ப‌டி க‌யிறை இறுக்கி பிடித்து த‌ரையில் தேய்ந்துக்கொண்டே சென்றான் அவ‌ன்.

அதில் இங்கிருந்த‌ வி.ஐ.பிக‌ள் அதிர்வாய் எழுந்து நின்றுவிட‌, சுற்றியிருந்த‌ ம‌க்க‌ளும் அதிர்வில் அப்ப‌டியே முன்னால் வ‌ந்து விழி விரிய‌ பார்த்த‌ன‌ர். அங்கே புழுதியை கிள‌ப்பிக்கொண்டு ம‌ண்ணும் க‌ற்க‌ளும் அவ‌ன் ஆடைக‌ளையும் உட‌லையும் தாறுமாறாய் கிழித்து சிதைக்க‌, வ‌லியில் துள்ளிய‌ப‌டி க‌த‌ற‌க்கூட‌ முடியாம‌ல் தொண்டையிலிருந்த‌ க‌யிறை விடுவிக்க‌ வெகுவாய் போராடினான். அதுவோ இழுத்து செல்லும் வேக‌த்தில் இறுகி இறுகி அவ‌ன் க‌ழுத்தையே உடைத்துவிடும் அள‌விற்கு ந‌சுக்கிக்கொண்டிருக்க‌, மூச்சுக்கூட‌ முழுதாய் அடைக்க‌ப்ப‌ட்டு க‌ண்க‌ளை பிதுக்கி க‌ழுத்து ந‌ர‌ம்புக‌ள் புடைத்து வெளியேற‌, ப‌ட்டென்று அந்த‌ க‌யிறை விட்டிருந்தான் ருத‌ன்.

அதில் பொத்தென்று அந்த‌ புழுதி ம‌ண்ணுக்குள் விழுந்துவிட்ட‌வ‌ன், த‌ன் உட‌ல் ர‌ண‌ங்க‌ளை உண‌ர‌வே சில‌ நொடிக‌ள் எடுத்துக்கொண்டு, அசைவ‌ற்று கிட‌ந்த‌ த‌ன் உட‌லில் மெதுவாய் மூச்சை உள்ளிழுக்க‌ முய‌ற்சிக்க‌, ச‌ட்டென்று அவ‌ன் மூச்சுக்குழ‌லிலேயே மிதித்து தாண்டிய‌து பின்னால் வ‌ந்த‌ குதிரை. பாய்ச்ச‌லில் உள்ள‌ குதிரையின் கால் சுமார் 500 கிலோ அழுத்த‌ம் கொண்ட‌து. அது மூச்சு குழ‌லில் மிதித்த‌ நொடியே வாயில் இர‌த்த‌ம் தெறிக்க‌ நெஞ்சை தூக்கிக்கொண்டு விழுந்தவனின், அடிவ‌யிற்றில் மிதித்த‌து அடுத்த‌ குதிரை. அதில் அவ‌ன் பேண்டில் பிதுங்கிக்கொண்டு சிறுநீருட‌ன் இர‌த்த‌மும் ஒன்றாய் வெளியேற‌, அடுத்து வ‌ந்த குதிரை த‌டுக்கி அவ‌ன் மீதே விழுந்து பிரண்டது. அதில் மொத்த‌மாய் ந‌சுங்கிய‌வ‌னின் உட‌ல் பிர‌ண்டு குப்புற‌ விழ‌, அவ‌ன் முதுகெழும்பை உடைத்து சென்ற‌து அடுத்த‌ குதிரை. அதில் பொத்தென்று ம‌ண்ணுக்குள் புதைந்துவிட்ட‌வ‌னின் மூக்கிலும் வாயிலும் ம‌ண‌ல் நுழைந்து கிழிக்க, அவ‌ன் உட‌ல் மொத்த‌மும் அடுத்த‌டுத்த‌ குதிரைக‌ள் ஏறி சென்று எலும்பையும் ச‌தையையும் நொறுக்கி பிதுக்க‌, அவ‌னின் கிழிந்து தொங்கிய ஆடை க‌டைசியாய் வ‌ந்த‌ குதிரையின் காலில் மாட்டி த‌ர‌த‌ர‌வென்று இழுத்து செல்ல‌ப்ப‌ட்டான்.

அதில் சிதைந்த உட‌ல் மீண்டும் சிதைய‌ ஆர‌ம்பிக்க‌, இம்முறை குப்புற‌ இழுத்து செல்ல‌ப‌ட்ட‌வ‌னின் முக‌மும் தாறுமாறாய் கிழிந்து சிதைய‌, க‌ண்க‌ளை இறுக்கி மூடி க‌த்தி க‌த‌றி துள்ளிய‌வ‌னின் தொண்டையில் விழுந்த‌து மீண்டும் அந்த‌ குதிரை க‌யிறு (Reins).

அதை உண‌ர்த்தவ‌ன் ச‌ட்டென்று விழியை திற‌க்க‌ முய‌ல‌, அந்த இமைக‌ளும் கிழிந்து, உள்ளிருந்த விழியும் சிதைய, த‌ர‌த‌ர‌வென்று இழுத்து சென்றிருந்தான் ருதன். அதில் மீண்டும் க‌த்த‌ வ‌ந்த‌வ‌னின் தொண்டை முழுதாய் இறுகியிருக்க‌, மீண்டும் சுவாச‌ம் அடைப்ப‌ட்டு துள்ளி ம‌ல்லாக்க‌ திரும்பியவ‌னின் முக‌ம் முழுக்க‌ ச‌ர‌மாறியாய் சிதைக்க‌ப்ப‌ட்டிருக்க‌, அவ‌ன் தூசி ப‌டிந்த‌ நீண்ட‌ சிகையை மீண்டும் இறுக்கி பிடித்தான் ருத‌ன். அதில் கிழிந்து தொங்கிய‌ ஒற்றை விழியை திற‌க்க‌ முடியாது, ம‌று விழியின் இமைக‌ளை மெதுவாய் பிரிக்க‌ முய‌ல‌, அத‌ற்குள் அவ‌ன் சிகையை பிடித்து தூக்கி எட்டி உதைத்திருந்தான் ருத‌ன்.

அதில் அவ‌ன் பொத்தென்று கீழே விழுந்திருந்த‌ த‌ன் குதிரையின் மீது விழ‌, அதுவோ ப‌ய‌ந்து எழுந்து ஓட‌ ஆர‌ம்பிக்க‌, அவ‌னோ கிழிந்து தொங்க‌ப்ப‌ட்ட‌ நிலையில் அத‌ன் முதுகில் தொங்கிக்கொண்டு செல்ல‌, அத‌ன் பின்ன‌ங்கால்க‌ளில் ப‌ல‌மாய் வைப் ஸ்டிக்கை அடித்தான் ருத‌ன். அதில் அது கணைத்துக்கொண்டு வேக‌மாய் ஓட‌, அப்ப‌டியே முத‌ல் ஆளாய் அந்த‌ ஃபினிஷிங் லைனை தாண்டிய‌து அந்த‌ குதிரை.

அதில் சுற்றியிருந்த‌ அத்த‌னை பேருமே அதிர்வாய் உறைந்து நிற்க‌, யோகி மட்டும் அதையே எதிர்பார்த்தவனாய் குரோதமாய் இரசித்திருந்தான்.

"அவரு Racing kit எல்லாம் கழட்டி வீசிட்டு எழுந்து நிக்கும்போதே எனக்கு புரிஞ்சிருச்சு. இனி ஆட போறது ரேசரும் இல்ல, அவரோட மோட்டிவ் ஜெயிக்குறதும் இல்லன்னு." என்றான் யோகி அமீராவிடம்.

இங்கே அந்த‌ ஃபினிஷிங் லைனை தாண்டிய‌ அடுத்த‌ நிமிட‌மே ச‌ரிந்து பொத்தென்று த‌ரையில் விழுந்திருந்தான் அந்த‌ சிதைப்ப‌ட்ட‌ சிறுத்தை.

அரை உயிராய் வ‌லியில் முன‌ங்கிய‌ப‌டி கிட‌ந்த‌வ‌னின் ஒற்றை விழிக்கூட‌ இப்போது பிரிய‌ ம‌றுக்க‌, அவ‌னின் சிதைப்ப‌ட்ட‌ செவிக‌ளின் அருகே வ‌ந்துக்கொண்டிருந்த‌து கால‌டி த‌ட‌ங்க‌ள். அதில் அவ‌ன் செவிக‌ள் மெதுவாய் ஆட‌, அவ‌னை சுற்றி மெதுவாய் வ‌ட்ட‌மிட்ட‌து அந்த க‌ருப்பு குதிரை. அதை உண‌ர்ந்த‌வ‌ன் மெதுவாய் இமையை பிரிக்க‌ முய‌ல‌, அந்த‌ குதிரையிலிருந்து பொத்தென்று இற‌ங்கினான் ருத‌ன்.

அது ம‌ங்க‌ளாய் இவ‌ன் விழி திரையில் தெரிய, அவ‌ன் முன் கால்க‌ளை ம‌ட‌க்கி அம‌ர்ந்த‌வ‌ன், "க‌ங்குரேஜுலேஷ‌ன்ஸ் சேம்பிய‌ன்." என்றான் ருத‌ன். அவ‌ன் குர‌லில் ந‌க்க‌லுக்கு ப‌தில் வெறியே அதிக‌மிருக்க‌, இவனோ கிழிந்த தன் இதழ்களை கடினப்பட்டு பிரித்து, "ட்..டேய்" என்றவ‌னின் வார்த்தை முன‌ங்க‌ளாக‌ ம‌ட்டுமே வெளியில் வ‌ந்த‌து.

அதில் ந‌க்க‌லாய் இவ‌ன் இத‌ழ் வ‌ளைந்து ம‌றைய‌, அப்ப‌டியே அவ‌ன் முக‌த்தை நெருங்கி வந்தவன்‌, "இனி ஜென்ம‌த்துக்கும் இந்த‌ வெற்றிய‌ நீ ம‌ற‌க்க‌வே கூடாதுடா." என்றான் அத்த‌னை குரோதமாக.

"அவன் ஆசப்பட்ட மாதிரியே அன்னிக்கு ஜெயிச்சுட்டான். பட் இனி ஜெயிக்கனும்னு ஜென்மத்துக்கும் ஆசப்பட மாட்டான்." என்று யோகி கூறி முடிக்க, அதிர்வாய் வாயில் கை வைத்தாள் அமீரா. அதில் நிக‌ழ் உல‌க‌ம் வ‌ந்து, "என்ன‌ ஆச்சு மேட‌ம்?" என்று கேட்டான் யோகி.

அதில் அத்த‌னை அதிர்வாய் அத்த‌னை ந‌டுக்க‌மாய் த‌ன் க‌ர‌த்தை மெல்ல இற‌க்கிய‌வ‌ளின் இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, "வ்..வெறும் த‌ள்ளிவிட்ட‌துக்காக‌வா இப்.." என்று கேட்க‌ வ‌ர‌, "த‌ள்ளிவிட்டானா?" என்று ந‌க்க‌லாய் புருவ‌ம் நெளித்தவ‌ன், "மேட‌ம் நா சொன்ன‌த‌ நீங்க‌ ஒழுங்கா க‌வ‌னிக்க‌ல‌ன்னு நெனைக்குறேன். கொஞ்ச‌ம் ரீவைன் ப‌ண்ணி பாருங்க‌." என்றான் யோகி.

அதில் இவ‌ளும் புரியா ப‌த‌ற்ற‌மாய் மெல்ல‌ அந்த‌ காட்சியை ரீவைன் செய்து யோசிக்க‌, ந‌ட‌ந்த‌ க‌ல‌வ‌ர‌த்திற்கெல்லாம் முன்னால் அந்த‌ நீண்ட‌ சிகைக்கார‌ன் வேக‌மாய் வ‌ந்து ருத‌னை த‌ள்ளிய‌ அந்த‌ நொடியில் வ‌ந்து நிற்க‌, த‌ன் கையிலிருந்த‌ வைப் ஸ்டிக்கால் நம் கருப்பு குதிரையின் க‌ண்ணிலேயே அடித்திருந்தான்.

அதில் ச‌ட்டென்று இவ‌ள் விழி விரிக்க‌, "புரிஞ்ச‌தா?" என்றான் யோகி.

அதில் அவ‌ளும் அதிர்வாய் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அதில் அவ‌னும் பார்வையில் சிறு அழுத்தம் கொடுத்து, "அவ‌ர‌ தொட்டிருந்தா கோவ‌த்த‌ காட்டிருப்பாரு. ப‌ட் அவ‌ருக்கு சொந்த‌மான‌த‌ தொட்டா... ந‌ர‌க‌த்தையே காட்டுவாரு." என்றான் அழுத்த‌மாக‌.

அதில் இவ‌ளுக்கோ அடிவ‌யிற்றில் ப‌ய‌ ப‌ந்தே சுழ‌ன்று வ‌ர‌, "அன்னிக்குதா உங்க‌ மீட்டிங்கும் ந‌ட‌ந்துச்சு." என்றான் யோகி.

அதில் அவ‌ள் அதிர்வான‌ ஆர்வ‌மாய் அவ‌ன் முக‌த்தையே பார்க்க‌, அவ‌னும் கூற‌ வாய் திற‌ந்த‌ நொடி, திடீரென்று அவ‌ன் கைப்பேசி ஒலித்த‌து.

அதில் திடுக்கிட்டு த‌ன் மொபைலை எடுத்த‌வ‌ன், "ஒரு நிமிஷ‌ம் மேட‌ம்." என்ற‌ப‌டி மேசைவிட்டு இற‌ங்கி வெளியில் சென்றான். அதில் அவ‌னையே பார்த்த‌வ‌ளுக்கோ இத‌ய‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, அப்ப‌டியே குனிந்து த‌ன் ம‌டியிலிருந்த‌ உண‌வை பார்த்தாள்.

அதுவோ கை வைக்காமல் அப்ப‌டியே இருக்க‌, அப்படியே திரும்பி அந்த‌ மேசையை பார்தாள். அங்கே நடு நாயகமாய் தெரிந்தது அந்த டைரி.

இங்கே அறையைவிட்டு வெளியில் வ‌ந்த‌ யோகி, "என்ன‌ ஆச்சு? பாஸ் எப்பிடி இருக்காரு? என்று ப‌த‌ற்ற‌மாய் கேட்க‌, "அதுக்குதா கால் ப‌ண்ணேன் சார்." என்று ப‌த‌றினான் டாக்ட‌ர் வினோ.

அதில் இவ‌ன் புருவ‌த்தை விரிக்க‌, இங்கே அவ‌ள் ம‌டியிலிருந்த‌ உண‌வு இப்போது அந்த‌ மேசையில் இருக்க‌, அந்த‌ மேசையிலிருந்த‌ டைரி அவ‌ள் ம‌டியில் இருந்த‌து.

அப்ப‌டியே அதை திறந்து, அந்த‌ ந‌னைந்த‌ ப‌க்க‌ங்க‌ளை திருப்பி அடுத்த ப‌க்க‌த்திற்கு வந்தவள், அதிலிருந்து மீண்டும் ப‌டிக்க‌ ஆர‌ம்பித்தாள்.

அன்று இர‌வு பளிச்சென்று தெரிந்த மஞ்சள் நிற சுடிதாரில் துப்பாட்டா இல்லாமல் மூச்சிரைக்க‌ வேக‌மாய் ஓடிக்கொண்டிருந்தாள் அமீரா. அவ‌ள் முக‌மெல்லாம் விய‌ர்த்து உட‌லெல்லாம் ப‌ய‌த்தில் ந‌டுங்க‌, முடிந்த‌ ம‌ட்டும் வேக‌மாய் ஓடினாள்.

"ஏய் நில்லுடி." என்று பின்னிருந்து ஐந்து பேர் அவ‌ளை துர‌த்திக்கொண்டு வ‌ர‌, அவ‌ர்க‌ளின் ஆடைக‌ளெல்லாம் பார்க்க‌ ப‌ண‌க்கார‌ வீட்டு பிள்ளைக‌ள் போல‌வும், கையில் விலையுய‌ர்ந்த‌ ம‌துபாட்டில்க‌ளுட‌னும் அவ‌ளை துர‌த்தி வ‌ந்துக்கொண்டிருந்த‌ன‌ர்.

இவ‌ளோ ப‌ய‌ந்து வேக‌மாய் ஓடிய‌ப‌டியே இருக்க‌, அந்த‌ ஆள் ந‌ட‌மாட்ட‌மில்லா சாலையில் அத‌ற்குமேல் மை இருட்டாய் இருக்க‌, அத‌ற்குள்ளும் நிற்காம‌ல் ஓடினாள் அமீரா.

"ம‌ரியாதையா நில்லு." என்று இவ‌ன் த‌ன் ம‌து பாட்டிலை தூக்கி வீசிய‌டிக்க‌, அதுவோ காற்றில் சுழ‌ன்றுக்கொண்டு அவ‌ள் ம‌ண்டையை நோக்கி பாய‌, அவ‌ளும் ச‌ரியாக‌ ப‌ய‌ந்து திரும்பும் நேர‌ம் அவ‌ள் முக‌த்தில் அடிக்க‌ போகும் சம‌ய‌ம், திடீரென்று குறுக்கே க‌ட‌ந்த‌ கார் அந்த‌ பாட்டிலை இடித்து சென்றிருந்த‌து.

"ச்செ" என்று பல்லை க‌டித்த‌வ‌ர்க‌ள், அந்த‌ கார் க‌ட‌ந்துவிட்ட‌ நொடியே வேக‌மாய் அவ‌ளை நோக்கி ஓடின‌ர். அவ‌ளோ வேக‌மாய் அந்த‌ இருட்டுக்குள் சென்று ம‌றைந்திருக்க‌, இவ‌ர்க‌ளோ அப்ப‌டியே நின்று அவ‌ச‌ர‌மாய் சுற்றி தேடின‌ர்.

இங்கே இருட்டில் ஓடி வ‌ந்துக்கொண்டிருந்த‌வ‌ளும் புரியாது சுற்றி பார்க்க‌, திடீரென்று அங்கிருந்து தெரு விள‌க்கு எரிந்த‌து. அதில் ச‌ட்டென்று நிமிர்ந்து பார்க்க‌, அத‌ன் வெளிச்ச‌த்தில் அவ்விட‌மே இப்போது தெளிவாய் தெரிய சுற்றியும் பார்த்தாள். ஏதோ ஒரு பால‌த்தின் மீது நின்றிருந்தாள்.

"டேய் அங்க‌ இருக்காடா" என்ற‌ப‌டி ஒருவ‌ன் க‌த்த‌, அதில் திடுக்கிட்டு திரும்பிய‌வ‌ள், வேக‌மாய் திரும்பி ஓட‌ ஆர‌ம்பிக்க‌, த‌டுக்கிவிட்டு குப்புற‌ விழுந்தாள். காலில் ப‌ல‌த்த‌ அடிப்ப‌ட்டு, "ஆ!" என்று காலை அழுத்தி பிடித்த‌வ‌ள், இறுக்கி விழி மூடி க‌ண்ணீரை வெளியேற்ற‌, "மாட்டுன‌டி" என்று நெருங்கினான் ஒருவ‌ன்.

அதில் ச‌ட்டென்று நிமிர்ந்து பார்த்த‌வள் ப‌ய‌ந்து ந‌டுங்கிய‌ப‌டி பின்னால் ந‌க‌ர‌, ‌அவளின் வியர்த்த தொண்டை பயத்தில் ஏறி இறங்க, அவ‌ளை விழுங்கும் பார்வை பார்த்த‌ப‌டியே நெருங்கி வ‌ந்த‌வ‌ன், "உன்ன‌ முழுசா திண்ணுட்டு உன் அப்ப‌னுக்கு பார்ச‌ல் அனுப்பி வெக்கிறேன்டி." என்று பல்லை கடித்து அவ‌ளின் கூந்த‌லை பிடிக்க‌ வ‌ந்த‌ நொடி, அவ‌ன் நெஞ்சிலேயே ப‌ல‌மாய் உதைத்த‌து ஒரு பூட்ஸ் பாத‌ம். அடுத்த‌ நொடி அவ‌ன் ப‌ற‌ந்து சென்று பின்னால் விழ‌, அவ‌ன் கையிலிருந்த‌ ம‌து பாட்டில் காற்றில் சுழ‌ல‌, அதை அழுத்தி கேட்ச் செய்தது ஒரு க‌ர‌ம்.

"யார்ரா நீ?" என்று ம‌ற்றொருவ‌ன் அவ‌னை அடிக்க‌ வ‌ர‌, அதே பாட்டிலை அவ‌ன் முக‌த்தில் ப‌ல‌மாய் அடித்து உடைத்திருந்தான் அவ‌ன். அதில் அவன் முக‌மும் சேர்ந்து நொறுங்கி க‌ண்ணாடியும் இர‌த்த‌முமாக‌ தெறித்து சித‌ற‌, அந்த சிவந்த சிதறல்களுக்கு ந‌டுவே சிவ‌ந்த‌ அன‌லாய் தெரிந்த‌து ருத‌ன் முக‌ம்.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER- 23
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.