CHAPTER-22

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
அந்த‌ புகைப்ப‌ட‌த்தை பார்த்து அவ‌ளுள் ஆயிர‌ம் கேள்விக‌ள் எழும்ப‌, இத‌ற்கு பின்னால் உள்ள‌ க‌தைதான் என்ன‌ என்ப‌துப்போல் மெல்ல‌ நிமிர்ந்து யோகியை பார்த்தாள்.

"நா சொன்ன‌ல்ல‌ ஒருநாள் உங்க‌ கேள்விக்கெல்லா ப‌தில் கெடைக்கும்னு?" என்று அவ‌ன் கூற‌, அவ‌ளின் பார்வை மீண்டும் அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் குவிய‌, "உங்க‌ க‌ட‌ந்த‌ கால‌த்த‌ ப‌த்தி நீங்க‌ முழுசா தெரிஞ்சுக்க‌ வேண்டிய‌ நேர‌ம் வ‌ந்திருச்சு." என்றான்.

அதில் அவ‌ள் விர‌ல்க‌ள் கேள்வியாய் அதிலிருந்த‌ த‌ன் உருவ‌த்தை வ‌ருட‌, அத‌ன் மேல் இன்னொரு புகைப்ப‌ட‌த்தை வைத்தான் யோகி. அதில் அவ‌ளின் பார்வை தானாய் அத‌ன் மீது ப‌டிய‌, அதிலிருந்த‌ புது முக‌ங்க‌ளை பார்த்து அவ‌ள் புருவ‌ங்க‌ள் குழ‌ப்ப‌மாய் சுருங்கிய‌து.

"உங்க‌ உண்மையான‌ அப்பா அம்மா." என்றான் யோகி. அதில் ச‌ட்டென்று நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ ஆம் என்று க‌ண் அசைக்க‌வும் உட‌னே குனிந்து அந்த‌ புகைப்ப‌ட‌த்தை பார்த்தாள். அதிலிருந்த‌ அந்த‌ இருவ‌ரின் முக‌ம் இவ‌ள் விழிக‌ளில் ப‌திய‌, அப்ப‌டியே க‌ண்ணீரில் மூழ்கிய‌து அந்த‌ விழித்திரை. இத‌ய‌மோ வெகுவாய் க‌ன‌க்க‌, விர‌ல்க‌ள் ஏக்க‌மாய் அந்த‌ உருவ‌ங்க‌ளை வ‌ருட‌, "உன் உண்மையான‌ அப்பா அம்மாவ‌ கொன்ன‌தும் நாந்தா." என்ற‌ அவ‌னின் வார்த்தைக‌ளில் ச‌ட்டென்று க‌ண்ணீர் உள்ளே சென்ற‌து. அதில் அவ‌ச‌ர‌மாய் விழிக‌ளை உருட்டி யோசித்த‌வ‌ள், வேக‌மாய் நிமிர்ந்து, "இவ‌ங்க‌ எப்பிடி எறந்.." என்று கேட்க‌ வ‌ர‌, யோகி அங்கு இல்லை.

அதில் அவ‌ள் அவ‌ச‌ர‌மாய் சுற்றி பார்க்க‌, கீழே த‌ரையில் அம‌ர்ந்து எதையோ வெளியில் இழுத்தான் யோகி. அதில் இவ‌ள் புரியாது எழுந்து நிற்க‌, அவ‌ள் கால‌ருகே ந‌க‌ர்த்தி வைத்தான் ஒரு பெட்டியை. அதையே குழ‌ப்ப‌மாய் பார்த்த‌வ‌ள், "என்ன‌ இது?" என்று கேட்க‌, "உங்க‌ பாஸ்ட்" என்றான் அவ‌ன்.

அதில் அவ‌ள் நிமிர்ந்து அவ‌னை பார்க்க‌, அவ‌னோ மெதுவாய் எழுந்து நின்று, "அந்த‌ விக்ர‌ம‌னும் விராஜும் உங்க‌ பாஸ்ட்ட‌ மொத்த‌மா அழிச்சுட்ட‌தா நெனைக்குறாங்க‌. ப‌ட் அவ‌ங்க‌கிட்ட‌ இருந்து என்னால‌ காப்பாத்த‌ முடிஞ்ச‌து இது ம‌ட்டுந்தா மேட‌ம்." என்றான்.

அதில் அவ‌ள் புரியா விய‌ப்பாய் அந்த‌ பெட்டியில் பார்வையை குவிக்க‌, "ஒப்ப‌ன் ப‌ண்ணி பாருங்க‌. உங்க‌ எல்லா கேள்விக்கான‌ ப‌திலும் இதுல‌ இருக்கும்." என்றான். அதில் அவ‌ளும் வேக‌மாய் அம‌ர்ந்து அதை திற‌க்க‌ முய‌ல‌, "நா போய் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி ப‌ண்றேன்." என்ற‌ப‌டி அவ‌ன் ந‌க‌ர்ந்துவிட்டான்.

அதை க‌ண்டுக்கொள்ளாம‌ல் த‌ன் முன்னிருக்கும் பெட்டியில் க‌ர‌த்தை ப‌தித்த‌வ‌ள், அதை க‌டின‌ப்ப‌ட்டு இழுத்து திற‌க்க‌, க்ரீச் என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் வெகுவாய் வெளி வ‌ந்த‌ தூசி, அதில் க‌ண்க‌ளை குறுக்கி க‌ர‌த்தை அசைத்து இரும‌ ஆர‌ம்பித்த‌வ‌ள், அந்த‌ தூசிக‌ளை வில‌க்கிய‌ப‌டி பார்க்க அவ‌ள் விழிக‌ள் விய‌ப்பாய் விரிந்த‌து.

உள்ளே இன்னும் சில‌ புகைப்ப‌ட‌ங்க‌ளும் ஆல்ப‌ம்க‌ளும் இருக்க‌, மெதுவாய் அதை வெளியில் எடுத்தாள். அத‌ன் மீதும் ஒரே தூசியாக‌ இருக்க‌, அடித்து த‌ட்டிய‌ப‌டி வாயில் கை வைத்து இரும்பிய‌வ‌ள், கீழே வைத்து அதை திற‌க்க‌ போக‌, அப்போதே எதையோ உண‌ர்ந்து அப்ப‌டியே நிறுத்தினாள். அவ‌ள் இத‌ய‌ம் மெல்ல‌ துடிப்பை அதிக‌ரிக்க‌, விழிக‌ளோ உறைந்த‌ நிலையில் மெல்ல‌ திரும்பி மீண்டும் பெட்டிக்குள் குவிந்த‌து. அங்கே அந்த‌ தூசி புகை மெல்ல‌ வில‌கி, ந‌டுநாய‌க‌மாய் தெரிந்த‌து ஒரு டைரி. அதில் ச‌ட்டென்று இவ‌ள் இத‌ய‌ம் ப‌ல‌மாய் துடிக்க‌, கையிலிருந்ததை விட்டுவிட்டு அதை முத‌லில் எடுத்தாள்.

அதுவும் தூசியாக‌ இருக்க‌, அதை த‌ட்டாம‌ல் த‌ன் முந்தாணையால் அழுத்தி துடைத்தாள். அதற்குள்ளே அவ‌ளுள் ஆயிர‌ம் உண‌ர்வுக‌ள் எழுந்து அட‌ங்கியிருக்கும். அப்ப‌டியே அந்த‌ முந்தாணையை வில‌க்கிவிட்டு மெதுவாய் அதை திற‌ந்தாள்.

அந்த‌ முத‌ல் ப‌க்க‌த்திலேயே பெரிதாய் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து, "அவ‌னின் அம்மு" என்ற வார்த்தைகள். அது அப்ப‌டியே அவ‌ள் விழியில் ப‌திய‌, இத‌ற்கு முன்பே அவ‌ள் அடி ம‌ன‌தில் ப‌திந்திருப்ப‌து போல் ஒரு உண‌ர்வு.

அதில் அவ‌ள் முக‌த்தில் குழ‌ப்ப‌ முடிச்சுக‌ள் சூழ‌, அடுத்த‌ ப‌க்க‌த்தை திருப்பினாள். அடுத்த‌ நொடி புருவ‌ங்க‌ள் விரிய‌, இது அவளுடைய கையெழுத்து. அதில் அவ‌ச‌ர‌மாய் அனைத்து ப‌க்க‌த்தையும் திருப்பி பார்க்க‌, அவ‌ள் ச‌ந்தேக‌ம் உறுதியான‌து.

அதில் மீண்டும் முத‌ல் ப‌க்க‌த்திற்கு வ‌ந்த‌வ‌ள், அங்கே விர‌ல்க‌ளை ப‌ட‌ர‌விட்டு தொட்டுண‌ர‌, இந்த‌ எழுத்துக்க‌ள் ஒவ்வொன்றையும் இந்த‌ விர‌ல்க‌ளே எழுதிய‌துப்போல் ஒரு பிம்பம் கண்முன் வந்து மறைந்தது. அதில் நெற்றியை குறுக்கி யோச‌னை முடிச்சுக்க‌ளோடே பார்வையை நிமிர்த்தி, முத‌ல் வ‌ரியிலிருந்து ப‌டிக்க‌ ஆர‌ம்பித்தாள்.

உண்மையில் இது நானா? என‌க்கு டைரி எழுதும் ப‌ழ‌க்க‌ம் இது வ‌ரை இருந்த‌தில்லை. எழுத‌ வேண்டும் என்ற‌ எண்ண‌மும் வ‌ந்த‌தில்லை. ஆனால் இன்று... இந்த‌ த‌னிமை என்னை எழுத‌ வைக்கிற‌து.

முத‌ல் முறை என்ப‌தால் என‌து க‌தையை எங்கிருந்து ஆர‌ம்பிக்க‌ என்று என‌க்கு தெரிய‌வில்லை. என் வாழ்வில் சொல்ல‌ முடியாத‌, சொல்ல‌ கூடாத‌ ப‌க்க‌ங்க‌ள் நிறைய‌ உண்டு. என‌வே அத‌ன் க‌டைசி ப‌க்க‌த்திலிருந்தே இந்த‌ க‌தையை ஆர‌ம்பிக்கிறேன்.

அன்று என் பிற‌ந்த‌ நாள்.

"ஹேப்பி ப‌ர்த் டே டூ யூ... ஹேப்பி ப‌ர்த் டே டூ யூ..." என்று சுற்றியிருந்த‌ அனைவ‌ரும் பாட‌, 21 என்ற‌ உருவில் எரிந்துக்கொண்டிருந்த‌ மெழுகுவ‌ர்த்தியை அழ‌காய் ஊதி அணைத்த‌து அவ‌ளித‌ழ்க‌ள்.

அதில் அனைவ‌ரும் கைக‌ளை த‌ட்ட‌, அவ‌ளித‌ழ்க‌ள் அழ‌காய் வ‌ளைந்த‌து. அப்ப‌டியே அவ‌ள் நிமிர‌, ட‌மாளென்று வ‌ண்ண‌ பேப்ப‌ர்க‌ள் வெடித்து, அத‌ன் ந‌டுவே தெரிந்தது தேவ‌தை அவ‌ளின் முக‌ம் .

சிறு புன்ன‌கையோடே த‌ன் த‌லையிலிருந்த‌ பேப்ப‌ர்க‌ளை த‌ட்டிவிட்ட‌வ‌ள், மெதுவாய் க‌த்தியை கையில் எடுக்க‌, அப்ப‌டியே கீழே ஹேப்பி ப‌ர்த் டே மை சைல்ட் என்று எழ‌த‌ப்ப‌ட்டிருந்த‌ அந்த‌ பெரிய‌ ஐஸ் கேக்கை அழ‌காய் வெட்டி எடுத்து திரும்பி அருகாமையில் நீட்ட‌, அதில் புன்ன‌கை விரித்தப‌டி அவ‌ள் விர‌ல்க‌ளை பிடித்து அந்த‌ கேக்கை க‌டித்தார் அவ‌ளின் த‌ந்தை.

அதில் சுற்றியிருந்த‌வ‌ர்க‌ள் புன்ன‌கைக்க‌, அதே கேக்கை வாங்கி அவ‌ளுக்கும் ஊட்டினார் அவ‌ர். அதில் இவ‌ளும் மெல்ல‌ வாய் திற‌ந்து வாங்கிக்கொள்ள‌, அவ‌ளின் விழிக‌ளில் நீர் துளிர்த்த‌து. அதில் க‌ர‌த்தை இற‌க்கிய‌வ‌ர், என்ன‌வென்று புருவ‌ங்க‌ளால் கேட்க‌, ச‌ட்டென்று க‌ண்ணீரை உள்ளிழுத்து ஒன்றுமில்லை என்று மெல்லிய‌தாய் புன்ன‌கைத்தாள். அதில் அவ‌ரும் புன்ன‌கைத்த‌ப‌டி அடுத்த பீஸ் வெட்டு என்று க‌ண் அசைக்க‌, அவ‌ளும் ச‌ரியென்று த‌லைய‌சைத்து அடுத்த‌ பீசை வெட்டினாள்.

அதில் அவ‌ரும் புன்ன‌கைத்த‌ப‌டி கை த‌ட்ட‌, வெட்டிய‌ பீசை மெதுவாய் எடுத்து த‌ன் தாயிட‌ம் நீட்டினாள் அவ‌ள். அவ‌ரும் அதை வாங்கி புன்ன‌கைத்துவிட்டு, அதே கேக்கை அவ‌ளுக்கு ஊட்ட‌, மெதுவாய் வாய் திற‌ந்து அதை வாங்கிய‌வ‌ளின் விழிக‌ள் அப்ப‌டியே மூடி க‌ண்ணீரை வெளியேற்றிய‌து.

அந்த‌ க‌ண்ணீர் துளி அவ‌ள் கையிலிருந்த‌ கேக்கில் விழ‌, மெதுவாய் விழிக‌ளை திற‌ந்தாள். அந்த‌ பிரிந்த‌ இமைக‌ளின் ந‌டுவே நின்ற‌தோ அவ‌ள் தாயின் மாலையிட்ட‌ புகைப்ப‌ட‌ம்தான்.

அதில் ஏக்க‌மாய் இவ‌ள் விழிக‌ள் க‌ல‌ங்க‌, குனிந்து த‌ன் கையிலிருந்த‌ கேக்கை பார்த்தாள். அதுவோ க‌டிப்ப‌டாம‌ல் முழுதாய் இருக்க‌, அடுத்த‌ துளி க‌ண்ணீரும் அதில் விழுந்து க‌ரைந்த‌து. என்ன‌ செய்ய‌, க‌ற்ப‌னையில் ம‌ட்டுமே த‌ன் தாயுட‌ன் வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.

அப்போது அவ‌ள் தோளில் அழுத்தி ப‌திந்த‌து ஒரு க‌ர‌ம். அதில் அவ‌ள் ச‌ட்டென்று க‌ண்க‌ளை துடைத்துக்கொண்டு திரும்ப‌, "ம‌த்த‌வ‌ங்க‌ளுக்கும் குடும்மா." என்றார் த‌ந்தை.

அதில் மெல்லிய‌தாய் புன்ன‌கைத்து த‌லைய‌சைத்த‌வ‌ள், அருகிலிருந்த‌ த‌ன் தோழிக்கு ஊட்ட‌, அவ‌ளும் சிரிப்புட‌னே வாங்கிக்கொண்டு திருப்பி அவளுக்கு ஊட்டினாள். அப்ப‌டியே அந்த‌ ஃப‌ங்ஷ‌ன் அழ‌காய் முடிவ‌டைய‌, அனைத்தும் முடிந்து வீடே அமைதியான‌து. அந்த‌ அமைதியான‌ வீட்டின் ஒரு மூலையில் இருந்த, ஒரு அறையின் மெத்தையில் கால்க‌ளை ம‌ட‌க்கி க‌ட்டிக்கொண்டு, த‌ன் புஜ‌த்தில் க‌ன்ன‌த்தை புதைத்து சோக‌மாய் அம‌ர்ந்திருந்தாள் அமீரா.

"அம்மாடி மீரா!" என்ற‌து ஒரு குர‌ல். அதில் அவ‌ள் ச‌ட்டென்று நிமிர்ந்து எழ‌ போக‌, "உக்காரு." என்ற‌ப‌டி அவ‌ள‌ருகே அம‌ர்ந்தார் த‌ந்தை.

அதில் அவ‌ளும் த‌ய‌க்க‌த்தோட‌ அவ‌ர‌ருகே அம‌ர்ந்துவிட‌, மெதுவாய் அவ‌ளின் க‌ர‌த்தை பிடித்து, "ஒருவ‌ழியா நா நென‌ச்ச‌ நாள் வ‌ந்திருச்சும்மா மீரா." என்றார் அவ‌ர்.

அதில் அவ‌ளோ குழ‌ப்ப‌மாய் நிமிர்ந்து அவ‌ரை பார்க்க‌, அவ‌ருமே சிறு புன்ன‌கையுட‌ன் நிமிர்ந்து அவ‌ள் த‌லையில் கை வைத்து, "அப்பா சொன்ன‌ மாதிரியே உன‌க்கு ஒரு ந‌ல்ல‌ மாப்பிளைய‌ பாத்துட்டேன்." என்று கூற‌, ச‌ட்டென்று இவ‌ள் ம‌ன‌ம் ப‌த‌றிய‌து.

"இன்னியோட‌ உன‌க்கு இருப‌த்தொரு வ‌ய‌சு ஆர‌ம்பிக்குதுல்ல?" என்று அவ‌ள் த‌லையை பாசமாய் வ‌ருட‌, ச‌ட்டென்று வில‌கி எழுந்தாள் அமீரா.

அதில் திடுக்கிட்டு அவ‌ளை பார்த்த‌வ‌ர் மெதுவாய் எழுந்து நிற்க‌, இவ‌ளோ த‌ய‌க்க‌மாய் பின்னால் ந‌க‌ர்ந்து, "அ..அப்பா நா.." என்று பார்வையை தாழ்த்த‌, அவ‌ரோ புரியாது புருவ‌த்தை குறுக்கி, "என்ன‌ ஆச்சு?" என்று கேட்டார்.

அதில் வெகுவாய் த‌ய‌ங்கிய‌ப‌டி விர‌ல்க‌ளை பிசைந்தவ‌ள், "அது.. நா இன்னும் ரெண்டு வ‌ருஷ‌ம் ப‌டிக்க‌லான்னு இருக்கேன்." என்று கூறி முடித்த‌ அடுத்த‌ நொடி ப‌ளாரென்று அவ‌ள் க‌ன்ன‌த்தில் அறைந்தார் அவ‌ர். அதில் அவ‌ள் பொத்தென்று மெத்தையில் விழ‌, "தொல‌ச்சிருவேன்." என்றார் அத்த‌னை கோப‌மாக‌.

அதில் அவ‌ளோ க‌ன்ன‌த்தை பிடித்து க‌த‌றி அழ‌, "நீ எவ‌ன‌ நென‌ச்சுட்டு இருந்தாலும் ச‌ரி, எவ‌ன்கூட‌ ப‌டுத்துட்டு வ‌ந்தாலும் ச‌ரி. நா சொல்ற‌ பைய‌னுக்குதா க‌ழுத்த‌ நீட்ட‌ணும்." என்று அவ‌ர் அழுத்தி கூற‌, அந்த‌ வார்த்தைக‌ளில் அருவ‌ருப்பாய் காதை மூடி க‌த‌றி அழுதாள் அவ‌ள்.

"எதிர்த்து எதாவ‌து பேசுன‌.." என்று ப‌ல்லை க‌டித்த‌வ‌ர், "உன் அம்மாவ‌ அனுப்புன‌ எட‌த்துக்கே உன்னையும் அனுப்பிருவேன். ஜாக்க‌ர‌த‌." என்று அழுத்தி கூறிவிட்டு ந‌க‌ர்ந்தார்.

அதில் இறுக்கி விழி மூடி க‌த‌றி அழுத‌வ‌ள், இன்னும் எத்த‌னை நாட்க‌ள் இந்த‌ ந‌ர‌க‌த்தில் இருக்க‌ வேண்டும்? ஒவ்வொரு நாளும் உட‌ல‌ள‌விலும் ம‌ன‌த‌ள‌விலும் த‌ன்னை எத்த‌னை முறைதான் கொல்வார்? சொந்த‌ பெண்ணையே இவ்வ‌ள‌வு இழிவாக‌ நடத்த இவ‌ரால் ம‌ட்டும்தான் முடியும். எதற்கெடுத்தாலும் சந்தேகம், எதை பேசினாலும் எதிர்த்து பேசுகிறேன் என்று தண்டனை, அடிகள். இப்படி தினம் தினம் சித்திரவதைகள் மட்டுமே.

இவ‌ரின் கொடுமை தாங்காம‌ல்தான் த‌ன் தாய் உயிரைவிட்டார். அன்றிலிருந்தே அவ‌ளுக்கிருந்த‌ ஒரே ஆறுத‌லும் இல்லாம‌ல் போன‌து. ஒவ்வொரு நொடியும் நெருப்பின் மீது வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள். பேசாம‌ல் செத்துவிட‌லாம் என்று ப‌ல‌ முறை தோன்றிய‌து. ஆனால் அத‌ற்கும் தைரிய‌மில்லா கோழையாய் நிற்கிறாள்.

அந்த‌ கோழைதான் இன்று வ‌ரை அவ‌ர் கூறிய‌ அனைத்திற்குமே த‌லையாட்டிய‌ப‌டி, எத‌ற்கும் ஏனென்று கேட்க‌ முடியா நிலையில் அவ‌ர் இழுத்த‌ இழுப்பிற்கெல்லாம் சென்றுக்கொண்டிருக்கிறாள். அதில் ஒன்றுதான் இந்த‌ பிற‌ந்த‌நாள் விழா. ஏனென்றே தெரியாம‌ல்தான் த‌யாராகி அவ‌ருட‌ன் வ‌ந்தாள், நின்றாள், ந‌டித்தாள். இங்கு ம‌ட்டும‌ல்ல‌ ப‌ள்ளி, க‌ல்லூரி, ஏன் அவ‌ள் தேர்ந்தெடுத்த‌ ப‌டிப்பு முத‌ற்கொண்டு அவ‌ர் முடிவு செய்த‌துதான். அவ‌ளாக‌ விருப்ப‌ப்ப‌ட்டு எதையும் கேட்க‌வும் அனும‌தியில்லை. அணியும் ஆடையைக் கூட‌ அவ‌ளாக விருப்ப‌ப்ப‌ட்டு, தொட்டு பார்த்துவிட்டாலே தீர்ந்த‌து. எவ‌னை ம‌ய‌க்க‌ இந்த‌ ஆடை என்று வாய் கூசாம‌ல் கேட்ட‌வ‌ர் அவ‌ர். அதையெல்லாம் தாங்க‌ முடியாம‌ல்தான் அவ‌ள் வாய் திற‌ப்ப‌தையே நிறுத்தியிருந்தாள்.

என்றாவ‌து இந்த‌ வாழ்க்கை மாறிவிடாதா? த‌ன்னை மீட்க‌ ஒருவ‌ன் வ‌ருமாட்டானா? என்ற‌ ஏக்க‌த்தில்தான் இருப‌து வ‌ருட‌த்தை க‌ட‌ந்தாள். ஆனால் அந்த‌ ஒருவ‌னையும் இவ‌ரே தேர்ந்தெடுத்தால், நிச்ச‌ய‌ம் இங்கிருந்து விடுத‌லையாகி இன்னொரு சிறைக்குள் அடைப்ப‌டும் நிலைதான் அவ‌ளுடைய‌து. அத‌னால்தான் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைத்து பேச‌ முய‌ன்றாள். ஆனால் அத‌ற்கும் அவ‌ர் கொடுத்த‌ இந்த ப‌தில், அவ‌ளின் க‌ன்ன‌ம் இன்னுமே எரிந்தது. ஆனால் அவ‌ளின் ம‌ன‌ம்தான் அதைவிட‌ வேத‌னையில் எரிந்துக்கொண்டிருந்த‌து.

இந்த‌ ந‌ர‌க‌த்திலிருந்து த‌ப்ப‌ அவ‌ளிட‌ம் உள்ள‌ க‌டைசி வ‌ழியே திரும‌ண‌ம்தான். அதுவும் இன்னொரு ந‌ர‌க‌மாக‌ இருந்துவிடுமோ? வ‌ருப‌வ‌ன் தன் த‌ந்தையைவிட‌ பெரிய‌ கொடுர‌னாக‌ இருந்தால்? இதைவிட‌ பெரிய‌ ந‌ர‌க‌த்தை காட்டினால்? என்ற‌ ப‌ல‌ பயங்கள் அவ‌ளுள் சூழ்ந்திருக்க‌, அவ‌ள் உட‌ல் ந‌டுங்கிய‌து.

அதில் அப்ப‌டியே உட‌லை குறுக்கிக்கொண்டு ப‌த‌ற்ற‌மாய் நடுங்கி யோசித்த‌வ‌ள், அப்ப‌டி வாழ்வ‌த‌ற்கு பேசாம‌ல் த‌ன் தாய் சென்ற‌ இட‌த்திற்கே சென்றுவிட‌லாமா என்றெல்லாம் தோன்ற‌, அவ‌ள் விழிக‌ளோ க‌ண்ணீருட‌ன் இறுக‌ மூடிய‌து.

"அந்த‌ த‌ங்க‌ சிறையில‌ அடைப்ப‌ட்ட‌ ராஜ‌குமாரி, ஒவ்வொரு நாளும் த‌ன்னோட‌ ராஜ‌குமார‌னுக்காக‌ காத்திருந்தா." என்று அவ‌ளின் தாய் த‌ன் சிறு வ‌ய‌தில் கூறிய‌ க‌தை ஒன்று நினைவில் ஓடியது.

"இன்னிக்கு நாளைக்குன்னு நாட்க‌ள் க‌ட‌ந்துக்கிட்டே போனாலும், ந‌ம்பிக்கைய‌ ம‌ட்டும் விடாம‌ அவ‌னுக்காக‌ ம‌ட்டுமே காத்துகிட்டு இருந்தா." என்று வாடலாய் அவள் அம்மா, சிறுமியான‌ அமீராவின் த‌லையை வ‌ருட‌, அதில் வேகமாய் நிமிர்ந்து, "அந்த‌ ப்ரின்ஸ் வ‌ந்தாரா ம‌ம்மி?" என்று குழ‌ந்தையாய் கேட்டாள் அமீரா.

அதில் மெல்லிய‌தாய் புன்ன‌கைத்த‌வ‌ர், "வ‌ந்தாரு." என்றார்.

"அப்ப‌டியா அப்ற‌ம்?" என்று அவ‌ள் முக‌ம் ம‌ல‌ர‌ கேட்க‌, "ஒரு வெள்ள‌ குதிரையில‌ வேக‌மா வ‌ந்து, அந்த‌ சிறைய‌ ஒட‌ச்சுட்டு, அவ‌ள‌ தூக்கிட்டு போனாரு." என்ற‌ அவ‌ரின் வார்த்தைக‌ள் இப்போதும் இவ‌ள் காதில் ஒலித்த‌ப‌டியே இருக்க‌, அதெல்லாம் க‌தையில் ம‌ட்டும்தானா என்றுதான் அவள் உள்ளம் க‌த‌றிய‌து.

ஆனால் அவ‌ள் அறிய‌வில்லை. அவ‌ளுக்கான‌வ‌ன் வெள்ளை குதிரையில் அல்ல‌, இங்கே க‌ருப்பு குதிரையில் அதிவேக‌மாய் காற்றை கிழித்து வ‌ந்துக்கொண்டிருக்கிறான் என்று.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.