CHAPTER-21

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
அவள் மார்பில் புதைந்திருந்தவன், "நா உன்ன விட்டு போயிட்டா என்ன மிஸ் பண்ணுவியா?" என்று கேட்க, அவன் குரலில் ஏக்கமோ வலியோ எந்த ஒரு உணர்வும் இல்லை.

அதில் இவள் மனம் குழம்பி, "ஏ இப்பிடி.." என்று கேட்க வர, "நீ பண்ண மாட்ட. பட் நா ரொம்ப மிஸ் பண்ண போறேன்." என்றான்.

அதில் சட்டென்று புருவத்தை விரித்தவளின் இதயம் நின்று துடிக்க, அவளை மேலும் இறுக்கி கட்டிக்கொண்டவன், "ரொம்ப மிஸ் பண்ண போறேன்." என்றான்.

அதில் அவளின் இதயம் அத்தனை பலமாய் துடிக்க, புருவங்கள் தவித்து விழிகள் நீரில் மூழ்க, "அப்டின்னா?" என்று கேட்டாள்.

அடுத்த சில நொடிகள் அமைதி மட்டுமே நிலவ, அவனிடம் எந்த பதிலும் இல்லை. அதில் குனிந்து அவ‌னை பார்த்தவள், "சொல்லுங்க. இதுக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்க, அவள் குரல் தழுத்தழுக்க, இதயம் அத்தனை பலமாய் துடித்தது.

அந்த இதயத்தில் அழுத்தி முகத்தை தேய்த்து, "இப்போ இல்ல. குட் நைட்." என்றபடி உறங்க ஆரம்பித்தான்.

அதில் இவள் இதயம் பலமாய் அடித்து, உள்ளிருக்கும் பயத்தை அதிகரிக்க, பதறிய மனம் இதற்குமேல் அதை பற்றி பேச வேண்டாம் என்று எச்சரித்தது. அதில் இறுக்கி விழி மூடி இந்த சிந்தனையையே தூரம் துரத்தியவள், அவனை இறுக கட்டிக்கொண்டாள். என்ன நடந்தாலும் இந்த தருணத்தை கலையவிட மாட்டேன் என்ற அழுத்தம் அவள் முகத்தில் பதற்றத்தையே பிரதிபலிக்க, இந்த நொடி தன் மார்புக்குள் இருக்கும் இவனை முடிந்தமட்டும் இறுக்கி கட்டிக்கொண்டு அவன் உச்சி சிகைக்குள் முகத்தை புதைத்தாள்.

ஆனால் அவளை கட்டிக்கொண்டிருந்த அவனுடைய கரத்தின் இறுக்கம் அதிகரித்து, அந்த ட்ரிப்ஸ் ஏறும் ஐ.வி டியூபில் மெதுவாய் அவனின் இரத்தம் ஏறிக்கொண்டிருந்ததை இருவருமே அறியவில்லை.

அப்படியே அடுத்த நாள் காலை அவளின் உறக்கம் கலைந்து மெதுவாய் விழிகள் அசைய, அவள் உடல் மீதிருந்த பெரும் பாரம் இப்போது இல்லாதிருக்கவும் புருவங்களை குறுக்கி புரியாது விழி திறந்தாள்.

அப்போது மெத்தையில் அவள் மட்டுமே தனியாக கிடக்க, சட்டென்று எழுந்து அமர்ந்து சுற்றியும் பார்த்தாள். அவளின் தாமரை மெத்தையில், அதே கடல் தரை படர்ந்த அவர்களின் பழைய அறையில் இருந்தாள். அதில் விழி விரித்தவள் எதையோ உணர்ந்து சட்டென்று குனிய, அவள் கழற்றியெறிந்த அதே சிவப்பு சேலை இப்போது அவள் உடலில் அழகாய் கட்டியிருந்தது. அதை இறுக்கி பிடித்து வேகமாய் அவனை தேட, அவனோ எங்குமில்லை. அதில் அவள் வேகமாய் கீழே இறங்க முயல, அப்போதே எதோ தட்டி குனிந்து பார்த்தவள், சட்டென்று புருவம் விரித்தாள்.

அவள் முன் கருப்பு நிற புதிய சேலை ஒன்று எடுத்து வைக்கப்பட்டிருக்க, அவள் இதழ்கள் அழகாய் வளைந்தது. அந்த‌ புன்னகை கலையாது மெதுவாய் அதை கையில் எடுத்து இறங்கி நின்றவள், இரசனையாய் தன் விரல்களை அதில் படரவிட்டாள். இந்த கருப்பு புடவை நேற்று வரை தன் உடலிலிருந்த அவனின் கருப்பு சட்டையையே நினைவூட்ட, அப்ப‌டியே அதை தன் மார்போடு வைத்து இறுக கட்டிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

உள்ளே சென்றதும் கதவை சாத்த திரும்பியவள், அப்போதே அதற்கு கதவில்லை என்பதை உணர்ந்து அப்படியே நின்றாள். அன்று இதே இடத்தில் நின்று கதவை மூட வரும்போது சட்டென்று உடலை உரசி வந்து நின்றான் அவன். அதில் அவள் அதிர்வாய் பின்னெட்டு வைக்கும் முன், அவன் இதழ்கள் மென்மையாய் தன் இதழில் பதிந்து விலகிய நொடி கண்முன் வர, அப்படியே தலையை தாழ்த்தி வெட்கத்தில் சிவந்தாள்.

"இந்த கதவு தெறந்துதா இருக்கணும்." என்ற அவனின் குரல் இன்றும் அவள் காதில் ஒலிக்க, அந்த புடவையால் வாயை மூடி வெட்க சிரிப்பை உதிர்த்தவள், அப்படியே திரும்பி உள்ளே சென்றாள்.

இரண்டடி எடுத்து வைத்தவள், அப்போதே உணர்ந்து தன் கையிலிருந்த புடவையை பார்க்க, மீண்டும் அவள் முகத்தில் ஒரு வெட்கம் வந்து போக, நெற்றியில் அடித்துக்கொண்டு வெளியில் வந்து அந்த சேலையை மெத்தையில் வைத்துவிட்டு மீண்டும் குளிய‌ல‌றைக்குள்ளே சென்றாள்.

அங்கே ஹேங்கரில் அவளுக்கான டவளும் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருக்க, மேலும் இதழ் வளைத்தவள், தன் புடவையையும் மெதுவாய் கழற்றி அதனருகே மாட்டப்போக, திடீரென்று அவளுள் தயக்கம் தொற்றியது.

அதில் மீண்டும் புடவையை தன் தோளில் போட்டு தயக்கமாய் பற்றிக்கொண்டவள், அப்படியே திரும்பி கதவு பக்கம் பார்த்தாள்.

பெண்ணுக்கே உண்டான தயக்கம். திறந்த கதவில் எவ்வாறு குளிப்பது? ஒருவேளை அவன் வந்துவிட்டால் என்ற பதற்றத்தில் அப்படியே தேங்கி நிற்க, "டென் மினிட்ஸ்தா உனக்கு டைம். அதுக்குள்ள நீ குளிச்சிட்டு வரலன்னா, நானே உன்ன வந்து குளிப்பாட்டுவேன்." என்ற அவனின் வார்த்தைகள் நினைவிற்கு வர, சட்டென்று விழி விரித்தாள்.

அவள் இதயம் மீண்டும் பலமாய் துடிக்க ஆர‌ம்பிக்க‌, அடுத்த நொடியே தன் சேலையை கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு அவசரமாய் திரும்பி அவன் வருகிறானா என்று பார்த்துக்கொண்டவள், அவன் வரும் முன் குளித்துவிட வேண்டும் என்று தன் மீதி ஆடைகளையும் கலைந்து, ஷவரை ஆன் செய்தாள்.

அப்படியே நீரில் ந‌னைந்த‌வள், அவசர அவசரமாய் குளித்து முடித்து தேகத்தின் ஈரத்தை துடைத்து, அதே துண்டை தன் மார்பு வரை கட்டிக்கொண்டு, மெதுவாய் வெளியில் வந்து எட்டி பார்க்க, அவனோ இன்னும் வந்திருக்கவில்லை. அதில் விழிக‌ள் அவ‌னை தேடினாலும், ம‌ன‌ம் சற்று மூச்சுவிட்டுக்கொள்ள‌, மெதுவாய் வெளியில் வந்து மெத்தையருகே நின்று, அவன் எடுத்து வைத்த புடவையை கையில் எடுத்தாள்.

முதலில் முதன்மை ஆடைகளை போட்டுக்கொண்டவள், அடுத்து அந்த சேலையை எடுத்து தன் இடையில் சுற்றி மடிப்பை எடுத்துக் கொண்டிருக்க, பால் வண்ணமாய் மின்னிய அவள் ஆழிலை வ‌யிற்றில் மெதுவாய் ப‌ட‌ர்ந்த‌து அவ‌ன் க‌ர‌ம். அதில் அவ‌ள் திடுக்கிட்டு ம‌டிப்புக‌ளை விட்டுவிட‌, அங்கே அவ‌ன் இல்லை.

அதில் ப‌த‌ற்ற‌மாய் சுற்றி பார்த்த‌வ‌ள் குனிந்து த‌ன் இடையை பார்க்க‌, அங்கே அவ‌ன் க‌ர‌ம் இல்லாத‌து அவ‌ளுள் மெல்லிய‌ ஏமாற்ற‌த்தை கொடுத்த‌து. அன்று இதே இடையில் அவ‌ன் க‌ர‌ம் ப‌ட‌ர்ந்து ச‌ட்டென்று அழுத்தம் கொடுத்து அவ‌ளை த‌ன்னுட‌ன் சேர்த்து புதைத்த‌வ‌ன், அவ‌ளின் ஈர‌ கூந்த‌லுள் முக‌ம் புதைத்து, "ஏ இவ்ளோ நேர‌ம் டார்லு.." என்ற‌வ‌னின் கிற‌ங்கிய‌ குர‌ல் இன்னுமே அவ‌ள் ஈர‌ செவிக‌ளுள் கேட்ப‌து போன்ற‌ உண‌ர்வு.

அதில் காத‌ருகே இருந்த‌ கூந்த‌லை வில‌க்கிய‌ப‌டி குனிந்து அந்த‌ சேலையை கையில் எடுத்தவள், மீண்டும் ம‌டிப்புக‌ளை எடுக்க‌ துவ‌ங்கினாள். இம்முறை அவ‌ச‌ர‌மாய் இல்லாம‌ல் பொறுமையாக‌வே எடுத்த‌வ‌ள், அவ‌ன் வ‌ருகையை விரும்பினாளோ என்ன‌வோ மெதுவாய் எடுத்து அழ‌காய் த‌ன் இடையில் சொருக‌, அந்த‌ ம‌டிப்புகளை மெல்ல‌ அவிழ்த்த‌ அவ‌னின் விர‌ல்க‌ள்தான் அவ‌ள் க‌ண்முன் வ‌ந்த‌து. அதில் ச‌ட்டென்று நிறுத்திய‌வ‌ள், மீண்டும் திரும்பி பார்க்க‌ அந்த‌ க‌த‌வு மூடிதான் இருந்த‌து. அதில் அவ‌ளுள் மீண்டும் ஒரு ஏமாற்ற‌ம். மீண்டும் திரும்பி முந்தாணையை எடுத்து த‌ன் தோளில் போட்ட‌வ‌ள், த‌ன் நாபிய‌ருகே சேலையை வில‌க்கி ம‌டிப்புக‌ளை ச‌ரி செய்ய‌, அத‌ன் வ‌ழி தெரிந்த‌ அந்த‌ நாபி குழியும் த‌ன்னுள் நுழைந்த‌ அவ‌ன் விர‌லையே நினைவூட்ட‌ திடுக்கிட்டு க‌ர‌த்தை வில‌க்கினாள். அடுத்த‌ நொடி அதன் மீது சேலை விழுந்து ம‌றைத்துவிட‌, அவ‌ள் இத‌ய‌ம் மெதுவாய் துடிப்பை அதிக‌ரித்த‌து. ஏனோ த‌ன்னுடைய‌ சிறு சிறு அசைவுக‌ளும் அவ‌னையே நினைவூட்ட‌ அவ‌ளும் என்ன‌தான் செய்வாள்? ஒரு நொடி அழுத்தி விழி மூடி திற‌ந்த‌வ‌ள், ஒரே நாளில் தன்னை என்ன‌தான் செய்தான் அந்த‌ க‌ள்வ‌ன் என்ற‌ வெட்க புன்ன‌கையோடே மீண்டும் த‌ன் தோளிலிருந்த‌ சேலையை ச‌ரி செய்தவ‌ள், அங்கே பின் குத்த‌ சேஃப்ட்டி பின்னை தேடினாள். அதுவோ அங்கே க‌ண்ணாடி முன்பு வைத்திருக்க‌வும் வேக‌மாய் சென்று அதை எடுத்து குத்த‌ ஆர‌ம்பித்த‌வ‌ள், அப்ப‌டியே நிமிர்ந்து க‌ண்ணாடியை பார்க்க‌ அவ‌ள் விழிக‌ள் விரிந்த‌து.

அந்த‌ க‌ருப்பு சேலையில் தேவ‌தையென‌ நின்றிருந்த‌வ‌ளின் க‌ழுத்தில் திடீரென்று ம‌ஞ்ச‌ள் க‌யிறும் நெற்றி வ‌குட்டில் குங்கும‌மும் வ‌ந்து ம‌றைய‌, அப்ப‌டியே உறைந்து நின்றாள்.

"வெல்க‌ம் டூ மை டார்க் வேர்ல்ட்" என்ற‌ அவ‌னின் குர‌ல் அவ‌ள் உள்ம‌ன‌தில் ஒலித்த‌து.

அதில் த‌ன் பிம்ப‌த்தையே பார்த்திருந்த‌வ‌ளின் விர‌ல்க‌ள் மெதுவாய் த‌ன் க‌ழுத்தில் ப‌ட‌ர்ந்து, இல்லாத‌ தாலியை தொட்டு வ‌ருட‌, ம‌று க‌ர‌ம் த‌ன் உச்சி வ‌குட்டை மென்மையாய் தொட்டது. இந்நொடி அவ‌ள் ம‌ன‌ம் எதையோ உண‌ர்த்த‌ முய‌ல‌, அவ‌ள் இத‌ய‌மும் துடிப்பை கூட்டிய‌து. இது என்ன‌ மாதிரியான‌ உண‌ர்வு என்று அவ‌ள் புருவ‌த்தை குறுக்கி யோசிக்க‌, ச‌ட்டென்று அறை க‌த‌வு த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.

அதில் திடுக்கிட்டு எண்ண‌ம் க‌லைந்தவ‌ள் திரும்பி பார்க்க,‌ மீண்டும் ப‌ல‌மாய் த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து அந்த‌ க‌த‌வு. அதில் இவ‌ள் ம‌ன‌ம் ப‌த‌ற‌, ஐய‌யோ தெரியாம‌ல் உள் ப‌க்க‌ம் தாழ் போட்டுவிட்டோமா என்ன‌? க‌த‌வை உடைத்துவிட‌ போகிறான் என்று ப‌த‌றி வேக‌மாய் ஓடி சென்று திற‌க்க‌ போக‌, தாழ் எதுவும் போட‌வில்லை. அதில் புரியாது பிடியில் சிறு அழுத்த‌ம் கொடுத்து இழுத்து திற‌ந்துவிட்ட‌வ‌ள் அடுத்த‌ நொடி புருவ‌ங்க‌ளை விரித்தாள்.

மீண்டும் க‌த‌வை த‌ட்ட‌ வ‌ந்து அப்ப‌டியே நிறுத்திய‌ யோகி, பிற‌கு மெல்லிய‌தாய் புன்ன‌கைத்து, "ந‌ல்ல‌வேள‌ மேட‌ம் நானே எழுப்ப‌லான்னுதா வ‌ந்தேன். நீங்க‌ளே எந்திரிச்சு ஃப்ர‌ஷ் ஆயிட்டீங்க. ச‌ரி இருங்க‌ நா போய் பிரேக் ஃபாஸ்ட் எடுத்துட்டு வ‌ர்றேன்." என்ற‌ப‌டி ந‌க‌ர‌ போக‌, "ஒரு நிமிஷ‌ம்." என்றாள் இவ‌ள்.

"சொல்லுங்க‌ மேட‌ம்." என்று அவ‌ன் திரும்பி அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ சிறு த‌ய‌க்க‌த்துட‌ன் புருவ‌த்தை நெளித்து, "அவ‌ரு.. எங்க‌ ரொம்ப‌ நேர‌மா பாக்க‌வே இல்ல‌?" என்று கேட்டாள்.

அதில் மெல்லிய‌தாய் த‌டுமாறி த‌ன் கால‌ரை ச‌ரி செய்த‌வ‌ன், "ஆக்ச்சுவ‌லா.. பாஸ் இங்க‌ வ‌ர‌ல‌ மேட‌ம்." என்றான்.

அதில் இவ‌ள் இத‌ய‌ம் அதிர‌, "என்ன‌? புரிய‌ல‌" என்றாள்.

"அவ‌ருக்கு அங்க‌ கொஞ்ச‌ம் வொர்க் இருக்கு. அத‌ முடிச்சுட்டுதா வ‌ருவாரு." என்று கூற, இவ‌ள் க‌ண்க‌ளில் நீர் துளிர்த்தது. "அப்ப‌ என்ன‌ ம‌ட்டும் ஏ.." என்று அவள் கேட்க‌ வ‌ர‌, "அது பா‌ஸோட‌ ஆட‌ர் மேட‌ம்." என்றான்.

அதில் ச‌ட்டென்று புருவ‌ம் விரித்த‌வ‌ளுக்கோ க‌ண்ணீர் பெருக‌, "உன்ன‌ ரொம்ப‌ மிஸ் ப‌ண்ண‌ போறேன்." என்ற அவனின் வார்த்தைக்கு அர்த்த‌ம் இதுவோ என்று யோசித்த‌வ‌ளின் விழிக‌ள் ப‌த‌ற‌, "எப்போ வ‌ருவாரு?" என்று கேட்டாள்.

"நாளைக்குள்ள‌ வ‌ந்திருவாரு மேட‌ம்." என்றான்.

அதில் ச‌ற்று நிம்ம‌திய‌டைய‌ முய‌ன்ற‌வ‌ளின் ம‌ன‌ம், ஏனோ கேட்காது த‌விப்பை கூட்ட‌, "அவ‌ருகிட்ட‌ பேச‌ முடியுமா ப்ளீஸ்" என்று க‌ண்ணீருட‌ன் கேட்டாள்.

அதில் அவ‌னும், "ஷ்யோர் மேட‌ம்." என்ற‌ப‌டி த‌ன் மொபைலை எடுத்து அவ‌னுக்கு கால் செய்து கொடுத்தான்.

அவ‌ளும் வேக‌மாய் வாங்கி காதில் வைக்க‌ ரிங் போன‌து. அதில் இவ‌ள் ம‌ன‌ம் அத்த‌னை ப‌ல‌மாய் துடிக்க‌, இரு க‌ர‌த்தால் மொபைலை இறுக்கி பிடித்த‌வ‌ள், "சீக்கிர‌ம் சீக்கிர‌ம்" என்று த‌ன‌க்குள் கூறிக்கொண்டே இறுக்கி விழி மூடினாள். அவ‌ன் குர‌லையாவ‌து கேட்டுவிட‌ வேண்டும் என்று அவ‌ள் ம‌ன‌ம் துடியாய் துடிக்க‌, "ஹ‌லோ!" என்றான் அவ‌ன்.

அதில் ச‌ட்டென்று விழி திற‌ந்த‌வ‌ளின் இதழ்கள் தடுமாற, "ஹ‌..ஹ‌லோ!" என்று அத்த‌னை ஏமாற்ற‌மாய் கூற‌, "மேட‌ம் அவ‌ரு தூங்குறாரு. அப்ற‌மா கால் ப‌ண்றீங்க‌ளா?" என்றான் வேறு ஒரு ஆண்.

அதில் புரியா த‌விப்பாய், "நீங்க‌?" என்று அவ‌ள் கேட்க‌, "நா ஜுனிய‌ர் டாக்ட‌ர் வினோ. அவ‌ர‌ பாத்துக்குற‌துக்காக‌ என் சீனிய‌ர் அப்பாயிண்ட் ப‌ண்ணிருக்காரு." என்றான்.

அப்போதே நேற்று ந‌ட‌ந்த‌வைக‌ள் அனைத்தும் அவ‌ள் க‌ண்முன் வ‌ர‌, விழி விரிய பதறி, "அவ‌ரு எப்பிடி இருக்காரு?" என்று ப‌த‌றி கேட்டாள்.

"ந‌ல்லாதா இருக்காரு மேட‌ம். டேப்ள‌ட் போட்டு தூங்கிட்டிருக்காரு. அதா நா அட்ட‌ன் ப‌ண்ணேன்." என்றான் வினோ.

அதில் எதுவும் கூறாம‌ல் மொபைலை யோகியிட‌ம் நீட்ட‌, அவ‌னும் புரியாது அதை வாங்கிக்கொள்ள‌, அவ‌ளோ க‌ண்க‌ளை துடைத்த‌ப‌டி வேக‌மாய் உள்ளே சென்றுவிட்டாள்.

அதில் அவ‌ளையே பார்த்த‌ப‌டி மொபைலை காதில் வைத்த‌வ‌ன், "ஹ‌லோ!" என்று கூற‌, "சார் நீங்க‌ சொன்ன‌ மாதிரியே சொல்லிட்டேன்." என்றான் வினோ.

"தேங்க் யூ. பாஸ‌ பாத்துக்கோங்க‌." என்று கூறி இணைப்பை துண்டித்தான் யோகி.

இங்கே அந்த‌ மெத்தையில் வ‌ந்து அம‌ர்ந்துவிட்ட‌வ‌ளின் க‌ண்ணீர் வ‌ழிந்த‌ப‌டியே இருக்க‌, அதை த‌ன் முந்தாணை நுனியால் துடைத்தப‌டியே இருந்த‌வ‌ளின் நுனி மூக்கு கோவ‌த்தில் சிவ‌ந்த‌து. ஒரு வார்த்தைக்கூட‌ சொல்லாம‌ல் த‌ன்னை ம‌ட்டும் எத‌ற்காக‌ இங்கு அனுப்பி வைத்தான் என்ற‌ கோப‌மும் க‌ண்ணீராக‌வே வெளியில் வ‌ர‌, அந்த‌ க‌ண்ணீரில் வ‌லியும் இருந்த‌துதான் உண்மை.

அவ‌னிட‌மிருந்து எப்ப‌டியாவ‌து த‌ப்பிவிட‌ வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த‌ நேர‌மெல்லாம் அருகில் இருந்த‌வ‌ன், இன்று அவ‌னை ம‌ட்டுமே ம‌ன‌ம் தேடும்போது தூர‌மாகியிருந்தான். இந்த‌ தூர‌ம் நாளை வ‌ரைதான் என்று ம‌ன‌ம் சொன்னாலும், அந்த‌ நாளையே அவ‌ளுக்கு வெகு தூர‌மாக‌ இருப்ப‌துப்போல்தான் தோன்றிய‌து.

ஒரே நாளில் ஏன் இவ்வ‌ள‌வு மாற்றம்? அவ‌ளுக்கே தெரிய‌வில்லை. தாயை தேடும் பிள்ளை போல் அவ‌னை மட்டுமே அவ‌ள் ம‌ன‌ம் தேடிய‌து. அவ‌ன் இங்கில்லை என்று தெரிந்த‌ சில‌ நொடிக‌ளிலேயே அவ‌ள் ம‌ன‌ம் உண‌ர்ந்த‌ த‌னிமை. உல‌கில் உள்ள‌ அனைவ‌ருமே இற‌ந்து அவ‌ள் ம‌ட்டுமே இருப்ப‌து போன்ற‌ ஒரு மாயை. அதில் வழிய வழிய கண்ணீரை துடைத்துக்கொண்டே இருக்க‌, அந்த‌ சொர‌சொர‌ப்பான‌ முந்தாணையில் துடைத்து துடைத்து முக‌மெல்லாம் எரிந்த‌து. இப்ப‌டி எத்த‌னை நேர‌ம் அழுதுக்கொண்டே இருந்தாளோ, "மேட‌ம்!" என்றான் யோகி.

அதில் ச‌ட்டென்று முக‌த்தை திருப்பி க‌ண்ணீரை துடைத்த‌வ‌ள், "என‌க்கு எதுவும் வேண்டா எடுத்துட்டு போங்க‌." என்றாள்.

"ப‌ட் இது உங்க‌ளுக்கு தேவ‌." என்ற‌ப‌டி டிஷூவை அவ‌ளிட‌ம் நீட்டினான். அதில் விழியை ம‌ட்டும் ந‌க‌ர்த்தி அதை பார்த்த‌வ‌ள், உட‌னே தன் முந்தாணையை விட்டுவிட்டு அதை பிடுங்கி த‌ன் க‌ண்க‌ளை துடைத்துக் கொண்டாள். இரு விழிக‌ளையும் துடைத்த‌ப‌டி அப்ப‌டியே டிஷூவை இற‌க்கிய‌ நேர‌ம், ச‌ட்ட‌மாய் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌ புகைப்ப‌ட‌ம் அவ‌ள் க‌ண்முன் நின்ற‌து.

அதில் அவ‌ள் விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, ச‌ட்டென்று நிமிர்ந்து அவ‌னை பார்த்தாள். அதை அவ‌ள் முன் நீட்டிக்கொண்டிருந்த‌ யோகியும் பிடியுங்க‌ள் என்று க‌ண் அசைக்க‌, மெதுவாய் அதை வாங்கினாள். அப்ப‌டியே பார்வையை இற‌க்கியவளின் விர‌ல்க‌ள் அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் ப‌ட‌ர‌, அதில் லேசாய் ப‌டிந்திருந்த‌ தூசி அப்ப‌டியே வில‌க‌, அதில் ம‌ண‌ப்பெண்ணாய் அம‌ர்ந்திருந்த‌ அமீராவின் முக‌த்தில் துளியும் புன்ன‌கை இல்லை. அப்ப‌டியே அவ‌ளருகே அம‌ர்ந்திருந்த‌ ம‌ண‌வாள‌ன் ருத‌னின் முக‌த்திலுமே இறுக்கம் ம‌ட்டுமே தெரிந்த‌து.

அதில் ச‌ட்டென்று புருவ‌ம் விரித்த‌வ‌ள், த‌ங்க‌ளுடைய‌து விருப்ப‌மில்லாம‌ல் ந‌ட‌ந்த‌ திரும‌ண‌மா? அப்படியென்றால் இன்று இவன் காட்டும் அர‌க்க‌த்த‌ன‌மான‌ அன்பு எவ்வாறு? இவனின் அதீத அக்கறை பாதுகாப்பு அனைத்தையும் தாண்டி, தனக்காக அவன் எடுத்த உயிர்கள், அதற்காக அவன் கூறிய ஒரே அழுத்தமான காரணம், இதெல்லாம் எவ்வாறு உருவானது என்று அவளுள் ஆயிரம் கேள்விகள் ஓடியது. அப்படி இந்த‌ புகைப்ப‌ட‌த்திற்கு பின்னால் உள்ள‌ க‌தைதான் என்ன‌ என்பதுப்போல் மெல்ல நிமிர்ந்து யோகியை பார்த்தாள்.

"நா சொன்ன‌ல்ல‌ ஒருநாள் உங்க‌ கேள்விக்கெல்லா ப‌தில் கெடைக்கும்னு?" என்று அவ‌ன் கூற‌, அவ‌ளோ மீண்டும் அப்ப‌டியே பார்வையை அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் குவிக்க‌, "உங்க‌ க‌ட‌ந்த‌ கால‌த்த‌ ப‌த்தி நீங்க‌ முழுசா தெரிஞ்சுக்க‌ வேண்டிய‌ நேர‌ம் வ‌ந்திருச்சு." என்றான் யோகி.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-21
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.