CHAPTER-16

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
"யாரோ ஒருத்த‌னோட‌ தென‌ம் தென‌ம் சித்த‌ர‌வ‌தைய‌ அனுப‌விக்குற‌தவிட‌.." என்று கூறும் முன், அவ‌ள் தொண்டையை அழுத்தி பிடித்திருந்தான் அவ‌ன்.

அதில் திடுக்கிட்டு சுவ‌ரில் புதைந்த‌வ‌ளின் வார்த்தை வ‌லியுட‌ன் தொண்டைக்குள் புதைய‌, அதை மேலும் அழுத்தி நெறுக்கிய‌வ‌ன், "யாரோ ஒருத்த‌ன் இல்ல‌. உன் புருஷ‌ன்." என்றான் உரும‌லாக‌.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் இத‌ய‌ம் அடைத்து விழிக‌ள் அக‌ல‌ விரிய‌, "உன்ன‌ தொட்டு தாலி க‌ட்டுன‌ உன்னோட‌ புருஷ‌ன்." என்றான் அழுத்த‌மாக‌.

அந்த‌ அழுத்த‌ம் அவ‌ன் விழியிலும் இருக்க‌, அவ‌னின் அந்த‌ சிவ‌ந்த‌ விழிக‌ளில் கோப‌த்தையும் தாண்டிய‌ அப்ப‌ட்ட‌மான‌ வ‌லி. அதில் மெதுவாய் தேங்க‌ முய‌ன்ற‌ க‌ண்ணீரை ச‌ட்டென்று உள்ளிழுத்து ப‌ட்டென்று அவ‌ள‌ருகே சுவ‌ரில் க‌ர‌த்தை ப‌தித்தவ‌ன், அதில் திடுக்கிட்ட‌ அவ‌ளின் விழியை அழுத்தி பார்த்து, "உன் ஒட‌ம்பு ம‌ட்டும் இல்ல‌. உன்னோட‌ எல்லாமுமே என‌க்கு ம‌ட்டுந்தா சொந்த‌ம் மிஸ‌ஸ் ருத‌ன்." என்றான் அத்த‌னை அழுத்த‌மாக‌.

அதில் அதிர்ந்து நின்றவளின் மனதில் மிச‌ஸ் ருத‌ன் என்ற‌ வார்த்தை உள்ளுக்குள் ப‌ல‌மாய் எதிரொலிக்க‌, தொண்டையில் தேங்கிய‌ பெய‌ர் த‌டுமாறி இத‌ழில் வ‌ந்து, "ரு..ருத்.." என்று கேட்க‌ வ‌ந்த‌வ‌ளின் வார்த்தை அப்ப‌டியே அட‌ங்க‌, ம‌ய‌ங்கி அவ‌ன் மீதே சாய்ந்தாள். அதில் அப்ப‌டியே அவ‌ளை அணைத்துக் கொண்ட‌வ‌னின் க‌ண்ணீர் இப்போது பொழ‌பொழ‌வென்று வெளியேறிய‌து.

அவ‌னும் எவ்வ‌ள‌வுதான் தாங்குவான்? முத‌லில் த‌ன் உயிரான‌வ‌ளே த‌ன்னை அந்நிய‌மாய் பார்க்கும் பார்வையை தாங்கினான். அடுத்து யார் நீ என்ற அவ‌ளின் கேள்வியை தாங்கினான். த‌ன் தொடுகையில் அவ‌ள் உண‌ர்ந்த‌ அருவ‌ருப்பை தாங்கினான். உரிமையாய் நெருங்கும்போது த‌ள்ளிவிட்ட‌ அவ‌ள் வில‌க‌லை தாங்கினான். அத்து மீறும்போது அவ‌ள் கொடுத்த‌ காய‌த்தை தாங்கினான். இத்த‌னையும் தாங்கிய‌வ‌ன், நேற்று அவ‌ள் உதிர்த்த‌ ஒற்றை கேள்வியில் உடைந்திருந்தான்.

"இது எந்த‌ மாதிரியான‌ உற‌வு?" என்ற‌ கேள்வியில் பாதி உடைந்திருந்தவ‌னை, இன்று அதே உற‌வை உட‌ல் தேவை என்று கூறி முழுவ‌துமாக‌வே உடைத்திருந்தாள் அவ‌னின் ம‌னைவி.

ஒரு க‌ண‌வ‌னாக‌ இத‌ற்கு முன்பு கேட்டிராத‌, இனி மேலும் கேட்க‌ கூடாத அனைத்து வார்த்தைக‌ளையும் இப்போது அவ‌ன் கேட்டிருக்க‌, என்றுமே வ‌லியை முந்திக்கொண்டு வெளிவ‌ரும் கோவ‌ம் இப்போது வ‌லிக்கு வ‌ழிவிட்டு க‌ண்ணீராய்தான் வெளி வ‌ந்த‌து.

அந்த‌ க‌ண்ணீர் துளிக‌ள் அவ‌ள் முக‌த்தில் துளி துளியாய் விழுக‌, அதில் மெதுவாய் அவ‌ளின் ம‌ய‌க்க‌ம் க‌லைந்து விழிக‌ள் அசைய‌, மெத்தையில் கிட‌ப்ப‌து போன்ற‌ உண‌ர்வு.

அதில் நெற்றியை குறுக்கி
க‌டின‌ப்ப‌ட்டு இமைக‌ளை பிரித்த‌வ‌ள், புரியாது பார்வையை சுழ‌ல‌விட‌ அறை வாச‌லை நோக்கி ந‌ட‌ந்துக்கொண்டிருந்தான் அவ‌ன். அதில் வேக‌மாய் எழ முய‌ற்சித்து, "ஏங்.." என்று க‌ர‌த்தை நீட்டும் முன் ப‌ட்டென்று க‌த‌வை அடித்து சாத்தியிருந்தான் அவ‌ன்.

அதில் திடுக்கிட்டு ப‌ய‌ந்து விழி மூடி திற‌ந்த‌வ‌ள், அப்போதே தான் உய‌ர்த்தியிருந்த‌ க‌ர‌த்தை க‌வ‌னித்து, குனிந்து த‌ன் உட‌லையும் பார்த்தாள்.

சேலையில்லா அவ‌ளின் உட‌லை அவ‌ன் க‌ருப்பு மேற்ச‌ட்டை இறுக்க‌மாய் மூடி ம‌றைத்திருக்க‌, அவ‌ளோ க‌ண்ணீருட‌ன் நிமிர்ந்து அந்த‌ மூடிய‌ க‌த‌வை பார்த்தாள்.

அந்த‌ க‌த‌வை மூடிவிட்டு இந்த‌ ப‌க்க‌ம் திரும்பிய‌ ருத‌னின் முக‌த்தில் இப்போது உண‌ர்வுக‌ள் மொத்த‌மும் துடைக்க‌ப்ப‌ட்டிருக்க‌, "நா வ‌ர்ற‌ வ‌ரைக்கும் ப‌த்திர‌மா பாத்துக்கோ." என்ற‌ப‌டி ந‌க‌ர்ந்தான்.

அதில் த‌லைய‌சைத்த‌ யோகியும் அப்ப‌டியே வில‌கி வ‌ழிவிட‌, வேக‌மாய் அவ‌னை க‌ட‌ந்து சென்றுவிட்டான் ருத‌ன்.

இங்கே ப‌த‌ற்ற‌த்திலிருந்த‌ விக்ர‌ம‌னோ, "அவ‌ன் எப்ப‌ வேணுன்னாலும் இங்க‌ வ‌ருவான். ந‌ம்ப‌ ஆளுங்க‌ல்லா என் பைய‌ன‌விட்டு இஞ்ச்கூட‌ ந‌க‌ர‌ கூடாது." என்று அழுத்த‌மாய் கூறிக்கொண்டிருக்க‌, அப்போதே மொபைலை இற‌க்கிய‌ப‌டி அவ‌ரை பார்த்த‌ ஒருவ‌ன், "ஐயா பேசிட்டேன். ஹாஸ்பிட்ட‌ல‌ சுத்தி டைட்டான‌ போலீஸ் செக்கியூரிட்டி இருக்கு. அவ‌னால‌ உள்ள‌ வ‌ர‌ முடியாது." என்றான்.

அதில் தான் ச‌ற்று நிம்ம‌திய‌டைந்த‌வ‌ர், உட‌னே த‌ன் ம‌க‌னின் வார்ட் க‌த‌வை திற‌க்க‌ போக‌, அவ‌ரின் கைப்பேசி ஒலித்த‌து.

அதில் க‌த‌விலிருந்து க‌ர‌த்தை வில‌க்கிய‌வ‌ர், குனிந்து த‌ன் மொபைலை எடுத்து பார்க்க‌, வீட்டிலிருந்த‌ வாட்ச் மேன் அழைத்தான். அதில் புருவ‌த்தை சுழித்த‌வ‌ர், அட்ட‌ன் செய்து காதில் வைக்க‌, அடுத்த‌ நொடி அந்த‌ ப‌க்க‌ம் கூறிய‌தை கேட்டு அத்த‌னை அதிர்வாய் விழி விரித்தார்.

"வாட்?" என்று கேட்ட‌வ‌ர், "ச‌ரி ஒட‌னே வ‌ர்றேன்." என்று கூறி மொபைலை பேக்கெட்டில் வைத்துவிட்டு, க‌த‌வை திற‌ந்து உள்ளே சென்றார்.

அங்கே கோமாவிலிருந்த‌ விராஜ் நிம்ம‌தியாய் விழி மூடியிருக்க‌, அவ‌ன‌ருகே அம‌ர்ந்திருந்த‌ அவ‌னின் தாய் விம‌லாவோ ச‌ட்டென்று எழுந்து, "என்ன‌ ஆச்சுங்க‌?" என்று கேட்க‌, அவ‌ரோ வேக‌மாய் வ‌ந்து அவ‌ரின் க‌ர‌த்தை பிடித்து, "இங்க‌ பாரு. நா திரும்பி வ‌ர்ற‌வ‌ரைக்கும். எந்த‌ டாக்ட‌ரையோ எந்த‌ ந‌ர்ஸையோ உள்ள‌ விட்டுராத‌. முக்கிய‌மா இஞ்ச‌க்ஷ‌ன் செக்க‌ப்புனு வ‌ந்தாக்கூட‌ நா வ‌ர்ற‌ வ‌ரைக்கும் ஹோல்ட் ப‌ண்ண‌ சொல்லு. புரிஞ்ச‌தா?" என்று அவ‌ச‌ர‌மாய் கூற‌, "ச‌ரிங்க‌." என்று அவ‌ரும் வேக‌மாய் த‌லைய‌சைத்தார்.

"பாத்துக்கோ சீக்கிர‌ம் வ‌ந்த‌ர்றேன்." என்று கூறி அவ‌ச‌ர‌மாய் வெளியில் வ‌ந்த‌வ‌ர், "நா வ‌ர்ற‌ வ‌ரைக்கும் இங்கிருந்து ஒருத்த‌ன்கூட‌ ந‌க‌ர‌ கூடாது. புரியுதா?" என்று அவ‌ர் கேட்க‌, "ச‌ரிங்கைய்யா" என்று அவ‌ர்க‌ளும் வேக‌மாய் த‌லைய‌சைத்த‌ன‌ர்.

"எதாவ‌துன்னா ஒட‌னே என‌க்கு கால் ப‌ண்ணுங்க‌. நா போயிட்டு ஒட‌னே வ‌ந்த‌ர்றேன்." என்று கூறி வேக‌மாய் அங்கிருந்து ந‌க‌ர்ந்தார்.

அதே நேர‌ம் இங்கே உண‌வு த‌ட்டு ஒன்று கீழே விழுந்து சித‌ற‌, "இங்கிருந்து போ." என்று க‌த்தினாள் அமீரா.

"மேட‌ம் ஏ இப்பிடியெல்லா ந‌ட‌ந்துக்குறீங்க‌? நாந்தா உங்க‌ கேள்விக்கெல்லா ப‌தில் சொல்றேன்னு சொல்ற‌ல்ல‌?" என்றான் யோகி.

"நீ ப‌தில் சொன்னா ம‌ட்டும் என் அம்மா அப்பா என‌க்கு திரும்ப‌ கெடைப்பாங்க‌ளா?" என்று க‌ண்ணீருட‌ன் க‌த்தி கேட்டாள் அமீரா.

அதில் க‌டுப்பாய் பொறுமையை இழுத்து பிடித்தவ‌ன், "தேவ‌ல்லாம‌ உங்க‌ க‌ண்ணீர‌ வேஸ்ட் ப‌ண்ணாதீங்க‌." என்றான்.

அதில் ச‌ட்டென்று அழுகையை நிறுத்திய‌வ‌ள், அவ‌னை ஆத‌ங்க‌மாய் ஒரு பார்வை பார்த்து, "உங்க‌ளுக்கெல்லா ம‌ன‌சாட்சியே இல்ல‌யா?" என்று கேட்கும்போதே அவ‌ளுக்கு அழுகைதான் வ‌ந்த‌து.

"இந்த‌ விஷ‌ய‌த்துல‌ அதெல்லா பாக்க‌ கூடாதுன்னுதா நானே சொல்லுவேன்." என்று சிறு இறுக்க‌த்துட‌னே கூறினான்.

"ச்சி. உன‌க்கெல்லா அம்மா அப்பாவே கெடையாதா?" என்று அவ‌ள் க‌த‌றி கேட்க‌, "அவ‌ங்க‌ உங்க‌ அம்மா அப்பாவே கெடையாது." என்று ச‌த்த‌மாய் கூறினான் யோகி.

அதில் ச‌ட்டென்று அழுகையை நிறுத்திய‌வ‌ள், இப்போது த‌ன் செவியில் விழுந்த‌து என்ன‌ என்ப‌துப்போல் அதிர்வாய் அவ‌னை பார்க்க‌, "எஸ். அவ‌ங்க‌ உங்க‌ளோட‌ உண்மையான‌ அம்மா அப்பா கெடையாது." என்று ச‌த்த‌மாக‌வே அழுத்தி கூறினான் யோகி.

அதில் அவ‌ள் விழிக‌ள் மேலும் அக‌ல‌ விரிய‌, "என்ன‌?" என்றாள் அதிர்வாக‌.

அதில் வேக‌மாய் த‌ன் பேக்கெட்டிலிருந்த‌ மொபைலை எடுத்து, எதையோ தேடி ஓப்ப‌ன் செய்து அவ‌ளிட‌ம் நீட்டி "இத‌ பாருங்க‌." என்றான்.

அதில் அவ‌ளும் புரியாது அந்த‌ ஸ்க்ரீனில் பார்வையை ப‌திக்க‌, "அவ‌ங்க‌ளோட‌ உண்மையான‌ ப்ரொஃப‌ஷ‌ன்ல‌ இருந்து, ஆதார் கார்ட் வ‌ரைக்கும் எங்கிட்ட‌ ப்ரூஃப் இருக்கு. பாருங்க‌." என்று அவ‌ள் கையில் திணித்தான்.

அதை வேக‌மாய் வாங்கி ஸ்லைட் செய்து பார்த்த‌ அவ‌ளுக்கோ அத்த‌னை அதிர்வாய் விழிக‌ள் விரிய‌, "அவ‌ங்க‌ ரெண்டு பேருமே ஃப்ராட்ஸ்." என்றான் யோகி.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அவ‌னை பார்க்க‌, "இந்த‌ ரெண்டு வ‌ருஷ‌ம் உங்க‌ளுக்கு அம்மா அப்பாவா ந‌டிக்குற‌துதா அவ‌ங்க‌ளுக்கு கொடுக்க‌ப்பட்‌ட‌ ப்ராஜ‌க்ட்." என்றான்.

அதில் ச‌ட்டென்று அவ‌ள் ம‌ன‌ம் துடிப்பை நிறுத்த‌, அவ‌னும் ஆம் என்று த‌லைய‌சைத்தான்.

அதே நேர‌ம் இங்கு அந்த‌ பெரிய‌ கேட் இர‌ண்டாக‌ திற‌க்க‌ப்ப‌ட‌, வேக‌மாய் உள்ளே நுழைந்த‌து விக்ர‌ம‌னின் கார். உட‌னே ஓடி வ‌ந்த‌ வாட்ச் மேனும், "ஐயா அங்க‌.." என்று அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் க‌ர‌த்தை காட்ட‌, இவ‌ரும் வேக‌மாய் காரைவிட்டு இற‌ங்கி அங்கே ஓடினார்.

சுற்றியிருந்த‌ ம‌ர‌ங்க‌ள் அனைத்தும் காற்றுக்கு வெகுவாய் வ‌ளைந்து ஆடிக்கொண்டிருக்க‌, அத‌ன் இலைக‌ளெல்லாம் பிய்ந்து வ‌ந்து முக‌த்தில் அடிக்க‌, க‌ண்க‌ளை இறுக்கி மூடி க‌ர‌த்தால் முக‌த்தை ம‌றைத்த‌ப‌டியே முன்னால் சென்ற‌வ‌ர், ச‌ட்டென்று அடித்த‌ மின்ன‌லில் அதிர்ந்து அப்ப‌டியே நின்றார்.

குறுகியிருந்த‌ அவ‌ரின் விழிகள் அப்ப‌டியே அக‌ல‌ விரிய, மெதுவாய் முக‌த்திலிருந்த‌ க‌ர‌த்தை இற‌க்கிய‌வ‌ரின் இத‌ய‌த்தில் இடியே விழுந்த‌து.

ச‌ரியாக‌ த‌டாரென்று இடி ச‌த்த‌ம் வான‌த்திலும் அடிக்க‌, அவ‌ரின் முன்பிருந்த‌ அந்த‌ ம‌ர‌த்தை அப்ப‌டியே நிமிர்ந்து பார்க்க‌, அதில் சொருகி தொங்கிக் கொண்டிருந்த‌து ஒரு உருவ‌ம்.

திடீரென்று வெட்டிய‌ மின்ன‌லில் அந்த‌ கூரிய‌ கிளை அவ‌ன் முதுகில் குத்தி முன் ப‌க்க‌ம் பிதுங்கி வ‌ந்திருக்க‌, இர‌த்த‌ம் சொட்ட‌ சொட்ட‌ பிண‌மாய் தொங்கிக்கொண்டிருந்தான் அவ‌ரின் ட்ரைவ‌ர்.

அதில் பொத்தென்று பின்னிருந்த‌ லேம்ப் போஸ்ட்டில் சாய்ந்துவிட்ட‌வ‌ரின் இத‌ய‌ம் துடிப்பையே நிறுத்த‌, ப‌டாரென்று வெடித்த‌து அவ‌ரின் த‌லைக்குமேல் இருந்த‌ விள‌க்கு.

அதில் ப‌ட்டென்று வில‌கி திரும்பிய‌வ‌ரின் கால் த‌டுக்கிவிட்டு த‌ரையில் விழுந்தவ‌ர், அப்ப‌டியே நிமிர்ந்து பார்க்க‌, அந்த‌ லேம்ப் போஸ்ட்டின் அருகே இருந்த‌ ம‌ர‌த்தில் திடீரென்று மின்னல்‌ ப‌ட‌, ப‌ட்டென்று அங்கு அம‌ர்ந்திருந்த‌வ‌னின் உருவ‌ம் தெரிந்து ம‌றைந்த‌து.

அதில் அதிர்ந்து ப‌த‌றிய‌வ‌ர் வேக‌மாய் பின்னால் ந‌க‌ர‌ போக‌, பொத்தென்று அவ‌ர் முன்பே குதித்திருந்தான் அவ‌ன். அடிக்கின்ற‌ காற்றில் அழ‌காய் க‌லைந்து ப‌ற‌ந்த‌ அவ‌னின் நீண்ட‌ சிகைக‌ள், இருளோடு ஒன்றிப்போன‌ அவ‌னின் க‌ருப்பு ஆடை, அதில் மின்னி ம‌றைந்த‌ அவ‌னின் ஆர் வ‌டிவ‌ செயின் இவைக‌ளே கூறிய‌து அவ‌ன் யாரென்று.

அதில் பொத்தென்று பின்னிருந்த‌ புத‌ரில் சாய்ந்துவிட்ட‌வ‌ரின் தொண்டை அடைக்க‌, "நீ..நீ.. எப்டி.." என்று கூறும் முன், "எப்பிடி வ‌ராம‌ இருப்பேன்.." என்ற‌வ‌னின் குர‌ல் அருகில் வ‌ர‌, இவ‌ர் முக‌ம் ப‌ய‌த்தில் விய‌ர்க்க‌, ச‌ட்டென்று அந்த‌ முக‌த்தை நெருங்கி, "டேடி!" என்று அத்த‌னை அழுத்த‌மாய் கூறினான்.

அதில் ச‌ட்டென்று அவ‌ர் விழிக‌ள் விரியும் முன் ப‌ட்டென்று ஒரு மின்ன‌ல் அடிக்க‌, விழியருகே இர‌த்த‌ கிள‌றியாய் அவ‌ன் முக‌ம். இத‌ய‌மே நின்ற‌து இவ‌ருக்கு.

- நொடிக‌ள் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-16
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.