Chapter-11

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
தன் மனைவி விஷ்ணு மற்றும் ஷாலினியை வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்ததால் மகிழ்ந்த தாத்தா அவர்கள் இருவரையும் புன்னகை முகத்துடன் வரவேற்றார்.

அந்த அன்பான வயதான தம்பதிகளை பார்த்தவுடன் விஷ்ணுவிற்கும் ஷாலினிக்கும் மனநிறைவாக இருந்தது.‌

பல நாட்களுக்கு பிறகு அவர்கள் அங்கே திருப்தியாக உள்ளார்கள்.‌

சாப்பிட்டு முடித்த ஷாலினி வெளியில் கட்டிலில் தாத்தாவுடன் அமர்ந்து செஸ் விளையாடிக் கொண்டிருக்க,

விஷ்ணுவை தனியாக அழைத்து சென்ற பாட்டி, “இங்க பாருப்பா விஷ்ணு..

என் பேத்தி சுருதியும், ஷாலினியும் என்னதான் ஃபிரண்ட்ஸா இருந்தாலும்,

சுருதி கல்யாணமாகி அமெரிக்கா போய் செட்டில் ஆனதுக்கப்புறம் எங்களுக்குன்னு ஆதரவா இங்க யாருமே இல்ல.

நாங்க ஷாலினிய எங்க சொந்த பேத்தியா தான் பார்க்கிறோம்.

உன்னையும் ஷாலினியையும் விட்டா எங்களுக்கு இங்கே யாருப்பா இருக்கா சொல்லு?

எதுக்காக நடந்ததையே நினைச்சு இன்னும் நீங்க கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க?

அதெல்லாம் நடந்து இத்தனை வருஷம் ஆகியும் ஷாலினி மனசுக்குள்ள அது ஆழமா பதிந்திருக்க போய் தானே..

அந்த பைத்தியக்காரன பார்த்த உடனே பயந்து போய் அப்படி மயக்கம் போட்டு விழுந்துட்டா!

அவ டாக்டர் விஷ்ணு. அவள பாக்குறதுக்கு எல்லா விதமான நோயாளிகளும் தான் வருவாங்க.

டாக்டரே இவ்ளோ பெரிய பிரச்சனையை வச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு இருந்தா,

அவகிட்ட வர்ற நோயாளிக்கு எப்படி இவளால மருத்துவம் பார்த்து அனுப்ப முடியும்?

எனக்கு என்னமோ நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு புது வாழ்க்கையை ஆரம்பிச்சாலே ஷாலினி சரியாயிடுவான்னு தோணுது.” என்று அக்கறையுடன் சொல்ல,

“நீங்க சொல்றது எனக்கு புரியுது பாட்டி.

நானும் அப்படி பண்ணலாம்னு எத்தனையோ நாள் நெனச்சிருக்கேன். இல்லைன்னு சொல்லல..

ஆனா ஷாலினி அந்த மனநிலையில இருக்கணும் இல்ல!

அவ இன்னும் எதையும் மறக்கலேன்னு இன்னைக்கு நடந்த சம்பவம் மறுபடியும் நமக்கு புரியிற மாதிரி சொல்லிருச்சு.

ஷாலினிக்கு அவ குடும்பம் தான் எல்லாமே. இப்ப அவ குடும்பமே அவளே வெறுக்கிறாங்க.

நானே அவ கூட இருந்தாலும், அவ மனசார நிம்மதியா இல்ல பாட்டி.

நாங்க அங்க இருந்து இங்க வந்ததுக்கு அப்புறம் எங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணி வாழ ஆரம்பிச்சுட்டா,

கடைசி வரைக்கும் ஷாலினியோட ஃபேமிலில இருக்குறவங்க அவளை ஏத்துக்கவே மாட்டாங்க.

ஷாலினி என்னை லவ் பண்றேன்னு சொல்லும்போது கூட,

அவங்க இந்த அளவுக்கு கோபப்படல.

ஆனா இப்ப அவங்க குடும்பமானமே இவளால தான் போச்சுன்னு நினைச்சு அவங்க இவ மேல வெறுப்பை கொட்டும்போது,

அதையெல்லாம் மறந்துட்டு அவ எப்படி என் கூட கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்வான்னு நீங்க நினைக்கிறீங்க?

எப்படி இதையெல்லாம் யோசிச்சு தான் நானும் அவங்க குடும்பத்துல இருக்கிறவங்க மனசு மாறுற வரைக்கும் வெயிட் பண்றது தவிர வேற வழியில்லைன்னு அமைதியா இருக்கேன்.” என்று சோகமாக சொன்னான் விஷ்ணு.

“எத்தனை வருஷமா பெத்து வளத்தை நான் பொண்ண பத்தி அவங்களுக்கு தெரியாதா?

நம்ம வீட்டுப் பிள்ளையை விட அப்படி என்ன அந்த ஆளுங்களுக்கு அவங்க குடும்ப கௌரவம் முக்கியமா போயிடுச்சு?

பெரிய பொல்லாத கௌரவம்! அத தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறாங்க!

தாத்தா கூட ஷாலினியோட அப்பா கிட்ட இன்னும் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்காம இன்னும் நடந்ததா மறக்காம இருக்கீங்கன்னு சொல்லி எவ்வளவோ பேசி பார்த்தாரு.

அவங்கள பத்தி எல்லாம் எங்ககிட்ட பேசாதீங்க.

அவங்க இருந்தாலும், செத்தாலும் எனக்கு ஒன்னும் கவலை இல்லை என் கிட்ட எதுக்கும் வந்து அவங்க நிக்காம இருந்தா சரின்னு அந்த ஆளு மனசாட்சியே இல்லாம சொல்லி இருக்கான்.

அவங்க எல்லாம் தான் உங்களுக்கு குடும்பமா தெரியுறாங்களா?

ஏன் இந்த கிழவனையும் கிழவியையும் நீங்க குடும்பமா பார்க்க மாட்டீங்களா?

நான் சொல்றேன் கண்ணு.. வர்ற முகூர்த்தத்தில உனக்கும், ஷாலினிக்கும் கல்யாணம்.

நானும் உங்க தாத்தாவும் முன்னாடி இருந்து நடத்தி வைக்கிறோம்.

இந்த ஊர்ல இருக்கிறவங்க சுத்தி இருக்கிற எல்லா கிராமத்துல இருக்குறவங்களும் உங்க கல்யாணத்துக்கு வந்து உங்களை ஆசீர்வாதம் பண்ணுவாங்க.

இப்படி இத்தனை ஆயிரம் மக்கள் உங்களை அன்பா பாத்துக்கும்போது,

நீங்க ஏன் உங்கள வெறுக்கிறவங்களை பத்தி யோசிக்கணும்?” என்று உரிமையாக பாட்டி கேட்க,

பாட்டி அப்படி கேட்டவுடன் விஷ்ணுவிற்கு உடனே ஷாலினியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

இத்தனை நாட்களாக அது அவனுக்குள் ஷாலினியை பற்றி யோசிக்கும்போது கொஞ்சம் ஒளிந்து இருந்ததால், அவன் எப்படியோ நாட்களை கடத்தி விட்டான்.

ஆனால் பாட்டி இப்படி உறுதியாக அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் என்று சொன்னவுடன் அதை நினைத்து அவனது இதயம் றெக்கை கட்டி வானில் பறக்க தொடங்கிவிட,

“நான் நீங்க எப்ப எங்களுக்கு கல்யாணம்னு சொன்னாலும் ரெடியா தான் இருக்கேன் பாட்டி.

ஆனா ஷாலுவும் ரெடியாக இருக்கணும்ல!

உங்க பேத்தி கிட்ட நீங்களே பேசி பாருங்க.

அவ எந்த பிரச்சனையும் இல்ல எனக்கு மேரேஜ்க்கு ஓகேன்னு சொல்லிட்டானா,

நீங்க சொன்ன மாதிரி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம்.” என்று சிரித்த முகமாக பாட்டியிடம் சொன்னான் விஷ்ணு.

“எனக்கு இது போதும். நீ இந்த பாட்டிகிட்ட சம்பந்த சொல்லிட்ட இல்ல!

அவ்வளவுதான் உனக்கும் ஷாலினிக்கும் கல்யாணம் நடந்துடுச்சுன்னு வச்சுக்கோ..!

எப்படியாவது ஷாலினி கிட்ட பேசி நான் அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறேன்.

அவ வீட்ல இருக்கறவங்க வந்தாலும் வரலைனாலும் இந்த கல்யாணம் நடக்கும்.

நான் நடத்தி காட்டுவேன்.” என்று உறுதியாக சொன்ன பாட்டி விஷ்ணுவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்று தாத்தாவின் முன்னிலையில் ஷாலினி இடம் திருமணத்தைப் பற்றி பேச தொடங்கினார். ‌

திருமணம் என்ற பேச்சு வந்தவுடன் ஷாலினி தன் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள,

“இந்த ஊர்ல இருக்கிறவங்க எல்லாரும் ரொம்ப கட்டுப்பாடா இருப்பாங்கமா.

‌ நீ ஏதோ டாக்டரா இருக்கிறதுனால எந்த பிரச்சனையும் பண்ணாம அவங்க தேவைக்கு இங்கே உன்னை எல்லாரும் விட்டு வச்சிருக்காங்க.

இல்லைனா கல்யாணம் ஆகாம ஒரு பையனும் பொண்ணும் இப்படி எல்லார் முன்னாடியும் ஒரே வீட்ல வாழ்றத பாத்துகிட்டு எல்லாரும் சும்மா இருப்பாங்கன்னு நினைக்கிறியா?

முதல்ல உங்களுக்கே இது நல்லா இருக்கா?

எப்படியும் நீங்க ஒரே வீட்ல தானே இருக்கீங்க!

கல்யாணம் ஆகாம சேர்ந்து வாழ்றதுக்கு, கல்யாணம் பண்ணிக்கிட்டு உரிமையோட புருஷன் பொண்டாட்டியா சந்தோசமா வாழுங்கன்னு தானே நாங்க சொல்றோம்!

என்னதான் நம்மகிட்ட எல்லாரும் நல்லபடியா பழகினாலும்,

பின்னாடி போய் யார் யார் என்னென்ன பேசுறாங்கன்னு யோசிச்சு பாக்கணும் இல்லமா!

உனக்கு அப்பா அம்மா ஸ்தானத்துல இருந்து இந்த விஷயத்தை சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு.

நாங்க சொன்னா எங்க மேல இருக்குற மரியாதைல நீ கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்குவேன்னு நாங்க நம்புறோம்.

நீ எங்க பேச்ச கேப்பியா மாட்டியா?” என்று கரராக அவளிடம் கேட்டார் தாத்தா.

உடனே சுருங்கிய முகத்துடன் தாத்தா பாட்டி மற்றும் விஷ்ணுவின் முகத்தை மாறி மாறி பார்த்த ஷாலினி,

“நம்மள தவிர மத்த எல்லாருக்கும் இந்த கல்யாணம் சீக்கிரமா நடக்கிறது தான் நல்லதுன்னு தோணுது.

விஷ்ணு எனக்காக வெளிக்காட்டிக்காம இருந்தாலும், அவன் கல்யாணம் பண்ணி என் கூட சேர்ந்து வாழணும்னு ஆசைப்படுறது எனக்கும் தெரியும்.

அவன் அப்படி நினைக்கிறதுல ஒன்னும் தப்பில்லையே!

நாங்க ரொம்ப வருஷமா லவ் பண்றோம்.‌

இப்ப ஒரே வீட்ல இத்தனை வருஷமா ஒன்னா வந்துட்டு இருக்கோம்!

என் ஒரே பெட்ல படுத்து தூங்கியும் கூட,

இப்ப வரைக்கும் என் சம்மதம் இல்லாம எங்களுக்கு கல்யாணம் ஆகாம என்ன தொடக் கூடாதுன்னு என் விஷ்ணு ரொம்ப கஷ்டப்பட்டு கண்ட்ரோல்ல இருக்கான்.

எனக்காக இத்தனை பேர் இவ்ளோ யோசிக்கும்போது,

என்ன பத்தி கொஞ்சம் கூட கவலைப்படாம நான் அவங்க பொண்ணே இல்லைன்னு சொல்லி என்னை விட்டுவிட்டு அடிச்சு துரத்தினவங்களை பத்தி நான் மட்டும் எதுக்கு கவலைப்படணும்?

எனக்கு இவங்க எல்லாரும் போதும்.

என் விஷ்ணு கூட சேர்ந்து சந்தோஷமா வாழனும்னு எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன?

என்னோட ஒரே சந்தோஷம் அவன் மட்டும்தான்.

அவனுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்." என்று நினைத்து சட்டென எழுந்து நின்றாள்.

அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று நினைத்து ஆர்வமான முகத்துடன் மற்ற மூவரும் அவளை பார்க்க,

“ஓகே தாத்தா, நீங்களும் பாட்டியும் இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் எப்படி நோ சொல்லுவேன்?

எனக்கு நீங்க எல்லாரும் ‌தான் ரொம்ப இம்போர்ட்டண்ட்.

உங்க ஆசைக்காக, நீங்க சொல்ற வார்த்தைக்காக ஹாப்பியா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

நீங்க எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு ஷாலினி லேசாக புன்னகைத்தாள்.

அந்த வார்த்தைகளை எதிர்பார்த்து ஆர்வமான முகத்துடன் காத்திருந்த விஷ்ணு “ஐயோ.. வாவ் ஷாலினி தேங்க்ஸ் டி!” என்று சத்தமாக கத்தி சொல்லிவிட்டு அவளை தூக்கி சுத்தினான்.

“ஏய் விசு விடுடா மாடு.. கீழ போட்றாத..!!

அட டேய் நெஜமாவே எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கு விடு!” என்று சிரித்த முகமாக ஷாலினி சொல்ல, இன்னும் சில நாட்களில் தங்கள் முகத்தில் இருக்கும் சிரிப்பு மொத்தமாக காணாமல் போகப் போகிறது என்று அறியாமல் தானும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த விஷ்ணு அவளை கீழே இறக்கி விட்டான்.

அந்த வீட்டிற்கு திருமண கலை வந்துவிட, தங்கள் சொந்த பேத்தியும் பேரனும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க போகிறார்கள் என்பதைப் போலவே தாத்தாவும் பாட்டியும் ருசியாக அனைத்து திருமண வேலைகளையும் தாங்களே பார்த்துக் கொள்வதாக அவர்களிடம் தெரிவித்தார்கள்.

கொஞ்ச நேரம் அங்கே இருந்துவிட்டு ஷாலினி தங்கள் வீட்டிற்கு கிளம்பி சென்று விட,

பாதியில் விட்டுவிட்டு வந்த வேலைகளை கவனிப்பதற்காக தான் வேலை செய்யும் தேயிலை தோட்டத்திற்கு சென்று விட்டான் விஷ்ணு.

தங்களது திருமணத்தை நினைத்து உற்சாகமாக இருந்த ஷாலினி அவன் வருவதற்குள் இரவு உணவை ஸ்பெஷலாக சமைக்க வேண்டும் என்று நினைத்து ஆசை ஆசையாக அவனுக்காக சமைக்க தொடங்கினாள்.

அர்ஜுன் எப்போது
ம் தன்னை மரியாதை இல்லாமல் பேசி திட்டி அனுப்பி விடுவதால் சோகமாக இருந்த சோனியா கையில் ஒரு பீர் பாட்டிலை வைத்து மொட்டை மாடியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தாள்‌.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-11
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.