CHAPTER-1

Oviya Blessy

Member
Jan 4, 2025
92
1
8
ஒரு வித்தியாச‌மான‌ இர‌வு. என்றுமில்லாது இன்று அந்த‌ அக‌ண்ட‌ வான‌ம் அதிக‌ இருள் பூசியிருக்க‌, அத‌னை சுற்றியும் க‌ருத்த‌ கார்மேக‌ங்க‌ள் சூழ்ந்து அந்த‌ முழு நில‌வை முழுதாய் ம‌றைத்திருந்த‌து. அத‌ன் கீழே அக‌ண்ட‌ அடர்த்தியான‌ அமைதியான‌ ஒரு காடு. அங்கே ம‌ழை வ‌ரும் அறிகுறியாய் த‌டாரென்று ஒரு இடி ச‌த்த‌ம். அடுத்த‌ நொடி ப‌ட‌ப‌ட‌வென்று ப‌ற‌வைக‌ள் மேலே ப‌ற‌ந்து ஆப‌த்தின் அறிகுறியை காட்ட‌, அந்த‌ காட்டிற்குள் மூச்சிரைக்க‌ ப‌ய‌ந்து ஓடிக் கொண்டிருந்தாள் ஒருவ‌ள்.

உள்ளே மொத்த‌மும் இருளாக‌ இருக்க‌, திடீரென்று ஒரு மின்ன‌லின் வெளிச்ச‌ம் அடிக்க‌, அவ‌ள் சிவ‌ப்பு நிற‌ புட‌வையில் ஓடிக் கொண்டிருந்தாள். மீண்டும் இருள் சூழ்ந்து த‌டாரென்று ஒரு இடி ச‌த்த‌ம். மீண்டும் ஒரு மின்ன‌ல் அடிக்க‌, அவ‌ளின் தலையில் ஒரு சிவ‌ப்பு நிற‌ பூவும் இருந்த‌து.

மீண்டும் வெளிச்ச‌ம் ம‌றைந்து த‌டாரென்று ஒரு இடி ச‌த்த‌ம். அவ‌ளின் பின்னே ஏதோ ஒரு கொடிய‌ மிருக‌த்தின் உரும‌ல் ச‌த்த‌ம், அவ‌ளை துர‌த்திய‌ப‌டியே இருக்க‌, அவ‌ளோ அல‌றிய‌ப‌டி வேக‌மாய் ஓடிக் கொண்டிருந்தாள். அதுவும் விடாது அவ‌ளை துர‌த்திக் கொண்டிருக்க‌, திடீரென்று அடித்த‌ மின்ன‌லில் விழியை விரித்து அப்ப‌டியே நின்றுவிட்டாள் அவ‌ள்.

அவ‌ளை துர‌த்தி வ‌ந்த‌ மிருக‌மும் அப்ப‌டியே நின்றுவிட‌, இங்கே மூச்சு வாங்க‌ நின்றிருந்தவளின் விழிகள் மரண பீதியில் அகல விரிய, அவளின் முன்னே ஒரு பெரிய‌ ப‌ள்ள‌ம். மீண்டும் ஒரு மின்ன‌ல் வ‌ர‌, அத‌ன் ஆழ‌த்தை அறிய‌ அந்த‌ வெளிச்ச‌ம் போத‌வில்லை. அதில் அவ‌ளின் இத‌ய‌ம் ப‌ல‌மாய் அடிக்க‌, ப‌ய‌த்தின் பெருமூச்சுக‌ளில் மார்பு தூக்கி தூக்கி இற‌ங்க‌ மெதுவாய் திரும்பி பின்னால் அந்த‌ மிருக‌த்தை பார்த்தாள்.

அப்போதே மின்ன‌ல் வ‌ந்து வ‌ந்து போக‌, அந்த‌ மிருக‌த்தின் ப‌ல்லிலிருந்து எச்சிலும் குருதியும் ஒன்றாய் ஒழுக‌, இவ‌ளின் முக‌ ஓர‌த்தில் விய‌ர்வைகள் ஒழுகிய‌து.

மீண்டும் த‌டாரென்று ஒரு இடி ச‌த்த‌ம், அடுத்த‌ நொடி அந்த‌ மிருக‌ம் அவ‌ள் மீது பாய்ந்திருக்க‌, "அ.....!" என்ற‌ அவ‌ளின் அல‌ற‌ல் ச‌த்த‌ம் ம‌ட்டுமே காடெங்கும் எதிரொலிக்க‌, அடுத்து வ‌ந்த‌ மின்ன‌லில் அவ‌ள் அந்த‌ ப‌ள்ள‌த்தில் விழுந்திருக்க த‌ண்ணீர் சித‌றிய‌து.

அவ‌ள் உட‌லை உள் வாங்கி மெதுவாய் மூடிய‌ அந்த‌ த‌ண்ணீரெங்கும் இர‌த்த‌மாய் மாறிய‌து. அந்த‌ த‌ண்ணீரில் இப்போது வான‌ம் தெளிவாய் தெரிய‌, அங்கே கார்மேக‌ங்க‌ள் மெதுவாய் வில‌கி முழுதாய் தெரிந்த‌து அந்த‌ முழு நில‌வு. ஆனால் அது வெள்ளையாக‌ அல்ல‌, முழு ச‌ந்திர‌ கிர‌க‌ண‌த்தின் சிவ‌ந்த நிலவாய் (Blood Moon) காண‌ப்ப‌ட்ட‌து.

அத‌ன் சிவ‌ந்த‌ ஒளி முழுதாய் அந்த‌ த‌ண்ணீரில் ப‌ட‌, அந்த‌ இர‌த்த‌ நீரில் மெதுவாய் மேலே வ‌ந்து மித‌ந்த‌து ஒரு ம‌ல‌ர். அதுதான் அவ‌ள் சூடியிருந்த‌ சிவ‌ப்பு தாம‌ரை ம‌ல‌ர்.

அதேபோல் இங்கே ஒன்ற‌ல்ல‌ ஓராயிர‌ம் தாம‌ரைக‌ள் ஆனால் பிங்க் நிற தாமரைகள் அந்த த‌ண்ணீர் முழுவ‌தும் ப‌ர‌வி கிட‌க்க‌, அத‌னுள்ளிருந்து மெதுவாய் எழுந்தது ஒரு உருவ‌ம்.

ம‌ஞ்ச‌ள் நிற‌ புட‌வையில் நீர் சொட்ட‌ சொட்ட‌ எழுந்து நின்ற‌வ‌ளின் பின் புற‌ம், அந்த‌ கார்மேக‌த்தைவிட‌ க‌ருமையான‌ கூந்த‌ல். அதிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த‌ நீர் துளிக‌ள் அனைத்தும் த‌ண்ணீருக்குள் விழுந்து குழியாகி மீண்டும் எழும்பி அவ‌ள் கூந்த‌ல் நுனியை எட்டி பிடிக்க‌ முயன்று தோற்று விழுந்த‌து (droplet splash).

அப்ப‌டியே அவ‌ள் அந்த‌ த‌ண்ணீரைவிட்டு வெளியேற‌, அவ‌ள் தேக‌த்தோடு ஒட்டிவிட்ட‌ அவ‌ளின் ஈர‌மான‌ சேலை, ச‌ல்ல‌டையாய் அவ‌ளின் வெண்ணிற‌ தேக‌த்தை வெளிச்ச‌மிட‌, அதில் ஆங்காங்கே முத்த‌மிட்ட‌ப‌டி ஒட்டிக் கொண்டிருந்த‌து அந்த‌ தாம‌ரை இத‌ழ்க‌ள். அது அவளின் திரையில்லா கைகளில் வழுக்கி வந்து நீரில் விழ, அந்த த‌ண்ணீரைவிட்டு அவள் மெதுவாய் வெளியேறினாள். அப்போது அவ‌ள் தோளிலிருந்த‌ முழு தாம‌ரை ஒன்று ச‌ரிந்து மீண்டும் த‌ண்ணீருக்குள் விழ‌, அதே த‌ண்ணீரிலிருந்து வெளி வ‌ந்த‌ அவ‌ளின் உள்ளங்கை அதை அழ‌காய் எடுத்த‌ப‌டியே மேலே வ‌ந்த‌து.

அத்த‌னை பூக்க‌ளில் அந்த‌ ஒரு பூ ம‌ட்டுமே அவ‌ளின் நெஞ்சோடு வந்து உர‌ச, அதை பிடித்திருந்த‌வ‌ளோ மெதுவாய் தூக்கி அத‌ன் வாச‌னையை நுக‌ர்ந்தாள். அதில் மூடியிருந்த‌ அவ‌ளின் அழ‌கிய‌ விழிக‌ள் மெதுவாய் திற‌க்க‌, அவ‌ள் இமைக‌ளில் வ‌ழிந்த‌ நீர் துளி அந்த‌ தாம‌ரையை ந‌னைத்த‌து.

அதை மெதுவாய் இற‌க்கிய‌வ‌ளின் ஈர‌ இத‌ழ்க‌ள் அழ‌காய் புன்ன‌கைக்க‌, துளிக‌ள் பூத்த‌ அந்த‌ தாம‌ரை இத‌ழும் அவ‌ளித‌ழும் இப்போது ஒன்றான‌து.

"அமீரா!" என்ற‌ழைத்த‌ குர‌லில் அவ‌ள் அந்த‌ பூவை முழுதாய் வில‌க்க‌, அப்போதே தெரிந்த‌து அவ‌ளின் பூ முக‌ம்.

அந்த‌ முக‌த்தை இரு க‌ர‌த்தால் சுற்றி எடுத்து த்ரிஷ்டி க‌ழித்த‌வ‌ர், "என் க‌ண்ணே ப‌ட்டிரும் போல‌ இருக்கு." என்றார் அவ‌ளின் அம்மா ச‌குந்த‌லா.

அதில் அவ‌ள் அழ‌காய் புன்ன‌கைத்து பார்வையை தாழ்த்த‌, அவ‌ள் தாடையை பிடித்து கொஞ்சிய‌வ‌ர், "அழகு. செரி வா." என்ற‌ப‌டி அவ‌ளை மெதுவாய் அழைத்து வ‌ந்து ம‌ணையில் அம‌ர‌ வைத்தார்.

அதில் அவ‌ளும் கால்க‌ளை ம‌ட‌க்கி அம‌ர்ந்து, அந்த‌ தாம‌ரையை த‌ன் ம‌டியில் பிடித்துக் கொண்டு மெதுவாய் விழி மூட‌, அந்த‌ மூடிய‌ இமைக‌ளில் மெதுவாய் வ‌ழிந்து அவ‌ள் முக‌ம் முழுக்க‌ நிறைந்த‌து அந்த ம‌ஞ்ச‌ள் நீர். அவ‌ள் த‌லையில் ஊற்ற‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்க‌, அது மெதுவாய் அவ‌ள் உட‌லெங்கும் ப‌ட‌ர்ந்து அவ‌ளை தூய்மையாக்கிய‌து. அவ‌ளோடு அவ‌ள் ம‌டியிலிருந்த‌ தாம‌ரையையும் குளித்துவிட‌, அந்த‌ தாம‌ரை இத‌ழ்க‌ளால் நிற‌ம்பிய அந்த ம‌ஞ்ச‌ள் நீரை ஒவ்வொருவ‌ராய் அவ‌ள் மீது ஊற்றின‌ர்.

அவ்விட‌ம் முழுக்க‌ வெறும் பெண்க‌ள் ம‌ட்டுமே நிறைந்திருக்க‌, அதுவோ வட்டமான ஒரு குளிய‌ல் குள‌ம். அங்குதான் இவ‌ளின் ம‌ஞ்ச‌ள் நீராட்டு ச‌ட‌ங்கு ந‌ட‌ந்துக் கொண்டிருக்க‌, அந்த‌ ம‌ஞ்ச‌ள் நீர் அவ‌ளின் உச்சி முத‌ல் துவ‌ங்கி ஒவ்வொரு அங்க‌த்தையும் தொடும்போது, அந்த‌ வெண்ணில‌வு மேனி த‌ங்க‌மாய் ஜொலிப்ப‌தை இங்கே மறைவாய் இர‌சித்துக் கொண்டிருந்த‌து ஒரு ஆண்ம‌க‌னின் க‌ண்க‌ள்.

அங்கே அவ‌ளின் ஒவ்வொரு அங்க‌மும் அங்க‌ வ‌ளைவும் இங்கு இவ‌ன் உண‌ர்வுக‌ளை ஒவ்வொன்றாய் கிள‌ப்பிக் கொண்டிருக்க‌, அதில் அழகாய் வளைந்த அவன் இதழ்கள், "இந்த‌ அழ‌கு மொத்த‌மும் இனி எனக்குதா சொந்தம்." என்றது.

அப்போது அவ‌னின் கைப்பேசி ஒலிக்க‌, அவ‌ளை இர‌சித்த‌ப‌டியே அந்த‌ மொபைலை எடுத்து காதில் வைத்த‌வ‌ன், "யா டேட்." என்ற‌து இவ‌ன் இத‌ழ்க‌ள்.

"எங்க‌டா போய் தொல‌ஞ்ச‌?" என்று அவ‌ர் கேட்க‌,

"இங்க‌தா இருக்கேன்." என்ற‌து இவ‌ன் இத‌ழ்க‌ள்.

"இன்னும் ரெண்டு ம‌ணி நேர‌த்துல‌ க‌ல்யாண‌த்த‌ வெச்சுகிட்டு ரெடியாகாம‌ எங்க‌டா சுத்திகிட்டிருக்க‌? உன் அம்மா வேற‌ ரொம்ப‌ நேர‌மா தேடுறா. சீக்கிர‌மா வா." என்றார் அவ‌ர்.

"யா டேட். ஜ‌ஸ்ட் டூ மினிட்ஸ்." என்று கூறி இணைப்பை துண்டித்தவ‌னின் க‌ர‌ம், மொபைலை பேக்கெட்டில் வைத்துவிட்டு அப்ப‌டியே உய‌ர்ந்து, அங்கே தூர‌த்திலிருந்த‌ த‌ன்ன‌வ‌ளை அள்ளி எடுத்து இத‌ழிலில் வைத்து முத்த‌மிட்டு, "ம‌ண‌மேடையில‌ ச‌ந்திக்க‌லாம் மிச‌ஸ் விராஜ்!" என்ற‌து அவ‌ன் இத‌ழ்க‌ள்.

அடுத்த‌ நொடி ச‌டாரென்று அவ‌ன் முக‌த்தில் அடிக்க‌ வ‌ந்த‌ ஒரு ப‌ந்தை ப‌ட்டென்று பிடித்திருந்தது அவன் கரம். அத‌ன் வேக‌த்தில் அவ‌னின் நெற்றி மேலிருந்த‌ சிகை அலைக‌ள் மெதுவாய் ஆட‌, அப்ப‌டியே அந்த‌ ப‌ந்தை மெல்ல கீழிற‌க்கிய‌வனின் அன‌ல் முக‌ம் தெரிந்த‌து.

"மாமா ball" என்று அவன் ச‌ட்டை நுனியை பிடித்திழுத்தான் ஒரு சிறுவ‌ன்.

அதில் குனிந்து அழ‌காய் புன்ன‌கைத்த‌வ‌ன், அதை அவ‌னிட‌ம் கொடுத்துவிட்டு செல்லமாய் அவ‌ன் த‌லையை க‌லைத்துவிட்டான்.

அதில் அந்த‌ சிறுவ‌னும் நிமிர்ந்து த‌ன் பிஞ்சு விர‌ல்க‌ளால் அவ‌னை கீழே அழைக்க‌, அதில் இவ‌னும் கேள்வியாய் அவ‌னிட‌ம் குனிய‌, அவ‌ன் க‌ன்ன‌த்தில் எச்சில் ப‌திய‌ முத்த‌மிட்டான் அந்த‌ சிறுவ‌ன்.

அதில் புன்ன‌கைத்த‌ இவ‌னும் திருப்பி அவ‌ன் க‌ன்ன‌த்தில் முத்த‌மிட்டு, "இது உன‌க்கு." என்ற‌ப‌டி ம‌று க‌ன்ன‌த்தையும் திருப்பி அங்கு அதிக‌ அழுத்த‌மாய் முத்த‌மிட்டு, "இது இன்னொருத்த‌ருக்கு." என்றான் விராஜ்.

"யாருக்கு?" என்று அச்சிறுவ‌ன் புரியாது கேட்க‌, அவ‌னை அப்ப‌டியே தூக்கிக் கொண்டு அங்கே தூர‌த்தில் தெரிந்த‌ த‌ன்ன‌வ‌ளை காட்டிய‌வ‌ன், "அவ‌ங்க‌ளுக்கு கொண்டு போய் குடுக்க‌ணும் செரியா?" என்று அவ‌னை கேட்க‌, அவ‌னும் வேக‌மாய் ச‌ரியென்று த‌லைய‌சைத்தான்.

அதில் புன்ன‌கையாய் அவ‌னை இற‌க்கிவிட்டு, "போ" என்றான் விராஜ்.

அதில் அவ‌னும் த‌ன் பிஞ்சு கால்க‌ளால் வேக‌மாய் ஓடி செல்ல‌, அதை பார்த்து புன்ன‌கைத்த‌ப‌டியே அங்கிருந்து ந‌க‌ர்ந்தான் விராஜ்.

இங்கே அவ‌ளின் அனைத்து ச‌ட‌ங்குக‌ளும் முடிந்து இறுதியாக‌ தூய‌ நீரையும் ஊற்றி அவ‌ளை முழுதாய் குளிப்பாட்டிய‌ பின்ன‌ர், அவ‌ள் மெதுவாய் எழுந்து நிற்க‌, அவ‌ள் சேலை முந்தாணையை பிடித்திழுத்த‌து ஒரு பிஞ்சு விர‌ல்க‌ள்.

அதில் அவ‌ள் கேள்வியாய் திரும்பி பார்க்க‌, "அத்த‌ தூக்குங்க‌." என்றான் அந்த‌ சிறுவ‌ன்.

அதில் புன்ன‌கைத்த‌ இவ‌ளும் அவ‌னை தூக்கி வைத்துக் கொண்டு, "என்ன‌டா செல்ல‌ம்?" என்று கேட்க‌, அவ‌ள் க‌ன்ன‌த்தில் அழுத்தி முத்த‌மிட்டு, "மாமா குடுக்க‌ சொன்னாரு." என்றான்.

அதில் ச‌ட்டென்று இவ‌ள் புருவ‌ங்க‌ள் விரிய‌, அவ‌னோ இற‌ங்கி ஓடியிருந்தான். அதில் அவ‌ள் த‌ன் க‌ன்ன‌த்தில் கை வைக்க‌, சுற்றியிருந்த‌ பெண்க‌ள் அனைவ‌ரும் சிரித்துக் கொண்ட‌ப‌டி, "ம்ம் ப‌ர‌வால்ல‌யே உன் ஆளு எனி டைம் உன் நென‌ப்போட‌தா இருப்பாரு போல‌." என்று கிண்ட‌லாய் கூற‌, அமீராவிற்கோ வெட்க‌த்தில் க‌ன்ன‌ங்க‌ள் சிவ‌ந்த‌து. தனக்கு வர போகும் மணவாளன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அவள் கனவு கண்டாலோ, அப்படியெல்லாம் விராஜ் இருந்தான்.

அப்போதே அவ‌ளின் முகூர்த்த‌ புட‌வை அவ‌ளை தேடி வ‌ர‌, அது அவ‌ளின் விழி திரையில் ப‌திய‌, அந்த‌ அழ‌கிய‌ ப‌ட்டு புட‌வையின் நிற‌மும் சிவ‌ப்பு.

இங்கே அந்த‌ பிர‌ம்மாண்ட‌ ம‌ண்ட‌ப‌ம் முழுக்க‌ திரும‌ண‌ அல‌ங்கார‌ங்க‌ளுட‌ன் அத்த‌னை அழ‌காய் ஜொலித்துக் கொண்டிருக்க‌, அதன் வாசலில் அத்தனை பெரிதாய் நின்றிருந்த சுவரில் விராஜ் weds அமீரா என்று தங்க நிறத்தில் மின்னியது. கோடீஸ்வர வீட்டு கல்யாணம் என்று பார்த்தாலே தெரியும் வண்ணம், பேண்டு வாத்தியங்கள், அலங்காரங்கள் என்று அத்தனை பிரம்மாண்டம். வேலை செய்வதற்கே பல பேர் குவிந்திருக்க, மேற்ப்பார்வைக்கும் தனி ஆட்கள், வந்தவர்களை கவனிக்கவும் சர்வர்ஸ் இருக்க, அது மண்டபமே அல்ல பேலஸாக ஜொலித்தது.

வருகின்ற உறவினர்கள், குழந்தைகள், சுற்றி பணிபுரியும் வேலையாட்கள் என்று அந்த மண்டபமே கலகலவென்று இருக்க, அந்த சத்தங்கள் எதுவும் உள்ளே புகாமல் இங்கே அமைதியாய் இருந்த ம‌ண‌வாள‌ன் அறையில், ப‌ட்டு வேட்டி ப‌ட்டு ச‌ட்டையில் அழ‌காய் த‌யாராகிக் கொண்டிருந்தான் விராஜ். அவ‌ன‌ருகே தெரிந்த‌ சுவ‌ரில் ம‌ணி அதிகாலை ஐந்து என்று காட்ட‌, அங்கே ஜ‌ன்ன‌லின் வெளியே வான‌ம் இன்னும் விடிய‌க்கூட‌ இல்லாமல் முழு இருளாய் இருந்தது.

"இன்னும் ஒன் ஹ‌வ‌ர்." என்ற‌ப‌டி த‌ன் வாட்ச்சை க‌ட்டிய‌வ‌ன், "இன்னும் ஒன் ஹ‌வ‌ர்ல‌ நீ என‌க்கு சொந்த‌ம்." என்ற‌ப‌டி நிமிர்ந்து க‌ண்ணாடியை பார்த்தான். அதில் அவ‌னின் பின்னால் மாட்ட‌ப்ப‌ட்டிருந்த அமீராவின் பெரிய‌ புகைப்ப‌ட‌ம் தெரிய‌, அப்ப‌டியே திரும்பி அதை பார்த்து த‌ன் க‌ர‌ங்க‌ளை விரித்து, "எப்பிடி இருக்கேன்?" என்று கேட்டான்.

அந்த‌ புகைப்ப‌ட‌ம் என்ன‌ பேச‌வா போகிற‌து? அங்கே அழ‌காய் புன்ன‌கைத்த‌ப‌டி இருந்த‌ அவ‌ளின் அழகில் இர‌ச‌னையாய் நெஞ்சில் கை வைத்த‌வ‌ன், "உன‌க்காக‌ இவ்ளோ வ‌ருஷ‌ம் வெயிட் ப‌ண்ணிட்டேன். இன்னும் கொஞ்ச‌ நேர‌ந்தா. அதுக்குள்ள‌ ஏன்டி என்ன‌ இப்பிடி கொல்ற‌?" என்று நெஞ்சை தேய்த்தான்.

அப்போது ச‌ட்டென்று அந்த‌ அறை க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட்டு,"மாப்ள‌..!" என்று ப‌த‌றிய‌ப‌டி உள்ளே வ‌ந்த‌ன‌ர் மூவ‌ர். அதில் இவ‌னும் புரியாது திரும்பி, "என்ன‌ ஆச்சு?" என்று கேட்க‌, "பொண்ண‌ காணோம்" என்றன‌ர் ப‌த‌றிய‌ப‌டி.

"வாட்?" என்று அவ‌ன் புரியாது கேட்க‌, "சீக்கிர‌ம் வாங்க‌." என்று அவ‌னை அழைத்து செல்ல‌, இவ‌னுமே ப‌த‌றிய‌டித்து வேக‌மாய் அவ‌ர்க‌ளுட‌ன் சென்றான்.

இங்கே வேக‌மாய் ம‌ண‌ம‌க‌ள் அறைக்குள் அவ‌ர்க‌ள் நுழைய‌, அங்கே அனைத்து பொருட்க‌ளும் க‌லைந்து ந‌கைக‌ளெல்லாம் த‌ரையில் சித‌றி கிட‌க்க‌, புரியாது ப‌த‌றிய‌ விராஜ் பால்க‌னியை பார்க்க‌, அங்கே பால்க‌னி க‌ண்ணாடியும் உடைந்து கிட‌ந்த‌து. அதில் அவ‌ன் வேகமாய் பால்க‌னி சென்று எட்டி பார்க்க‌, அவ‌ன் விழிக‌ள் அக‌ல‌ விரிந்த‌து. அங்கே கீழே இவ‌னின் ஆட்க‌ள் அனைவ‌ரும் இர‌த்த‌ வெள்ள‌த்தில் விழுந்து கிட‌க்க‌, அதை பார்த்த இவ‌னின் முக‌த்தில் அப்ப‌ட்ட‌மான‌ அதிர்ச்சி.

"எவ‌னோ ந‌ம்ப‌ ஆளுங்க‌ளெல்லா அடிச்சு போட்டுட்டு பொண்ண‌ தூக்கிட்டு போயிட்டான் சார்." என்று ஒருவ‌ன் வந்து கூற, அந்த பால்கனி கம்பியை இறுக்கி பிடித்தான் விராஜ்.

அதே நேரம் இங்கே அந்த சிவ‌ப்பு ப‌ட்டு புட‌வையில் ம‌ய‌ங்கி கிட‌ந்த அமீரா, எதோ ஒரு காருக்குள் கிடந்தாள். அந்த‌ இருட்டை கிழித்துக்கொண்டு அந்த கார் வேக‌மாய் சென்றுக் கொண்டிருக்க‌, அந்த‌ குழுங்க‌லில் மெதுவாய் அவ‌ளின் ம‌ய‌க்க‌ம் க‌லைய‌, கண்களை சுருக்கி இமைக‌ளை பிரித்தாள். அப்போதும் அவள் விழிகள் மங்களாய் இருக்க, அதில் அவ‌ள் புரியாது த‌லையை பிடித்து மெதுவாய் எழுந்து பார்க்க‌, அந்த‌ காரின் பின் சிட்டில் கிட‌ந்தாள். அப்போதே அவ‌ளுள் ப‌ய‌ம் அதிக‌ரிக்க‌, தன் அறையில் இருக்கும்போது எவனோ கருப்பு உருவம் தன் முகத்தில் ஸ்ப்ரே அடித்து கடத்தியது நினைவிற்கு வர, பதறி முன்னால் பார்த்தாள்.

அங்கே ஓட்டுநர் இருக்கையில் இருந்த இருட்டில் யாரென்று சுத்த‌மாக‌ தெரிய‌வில்லை. அப்போதே அவ‌ள் கை கால்க‌ளை உண‌ர‌, அதுவுமே க‌ட்ட‌ப்ப‌ட‌வில்லை.

அடுத்த‌ நொடியே வேக‌மாய் அவ‌ள் த‌ப்பிக்க‌ வ‌ழி தேடி அனைத்தையும் இழுத்து பார்க்க‌, ச‌ட்டென்று கார் க‌த‌வு திற‌ந்து வெளியே விழுந்தாள். அதில் அவள் திடுக்கிட்டு அந்த ரோட்டில் உருண்டு சென்று விழுந்துவிட‌, அடுத்த‌ நொடியே அவ‌ள் முக‌த்தில் வெளிச்ச‌ம் அடித்த‌து. அதில் அவ‌ள் க‌ண்க‌ளை குறுக்கி க‌ர‌த்தை வைத்து ம‌றைக்க‌, அவ‌ளை நோக்கி வேக‌மாய் வ‌ந்துக் கொண்டிருந்த‌து ஒரு வாக‌ன‌ம்.

அதில் அவ‌ள் அதிர்வாய் விழி விரித்து அல‌றிய‌ப‌டி முக‌த்தை திருப்பிக் விழியை இறுக்கி மூடிக் கொள்ள‌, வேக‌மாய் அவ‌ளை மோத‌ வ‌ந்து ச‌ட்டென்று ப்ரேக் அடித்து நின்ற‌து அந்த கார். அப்போதே நின்றிருந்த இதயம் மீண்டும் துடிக்க‌ ஆர‌ம்பித்து, அவள் விழிகள் புரியாது மெதுவாய் திற‌க்க‌, "மீரா!" என்றப‌டி அந்த‌ காரைவிட்டு இற‌ங்கினான் விராஜ்.

அவ‌ன் குர‌லில் அதிர்வாய் நிமிர்ந்து பார்த்த‌வ‌ள், "வீர்!" என்று க‌ண்ணீருட‌ன் கூற‌, அவ‌னோ ப‌த‌றிய‌ப‌டி அவ‌ள் அருகில் வ‌ந்த‌ம‌ர்ந்து, "மீரா என்ன‌ ஆச்சு உன‌க்கு?" என்று அவ‌ள் க‌ன்ன‌ம் ப‌ற்ற‌ வ‌ந்த‌ நொடி, ப‌ட்டென்று அவ‌ன் த‌லையில் இரத்தம் தெரிக்க பொத்தென்று கீழே விழுந்தான் விராஜ்.

அந்த‌ இர‌த்த‌ம் அமீராவின் முக‌த்தில் தெளிக்க‌, அதை அதிர்வாய் தொட்டு பார்த்த‌வ‌ளின் விர‌ல்க‌ள் ந‌டுங்க‌, மெதுவாய் பார்வையை நிமிர்த்தினாள்.

அங்கே கையில் நீண்ட பெரிய சுத்தியலுடன் நின்றிருந்த‌வ‌னின் உருவம் கருப்பாய் தெரிய, திடீரென்று அடித்த‌ மின்ன‌லில் இர‌த்த‌ கிள‌றியாய் தெரிந்த‌து அவ‌ன் உருவ‌ம்.

(யார் அவ‌ன்? அவ‌னுக்கும் இவ‌ளுக்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம்? இனி ந‌ட‌க்க‌ போவ‌து என்ன‌? ச‌ந்திப்போம் அடுத்த‌ பாக‌த்தில்.)

- நொடிக‌ள் தொட‌ரும்...

இந்த கதையின் காட்சிகள் விஷ்வலாக எனது இன்ஸ்டா பேஜ் : oviya_blessy ல் பார்க்கலாம்.
 
Last edited:

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: omkarjo