CHAPTER-1

Oviya Blessy

Member
Jan 4, 2025
45
0
6
அந்த‌ அமைதியான‌ இர‌வு நேர‌ம், வான‌ம் முழுவ‌துமாக‌ க‌ருமை சூழ்ந்திருக்க‌, அமாவாசை என்ப‌தால் வெறும் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளால் ம‌ட்டுமே ஒளி வீசிக்கொண்டிருந்த‌ அந்த‌ அக‌ண்ட‌ வான‌மும், அதற்கு கீழே அட‌ர்ந்த‌ காட்டை இர‌ண்டாய் பிரிக்கும் வ‌கையில் அமைந்த‌ சாலையும் வெறுச்சோடி கிட‌ந்த‌து.

அந்த‌ அமைதியான‌ அட‌ர்ந்த‌ காட்டின் ந‌டுவே ஒரே ஒரு பாழ‌டைந்த‌ சிவ‌ன் கோவில் ம‌ட்டும் இருக்க, அத‌ன் உள்ளே க‌ண்க‌ளை மூடி அம‌ர்ந்த‌ப‌டி த‌வ‌ம் செய்துக் கொண்டிருந்தார் ஒரு முதிய‌வ‌ர். அவ‌ரின் தாடையில் தாருமாறாய் வ‌ள‌ர்ந்திருந்த‌ ந‌றை முடிக‌ள் த‌ரையை தொட்ட‌து. ப‌ழுப்பு நிற‌த்தில் கீழாடை அணிந்திருந்த‌வ‌ர், மேலாடை எதுவும் இல்லாம‌ல் சாம்ப‌லையே உட‌ல் முழுக்க‌ பூசியிருந்தார். அவ‌ர் க‌ழுத்தில் ருத்ராட்ச்ச‌ மாலைக‌ளும், நெற்றியில் சிவ‌னின் விபூதியால் இட‌ப்ப‌ட்டிருந்த‌ ப‌ட்ட‌ய‌மும் ஒரு அகோர‌ உருவ‌த்தை காட்டிய‌து. அவ்விட‌த்தின் அருகே ஓடிக் கொண்டிருந்த‌ ந‌தியின் ச‌த்த‌மும், அத‌னை சுற்றியுள்ள‌ ப‌ற‌வைக‌ளின் கீச்சிடும் ஒலிக‌ள் ம‌ட்டுமே அந்த‌ காட்டை நிறைத்துக் கொண்டிருக்க‌, அதில் சாந்த‌மாக‌ க‌ண்க‌ளை மூடி தியான‌ நிலையில் இருந்த‌வ‌ர், திடீரென்று ஒரு காரின் ஒலியில் ச‌ட்டென‌ விழி திற‌ந்தார்.

முக‌ம் முழுக்க‌ பூச‌ப்ப‌ட்டிருந்த‌ அந்த‌ சாம்ப‌லின் நிற‌த்தில் க‌ருக‌ருவென்று இருந்த‌ அந்த‌ க‌ண்க‌ள், முழுதாய் விரிய‌ ச‌ட்டென்று திரும்பி பார்த்தார்.

அங்கு சாலையில் நான்கு இளைங்க‌ர்க‌ள் காரில் பாட்டு பாடிய‌ப‌டி ம‌கிழ்ச்சியாக‌ வ‌ந்துக் கொண்டிருக்க‌, "டேய் என்ன‌டா ரோடு இது? போக‌ போக‌ தீர‌வே மாட்டிங்குது? எவ்ளோ நேர‌மாக‌ இந்த‌ காட்டுக்குள்ளையே சுத்துற‌து?" என்று கையிலிருந்த‌ ம‌துவை சுவைத்த‌ப‌டியே கூறினான் ஒருவ‌ன்.

அப்போது ஓட்டுந‌ர் இருக்கையில் இருந்த‌வ‌னோ, "டேய் நாம‌ என்ன‌ பிக்கினிக்கா போய்கிட்டிருக்கோம்? இந்த‌ டைம‌ன்ட்ஸெல்லா இல்லீக‌லா எக்ஸ்போர்ட் ப‌ண்ணிகிட்டிருக்கோம். இந்த‌ ரோட்டுல‌ போனாதா செக்கிங் அது இதுன்னு எதுவும் இருக்காது. ரோடே எவ்ளோ ஃபிரியா இருக்கு பாரு." என்ற‌ன்.

அதில் சாலையின் ப‌க்க‌ம் பார்வையை திருப்பிய‌ அவ‌னும், த‌ன் போதை நிறைந்த‌ க‌ண்க‌ளை குறுக்கி உற்று பார்த்துவிட்டு, மீண்டும் ச‌ர‌க்கை வைல் ச‌ரித்தா.

"சீக்கிர‌ம் ஓட்டுடா. எதாவ‌து மிருக‌ம் குறுக்க‌ வ‌ந்து தொல‌ஞ்சிர‌ போகுது." என்று ம‌ற்றொருவ‌ன் கூற‌, அடுத்த‌ நொடியே எதையோ பார்த்து அதிர்ந்து ச‌ட்டென்று ஸ்டிய‌ரிங்கை திருப்பினான் அவ‌ன்.

அதில் அனைவ‌ரும் அங்கும் இங்குமாய் இடித்துக்கொள்ள‌, காரோ உழ‌ற்ற‌ ஆர‌ம்பிக்க‌, காரின் உள்ளே இருந்த‌ அனைவ‌ரும், "என்ன‌ அச்சு?" என்று ப‌ய‌ந்து க‌த்த‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.

அப்போது ஓட்டுந‌ர் இருக்கையில் இருப்ப‌வ‌ன், "டேய் எவ‌னோ ரோட்டுல‌ ந‌ட‌ந்து போரான்டா." என்ற‌ப‌டி விடாது ஹார‌ன் அடித்துக்கொண்டே இருக்க‌, அத‌ற்கெல்லாம் அச‌ராம‌ல் ந‌டு சாலையில் விறுவிறுவென்று காரின் முன்னே ந‌ட‌ந்து சென்றுக் கொண்டிருந்தார் அந்த‌ முதிய‌வ‌ர். அவ‌ரும் விரைந்து செல்வ‌தாக‌ தெரிய‌வில்லை, இவ‌ர்க‌ளுக்கும் வ‌ழிவிடுவ‌தாக‌ தெரிய‌வில்லை.

அத‌னால் ஹார‌ன் அடித்த‌ப‌டியே காரை அங்கும் இங்குமாக‌ செலுத்திய‌வ‌ன் இறுதியில் காரை நிறுத்திவிட்டு இற‌ங்கி, "யோவ்! பைத்திய‌மா உன‌க்கு? இது என்ன‌ உன் அப்ப‌ வீட்டு ரோடுன்னு நென‌ச்சியா?" என்று க‌த்திய‌ப‌டியே அருகில் வ‌ர‌, அவ‌ற்றை ச‌ற்றும் காதில் வாங்காம‌ல் விறுவிறு என்று முன்னால் ந‌ட‌ந்துக்கொண்டே இருந்தார் முதிய‌வ‌ர்.

அதை க‌ண்டு எரிச்ச‌ல‌டைந்த‌வ‌ன், "யோவ் பெருசு! சொல்லிகிட்டே இருக்கே. நீ சாவ‌ எங்க‌ வ‌ண்டிதா கெட‌ச்ச‌தா?" என்று கூறி அவ‌ர் தோள்ப‌ட்டையை பிடித்து திருப்ப‌, அடுத்த‌ நொடி அவ‌ரின் அகோர‌ முக‌த்தை க‌ண்டு அதிர்ந்து நின்றான்.

அப்போது அவ‌னை முறைத்து உற்று நோக்கிய‌வ‌ர், "சாக‌ போற‌து நா இல்ல‌ நீங்க‌தா." என்றார்.

அதை கேட்ட‌ ம‌ற்ற‌ மூவ‌ரும் அவ‌ன் அருகில் வ‌ந்து நின்று அதிர்ச்சியில் இருக்கும் அவ‌னை த‌ட்டி எழுப்ப‌ முய‌ல‌, "நீங்க‌ ஒவ்வொருத்த‌ரும் சாக‌ போறீங்க‌." என்றார் அழுத்த‌மாக‌.

"என்ன‌ பெருசு ம‌ண்டையில‌ பிர‌ச்ச‌னையா? தேவ‌ல்லாம‌ வ‌ழிய‌ ம‌ற‌ச்சு என்னென்ன‌மோ ஒளறிகிட்டிருக்க‌?" என்று ஒருவ‌ன் கேட்க‌,

"உங்க‌ விதியில‌தா பிர‌ச்ச‌ன‌." என்றார் அவ‌ர்.

அதை கேட்ட‌ அனைவ‌ரும் இவ‌ர் பைத்திய‌ம் என்ப‌தை உறுதியே செய்துவிட்டு, "செரி செரி ஓர‌மா ந‌ட‌ந்து போங்க‌. எங்க‌ வ‌ண்டியில‌ த‌ப்பிச்ச‌ மாதிரி வேற‌ வ‌ண்டியில‌ த‌ப்பிக்க‌ முடியாது. வெச்சு ஏத்திருவானுங்க‌." என்று கூறி ந‌க்க‌ல் செய்த‌ப‌டி அங்கிருந்து சென்ற‌ன‌ர்.

செல்லும் அவ‌ர்க‌ளையே பார்த்த‌ப‌டி நின்ற‌வ‌ர், "நா தப்பிச்சிருக்க‌லாம். ஆனா நீங்க‌ விதியோட‌ பிடியிலிருந்து த‌ப்பிக்க‌வே முடியாது." என்று கூறி காட்டின் ந‌டுவே உள்ள‌ சிவ‌ன் கோவிலை அன்னாந்து பார்க்க‌, அந்த‌ கோவிலின் ம‌ணிக‌ள் அனைத்தும், அங்கு வீசிய‌ ப‌ய‌ங்க‌ர‌ காற்றுக்கு ஒன்றுக்கொன்று மோதி ப‌ல‌மாய் ஒலி எழுப்ப‌ ஆர‌ம்பித்த‌ன‌.

அதை பார்த்து த‌லைக்கு மேல் கை எடுத்து கும்பிட்ட‌வ‌ர், "நீங்க‌ சொன்ன‌ அந்த‌ நேர‌ம் வ‌ந்துருச்சு ஈச‌னே! உங்க‌ க‌ட்ட‌ளைய‌ நா நிறைவேத்த‌ போற‌ நேர‌ம் வ‌ந்திருச்சு." என்று ச‌த்த‌மாய் கூறினார்.

அப்போது அவ‌ரை காரில் க‌ட‌ந்து சென்ற‌ நால்வாரும் அவ‌ர் கை தூக்கி கும்பிட்டு நிற்கும் நிலையை பார்த்து கேளி செய்து சிரித்த‌ப‌டியே சென்ற‌ன‌ர்.

அவ‌ரும் அதை சிறிதும் பொருட்படுத்தாம‌ல் அப்ப‌டியே நிற்க‌, முழுதாய் அவ‌ரை க‌ட‌ந்து சென்ற‌தும் பார்வையை திருப்பிக் கொண்ட‌வ‌ன், "யாருடா அந்த‌ லூசு? த‌சாவ‌தார‌த்துல‌ நிக்கிற‌ மாதிரியே நிக்கிறான்?" என்று சிரித்த‌ப‌டி கேட்க‌,

அத‌ற்கு ம‌ற்றொருவ‌னும் சிரித்த‌ப‌டி, "ந‌ம‌க்கு எதுக்கு அதெல்லாம்? நாம‌ ந‌ம்ப‌ வேலைய‌ மொத‌ல்ல‌ முடிப்போம்." என்று கூற‌,

"ஆமா கைஸ். இந்த‌ டைம‌ன்ட்ஸ இவ்ளோ தூர‌ம் எடுத்திட்டு வ‌ர்ற‌துக்குள்ளையே போதும் போதுன்னு ஆயிருச்சு. சீக்கிர‌மா இத‌ பாஸ்கிட்ட‌ குடுத்திட்டு, நாம‌ நிம்ம‌தியாயிர‌ணும்." என்ற‌ப‌டி காரின் இருக்கையில் நிம்ம‌தியாய் சாய்ந்தான்.

அப்ப‌டியே அவ‌க‌ளுக்கு மேலே அந்த‌ இருண்ட‌ வானில் முழுதா மின்னிய‌ அந்த‌ நில‌வு உச்ச‌த்தை தொட‌, 12 ம‌ணி அள‌வில் அவ‌ர்க‌ளின் கார் ஒரு பெரிய‌ பிர‌ம்மாண்ட‌ கேட்டின் முன்பு வ‌ந்து நின்ற‌து. அவ‌ர்க‌ளை பார்த்த‌ அந்த‌ கேட்டின் வாட்ச் மேன், உட‌னே கேட்டை திற‌ந்துவிட‌ காரை உள்ளே செலுத்தி நிறுத்திவிட்டு, தாங்க‌ள் எடுத்து வ‌ந்த‌ வைர‌ க‌ற்க‌ள் இருந்த‌ பேகையும் எடுத்துக்கொண்டு உள்ளே சென்ற‌ன‌ர்.

அவ‌ர்க‌ளுடைய‌ பாஸை தேடி உள்ளே சென்ற‌ ச‌ம‌ய‌ம், அங்கு ஆடும் நாற்காலியில் சாய்ந்தாடிய‌ப‌டியே, த‌ன் விர‌ல்க‌ளால் த‌ன் ப‌த‌ற்ற‌த்தை டைப் செய்த‌ப‌டி காத்துக் கொண்டிருந்த‌வ‌ரின் கையில் ஒரு சில்வ‌ர் நிற‌ சிவ‌லிங்க‌ டால‌ர் தொங்கும் பிரேஸ் லெட்டும், அவ‌ருடைய‌ க‌ழுத்தில் அதே சிவ‌ லிங்க‌த்தின் டால‌ர் பொறிந்து அதில் சிவ‌ சிவ‌ என‌ எழுதியிருக்கும் செயினும் அணிந்திருக்க‌, கையிலும் க‌ழுத்திலும் சில‌ ருத்ராக்ஷ‌ மாலைக‌ளையும் அணிந்திருந்தார். அதுவே அவ‌ர் எப்பேற்ப‌ட்ட‌ சிவ‌ ப‌க்த்த‌ன் என்ப‌தை காட்டிய‌து. இவ்வாறு அந்த‌ நாற்காலியில் வெகு நேர‌மாக‌ ஒரு ப‌த‌ற்ற‌த்துட‌ன் காத்துக் கொண்டிருந்த‌வ‌ர், "பாஸ்" என்ற‌ அந்த‌ நால்வ‌ரின் குர‌ல் கேட்டு மெல்ல‌ திரும்பினார் லிங்கேஷ்வ‌ர‌ன்.

தாடியும் மீசையும் டை அடித்தாலும் ஒரு ஓர‌த்தில் ம‌ட்டும் ஸ்டைலாக‌ வெள்ளை நிற‌த்தில் மின்ன‌, அவ‌ரின் நெற்றிக்கு மேல் உள்ள‌ முடி க‌ற்றையில் மேலால‌ வெள்ளை முடிக‌ள் எட்டி பார்த்த‌து.

அவ‌ர்க‌ள் நால்வ‌ரையும் பார்த்த‌தும் தான் உயிர் வ‌ந்த‌வ‌ராய், உட‌னே எழுந்து சென்று அவ‌ர்க‌ளை க‌ட்டி த‌ழுவிய‌வ‌ர், "போன‌ எட‌த்துல‌ எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்ல‌யே?" என்று கேட்க‌,

போன‌ வேலை முடிந்த‌தா என்று கேட்கும் பாஸைதான் பார்த்திருப்போமே த‌விர‌, போன‌ இட‌த்தில் இவ‌ர்க‌ளும் ஏதேனும் பிர‌ச்ச‌னையா என‌ விசாரிக்கும் போதே தெரிந்திருக்க‌ வேண்டாம்? வ‌ந்திருப்ப‌வ‌ர்க‌ள் த‌ன்னை பாஸ் என்று ம‌ரியாதையாக‌ அழைத்தாலும், அவ‌ர் என்றும் அவ‌ர்க‌ளை த‌ங்க‌ள் பிள்ளைக‌ளுக்கு ச‌மமாக‌வே பாவித்தார். அவ‌ர்க‌ளுக்கும் த‌ங்க‌ள் பாஸ் லிங்கேஷ்வ‌ர‌ன் மீது அவ்வாறான‌ நெருங்கிய‌ உண‌ர்வு இருந்தாலும், அவ‌ரின் மீதான‌ ம‌ரியாதை ம‌ட்டும் என்றுமே குறைந்த‌தில்லை.

அவ‌ர்க‌ளுமே புன்ன‌கையுட‌ன் அவ‌ரை க‌ட்டி த‌ழுவிக்கொண்டு, "டோன்ட் வ‌ரி பாஸ். நாங்க‌ ஒரு ஃபார‌ஸ்ட் ரூட்டுல‌ வ‌ந்த‌தால‌, போலீஸ் செக்கிங் எதுவும் இல்லாம‌ ஈசியா வ‌ந்துட்டோம்." என்றான் ஒருவ‌ன்.

அதை கேட்டு நிம்ம‌திய‌டைந்த‌ அவ‌ரும் புன்ன‌கைத்துவிட்டு, "செரி பொருள‌ பூஜ‌ ரூமுல‌ வெக்க‌ சொல்லிருங்க‌. ஏன்னா.." என்று கூறும் முன், "ப‌ர‌ம‌சிவ‌ன் கிட்ட‌ அனும‌தி வாங்காம‌ நீங்க‌ எந்த‌ வேலையும் ப‌ண்ண‌ மாட்டீங்க‌. அதான‌?" என்று கேட்டான் ஒருவ‌ன்.

அதை கேட்ட‌ அவ‌ரும் த‌ன் ஒற்றை த‌ன் புருவ‌ம் உய‌ர்த்தி, "என்ன‌டா கிண்ட‌ல் ப‌ண்றியா?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌னும் சிரித்த‌ப‌டி, "பின்ன‌ என்ன‌ பாஸ்? டெயிலியும் இதே ட‌ய‌லாக்தா சொல்றீங்க, போர் அடிக்காதா?" என்று கூற‌,

அதில் ம‌ற்றொருவ‌னும், "உங்க‌ளோட‌ ம‌த்த‌ பிஸ்ன‌ஸ்ல‌ அவ‌ருகிட்ட‌ ஆசீர்வாத‌ம் வாங்குனாக்கூட‌ பர‌வால்ல‌ பாஸ். ப‌ட் இது இல்லீக‌லா ப‌ண்ற‌து, இதுக்கு கூட‌வா அவ‌ரு தொணையா இருப்ப‌ருன்னு நெனைக்கிறீங்க‌?" என்று கேட்க‌,

அத‌ற்கு அவ‌ன் தோள்க‌ளில் கையிட்டு அணைவாய் இழுத்துக்கொண்ட‌வ‌ர், "டேய்.. அவ‌ருக்கு தெரியாம‌ இங்க‌ ஒரு புள்ளிக்கூட‌ ந‌க‌ர‌ முடியாதுடா. அப்பிடி இருக்கும்போது நா இப்பிடி இல்லீக‌லா பிஸ்ன‌ஸ் ப‌ண்ற‌து அவ‌ருக்கு தெரியாம‌லா இருக்குன்னு நெனைக்கிற‌?" என்று கேட்க‌,

அதில் கேள்வியாய் திரும்பி அவ‌ர் முக‌ம் பார்த்த‌வ‌ன், "சோ? என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌ பாஸ்?" என்று புரியாம‌ல் கேட்க‌,

அத‌ற்கு புன்ன‌கைத்த‌ப‌டி அவ‌ன் தோளை அழுத்திய‌ அவ‌ரும், "நாம‌ ப‌ண்ற‌ எல்லாத்துக்கும் பின்னாடி அவ‌ரோட‌ திட்ட‌ம் க‌ண்டிப்பா இருக்கு. அவ‌ரோட‌ திட்ட‌ம் இல்லாம‌ இங்க‌ எதுவுமே ந‌ட‌க்காதுன்னு நா ந‌ம்புறேன். நீயும் ந‌ம்பு." என்றார்.

அதை கேட்டு ச‌லித்துக்கொண்ட‌வ‌ன், "செரி செரி பாஸ் புரிஞ்ச‌து." என்று கூறி அப்போதே எதோ நினைவு வ‌ந்து விழி விரித்த‌வ‌ன், "அது செரி ந‌ம்ப‌ அர்ஜுன் எங்க‌? அவ‌ன் எங்க‌க்கூட‌ கூட‌ வ‌ர‌ல‌." என்று கேட்டான்.

அத‌ற்கு அவ‌ரும் சாதார‌ண‌மாய் புன்ன‌கைத்து, "அவ‌னுக்கு நா வேற‌ ஒரு வேல‌ குடுத்து அனுப்பியிருக்கேன். இந்நேர‌ம் அவ‌ன் அங்க‌தா போயிகிட்டிருப்பான்." என்றார்.

அதே நேர‌ம் இங்கு ஹைவேவில், ஹை ஸ்பீடில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ட்ர‌க்கின் உள்ளே ட்ரைவ‌ர் சீட்டில் அம‌ர்ந்துக்கொண்டு ஒருவ‌ன் சிகுர‌ட்டை ப‌ற்ற‌ வைக்க‌, அத‌ன் வெளிச்ச‌த்தில் க‌ர‌டு முர‌டாய் தெரிந்த‌து அவ‌னின் முக‌ம்.

ஆனால் அவ‌ன் அல்ல‌, அதே ட்ர‌க்கிற்கு வெளியே, பின்னால் ப‌க்க‌ம் உள்ள‌ ஒரு பிடியை இறுக‌ ப‌ற்றிய‌ப‌டி ஸ்பைட‌ர் மேனைப்போல் தொங்கிக்கொண்டிருந்தான் ந‌ம் அர்ஜுன்.

"ட்ர‌க்கு ஓட்டுறானா இல்ல‌ ஃபிளைட்டு ஓட்டுறானா?" என்று த‌ள்ளாடிய‌ப‌டி கீழே பார்த்த‌வ‌ன், "விட்டா உன‌க்கு ச‌ங்கு ஊதிருவாங்க‌டா அர்ஜுன். சீக்கிர‌ம் வேலைய‌ முடிச்சிரு." என்று த‌ன‌க்கு தானே கூறிக்கொண்டு, அந்த‌ ட்ர‌க்கின் க‌த‌வை திற‌ந்து க‌டின‌ப்ப‌ட்டு உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்த‌ அடுத்த‌ நொடி இருளிலும் அவ்விட‌ம் த‌ங்க‌ பிஸ்க‌ட்டுக‌ளால் ஜொலித்த‌து. ஆனால் அத்த‌னை த‌ங்க‌த்தை பார்த்தும் ந‌ம் அர்ஜுனுடைய‌ க‌ண்க‌ள் மின்ன‌வில்லை. அதில் த‌ன‌க்கு தேவையான‌ கொஞ்ச‌த்தை ம‌ட்டும் எடுத்து ஒரு க‌ருப்பு நிற‌ பையில் போட்டுக்கொண்டு, அங்கிருந்து கிள‌ம்பினான். வீராப்பாக‌ கிள‌ம்பி க‌த‌வை திற‌ந்து காலை வெளியில் வைக்க‌ சென்ற‌வ‌னுக்கு, அப்போதுதான் அது ஓடிக்கொண்டிருக்கும் ட்ர‌க் என்ப‌து மீண்டும் நினைவிற்கு வ‌ர‌, எச்சிலை கூட்டி விழுங்கினான்.

பிற‌கு அப்ப‌டியே நிமிர்ந்து அங்கும் இங்கும் பார்த்த‌ப‌டியே ச‌ரியான‌ த‌ருண‌த்திற்காக‌ காத்திருந்த‌வ‌ன், வாக‌ன‌மே வ‌ராத‌ இட‌ம் வ‌ந்த‌தும் ச‌ட்டென‌ கீழே குதித்தான்.

அடுத்த‌ நொடி அவ‌ன் உட‌ல் ரோட்டில் உருண்டு செல்ல‌, அந்த‌ க‌ருப்பு பேகை ப‌த்திர‌மாய் ப‌ற்றிக்கொண்டு உருண்ட‌வ‌ன், பிற‌கு அப்ப‌டியே நிதானித்து மெல்ல‌ எழுந்து நின்றான்.

த‌ன் தூசிக‌ளை த‌ட்டிக் கொண்டு திரும்பி செல்லும் அந்த‌ ட்ர‌க்கை பார்த்த‌வ‌ன், த‌ன் நெற்றியில் வ‌ந்த‌ விய‌ர்வையை த‌ன் க‌ட்டை விர‌லால் துடைத்த‌ப‌டியே பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டான். அடுத்த‌ நொடி அவ‌னின் கைப்பேசி ஒலிக்க‌, அவ‌ற்றை அட்ட‌ன் செய்து காதில் வைத்த‌வ‌ன், "ஹா பாஸ்." என்றான்.

அவ‌ன் குர‌லில் தெரிந்த‌ வெற்றியின் க‌லிப்பை உண‌ர்ந்து மெல்லைத‌ழ் வ‌ளைத்த‌ இவ‌ரும், "என்னடா வேல‌ முடிஞ்ச‌தா?" என்று கேட்க‌,

"ஆல்மோஸ்ட் முடிஞ்ச‌து பாஸ். இப்போ ச‌ர‌க்கு என் கையில‌தா இருக்கு. இப்போ நா அத‌ குடுக்க‌தா போய்கிட்டிருக்கேன்." என்றான் அர்ஜுன்.

"செரி ஓகே. அத‌ தாகூர்கிட்ட‌ ஒப்ப‌ட‌ச்ச‌தும், என‌க்கு கால் ப‌ண்ணு." என்றார் இவ‌ர்.

"ஓகே பாஸ்." என்றான் அர்ஜுன்.

"அந்த‌ தாகூர் ரொம்ப‌ மோச‌மான‌வ‌ன். எதுவா இருந்தாலும் பாத்து டீல் ப‌ண்ணு." என்றார் இவ‌ர்.

"ஐ வில் டேக் கேர் பாஸ். யூ டோன்ட் வ‌ரி." என்றான் அர்ஜுன் சாதார‌ண‌மாக‌.

"ஓகேடா பாய்." என்று இணைப்பை துண்டித்தார் அவ‌ர்.

அதில் மொபைலை இறக்கிய‌ அர்ஜுன், த‌ன் கையில் இருந்த‌ க‌ருப்பு நிற‌ பையை இறுக‌ ப‌ற்றிய‌ப‌டி புற‌ப்ப‌ட்டான்.

இறுதியில் ஒரு பிர‌ம்மாண்ட‌ க‌ருப்பு நிற‌ கேட்டின் முன்பு வ‌ந்து நின்ற‌வ‌ன், அங்கு உள்ளிருந்து வெளி வ‌ந்த‌ அடியாள் அவ‌னிட‌ம் என்ன‌வென்று விசாரிக்க‌, "லிங்கேஷ்வ‌ர் அனுப்புனாரு." என்றான் அர்ஜுன்.

"ஓ! அப்போ பாஸ்வேர்டு சொல்லு." என்றான் அவ‌ன்.

"கோல்டு." என்றான் அர்ஜுன்.

அதை கேட்ட‌ அவனும் த‌லைய‌சைத்துவிட்டு, "ஓகே நீ உள்ள‌ வா." என்று அழைத்து சென்றான்.

பிற‌கு அவ‌ர்க‌ளுடைய‌ பாஸான‌ தாகூர் இருக்கும் இட‌த்திற்கு வ‌ந்து நின்றான் அர்ஜுன். அங்கே நாற்காலியில் அம‌ர்ந்து அர்ஜுனை ப‌ர்த்த‌ப‌டியே சிகிர‌ட்டை ப‌ற்ற‌ வைத்த‌ தாகூர், "நீதா அர்ஜுனா?" என்று கேட்க‌,

"ஆமா பாஸ்." என்றான் அர்ஜுன் நிமிர்வாக‌.

"லிங்கேஷ்வ‌ர் சொன்னான். அத்த‌ன‌ செக்கியூரிட்டிய‌ மீறி த‌ங்க‌த்த‌ அடிக்கிற‌துக்கு ப‌திலா, ஆன் த‌ வேல‌யே அடிக்க‌ முடியும்னு நீதா சொன்னியாமே?" என்று அவ‌ர் புருவ‌ம் உய‌ர்த்தி கேட்க‌,

அத‌ற்கு அர்ஜுனும் எந்த‌ பாவ‌னையுமின்றி, "ஆமா பாஸ். நீங்க‌ சொன்ன‌ எட‌த்துல‌ வெச்சு அடிச்சிருந்தா, நெறைய‌ பிளான் ப‌ண்ணி ஸ்கெச் போட‌ வேண்டி இருக்கும். அதா ஆன் த‌ வேல‌ அடிக்கலான்னு சொன்னேன். அதுல‌ செக்கியூரிட்டியும் இருக்காது." என்றான்.

அத‌ற்கு சிறு மெட்சுத‌லுட‌ன் த‌லையசைத்த‌ அவ‌ரும், "ப‌ட் அதுக்குள்ள‌ சி.சி.டி.வி கேம‌ரா இருந்திருக்குமே. அதுக்கு என்ன‌ ப‌ண்ண‌? மொக‌த்த‌ மூடிட்டு போனியோ?" என்று கேட்க‌,

"இல்ல‌ பாஸ். உள்ள‌ போற‌துக்கு முன்னாடியே அந்த‌ கேம‌ராவோட‌ வொய‌ர‌ க‌ட் ப‌ண்ணிட்டேன்." என்றான் அர்ஜுன் எந்த‌ பாவ‌னையுமின்றி.

"ம்ம்ம் குட். வெரி குட். அப்போ ஆழ‌ம் தெரியாம‌ கால‌ விட‌ மாட்ட‌ன்னு சொல்லு." என்று சிகிர‌ட்டை இற‌க்க‌,

"எஸ் பாஸ்" என்றான் அர்ஜுன்.

"அப்போ இங்க‌ வ‌ர்ற‌துக்கு முன்னாடியும் எல்லாம் தெரிஞ்சுதான‌ வ‌ந்திருப்ப‌?" என்று அவ‌ர் கேட்க‌,

அத‌ற்கும் அர்ஜுனும் எந்த‌ பாவ‌னையுமின்றி, "எஸ் பாஸ்." என்றான்.

"என்ன‌ தெரியும்?" என்று அவ‌ர் மீண்டும் சிகிர‌ட்டை வாயில் வைக்க‌,

"இங்க‌ உள்ள‌ வ‌ர்ற‌துக்கு உங்க‌ அனும‌தி வேணும், ஆனா வெளிய‌ போற‌துக்கு உங்க‌ க‌ருண‌ வேணும். அது என் பாஸ்க்கே தெரியாது. அத‌னால‌தா தைரிய‌மா என்ன‌ இங்க‌ அனுப்பியிருக்காரு." என்றான் அர்ஜுன்.

அதில் இத‌ழ் வ‌ளைவாய் சிகிர‌ட்டை இற‌க்கிய‌வ‌ர், "வாரே வா. ந‌ல்லாதா தெரிஞ்சு வெச்சிருக்க‌. இப்போ உன‌க்கு உள்ள‌ வ‌ர‌ அனும‌தி கெட‌ச்சிருச்சு. ஆனா வெளிய‌ போக‌ க‌ருண‌? அது கெடைக்கும்னு நெனைக்கிறியா?" என்று புருவ‌ம் உய‌ர்த்தி கேட்க‌,

அத‌ற்கும் அர்ஜுனும் எந்த‌ பாவ‌னையுமின்றி, "க‌ண்டிப்பா இல்ல‌ பாஸ். ஏன்னா வ‌ல‌து கையில‌ செய்யிற‌து இட‌து கைக்கே தெரிய‌ கூடாதிங்குற‌து உங்க‌ பாலிசி. சோ வெளி ஆளான‌ என்ன‌ க‌ண்டிப்பா உயிரோட‌ விட‌ மாட்டீங்க‌." என்றான்.

"தெரிஞ்சும் உன் க‌ண்ணுல‌ ப‌ய‌மே தெரிய‌ல‌ன்னா, உன‌க்கு சாவ‌ க‌ண்டு ப‌ய‌மே இல்ல‌ன்னுதான அர்த்த‌ம்?" என்று கேட்ட‌ப‌டி த‌ன் துப்பாக்கியை லோட் செய்தார் அவ‌ர்.

அதில் எந்த‌ பாவ‌னையுமின்றி த‌ன் பின்னால் கை க‌ட்டிய‌ அர்ஜுன், மெல்ல‌ த‌ன் இடுப்பில் சொருகி வைத்திருந்த‌ துப்பாக்கியை எடுக்க‌ முய‌ல‌, அதுவோ அங்கு இல்லை.

ச‌ற்று முன் அந்த‌ ட்ரக்கிலிருந்து குதிக்கும்போதே அது கீழே விழுந்திருக்க‌, அதை க‌வ‌னிக்காத‌வ‌ன் இங்கு வரை வந்து த‌ன் இடையில் கை வைக்க‌, அது இல்லை என்ப‌தை உண‌ர்ந்த‌தும் விழிக‌ளை அக‌ல‌ விரித்தான்.

- ஜென்மம் தொட‌ரும்...
 

Author: Oviya Blessy
Article Title: CHAPTER-1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.