Chapter-1

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அத்தியாயம்: 1


சூரியன் தன் கதிர்களை பூமி எங்கும் பரப்ப தொடங்கி இருந்த நேரம் அது. 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருத்தி அந்த விடியற்காலை நேரத்தில் தனது புடவையை தூக்கி இடுப்பில் சொருகி கொண்டு அவளது பழைய கான்கிரீட் வீட்டின் முன்னே நின்று வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள். அவர்களது வீட்டு வாசலில் கோலம் போடக்கூட இடம் இல்லை தான். இருப்பினும் முன்னே இருந்த தார் ரோட்டையும் சற்று கடன் வாங்கி தாராளமாக போட்டு வைப்போம் என்று நினைத்து அவள் நெடுவே தண்ணீர் தெளித்துவிட்டு தன் வீட்டை பார்த்து திரும்பி, “டேய் ரமேசு... நான் தண்ணி தெளிச்சுட்டேன்டா வந்து கோலம் போடு." என்று கத்தினாள்.


தனக்கு இன்னும் சில நாட்களில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கப்போகிறது என்பதால் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடமையே கண்ணாக தன்னை சுற்றி பல புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருந்த ரமேஷ், “அம்மா போமா கோலம் தானே... நீயே போடு. நீ சொல்றேன்னு நான் வந்து கோலம் போட்டா, பக்கத்து வீட்டு அக்கா எல்லாம் என்னை பார்த்து கிண்டல் பண்ணி சிரிப்பாங்க." என்று வீட்டுக்குள்ளே இருந்து கத்தினான்.


அதனால் கடுப்பான அன்னலட்சுமி, “அவ.. எவடா அவ...?? என் மவன பாத்து கிண்டல் பண்ணி சிரிக்கிறவ? ஏன் ஆம்பள பையன்னா கோலம் போட கூடாதா? வீட்டுக்குள்ள எவ எவளோ என்னென்னமோ பண்றாளுங்க. அதெல்லாம் யாருக்கும் அசிங்கமா தெரியல. என் மாவன் கோலம் போடுறது தான் இவளுகளுக்கு எல்லாம் அசிங்கமா தெரியுதாே..!! நீ வந்து இப்ப கோலம் போடுற..!! எவ வந்து என்ன பேசுறான்னு நானும் பாக்குறேன்." என்று வாசலில் நின்று அடுத்த தெருவுக்கு கேட்கும் அளவிற்கு சத்தமாக கத்தினாள்.


அப்போது கோலம் போடலாம் என்று நினைத்து கையில் விளக்கமாறுடன் தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வந்த அன்னலட்சுமியின் பக்கத்து வீட்டுக்கார பெண்ணான வனஜா, “அய்யய்யோ காலங்காத்தால இவ மூஞ்சில போய் விடிஞ்சு சண்டை வழிக்க வேணாம்." என்று நினைத்து தன் கையில் இருந்த விளக்கமாறை ஓரமாக தூக்கி எறிந்துவிட்டு சத்தம் வராமல் கதவை சாத்திவிட்டு தனது வீட்டிற்குள்ளே சென்று விட்டாள்.


இன்னும் தன் மகன் கோலம் போட வராததால் மீண்டும் அன்னம், “டேய் ரமேசு...!!!" என்று ஆரம்பிக்க, “வரேன் அம்மா." என்று கத்தியபடி வெளியில் கையில் கோலமாவுடன் ஓடிவந்த ரமேஷ் தன் அம்மாவின் பேச்சைக் கேட்டு சாலை வரை பெரியதாக கோலம் போட தொடங்கினான். தன் மகனிடம் அந்த வேலையை ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்குள் சென்ற அன்னலட்சுமி தனது மாமியார் ரோஜாவை எழுப்பிவிட்டு, “போய் உங்க அருமை பேத்திய எந்திரிச்சு கிளம்ப சொல்லுங்க. அவ வேலைக்கு போறதுக்குள்ள மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை வர சொல்லி இருக்கேன். அவங்க எப்படியும் ஏழு மணிக்கு எல்லாம் வந்துருவாங்க." என்று சொல்ல, “நீயே போய் அவளை எழுப்புடி. இந்த நேரத்துல போய் அவளை எழுப்பி வயசான காலத்துல என்னால அவகிட்ட அடி வாங்க முடியாது." என்றாள் ரோஜா பாட்டி.


“அவள இப்படி எல்லாம் செல்லம் குடுத்து கெடுத்து வச்சதே நீங்க தானே..!! நான் போய் அவளை எழுப்பினா தான் அவ தலவாணிய தூக்கிப்போட்டு அடிப்பா. உங்கள ஒன்னும் பண்ண மாட்டா. அப்படியே தலைவாணில அடி வாங்கினாலும் நீங்க ஒன்னும் செத்து போயிட மாட்டீங்க, போங்க…!!!" என்றுவிட்டு அன்னலட்சுமி சமையல் வேலையை பார்ப்பதற்காக கிச்சனுக்கு சென்று விட்டாள். தனது பேத்தியை எழுப்ப போகாமல் மீண்டும் இழுத்துப்போர்த்தி படித்துக் கொண்டார் ரோஜா பாட்டி.


அந்த பாட்டியை போலவே தானும் எந்த கவலையும் இன்றி ஒரு பழைய இரும்பு கட்டிலில் நிம்மதியாக படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் நம் ஹீரோயின் ரதிதேவி என்கிற ரதி. அவள் தனது 95 கிலோ எடையுள்ள உடலை சிரமப்பட்டு திருப்பி படுத்ததில் அவளைவிட மிகவும் வயதான அவள் படுத்திருந்த வெல்ட் பாதி விட்டிருந்த இரும்பு கட்டில் டங் என்று லேசாக சத்தம் எழுப்பியது. அதையெல்லாம் ரதி கண்டுகொள்ளாமல் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருக்க, பறந்து வந்து அவள் மீது அமர்ந்த கிளி ஒன்று அவளைப் பார்த்து கீ...கீ...!! என்று கத்தியது.


அப்போதும் அவள் அசராமல் உறங்கிக் கொண்டிருக்க, மீண்டும் அவளது முகத்தின் அருகே சென்று அந்த கிளி கீ..கீ..கீ..!! என்று கத்தியது. அதனால் தன் முகத்தை சுளித்த ரதி, “ஏய்.. சிம்ரன்... போடி அந்த பக்கம். இங்க வந்து எதுக்கு கீ.. கீன்னு கத்திக்கிட்டு இருக்க?" என்று சலிப்பான குரலில் கேட்டவள், அப்போதும் தன் கண்களை திறக்க மனமின்றி மீண்டும் தூங்க முயற்சித்தாள்.


கிச்சனில் இருந்து வெளியில் வந்த அன்னலட்சுமி இன்னும் ரதியும், ரோஜா பாட்டியும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகி நேராக ஒரு வாலி தண்ணீரை எடுத்துக் கொண்டு தனது மகளின் அறைக்கு சென்று அப்படியே அதை படுத்திருந்த ரதியின் மீது ஊற்றி விட்டாள். அவள் ஊற்றிய தண்ணீர் அவள் மீது அமர்ந்திருந்த கிளியின் மீதும் பட்டு விட்டதால் கீ..கீ..!! என்று கத்திய சிம்ரன், ஈரமாக இருந்த தன் றெக்கைகளை படபடவென வேகமாக அடித்து ரதியின் மீது இருந்து பறந்து சென்று அருகில் இருந்த மேஜையின் மீது அமர்ந்து தனது தலையை இடவலமாக ஆட்டி சிலப்பியது.


தன்னை இப்படி தன் அம்மா தண்ணீர் ஊற்றி எழுப்பியதால் அதிக கோபத்துடன் எழுந்து அமர்ந்த ரதி, “இப்ப எதுக்குமா என் மேல தண்ணி ஊத்துன? நான் ஆபீஸ்ல வேலை பார்க்கிறது இல்லாம வீட்டுக்கு வந்தும் Mid night வரைக்கும் வேலை பார்த்துட்டு 2 மணிக்கு தான் தூங்கினேன். என்ன கொஞ்ச நேரம் கூட நிம்மதியா தூங்க விட மாட்டியா நீ?" என்று எரிச்சலுடன் கேட்டுவிட்டு, தன் முகத்தை அழுந்த துடைத்தாள்.


“அதெல்லாம் எனக்கு தெரியாது. நானா உன்ன ரெண்டு மணி வரைக்கும் வேலை பாக்க சொன்னேன்? நேத்தே நான் உன்னை பார்க்க இன்னைக்கு காலையில மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்கன்னு சொன்னேன்ல்லடி.. அப்புறம் நீ எதுக்கு இவ்ளோ நேரம் தூங்குற? சீக்கிரம் எந்திரிச்சு போய் கிளம்பு." என்று அன்னலட்சுமி சொல்ல, “ஏன்மா மாசத்துக்கு நாலு தடவை எவனயாவது மாப்பிள்ளை என்று கொண்டு வந்து நிறுத்தலைன்னா உனக்கு நல்லா இருக்காதா? வற்றவனாவது எனக்கு ஓகே சொன்னா பரவால்ல. அவன் வந்து freeஆ பஜ்ஜி செஜ்ஜி எல்லாம் தின்னுட்டு என்ன பிடிக்கலன்னு சொல்ல போறான்..!! அப்புறம் எதுக்கு யார் யார் முன்னாடியோ தேவையில்லாம கொண்டு போய் நிறுத்தி என்னை அசிங்கப்படுத்துற? எனக்கு கல்யாணம் பண்ற ஆசையே போயிடுச்சுமா. என்ன விட்டுரு ப்ளீஸ்..!!!" என்று கோபமாக தொடங்கி இறுதியில் சோகமாக முடித்தாள் ரதி.


“நீ சொல்றது சரிதான். நம்ம வீடு தேடி வந்து ஒவ்வொருத்தனும் உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போறது உன்னை விட உன்னை பெத்தவளா எனக்கு தான்டி கஷ்டமா இருக்கு. ஆனா அதுக்காக உன்னை இப்படியே என்னால வச்சிக்கிட்டு இருக்க முடியாது. ஏற்கனவே நீ சம்பாதிக்கிறன்னு தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம இத்தனை நாளா நான் உன்னை என் வீட்டோட வச்சுக்கிட்டு இருக்கேன்னு எத்தனை பேர் நாக்கு மேல பல்லப்போட்டு பேசுறாங்க தெரியுமா? அதெல்லாம் நான் சொன்னா உனக்கு புரியாதுடி." என்று நினைத்து வருத்தப்பட்ட அன்னலட்சுமி வெளியில் தன் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு, “நானா உன்ன நல்லா தின்னு தின்னு பன்னி மாதிரி குண்டாக சொன்னேன்..!! இப்படி இருந்தா உன்னை எவனுக்குடி பிடிக்கும்? வாய கட்டு, exercise பண்ணி உடம்பை குறை என்று சொன்னா கேக்குறியா! இப்ப தரகர் சொல்லி இருக்க மாப்பிள்ள கவர்மெண்ட் வேலையில இருக்கிறாராம். அழகா ரெடியாகி மாப்பிள்ளை முன்னாடி வந்து நில்லு. எப்படியாவது அவங்க குடும்பத்துல இருக்கிறவங்க கையில கால்ல விழுந்தாவது இந்த கல்யாணத்தை நான் நடத்தி முடிக்காம விடமாட்டேன். நீ வர்றவங்க முன்னாடி ஏதாவது திமிருத்தனம் பண்ண... அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன். அவங்க உன்ன பிடிக்கலைன்னு சொன்னாலும் நீ அவங்ககிட்ட எதுவும் பேசக்கூடாது." என்று கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு மீண்டும் கிச்சனுக்கு சென்று விட்டாள்.

தொடரும்..

அமேசானில் படிக்க..

Amazon link
 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-1
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.