தாபம் 28

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 28: முதலில் யார் சொல்வது அன்பே?

ரித்திகா தனக்குக் காய்ச்சல் அடிப்பதால் லீவு வேண்டும் என்று கேட்பதற்காக மானசாவிற்குத் தொடர்ந்து கால் செய்தாள். ஆனால் அதை அவள் அட்டென்ட் செய்யவில்லை. இறுதியாக ஒரு முறை கால் செய்து பார்க்கலாம் என்று நினைத்த ரித்திகா, அவளுக்குக் கால் செய்தாள். இறுதியாக காலை அட்டன்ட் செய்தாள் மானசா.


ஃபார்மாலிடிக்காக குட் மார்னிங் சொல்லி பேசத் தொடங்கிய ரித்திகா அவளுக்குக் காய்ச்சல் அடிப்பதால் தனக்கு லீவு வேண்டும் என்று மானசாவிடம் கேட்டாள். மானசா, ரித்திகாவுக்கு லீவு தர மறுத்துவிட்டாள். ஏற்கனவே ரித்திகாவின் மீது கோபத்தில் இருந்த மானசா, இதை அவளை டார்ச்சர் செய்வதற்கான ஒரு வாய்ப்பாய் பார்த்தவள்.. முடிந்த வரை அவளைக் கொடுமைப்படுத்தி இந்த பள்ளியை விட்டு விரட்டி விட வேண்டும் என்று திட்டம் போட்டாள்.


அதனால் ரித்திகா தன் நிலையை எவ்வளவு விளக்கியும் மனம் இரங்காத மானசா, அவளிடம் சீக்கிரமாகப் பள்ளிக்கு வருமாறு சொல்லிவிட்டுக் காலைக் கட் செய்தாள். சலிப்பாக ரேவதியைப் பார்த்த ரித்திகா, "நான் பள்ளிக்குக் கிளம்பிதான் ஆக வேண்டும்" என்றவள்; பெட்டில் இருந்து எழுந்து குளிக்கச் சென்றாள்.


குறைந்தபட்சம் தான் சுடு தண்ணீர் வைத்துக் கொடுக்கும் வரை பொறுத்திருந்து சுடு தண்ணீரில் குளித்து விட்டுச் செல்லுமாறு ரேவதி எவ்வளவு கெஞ்சியும் அதைக் கேட்காத ரித்திகா, "அதற்கெல்லாம் இன்னும் அதிகமாக நேரம் ஆகும்" என்றவள், குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வெளியே கிளம்பி வந்தாள்.


ரித்திகா கிளம்பி வெளியே ஹாலுக்கு வரும்போது மணி எட்டு நாற்பதைக் கடந்துவிட்டது. ரித்திகாவைப் பார்த்த ரேவதி, வேகமாக அவள் அருகே சென்று அவளுடைய கழுத்தில் தன்னுடைய கையை வைத்துப் பார்த்தாள். இன்னும் ரித்திகாவின் உடல் நெருப்பாய் கொதித்து கொண்டுதான் இருந்தது.


இப்படி காய்ச்சலோடு தன்னுடைய மகளை வேலைக்கு அனுப்புகிறோமே என்று அந்த தாயின் உள்ளம் பதறியது.

"என்ன ஆனாலும் பரவாயில்லை! இன்று ஸ்கூலுக்குப் போக வேண்டாம்" என்று ரேவதியும் ரித்திகாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். சுதாகரும் தன் பங்கிற்குக் ரித்திகாவுடன் பேசிப் பார்த்தார்.

ஆனால் அவர் கூற வருவதை எதையும் ரித்திகா கேட்கவில்லை. அதனால் ரித்திகாவின் மீது கோபப்பட்ட சுதாகர், "என்னவோ உன் இஷ்டம் போல் செய்" என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டார்.


"தான் பள்ளிக்குச் சென்றே ஆக வேண்டும்" என்று பிடிவாதமாக இருந்தாள் ரித்திகா. ரித்திகா மிகவும் சோர்வாக இருந்ததால் அவளால் ஸ்கூட்டியைத் தனியாக ஓட்டி கொண்டு செல்ல முடியாது என்று நினைத்தவள், ஆட்டோ பிடித்துச் செல்லலாம் என்று நினைத்து... ரேவதியிடம் சொல்லி விட்டு வெளியே செல்லத் திரும்பினாள்.


ரேவதிக்கு ரித்திகாவைத் தனியாக அனுப்புவதற்கு மனமில்லை மற்றும் "இதற்கு மேல் சென்று அவள் ஆட்டோ தேடி பிடிப்பதற்கும் கஷ்டப்படுவாளே" என்று நினைத்தவள் ரித்திகாவைத் தடுத்தாள். ரித்திகா தனக்குப் போதிய நேரம் இல்லாததால் "தான் சீக்கிரம் கிளம்ப வேண்டும்" என்று ரேவதியை அவசரப்படுத்தினாள்.


ஒரு நிமிடம் யோசித்த ரேவதி, ரித்திகாவை ஹாலிலேயே நிற்க வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள்.
ரித்திகாவுக்கு ரேவதி என்ன செய்ய முயற்சிக்கிறாள் என்று ஒன்றும் புரியவில்லை என்றாலும் தாயின் பேச்சைத் தட்ட முடியாமல் அங்கே மணியைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தாள். தன் வீட்டை விட்டு வெளியே வந்த ரேவதி, பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்தாள். வீட்டின் முன்னே ஒரு பனியனும், ஷார்ட்சும் அணிந்திருந்த சந்தோஷ்; ஒரு கையில் காபி கப்புடன் மற்றொரு கையில் யாருடனோ மொபைலில் கால் பேசி கொண்டு இருந்தான்.


தயக்கத்துடன் அவன் அருகே சென்ற ரேவதி அவனைப் பெயர் சொல்லி அழைத்தாள். தன்னை யாரோ அழைப்பதை உணர்ந்த சந்தோஷ், திரும்பிப் பார்த்தான். ரேவதியைப் பார்த்தவுடன், அவள் ரித்திகாவின் அம்மா என்று கண்டுகொண்டான் சந்தோஷ்.

ஏனென்றால் ரேவதியும் அவனுடைய பாட்டியும் பேசிக்கொண்டு இருப்பதை அவன் கவனித்திருக்கிறான் அதனால் உடனே ரேவதி யார் என்று அவனால் அடையாளம் காண முடிந்தது.
தன்னை அழைப்பது தனக்குப் பிடித்த ரித்திகாவின் அம்மாவாயிற்றே... அவளைத் தன்னுடைய வருங்கால அத்தையாகவே தன் மனதிற்குள் நினைத்துப் பூரிப்படைந்தவன், அவசரமாகத் தான் பேசிக்கொண்டு இருந்த காலைக் கட் செய்துவிட்டு ரேவதியைப் பார்த்தான் சந்தோஷ்.


ரேவதி: "சாரிப்பா சந்தோஷ். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" என்று கேட்க,

சந்தோஷ்: "அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க ஆன்ட்டி. சொல்லுங்க." என்றான்.‌

ரேவதி: "நாம இப்ப தான் டைரக்டா ஃபர்ஸ்ட் டைம் பேசுறோம். இப்பவே உன் கிட்ட ஹெல்ப் கேக்கறேன்னு தப்பா நினைக்காதே சந்தோஷ்." என்று சொல்ல,

சந்தோஷ்: "ஐயோ ஆண்ட்டி! நீங்க ஏன் இவ்வளவு ஃபார்மலா பேசுறீங்க..? நீங்களும் எனக்கு அம்மா மாதிரிதான். சொல்லுங்க என்ன ஹெல்ப்..? எதுவா இருந்தாலும் பண்றேன்." என்றான்.

ரேவதி: "என் பொண்ணு ரித்திகாவ உனக்கு தெரியும்ல..?" என்று கேட்க,

சந்தோஷ்: "தெரியும் ஆன்ட்டி. நேத்து மார்னிங் அவங்க கிட்ட பேசினேன்." என்றான்.

ரேவதி: "அப்ப ரொம்ப நல்லதா போச்சுப்பா. உங்க அம்மா சாரதா பிரின்சிபலா வொர்க் பண்றாங்கல்ல... அந்த ஸ்கூல்ல தான்பா ரித்திகாவும் வேலை பாக்கிறா. நேத்து உங்க பாட்டி கிட்ட பேசும் போது தான் எனக்கு உங்க அம்மா தான் அந்த ஸ்கூலோட பிரின்ஸிபல்ன்னு தெரியும். ரித்திகாவுக்கு ரொம்ப காய்ச்சலா இருக்குப்பா. லீவு கேட்டதுக்கு ஆபீஸ்ல லீவ் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க." என்று சொல்ல,

சந்தோஷ்: "நான் வேணா அம்மாவுக்குக் கால் பண்ணி லீவ் கேட்கட்டுமா ஆன்ட்டி..? அம்மா ஸ்கூலுக்குக் கிளம்பி போய்ட்டாங்க." என்றான்.‌

ரேவதி: "இல்ல இல்லப்பா" என்று அவசரமாக மறுத்தவள், "அதுலாம் தப்புபா சந்தோஷ். தெரிஞ்சாவங்கன்னு உடனே அட்வான்டேஜ் எடுத்துக்க கூடாது. ரித்திகாவுக்கும் அது எல்லாம் பிடிக்காது. அண்ட் அவ ஸ்கூலுக்குப் போறேன்னு ரெடி ஆயிட்டா." என்றாள்.


சந்தோஷ்: "இல்லை ஆன்ட்டி பரவால்ல. நான் என் அம்மா கிட்ட பேசுறேன்." என்று மீண்டும் எதையோ சொல்லத் தொடங்கினான்.

ரேவதி: இடையில் அவனைத் தடுத்து நிறுத்தியவள், "அதுலாம் வேணாம்ப்பா. எனக்கு அவளைத் தனியா அனுப்புறதுக்குப் பயமா இருக்கு. எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு. அவளை ஸ்கூல்ல டிராப் மட்டும் பண்ணிட்டு வந்துருறியா...? ப்ளீஸ்...."‌ என்று சொல்ல,

சந்தோஷ்: அவனுடைய அம்மா அங்கே பிரின்ஸிபள் ஆக இருக்கும் போது ஏன் ரித்திகா இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தவன், ரேவதியிடம் மறுத்துப் பேசதான் நினைத்தான் ஆனால் ரித்திகாவுடன் தனியாக பைக்கில் செல்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அதை அவன் தவறவிட விரும்பவில்லை.


எப்படியும் அவன் அவளுடன் செல்வதால்.. அவளைத் தன்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்று நினைத்தவன், ரேவதியிடம் தான் ரித்திகாவை அழைத்துச் செல்வதாகச் சொல்லிவிட்டு ஐந்து நிமிடத்தில் கிளம்பித் தன்னுடைய பைக் சாவியுடன் வெளியே வந்தான்.


அவனைப் பார்த்து ஸ்நேகமாகப் புன்னகைத்து நன்றி சொன்ன ரேவதி, தன் வீட்டிற்குச் சென்று ஹாலில் இருந்த ரித்திகாவிடம் சந்தோஷ் உடன் செல்லுமாறு சொன்னாள். தன்னை ஒரு தெரியாத ஆணுடன் செல்லுமாறு அவளுடைய அம்மாவே சொல்லுவது ரித்திகாவுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருந்தாலும்... வேறு வழி இல்லை என்பதால் ஒப்புகொண்டு சந்தோஷ் உடன் கிளம்பினாள்.


ரேவதிக்கும் தன் மகளை இப்படிச் சரியாகத் தெரியாத ஒரு பையனுடன் அனுப்புவது தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் இந்த வீட்டிற்கு வந்த பின் ரித்திகா பள்ளிக்குச் சென்றவுடன், தன்னுடைய வேலை எல்லாம் முடித்துவிட்டுப் பக்கத்து வீட்டில் தனியாக இருக்கும் சந்தோஷ் இன் பாட்டியுடன் தான் அதிகமாகத் தன்னுடைய நேரத்தைச் செலவிடுகிறாள் ரேவதி.

சந்தோஷின் வீட்டில் சந்தோஷ் உடைய பாட்டி, அம்மா மற்றும் அவன் மட்டுமே இருக்கின்றனர்.
ரித்திகா குடும்பத்தினர் இந்த ஊருக்கு வந்து முழுமையாக மூன்று நாட்கள் மட்டுமே ஆகி இருந்தாலும்... ரேவதிக்கும் சந்தோஷின் பாட்டிக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பு இருந்தது. ரேவதியும், சுதாகரும், ஒரே அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்தனர். அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து பின் பெற்றோர்களை எதிர்த்து திருமணமும் செய்து கொண்டனர்.


ரித்திகாவுக்கே திருமண வயது வரும் அளவிற்கு நாட்கள் உருண்டோடி இருந்தும் இன்னும் இவர்களை அவர்களுடைய பெற்றோர் ஏற்று கொள்ளவில்லை. அதனால் சந்தோஷின் பாட்டியுடன் பேசும் போது ரேவதிக்குத் தன்னுடைய அம்மாவிடம் பேசுவதைப்போல் ஒரு உணர்வு கிடைப்பதால் அவருடன் அதிகம் நேரம் செலவிடுவதை விரும்புகிறாள் ரேவதி.


சந்தோஷின் பாட்டிக்கும் ரேவதியை மிகவும் பிடித்துவிட்டது. ஏனென்றால் தன்னுடைய ஒரே மகளும் தன்னைத் தனியாக விட்டுவிட்டு எப்போதும் வேலைக்குச் சென்றுவிடுவது அவருக்கு எப்போதும் ஒரு வருத்தமாகவே இருந்தது. இப்போது ரேவதி வந்தவுடன் தனக்குப் பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இருந்தார் சந்தோஷின் பாட்டி.


ரித்திகாவைச் சந்தோஷ் உடன் அனுப்பி வைத்துவிட்டுச் சந்தோஷ் வீட்டிற்குச் சென்ற ரேவதி, தான் சந்தோஷ் உடன் ரித்திகாவை அனுப்பி வைத்து இருப்பதாகச் சந்தோஷின் பாட்டியிடம் சொன்னாள். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அந்தப் பாட்டி, தன் பேரனைப் பற்றிப் பெருமையாகப் பேசிவிட்டுப் பின் "நீ ரித்திகாவைப் பற்றி கவலைப்படத் தேவை இல்லை. சந்தோஷ் அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வான்" என்று ரேவதிக்கு உத்திரவாதம் அளித்தார்.


ஏதோ ஒரு தைரியத்தில் ரித்திகாவைச் சந்தோஷ் உடன் அனுப்பி வைத்துவிட்டாள் ரேவதி. ஆனாலும் அவளுக்கு அவனுடைய பாட்டியுடன் பேசிய பின் தான் நிம்மதியாக இருந்தது.


அங்கே தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்கில் ரித்திகாவைத் தனக்குப் பின்னே அமர வைத்து மிதமான வேகத்தில் ஸ்கூலை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான் சந்தோஷ். ரித்திகாவுக்கு அவளுடைய தலைமுடியைச் சரியாகச் சிவுவதற்குப் போதிய நேரம் இல்லாததால் அப்படியே அதைத் தூக்கி போனி டெய்லில் போட்டுவிட்டு இருந்தாள். அதனால் காற்றில் அவளுடைய நீண்ட சுருள் கூந்தல் அங்கும் இங்கும் ஆடியது.


காய்ச்சலால் சோர்ந்து போய் இருந்தாலும் ரித்திகாவின் அழகிய முகம் ஒளி வீசிக் கொண்டுதான் இருந்தது. அவளுடைய முகத்தையும் காற்றில் ஆடும் கூந்தலையும் சைடு மிரர் வழியாகப் பார்த்து ரசித்தபடியே பைக்கை ஓட்டி கொண்டு இருந்தான் சந்தோஷ்.


சந்தோஷின் மனதில்...
பறக்கும் ராசாளியே ....
ராசாளியே .... நில்லு ...
இங்கு நீ வேகமா?
நான் வேகமா..? சொல்லு...
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பறவை போலாகினேன்
போலாகினேன் நெடுந்தூரம்
சிறகும் என் கைகளும்
என் கைகளும் ஒன்றா
ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பார்ப்போம் பார்ப்போம்
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை...
மௌனம் பேசாமலே
பேசாமலே செல்ல
ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல...
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ ...
ஆ குளிர்காய்கின்ற தீ
என்ற பாடல் தான் ஓடி கொண்டு இருந்தது.


ஆனால் ரித்திகாவோ தன் முன் சந்தோஷ் என்று ஒருத்தன் இருப்பதையே மறந்துவிட்டு வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருந்தாள். இப்படியே அவர்களுடைய பயணம் தொடர சில நிமிடங்களிலேயே வந்தடைந்தான் சந்தோஷ்.
சந்தோஷின் பைக்கில் இருந்து கீழே இறங்கிய ரித்திகா, அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு... வேக வேகமாக ஆபீஸ் ரூமிற்குள் சென்றாள். ரித்திகா பத்திரமாக உள்ளே சென்று விட்டதை உறுதி செய்துவிட்டு அந்தப் பள்ளியில் இருந்து வெளியே வந்த சந்தோஷ், தன்னுடைய பைக்கில் ரித்திகா அமர்ந்திருந்த இடத்தை தன்னுடைய கைகளால் தொட்டுப் பார்த்தான்.


அவனுக்கு அந்தச் சீட்டைத் தொட்டுப் பார்க்கும்போதே அவனுக்குள் ஒரு சிலிர்ப்பும், குறுகுறுப்பும், வந்தது. தனக்குப் பிடித்த சினிமா நடிகருடன் கைக் குலுக்கிவிட்ட பின் தன்னுடைய கையை இரண்டு, மூன்று நாட்களுக்கு.. கழுவாமலும், குளிக்காமலும், இருக்கும் தீவிர ரசிகன் போல் இந்தச் சந்தோஷ் ரித்திகாவின் ரசிகன் ஆகிவிட்டான் போல.


இனி இவனுடைய பைக்கை இவன் வாட்டர் வாஷ் செய்வானோ... செய்ய மாட்டானோ... அது கடவுளுக்குத்தான் வெளிச்சம். சந்தோஷ் தன்னுடைய பைக்கைப் பார்த்தபடி இதே பைக்கில் ரித்திகாவைத் திருமணம் செய்து அவளோடு ஊர் முழுக்க சுற்றி வர வேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு இருந்தான்.


அப்போது அவனுடைய சிந்தனையைக் கலைக்கும்படி அங்கே இருந்த செக்யூரிட்டி அவனை அழைத்தார். அவன் நடு ரோட்டில் பைக்கைப் பார்க் செய்து வைத்து இருந்ததால் அந்தச் செக்யூரிட்டி அவனிடம் "பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்புமாறு" அறிவுறுத்தினார்.
அந்தச் செக்யூரிட்டியைப் பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்த சந்தோஷ், தன்னுடைய பைக்கைத் ஸ்டார்ட் செய்து கிளம்பினான். "யார்ரா இவன் நம்மளப் பார்த்து இப்படி சிரிக்கிறான்" என்று குழப்பத்துடன் தன் மனதுக்குள் நினைத்த செக்யூரிட்
டி.. பின் தன்னுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

-நேசம் தொடரும்...

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: தாபம் 28
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.