அத்தியாயம் 12
அஸ்வின் தனக்கு கொடுத்துவிட்டு சென்ற தண்டனையை நிறைவேற்றுவதற்காக கையில் துவைக்கும் துணிகளுடன் லிஃப்டில் ஏரிய ஐஸ்வர்யா மொட்டை மாடிக்கு சென்றாள். கீதாவும் அவள் ஒழுங்காக வேலை செய்கிறாளா என்று அஸ்வின் கவனிக்கச் சொன்னதால், அவளை பின் தொடர்ந்து சென்றாள். சுத்தமாக இருந்த ஆடைகளை தண்ணீர் ஊற்றி டிடர்ஜென்ட் பவுடர் போட்டு ஊற வைத்த ஐஸ்வர்யா தலை எழுத்தே என பழக்கமே இல்லாத துணி துவைக்கும் வேலையை செய்ய தொடங்கினாள்.
அப்படியே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்தது. அது மதிய நேரம் என்பதால் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருக்க, தன் உடலில் உள்ள சக்திகள் அனைத்தும் வியர்வையில் வடிந்து கொண்டிருந்தாலும் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கடமையே கண்ணாக துணி துவைத்து கொண்டு இருந்தாள் ஐஸ்வர்யா.
அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்த கீதா “ இந்த பொண்ண நானும் சின்ன வயசுல இருந்து பாத்துட்டு இருக்கேன். ரொம்ப அன்பான நல்ல பொண்ணு நினைச்சேன். பெரியய்யா, அம்மா கூட அவ்ளோ பாசமா பழகிட்டு இருந்தா. எப்படியும் அஸ்வின் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த பொண்ணு தான் இந்த வீட்டுக்கு மருமகளா வருவான்னு நான் நெனச்சேன். அதே மாதிரி நடந்துருச்சு.
ஆனா அதெல்லாம் நடக்கும்போது பெரியம்மாவும், அய்யாவும் உயிரோடு இருக்க மாட்டாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல. எவ்வளவோ நடந்துருச்சு. இப்ப கூட அவ வீட்டு ஆளுங்களோட சேர்ந்து இந்த பொண்ணு அஸ்வின் தம்பியையும், இந்த குடும்பத்தையும் ஏமாத்தி இருப்பான்னு என்னால நம்பவே முடியல.” என்று நினைத்தாள்.
அவள் எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவளால் ஐஸ்வர்யாவை தவறானவளாக கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இப்போதும் கூட அஸ்வின் கொடுத்த பனிஷ்மெண்டை சிறிதும் ஓப்பி அடிக்காமல் அவள் சிரத்தையுடன் தனக்கு தெரியாது என்றாலும் முழு முயற்சியை போட்டு செய்து கொண்டு இருப்பதை கவனித்து இறக்கப்பட்ட கீதா “கண்டிப்பா இந்த பொண்ணு மேல தப்பு இருக்காதுன்னு என் மனசு சொல்லுது. உண்மை எதுவா வேணா இருக்கட்டும். என்னால என் மனசாட்சிக்கு விரோதமா நடக்க முடியாது.” என்று நினைத்து எழுந்து அவள் அருகில் சென்று “போதும் விடுங்க மா. இங்க இருக்கிற எல்லாமே நல்லா துவைச்ச துணி தான். இப்ப இதை கஷ்டப்பட்டு நீங்க மறுபடியும் துவைக்கிறதுனால என்ன ஆயிட போகுது? பேசாம அப்படியே தண்ணியில நனைச்சு புழிஞ்சு காய போட்டுருங்க. அஸ்வின் தம்பி கிட்ட நான் எதுவும் சொல்ல மாட்டேன். இப்படி என் கண்ணு முன்னாடி நீங்க கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல.” என்றாள்.
“அட்லீஸ்ட் நீங்களாவது என் கிட்ட நல்ல விதமா பேசுறீங்களே.. அதுவரைக்கும் எனக்கு ரொம்ப சந்தோசம் தான் அக்கா . நீங்க என்ன பாக்குறதுலயே உங்களுக்கு என் மேல கோபம் இல்லைன்னு தெரியுது. அப்ப என் மேல தப்பு இருக்காதுன்னு நீங்க நம்புறீங்க தானே.. இப்போதைக்கு எனக்கு அதுவே போதும்.
உங்களுக்கு என் மேல வந்திருக்க நம்பிக்கை அஸ்வினுக்கும் வரணும். என்னால என் அஸ்வினுக்கு எப்பயும் துரோகம் செய்ய முடியாதுன்னு அவனுக்கு நான் நிரூபிக்கணும். அதுக்காக இந்த மாடியில் இருந்து அவன் என்ன கீழே குதிச்சு சாக சொன்னா கூட நான் அதை யோசிக்காம செய்வேன். இப்படி டிரஸ் வாஷ் பண்றது எல்லாம் ஒரு விஷயமே இல்ல! என்ன.. இதுக்கு முன்னாடி நான் இதை செஞ்சது இல்லைன்றதுனால கொஞ்சம் கஷ்டமா இருக்கு. பரவால்ல.. என் அஸ்வின்காக நான் என்ன வேணாலும் செய்வேன். நீங்க என்ன நினைச்சு வருத்தப்படாதீங்க.
உங்களுக்கு என்ன இப்படி பாக்க கஷ்டமா இருந்துச்சுன்னா, பேசாம நீங்க கீழ போயிடுங்க. நீங்க இங்க இல்லைனாலும் எனக்கு அஸ்வின் கொடுத்த வேலையை நான் கரெக்டா செய்வேன். நீங்க என்ன தாராளமா நம்பலாம்.” என்று சொல்லிவிட்டு கீதாவை பார்த்து மெல்லிய புன்னகை சிந்திய ஐஸ்வர்யா தொடர்ந்து அங்கே இருந்த அஸ்வினின் ஆடைகளை துவைக்க தொடங்கினாள்.
ஹாஸ்பிடலுக்கு சென்றிருந்த அஸ்வின் அக்ஷயாவிற்கு சர்ஜரி முடிந்து அவளுக்கு கான்ஷியஸ் வருவதற்காக காத்திருந்தான். இதற்கிடையில் அவனை தேடிக் கொண்டு அங்கே சென்ற விவேக் “மச்சான்.. நம்ம செக்யூரிட்டி டீம் இன்சார்ஜ் சந்திரன் அண்ணா இருக்காருல.. அவர் எனக்கு கால் பண்ணாரு டா. பெரிய போலீஸ் டீம் ஃபார்ம் பண்ணி ஐஸ்வர்யாவோட ஃபேமிலில இருக்கிறவங்களுக்கு என்ன ஆச்சுன்னு பலமா இன்வெஸ்டிகேஷன் நடக்குதாம்.
எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் இந்த பிராப்ளமை முடிச்சு வைக்கிற மாதிரி நம்ம ஏதாவது பண்ணனும்ன்னு சொன்னாரு. உன்னோட இன்ஸ்ட்ரக்சனுக்காக தான் எல்லாரும் வெயிட்டிங். நீ என்ன பண்ணனும்னு சொன்னினா பண்ணிடலாம்.” என்று சொல்ல, அவர்கள் இப்போது மருத்துவமனையில் இருப்பதால் இந்த இடத்தில் முக்கியமான விஷயங்களை பேசுவது சரியாக இருக்காது என்று நினைத்த அஸ்வின் அக்ஷயாவுடன் ஹாஸ்பிடலில் வித்யாவை இருக்க சொல்லிவிட்டு அங்கேயும் பாதுகாப்பிற்கு சில பாடிகார்டுகளை நிறுத்திவிட்டு தான் நேரடியாக விவேக் உடன் சென்று களத்தில் இறங்கினான்.
அனைத்தையும் முடித்துவிட்டு அவர்கள் இரவு 7 மணி அளவில் அஸ்வினின் பங்களாவிற்கு சென்றார்கள். ஹாலில் அமர்ந்திருந்த அஸ்வினின் சொந்த பந்தங்கள் அவனைப் பார்த்ததும் நலம் விசாரித்தார்கள். “நான் தான் கொஞ்ச நாளைக்கு யாரையும் பாக்க விரும்பல. துக்கம் விசாரிக்கிறேன்னு என் முன்னாடி வந்து நிக்காதீங்கன்னு என் மம்மியும் டாடியும் இறந்து போனப்பையே சொன்னேன்ல.. மறுபடியும் மறுபடியும் ஏன் இங்கே வந்து நிற்கிறீங்க?” என்று உடைந்த குரலில் கேட்டான் அஸ்வின்.
“என்ன பேசுற அஸ்வின்? எங்க அண்ணனும், அண்ணியும் அநியாயமா செத்து போயிருக்காங்க. இன்னும் முறைப்படி அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு எதையும் செஞ்சு அவங்கள நல்லபடியா நம்ம மேல கூட அனுப்பி வைக்கல. பாசத்துல நீ தனியா கஷ்டப்படுறியேன்னு உன்ன பாக்கறதுக்கு வந்தா நீ இப்படித் தான் என் கிட்ட பேசுவியா?” என்று அஸ்வினின் அத்தை திலகவதி கேட்க, “யாரோ ஒரு சிலர் தப்பானவங்களா இருந்தா எல்லாருமே அப்படித் தான் இருப்பாங்களா அஸ்வின்? எங்க அண்ணன் அண்ணியை கல்யாணம் பண்ண கொஞ்ச நாள்லயே நான் சென்னை போறேன். பெருசா பிசினஸ் பண்ணி சம்பாதிக்க போறேன் அதுக்கு காசு வேணும்னு கேட்டு சொத்தை தனியா பிரிச்சு வாங்கிட்டு இங்க கிளம்பி வந்துட்டாரு.
அவர் சொன்ன மாதிரி எல்லாத்தையும் சரியா செஞ்சு நல்ல நிலைமைக்கு வந்தாரு தான். நாங்களும் அவரை நினைச்சு சந்தோஷப்பட்டோம். ஆனா அந்த தினகரன் படுபாவி கூட இருந்து இப்படி ஒரு சதியை செஞ்சு எங்க அண்ணனையும், அன்னியையும் கொன்னுப்புடுவானு யார் கனவு கண்டாங்க? சின்ன வயசுல நாங்க எப்படி இருந்தமோ, அதே மாதிரி இப்ப வரைக்கும் நாங்க அண்ணன் தங்கச்சி எல்லாரும் அதே பாசத்தோட தான் இருக்கோம். உங்க அளவுக்கு எங்களுக்கு வசதி வாய்ப்பு இல்லாம இருக்கலாம். ஆனா நாங்களும் ஏதோ சின்னதா தொழில் பண்ணி ஊருக்குள்ள கௌரவமா வாழறவங்க தான்.
அடுத்தவன் தப்பு பண்ணிட்டான்றதுக்காக, உன் சொந்தக்காரங்களயே நீ ஒதுக்கி வைக்கணும்னு நினைக்கிறது எப்படி சரியா இருக்கும்? முதல்ல முறைப்படி அண்ணனையும், அண்ணியையும் அடக்கம் பண்ணனும். அப்ப தான் அவங்க ஆத்மா சாந்தி அடையும்.” என்றார் அஸ்வினின் சித்தப்பா வாசுதேவன்.
“இங்க வேலை பாக்குறவங்க உன்னையும், உன் குடும்பத்தையும் இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்தின அந்த தினகரனோட பொண்ண நீ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்றாங்க.. அது உண்மையா மாமா? நீ எங்கள நம்பி உன் பக்கத்துல சேக்க மாட்டேங்குற. ஆனா உங்களுக்கு துரோகம் பண்ணவள கல்யாணம் பண்ணிக்க எப்படி மாமா உனக்கு மனசு வந்துச்சு?” என்று கேட்ட திலகாவின் மகள் மனிஷா அஸ்வின் அருகில் சென்றாள். அவள் கண்கள் கலங்கி இருந்தது.
இவர்கள் இப்படி மாறி மாறி கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லாத அஸ்வின் பெரியவர்களிடம் எடுத்து எரிந்து பேசினால் நன்றாக இருக்காது என்பதால் மனிஷாவை கோபமாக பார்த்து “நான் எப்ப என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும். உன் வேலை என்னமோ அதை மட்டும் பாரு. என்னை யார் கொஸ்டின் பண்ணாலும் எனக்கு பிடிக்காது.” என்று கனீர் என்ற குரலில் சொன்னான்.
தன் மகளை எப்படியாவது அஸ்வினுக்கு திருமணம் செய்து வைத்து தனது அண்ணன் குடும்பத்தினருடன் நல்ல பிணைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பல வருடங்களாகவே கனவு கண்டு கொண்டிருந்த திலகா அஸ்வின் தன் மகளை ஒரு ஆளாகவே மதிக்காமல் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வேகமாக அவன் அருகில் சென்று, “நீ பண்றது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல அஸ்வின். உங்க அப்பா, அம்மா இரண்டு பேரும் பிசினஸ் பிசினஸ்ன்னு தான் இருந்தாங்க. அப்ப எல்லாம் ஒரு வேலைக்காரி மாதிரி இங்க வந்து இருந்து உன்னையும் அக்ஷயாவையும் பாத்துகிட்டது நான் தான். நான் பெத்த புள்ளைங்க வேற நீங்க வேறன்னு நான் நினைச்சதே இல்ல.
சில சமயம் மனிஷாவையும், பாலாவையும் கூட விட்டுட்டு நான் எங்க அண்ண மேலையும் உங்க மேலயும் இருக்கிற பாசத்துல இங்கயோ தங்கி இருந்திருக்கேன். அப்பையெல்லாம் இந்த அத்தை உனக்கு நல்லவளா இருந்தா. இப்ப நாங்க வேண்டாதவங்களா போயிட்டமா? எங்க அண்ணன் இருந்திருந்தா நீ இப்படி எல்லாம் எங்க கிட்ட பேசுறதை கேட்டுட்டு அவர் சும்மா இருந்திருப்பாருன்னு நினைக்கிறியா? ஏற்கனவே எங்க அண்ணனும் அண்ணியும் போன துக்கத்தில இருந்து இன்னும் மீண்டு வர முடியாம நான் மனசு உடைஞ்சு போயிருக்கேன். இன்னும் என்னை கஷ்டப் படுத்தாத பா.” என்று சொல்லிவிட்டு அழுதாள் .
திலகவதி சொல்லும் அனைத்தும் உண்மை தான்.. எத்தனையோ நாட்கள் அவளது பராமரிப்பில் தான் அஸ்வினும், அக்ஷயாவும் வளர்ந்தார்கள். அதை அவனால் மறுக்க முடியாதே.. அதனால் “இந்த உலகத்துல இதுக்கு மேல யாரை நம்புறது நம்ப கூடாதுன்னே எனக்கு தெரியல. மொத்தமா யாரும் வேண்டாம்னு ஒதுங்கி போகவும் முடியல. எல்லாரும் நமக்கானவங்க நம்மள ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி பழகவும் முடியல.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட அஸ்வின், “எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு அத்தை. நான் பண்றது சரியா தப்பான்னு யோசிக்கிற மனநிலையில நான் இல்ல. தயவு செஞ்சு யாரும் என் கிட்ட எதுவும் கேட்டு என்ன கஷ்டப்படுத்தாதீங்க. நீங்க சொன்ன மாதிரி எங்க அப்பாவுக்கும் உங்க மேலையும், சித்தப்பா மேலையும் பாசம் அதிகம் தான்.
உங்கள கண்டிப்பா அவர் எடுத்து எரிஞ்சு பேச மாட்டாரு. அது எனக்கு நல்லா தெரியும். நீங்க எல்லாரும் எத்தனை நாள் வேணும்னாலும் இங்க இருங்க. உங்களுக்கு அதுக்கு உரிமை இருக்கு. பட் ப்ளீஸ் உங்க கிட்ட கெஞ்சி கேட்டுக்குறேன்.. என் விஷயத்துல மட்டும் தலையிடாதீங்க.” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு வேக எட்டுக்கள் வைத்து லிஃப்டில் ஏரி தனது ரூமிற்கு சென்று விட்டான்.
– முத்தங்கள் தொடரும்..