Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 13

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 13

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 13

 அஸ்வினின் தந்தை வழி உறவுக்காரர்கள் அவனது வீட்டிற்கு வந்து இறந்து போன கருணாகரன் மற்றும் மலர்விழியின் இறுதி சடங்கை பற்றி விசாரிக்க, தான் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்று கோபமாக சொல்லிவிட்டு லிஃப்ட் மூலமாக தனது ரூமிற்கு சென்றான் அவன்.

கதவை திறந்து பார்க்க, எங்கும்  இருள் பூசி இருந்தது அஸ்வினின் மாஸ்டர் பெட்ரூம். “லைட்டை கூட போடாம அவ எங்க போய் தொலைஞ்சா?” என்று முனுமுனுத்தபடி தனது ரூமிற்குள் நுழைந்த அஸ்வின் அனைத்து லைட்டுகளையும் ஒளிர விட்டான். பின் தனது கறை படிந்து இருக்கும் உடலை முதலில் சுத்தப்படுத்தினால் தான் தன்னால் நிலையாக எதையும் யோசிக்க முடியும் என நினைத்து நேராக குளிக்க சென்றான். 

“என்ன அம்மா இது.. நான் அந்த பொண்ண பத்தி கேட்டுட்டு இருக்கும்போதே அஸ்வின் மாமா இப்படி கோபமா பேசிட்டு போயிடுச்சு ! நானும் வந்ததுல இருந்து அவ இந்த வீட்ல எங்கயாவது இருக்காளான்னு தேடிக்கிட்டே இருக்கேன். அவளையும் ஆளைக் காணோம். மாமாவும் எனக்கும் அந்த பொண்ணுக்கும் சம்பந்தமில்லைன்னு சொல்லிட்டு போகல. இப்ப அவ இங்க இருக்காளா இல்லையான்னு தெரியாம எனக்கு தலையை அப்படியே பிச்சுக்கலாம் போல இருக்கு!”  என்று மனிஷா தன் அம்மா திலகவதியிடம் புலம்ப, “நானும் அவளை தான் தேடுறேன். ஆனா அவ இங்க இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது.” என்று நினைத்த மனிஷாவின் அண்ணன் பாலகிருஷ்ணன் ‌ அமைதியாக தாய் மற்றும் மகளின் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தான். 

“அஸ்வின் பொதுவா இப்படி எல்லாம் பேசுற ஆளே இல்ல. அவன் நான் வளத்த பையன் எனக்கு அவனை பத்தி தெரியாதா? அவன் தங்கமான புள்ள. இப்ப அண்ணனும், அண்ணியும் போன துக்கத்தில் அவன் என்ன பண்றதுன்னு தெரியாம இப்படி ஆளே மொத்தமா கோவக்காரனா  மாறி போய்ட்டான். 

இது எல்லாத்துக்கும் அந்த சிறுக்கி மவ ஐஸ்வர்யாவும், அவ குடும்பமும் தானே காரணம்! அப்படி இருக்கும்போது போயும் போயும் இந்த உலகத்தில வேற பொண்ணே கிடைக்காத மாதிரி நம்ப அஸ்வின் அவள போய் கல்யாணம் பண்ண போறானா? நீதான் வந்ததுல இருந்து அஸ்வினுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு லூசுத்தனமா உளறிட்டு இருக்க! 

இந்த மாதிரி பேசி அவனை கோபப்படுத்தாம, அவனுக்கு புடிச்ச மாதிரி நடந்துகிட்டு உன் மாமன் மனசுல இடம் பிடிக்கிற வழிய பாரு. நீ பொறந்ததுல இருந்தே எங்க அண்ணன் மகனுக்கு உன்ன கட்டி வைக்கணும்னு நான் எவ்ளோ ஆசைப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும். அதுல எல்லாம் மண்ணள்ளி போடுற மாதிரி நீயே பேசாத டி.” என்று திலகா கண்டிப்புடன் சொல்ல, 

“அது இல்லமா.. என் ஃபிரண்டு ஒரு ரிப்போர்டரா  இருக்கா.. அவ தான் நம்ம அஸ்வின் மாமாவும் அந்த ஐஸ்வர்யாவும் சீக்ரெட்டா ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னா. அவங்க கல்யாணத்துக்கு அப்புறமா ஐஸ்வர்யாவோட குடும்பமே அப்படியே தலைமுறைவா ஆயிட்டாங்க. அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு யாருக்குமே தெரியல. போலீஸ் கூட அவங்க தேடிட்டு இருக்காங்கன்னு சொன்னா. அவ வேலை பாக்குறது பெரிய நியூஸ் சேனல். 

அவ எதுக்குமா சம்பந்தமே இல்லாம என் கிட்ட பொய் சொல்லணும்? எனக்கு என்னமோ அஸ்வின் மாமா தான் ஐஸ்வர்யாவ கல்யாணம் பண்ணி நம்ம கண்ணுல அவ படக் கூடாதுன்னு எங்கேயோ அவளை தனியா வீடு எடுத்து மறைச்சு வச்சுருக்காருன்னு தோணுது. அப்படி மட்டும் இருந்துச்சுன்னா, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நீங்க அவருக்கு என்ன கட்டிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டது இல்லாம, என் மனசுலையும் அவன் தான் என் புருஷன்னு ஆசையை விதைச்சிட்டீங்க . இப்ப என்னால என் மனசை எல்லாம் மாத்திக்க முடியாது.” என்று சொல்லிவிட்டு சினுங்கினாள் மோனிஷா. 

இவர்கள் அனைவரும் ஐஸ்வர்யாவையே டார்கெட் செய்து கொண்டிருப்பதால் பேச்சை மாற்ற வேண்டும் என்று நினைத்த மனிஷாவின் அண்ணன் பாலா “இப்ப இது தான் உங்களுக்கு ரொம்ப முக்கியமா? அஸ்வின் அத்தையையும், மாமாவையும் இன்னும் அடக்கம் பண்ணலைன்னு அவன் ஃபிரண்டு விவேக் இப்ப தான் சொன்னான். 

அஸ்வினுக்கு கோபம் குறைஞ்சதுக்கு அப்புறமா முதல்ல அதை பத்தி அவன் கிட்ட பொறுமையா பேசுங்க. அவங்க இறந்து இன்னையோட மூணு நாள் ஆகுது‌. முறையா அவங்களோட உடம்ப அடக்கம் பண்ண வேண்டாமா? மலர்விழி அத்தைக்கு சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லையா என்ன? ஏன் இவ்வளவு நாள் ஆகியும் யார் வரல? இதுக்கு முன்னாடியும் அவுங்களுக்கு வேண்டியவங்கன்னு யாரும் இங்கு வந்து நின்னு நான் பார்த்ததில்லை. 

அத்தையும்,  மாமாவும். இறந்த அன்னைகி  வீட்டுக்கு வந்து அவங்க பிசினஸ் சர்க்கிள்ல இருக்குறவங்க, நம்ம சொந்தக்காரங்க மட்டும் தான் துக்கம் விசாரிச்சிட்டு போனாங்க. மத்தபடி அத்தையோட சொந்தக்காரங்கன்னு யாரும் வந்த மாதிரியே எனக்கு தெரியலையே!” என்றான். 

“உங்க அத்தையே ஒரு அனாதை. அவங்களுக்கு சொந்தக்காரன்னு யார் வந்து நிப்பாங்க? மலர்விழி அண்ணி ஏதோ ஒரு ஆசிரமத்தில வளர்ந்தவங்களாம். படிச்சு முடிச்சு நம்ம ரைஸ் மில்லுக்கு  கணக்கு எழுத வேலை பார்க்க வந்திருக்காங்க. உங்க கருணாகரன் மாமா அப்ப‌ தான் வெளிநாட்டில படிச்சிட்டு நம்ம ஊருக்கு வந்தாரு. 

அவருக்கு மலர்விழி அண்ணியை பார்த்த உடனே புடிச்சிருச்சு. ஆனா அவங்களோட பின்புலம் சரியில்லைன்னு எங்க அப்பா அவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கவே இல்ல. என்ன இருந்தாலும் அவங்கள தான் கட்டுவேன்னு எங்க அண்ணன் சண்டை போட்டு என் தாத்தா சொத்தை எனக்கு பிரிச்சு குடுங்கன்னு கோர்ட்ல கேஸ் போட்டுட்டாரு.

ஏதோ ஒரு பொண்ணுக்காக நம்ம பையன் கோர்ட்டு வரைக்கும் போய்ட்டானேன்னு எங்க அப்பாவுக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு. பெத்த பையன்  கூட கோர்ட்ல கேஸ்னு அலையணுமான்னு அந்த மனுஷனுக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வந்து எங்க அண்ணன் கேட்ட சொத்தை பிரிச்சு கொடுத்து எப்படியோ போங்கன்னு அனுப்பி விட்டுட்டாரு.  அப்புறம் தான் அவங்க இங்க சென்னை வந்து அவங்க கிட்ட இருந்த காசை பிசினஸ் பண்ணி நம்மள விட இப்ப பெருசா வளர்ந்து நிக்கிறாங்க. 

நம்ம ஊர விட்டுட்டு சென்னைக்கு வந்து பொழைச்சா இப்படி பெரிய தொழிலதிபராகலாம்னு எனக்கு மட்டும் அப்பவே தெரிஞ்சிருந்தா, எங்க அப்பா சொல்றாருன்னு ஒன்னும் இல்லாத அவரோட ஃப்ரெண்டோட பையன் உங்க அப்பாவ கல்யாணம் பண்ணாம எனக்கும் சொத்தை பிரிச்சு கொடுங்கன்னு சண்டை போட்டு வாங்கி இங்க வந்து எங்க அண்ணன் கூட சேர்ந்து நானும் பிஸ்னஸ் பண்ணி பெரிய ஆள் ஆகி இருப்பேன். ம்ம்.. இப்ப எங்க அண்ணனும் போய் சேர்ந்துட்டாரு. எல்லாம் முடிஞ்சு போச்சு!” பழைய கதை அனைத்தையும் ஞாபகப்படுத்தி சொன்னாள் திலகா. 

“நான் அத்தையோட சொந்தக்காரங்களை பத்தி தானே கேட்டேன்..  எங்கெங்கயோ போய் இப்ப எதுக்குமா தேவையில்லாம அப்பாவை அசிங்க படுத்துற மாதிரி பேசுறீங்க? அவரை மாதிரி ஒருத்தர் கிடைக்கிறதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும்.”  என்று பாலா கோபப்பட, “அட விடு டா.. உங்க அம்மா என்ன இன்னைக்கு  நேத்தா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கா? உங்க அம்மாவை எல்லாம் எவன் தலையிலையும் கட்ட முடியாதுன்னு தான் என்ன மாதிரி ஒரு இளிச்சவாயன் கிடைச்சதும் உடனே உங்க தாத்தா இவளை என் தலையில கட்டி வச்சிட்டாரு. 

நானும் என்னோட தலையெழுத்தேன்னு இத்தனை வருஷம் இவ கூட குப்பை கொட்டிட்டேன். இவளை பத்தி பேசி நம்ம எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்? நீ, வா நம்ப ரெண்டு பேரும் போய் பொறுமையா அஸ்வின் கிட்ட பேசலாம். அவன் என் தங்கமான பையன். நம்ம சொல்ற மாதிரி சொன்னா எதுவா இருந்தாலும் அவன் புரிஞ்சிக்குவான்.” என்ற திலகாவின் கணவர் மனோகரன் தன் மகனை வெளியில் வர சொல்லி அழைத்தார்.

“ஆமா ஆமா இவர் பெரிய இவரு.. இந்த மகராசன் மாதிரி ஊர்ல எந்த மாப்பிள்ளையும் கிடைக்க மாட்டாருன்னு எங்க அப்பா அப்படியே தவம் கிடந்து இவருக்கு என்ன கட்டி வச்சாராக்கும்.. எங்க அண்ணன் பண்ண காரியத்துல எங்க அப்பாவுக்கு இருந்த சோகத்துல அப்படியே உடம்பு சரி இல்லாம போயிருச்சு. அதான் நமக்கு ஏதாவது ஆயிட்டா இந்த ஒத்த பொம்பள புள்ள தனியா  நிக்குமேனு நினைச்சு என் மேல இருக்கிற பாசத்துல நம்ம ஸ்நேகிதன் மவன் ஒன்னு இல்லாதவனா இருந்தாலும் நல்லவனா இருக்கானேன்னு இவருக்கு என்ன கட்டி வச்சாங்க. 

அப்பா இறந்ததும் நம்ம வீட்டோட இவர் ஒட்டிக்கிட்டாரு. இதுல என்னமோ இவர் எனக்கு வாழ்க்கை பிச்சை போட்ட மாதிரி இஷ்டத்துக்கு அளந்து விடுவது!” என்று திலகவதி மீண்டும் ராகம் பாடத் தொடங்கி விட, தன் அம்மா பேச தொடங்கினால் அவள் வாயை மூட மாட்டாள் என்று தெரிந்ததால் அவளிடம் பதில் பேசிக் கொண்டிருக்காமல் தன் அப்பாவை அழைத்துக் கொண்டு சத்தமின்றி அந்த அறையை விட்டு வெளியேறினான் பாலா. 

அவர்கள் லிஃப்ட் மூலமாக அஸ்வினின் அறையை நோக்கி சென்று கொண்டிருக்க, குளித்து ஆடை மாற்றிய அஸ்வின் அவன் வந்ததில் இருந்து ஐஸ்வர்யா அவனது கண்களுக்கு சிக்காததால் அவளைப் பற்றி கீதாவிடம் கேட்க நினைத்து கீழே வருவதற்காக லிஃப்ட் பட்டனை அழுத்தினான். இப்போது அதை பயன்பாட்டில் இருந்ததால், லிஃப்ட் மேலே வராமல் போக, “ச்ச்.. இந்த டைம்ல யாரு லிஃப்ட்ல மேலே போயிட்டு இருக்காங்க?” என்று தனக்குள் முணுமுணுத்த அஸ்வின் அவனுக்கு என்னவோ உடனே சென்று ஐஸ்வர்யாவை பார்க்க வேண்டும் போல இருந்ததால் அந்த லிஃப்ட் மேலே வந்து நிற்கும் வரை கூட காத்திருக்காமல் அருகில் இருந்த படிகள் வழியாக அவசரமாக கீழே இறங்கி சென்றான். 

திடீரென்று வீட்டிற்கு ஆட்கள் ஏராளமானவர்கள் வந்திருந்ததால் ஏற்கனவே வேலை செய்பவர்களுடன் தானும் இணைந்து எக்கச்சக்க சமையல் வேலைகளை செய்து கொண்டிருந்த கீதா கிச்சனில் பிஸியாக இருந்தாள். “கீதா அக்கா.. கீதா அக்கா..!!” என்று அவளை அழைத்தபடி கிச்சனுக்கு சென்ற அஸ்வின் “எங்கக்கா அவ? நான் கொடுத்த அந்த சின்ன பனிஷ்மென்ட் கூட செய்ய முடியாம பயந்து இந்த வீட்டை விட்டு அதுக்குள்ள ஓடிப் போயிட்டாளா?” என்று உள்ளுக்குள் ஐஸ்வர்யாவை பற்றி நினைக்கும் போது பதட்டம் இருந்தாலும் வெளியில் நக்கலாகவே கேட்டான். 

“ஐஸ்வர்யா அம்மாவா?  அவங்கள நானும் ரொம்ப நேரமா பாக்கலையே தம்பி! நீங்க அவங்களை துணி துவச்சு வைக்க சொல்லிட்டு போனதுக்கு அப்புறமா நானும் அந்த பொண்ணு மொட்டை மாடிக்கு போனோம். ரொம்ப நேரமா அங்க தான் இருந்தோம். அப்புறம் திலகா அம்மாவும், மத்தவங்களும் வீட்டுக்கு வந்ததுனால அவங்கள கவனிக்கணுமேன்னு நான் ஐஸ்வர்யா அம்மாவை அங்கே விட்டுட்டு கீழ வந்துட்டேன். 

அவங்க இந்நேரம் வேலையெல்லாம் முடிச்சுட்டு வந்து இருப்பாங்கன்னு நினைச்சேனே.. இன்னும் வரலையா? ஒருவேளை மறுபடியும் போய் கெஸ்ட் ரூம்ல தங்கி இருப்பாங்களா இருக்கும் தம்பி. நீங்க இருங்க நான் போய் அவங்கள பார்த்து கூட்டிட்டு வரேன்.” என்ற கீதா கெஸ்ட் ரூம் பக்கம் நடக்க தொடங்கினாள். 

ஏதோ சரி இல்லை என்று மீண்டும் மீண்டும் அஸ்வினின் மனசாட்சி அவனிடம் சொல்லிக் கொண்டே இருக்க, “இல்லைங்க அக்கா! நானே போய் அவ என்ன பண்றான்னு பார்க்கிறேன்.” என்றவன், தானே சென்று ஐஸ்வர்யாவை தேட தொடங்கினான். 

– முத்தங்கள் தொடரும்.. 

You may also like

Leave a Comment

About Me

Featured