Home மூர்கனின் காதலிமூர்கனின் காதலி CH 52

மூர்கனின் காதலி CH 52

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 52 

அவங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல, “தண்ணிக்குள்ள விழுந்துட்டோம்,” “கீழ விழுந்துட்டோம்,”ன்னு வேற வேற பதிலாச் சொல்ல, “என்ன குழப்புறீங்க… தண்ணிக்குள்ள விழுந்தீங்களா, இல்ல கீழ விழுந்தீங்களா? என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்? ஏதாவது அடிபட்டுருச்சா?”ன்னு கேட்டார் காளீஸ்வரன்.

“கீழ விழுந்ததுனால தண்ணிக்குள்ள விழுந்துட்டோம் அண்ணா,”ன்னு வேகமா சொன்ன மேகா, “ரொம்ப நேரமா ஈரத்துல இருந்தா உடம்பு சரியில்லாமப் போயிடும். நான் போய் டிரஸ்ஸை மாத்திக்கிறேன். நீங்களும் போங்க விஷ்வா…!!”ன்னு சொல்லிட்டு வேகமாத் தன் வீட்டுக்குள்ள ஓடினா.

“எஸ்கேப்…!!”ன்னு நினைச்சுச் சந்தோஷத்துல, அவ பின்னாடி யாராவது வர்றாங்களான்னு பார்த்தபடியே வீட்டுக்குள்ள ஓடிப் போகும்போது, எதிரில் வந்த வெற்றியின் மேல தெரியாம மோதிட்டா.

அதனால அவ கையைச் சட்டெனப் பிடிச்ச வெற்றி, “பார்த்துப் போ…!!”ன்னு சொல்ல, அவன் கண்களைப் பார்த்த மேகா, “சாரி மாமா…!!”ன்னு சொல்லிட்டு, அதுக்கு மேல அவன் கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாமத் தன்னோட ரூமுக்குள்ள போயிட்டா.

அனுராதாவோட பிடிவாதத்துக்காக அரைகுறையாச் சாப்பிட்டுத் தன் புண்பட்ட மனச ஆத்திக்கிறதுக்காகச் சிவன் கோவிலுக்குப் போனான் வெற்றி. அதே கோவில்லதான் அவன் எத்தனையோ தடவை அவனுக்கும் மேகாவுக்கும் கல்யாணம் ஆகணும்னு வேண்டி இருக்கான்.

அதனால இப்போ அந்தக் கடவுள் கிட்ட வேண்டிக்க அவனுக்கு மனசு வரலை. அதனால வெளிய இருந்த கல்மண்டபத்துல இருக்கிற தூண்ல சாய்ஞ்சு உட்கார்ந்தான்.

அவன்கிட்ட போன ஒரு இளம் பொண்ணு, “பஞ்சாயத்து முடிஞ்சதுக்கு அப்புறம் நான் உன்னைத் தேடினேன். எங்க போன நீ?”ன்னு கேட்க,

கண்களைத் திறந்து அவளைப் பார்த்த வெற்றி, “அம்மா வீட்டுக்கு வரச் சொல்லி கையோடக் கூட்டிட்டுப் போயிட்டாங்க,”ன்னான்.

“சரி, சாப்பிட்டியா?”ன்னு அவ கேட்க, “ச்ச்… அதைக் கேட்கத்தான் இப்போ நீ இவ்வளவு தூரம் வந்தியா?”ன்னு சலிப்போடக் கேட்டான் வெற்றி.

“அது எதுக்கு உனக்கு? நான் ‘ஆமா’ன்னு சொன்னா, நீ இப்ப என்ன பண்ணப் போற? ‘சாப்பிட்டியா’ன்னு கேட்டா, ‘ஆமா’ இல்ல ‘இல்ல’ன்னு பதில் சொல்ல வேண்டியது தானே! அதென்ன நக்கலாப் பேசுறது?”ன்னு அவ கேட்க,

“சாப்பிட்டேன்டி. நீதான் சரியான ராங்கிக்காரி ஆச்சே… உன்கிட்ட எல்லாம் நக்கல் பண்ண முடியுமா?”ன்னு கேட்டான் வெற்றி.

அவன் கிட்ட உட்கார்ந்த அந்தப் பொண்ணு, “அட போடா… உன் மேல இருக்கிற அக்கறையில பேச வந்தேன் பாத்தியா… உனக்கு நான் எல்லாம் ராங்கிக்காரியாத் தான் தெரிவேன். அது என்னமோ பார்க்கக் கண்ணுக்கு அழகாப், பலபலன்னு கலரா இருக்கிற புள்ளைங்களைத் தானே உன்ன மாதிரிப் பசங்களுக்கு எல்லாம் பிடிக்குது! கருகருன்னு இருக்கிற என்னையெல்லாம் பார்த்தா உனக்கு இப்படித்தான் தெரியும்,”ன்னு அவ கொஞ்சம் சோகமாவே சொல்ல, “உனக்கு என்னடி? கலைச்செல்வின்னு உன் பேருக்கு ஏத்த மாதிரி கலையா நீ நல்லாத் தான் இருக்க…!!!”ன்னான் வெற்றி.

“ஓஹோ, அப்படியா? அதான் உன் அத்தை மக உனக்கு ‘டாட்டா’ காட்டிட்டுப் பட்டணத்தானைப் பிடிச்சுட்டு வந்துட்டாளே… நீயும் பஞ்சாயத்துல அவ வேண்டாம்ன்னு சொல்லிட்ட. அப்புறம் என்ன, இப்பச் சிங்கிளாத் தானே இருக்க? என்னைக் கட்டிக்கிறியா?”ன்னு சின்ன வெட்கத்தோடக் கேட்ட கலைச்செல்வி, ஒரு எதிர்பார்ப்போட அவன் முகத்தைப் பார்க்க,

“அட போடி பைத்தியக்காரி…!! உனக்கு வேற வேலை இல்லை. என்ன… நான் சோகமா இங்க உட்கார்ந்திருப்பேன்னு உன் ஃப்ரெண்ட் மேகா இப்படி எல்லாம் விளையாட்டாப் பேசி என்னைச் சமாதானப்படுத்தச் சொன்னாளா?”ன்னு கரெக்டா, தப்பா கேட்டான்.

“ஆமாமா… நீ இத்தனை நாளா அவ பின்னாடி காதல் மயக்கத்துல சுத்திக்கிட்டு இருந்த. அதான் எனக்கு உன் மேல இருக்கிற காதல் உனக்குப் புரியாமப் போச்சுன்னு பார்த்தா, அவ இல்லைன்னாலும் சும்மா ஒரு பேச்சுக்குக் கூட அவ இடத்துல வச்சு உன்னால என்னை யோசிச்சுப் பார்க்க முடியலைல்ல? மேகா என் ஃப்ரெண்ட் தான். 

எனக்கு அவளைப் பார்த்துப் பொறாமை எல்லாம் இல்லை. ஆனா, உன் விஷயத்துல மட்டும் ஏன் நான் அவளா இருந்திருக்கக் கூடாதுன்னு நினைச்சு நான் எத்தனையோ நாள் ஏங்கிருக்கேன் தெரியுமா வெற்றி? நான் அவளாப் பிறந்திருந்தா, சத்தியமா உன்னைத்தான் கல்யாணம் கட்டிருப்பேன். அழகா, நல்லாப் படிச்சிருக்கிற அவ எங்க… கருப்பா, 12-ஆம் கிளாஸ் கூடத் தாண்டாத நான் எங்க? உனக்கெல்லாம் எங்க என்னைப் பிடிக்கப் போகுது!”ன்னு நினைச்சுத் தன் உதட்டைச் சுழிச்ச கலைச்செல்வி,

“அவளுக்கு உன் மேல ரொம்ப அக்கறை பொங்குதில்லை… அதான் அவ என்னை அனுப்பி வச்சா. நீ அப்படியே நினைச்சுக்கிட்டுத் தெருத்தெருவா பைத்தியக்காரனாட்டம் திரி. உன்கிட்ட வந்து பேசினேன் பாத்தியா… அதான் என்னோட தப்பு. நான் போறேன்… நீ என்னமோ பண்ணு,”ன்னு சொல்லிட்டு எழுந்து நடக்க ஆரம்பிச்சா.

“ஏய் கருவாச்சி, நில்லுடி…!!”ன்னு வெற்றி எழுந்து அவ பின்னாடிப் போக, “இப்பதான் நான் அழகா இருக்கேன்… எனக்கு என்ன குறைச்சல்ன்னு கேட்டான். அதுக்குள்ள என்னைக் கருவாச்சின்னு சொல்றான். ச்சீ… போடா பொசகெட்டப் பயலே… எனக்கெல்லாம் யார் மேலயும் ஆசைப்படவே தகுதி இல்லை,”ன்னு நினைச்சு, கலங்கின கண்களோட அவனைத் திரும்பிக்கூடப் பார்க்காம வேகமாப் போயிட்டா கலைச்செல்வி.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured