அத்தியாயம் 48
“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் தம்பி. ஆனா ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள எல்லாரையும் கொண்டு வரணும்னு நினைக்கிறது, எங்கயும் எந்தத் தப்பும் நடந்துடக் கூடாதுன்னு தான். எது எப்படியோ… நீங்க எங்க ராமலிங்க தேவர் அய்யாவோட பேரன். உங்களுக்கு அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணித் தரக் கூடாதுன்னு எங்க நாக்கு அழுகிப் போயிடும். இந்தக் கல்யாணம் நடக்குறதுல எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும். நாங்களே முன்னாடி நின்னு உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்!” அப்படின்னு ஒரு பெரியவர் சொல்ல, மத்தவங்களும் அவருக்கு ஆமாம் சாமி போட்டாங்க.
அந்த நிமிஷத்துல இருந்து விஷ்வாவை ஊர் மக்கள் அவங்க வீட்டுல ஒருத்தனா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க.
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுட்டதால சந்தோஷமா இருந்த மேகா, விஷ்வா கிட்ட போயி, “இனிமே நீங்க என்னைப் பட்டிக்காடுன்னு சொல்ல முடியாது. நீங்களும் இப்போ இதே ஊர்க்காரர் ஆயிட்டீங்கள்ல?” அப்படின்னு கிண்டலா கேட்க, “அதென்ன இப்போ? நான் பொறந்ததுல இருந்தே மதுரக்காரந்தாண்டி” அப்படின்னு திமிரா சொன்னான் விஷ்வா.
“ஐயோடா, ரொம்பத் தான்! நான் உங்க தாத்தா பாட்டியை எல்லாம் பார்த்ததே இல்லல்ல… எனக்கு அவங்க ஃபோட்டோவைக் காட்டுங்க!” அப்படின்னு ஆர்வமா கேட்க, அவகிட்ட தன் ஃபோன்ல இருந்த ஃபோட்டோக்களைக் காட்டிக்கிட்டே அவளோட காரை நோக்கிப் போனான் விஷ்வா.
மேகாவையும் விஷ்வாவையும் அப்படி ஒண்ணாப் பார்க்கும்போது வெற்றியால வருத்தப்படாம இருக்க முடியல. தன் மகன் சோகமா அவங்களப் பார்க்கிறத கவனிச்ச அனுராதா, “விடு சாமி. யாருக்கு யாருன்னு அந்தக் கடவுள் எழுதி வச்சிருக்கானோ அது தான் நடக்கும். நடுவுல சாதாரண மனுஷங்க நம்ம என்ன பண்ண முடியும்? உனக்குன்னு ஒருத்தி இதுக்கு மேலயா பொறக்கப் போறா? நான் சீக்கிரம் அவளைக் கண்டுபிடிச்சு உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” அப்படின்னு சொல்ல, தன் அம்மாவுக்காக லேசாப் புன்னகைச்ச வெற்றி, “சரிம்மா. நான் அப்படியேக் காலாற நடந்துட்டு அப்புறமா வீட்டுக்கு வரேன். நீ போ” அப்படின்னான்.
“இல்ல… எப்படியும் நீ நேத்துல இருந்து சரியாச் சாப்பிட்டு இருக்க மாட்ட. வீட்டுக்கு வந்து ஒரு வாய் சாப்பிட்டுப் போ. வாயா வெற்றி!”ன்னு சொன்ன அனுராதா, வலுக்கட்டாயமா அவனை அவங்களோட ஜிப்புல ஏத்திக்கிட்டு வீட்டுக்குப் போனா. விஷ்வா தன் காரை ஸ்டார்ட் செஞ்சு மேகாவோட அரண்மனையை நோக்கிப் போய்க்கிட்டிருந்தான். அவன் ஃபோன்ல இருந்த ஃபோட்டோக்களைப் பார்த்துகிட்டு இருந்த மேகாவோட முகம் சட்டுன்னு ஆயிரம் வாட்ஸ் பல்பு போல பிரகாசமாச்சு. எதையோ கண்டுபிடிச்சிட்ட சந்தோஷம் அவகிட்ட தெரிய, “கார ஸ்டாப் பண்ணுங்க!”ன்னு சத்தமாகக் கத்துனா.
சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தின விஷ்வா, “எதுக்குடி இப்ப இப்படிக் கத்துற?” அப்படின்னு கேட்க, கார்ல இருந்து கீழ இறங்கின மேகா டிரைவர் சீட் பக்கம் போயி கதவைத் திறந்து, “நீங்க அந்த சீட்ல போயி உட்காருங்க. நான் உங்களை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போகணும்” அப்படின்னு சொல்ல, “ஏண்டி, தனியா எங்கயாவது கூட்டிட்டுப் போயி என்னைக் கொல்லப் பாக்குறியா?” அப்படின்னு கேட்டான் விஷ்வா. “ஆமா, அதுக்குத் தான்! எப்படி கண்டுபிடிச்சீங்க? உங்களுக்கு இருக்கிற அறிவுக்கு நீங்க இங்கெல்லாம் இருக்க வேண்டிய ஆளே இல்ல! அதான் நான் உங்களை சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன். பத்திரமாப் போயிட்டு வாங்க” அப்படின்னு விளையாட்டாச் சொன்ன மேகா, அவனைப் பிடிச்சுப் பக்கத்துல இருந்த சீட்டுல தள்ளிவிட்டு டிரைவர் சீட்டுல உட்கார்ந்தா.
அவளைக் குறுகுறுன்னு பார்த்த விஷ்வா, “போனதுக்கு அப்புறம் திரும்ப வர முடிஞ்சா பார்க்கலாம். முதல்ல உனக்கு கார் ஓட்டத் தெரியுமா?” அப்படின்னு கேட்க, “அது உங்களுக்கு இப்ப தெரிஞ்சிடும்”ன்னு சொன்ன மேகா காரை ஸ்டார்ட் பண்ணுனா.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)