அத்தியாயம் 47
மாயாண்டி குடும்பத்து ஆட்கள் போனதுக்கப்புறம், காளீஸ்வரன் பேச ஆரம்பிச்சார், “அந்த மாயாண்டிக்கு, அவன தோக்கடிச்சி நான் பிரசிடெண்ட் ஆனது சுத்தமா புடிக்கலைங்க. அடுத்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அரசியல்ல நான் எங்க மேல போயிருவேனோன்ற பயத்துலதான், அவன் இப்படி சம்பந்தமே இல்லாம என் குடும்பத்து மேல பொய்யா கேஸ் குடுத்திருக்கான்.
இப்ப அவங்களுக்காக அவன் தோண்டின குழிக்குள்ள அவனே விழுந்துட்டான். இனிமே மேகாவுக்கும் விஷ்வா தம்பிக்கும் நடக்கப் போற கல்யாணத்துல யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்காதுன்னு நான் நெனக்கிறேன்.”
“அதெல்லாம் சரிதான் காளி. ஆனா ஊர் வழக்கம், கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்குல்லப்பா? அத மீறி வெளியூர் ஆளுக்கு பொண்ணு குடுக்க முடியுமா? ஊர்லயே பெரிய குடும்பம் உங்களது. நீங்களே இப்படிப் பண்றது சரியா இருக்குமா?”ன்னு ஒரு பெரியவர் கேட்க, எழுந்து முன்னாடி வந்த விஷ்வா “நானும் மதுரைக்காரன்தான்”னு நெஞ்ச நிமித்தி சொன்னான்.
‘என்ன டா இந்தத் தம்பி இவ்வளவு நேரம் அமைதியா இருந்துட்டு, இப்ப வந்து இப்படி சொல்றான்?’னு நெனச்ச எல்லாரும், அவன் சொல்றது பொய்னு தான் நெனச்சாங்க.
“இங்க பாருங்க தம்பி. அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்ன்ற ஆசையில, பஞ்சாயத்துல நின்னு சும்மா எதாவது சொல்லிக்கிட்டு இருக்காதீங்க. நீங்க சொன்னது பொய்னு நிரூபணம் ஆச்சுன்னா, உங்களுக்குத் தண்டனை கெடைக்கும். இந்த பஞ்சாயத்துக்கு எல்லாரும் ஒண்ணுதான்”னு இன்னொரு ஊர்ப் பெரியவர் சொன்னார்.
காளீஸ்வரன் விஷ்வா கிட்ட ஏதோ பேசறதுக்காக அவன கிட்டக்கப் போக, அதுக்குள்ள “நான் சொன்னது எந்த விதத்துல உண்மைன்னு யோசிக்காம, அதப் பத்தி என்கிட்ட விசாரிக்காம, அது எப்படி உடனே பொய்னு முடிவு பண்ணிட்டுப் பேசுறீங்க?”னு கொஞ்சம் கோபமாத் தான் கேட்டான்.
அவன் பேச்சுல தெரிஞ்ச நம்பிக்கையையும் உறுதியையும் பாத்த காளீஸ்வரன், ‘நிஜமாவே இந்தத் தம்பி மதுரைக்காரனா தான் இருப்பான் போல’னு நெனச்சிட்டு, சும்மா நடக்குறத வேடிக்கை பாக்க ஆரம்பிச்சார்.
“சரி தம்பி. நீங்க இந்த ஊர்க்காரருன்னே வெச்சுக்கலாம். அத நாங்க எப்படி நம்புறது?”னு ஒருத்தர் கேட்க, “எங்க தாத்தா மதுரையிலதான் இருந்தாரு.
ஆனா கரெக்ட்டா அவர் எந்த ஊர்ல இருந்தாருன்னு எனக்கு ஞாபகம் இல்ல. எங்க அப்பா பிசினஸ் பண்றதுக்காகச் சென்னைக்குப் போனதுக்கப்புறமா, கொஞ்ச நாள்ல நாங்க ஃபேமிலியோட சென்னையில செட்டில் ஆயிட்டோம். எங்க தாத்தாவும் பாட்டியும் மட்டும் அப்பப்ப இங்க வந்துட்டுப் போவாங்க. அவங்ககூட சின்ன வயசுல நானும் வந்திருக்கேன். எங்க தாத்தா இறந்ததுக்கப்புறம், எங்களுக்கு இங்க இருந்த சொத்து பத்தையெல்லாம் அப்பா யாருக்கோ வித்துட்டதா பாட்டி சொன்னாங்க. மத்தபடி எனக்கு வேற எதுவும் தெரியாது”ன்னான் விஷ்வா.
“வேற எதுவும் தெரியலைன்னா பரவால்ல. உங்க தாத்தா பாட்டி பேர் என்னன்னு தெரியும்ல? அத சொல்லுங்க தம்பி”னு ஒரு பெரியவர் கேட்க, “ராமலிங்க தேவர், மீனாள். தாத்தா நான் சின்னப் பையனா இருக்கும்போதே இறந்துட்டாரு. பாட்டிக்கு உடம்பு சரியில்ல. சென்னையில ஒரு ஆஸ்பத்திரியில அவங்களுக்கு ட்ரீட்மென்ட் போயிட்டு இருக்கு”னு விஷ்வா சொல்லிக்கிட்டு இருக்கும்போதே, தீர்ப்பு சொல்றதுக்காக மரத்தடியில உக்காந்திருந்த நாலு பெரியவங்களும் எழுந்து நின்னுட்டாங்க.
விஷ்வாவோட முகத்த உத்து பாத்த காளீஸ்வரன் “ராமலிங்க தேவர் ஐயா பேரனா நீங்க?”னு கேட்க, “ஆமா. ஒரு நிமிஷம் இருங்க”ன்ன விஷ்வா, அவனோட ஃபோன்ல இருந்த அவனோட தாத்தா பாட்டியோட பழைய போட்டோக்களையும், இப்போ அவன் ரீசன்டா பாட்டியோட எடுத்துக் கிட்ட போட்டோக்களையும் காளீஸ்வரன்கிட்ட காட்டினான்.
“இந்த போட்டோல இருக்கிறவரு ராமலிங்கம் ஐயாவேதான்! உங்க கிட்டயும் உங்க தாத்தா சாயல் தெரியுது. இப்பதான் நான் கவனிக்கிறேன்”ன காளீஸ்வரன், போட்டோவையும் விஷ்வாவையும் மாறி மாறி பாத்தாரு.
விஷ்வாவ நோக்கிப் போன ஊர்ப் பெரியவங்க, அவன் ஃபோன்ல இருந்த போட்டோக்களைப் பாத்துட்டு “உங்க தாத்தா ராமலிங்க தேவர் இந்த ஊருக்கு சாமீ மாதிரி தம்பி. அந்தக் காலத்துல பசி பட்டினின்னு வந்து கேக்கறவங்களுக்கு கணக்கு பாக்காம வாரி வாரிக் காசு பணத்த அள்ளிக் கொடுத்த மகராசன் அவரு. அவர் இறந்துட்டாருன்னு சொல்லி, அவரோட மகன் இங்க உங்களுக்கு இருந்த சொத்து பத்தையெல்லாம் வந்த விலைக்கு முனியாண்டிக்கு வித்துட்டுச் சென்னைக்குப் போயிட்டாரு. நாங்க கூட உங்க தாத்தா ஞாபகமா அதெல்லாம் இங்கயே இருக்கட்டுமேன்னு கேட்டுப் பாத்தோம். அதுக்கு ‘இனிமே இந்த ஊருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இங்க இதெல்லாம் வெட்டியாதான் இருக்கு’ன்னு யார் சொல்றதையும் கேக்காம எல்லாத்தையும் வந்த விலைக்கு வித்துட்டுப் போயிட்டாரு. அவர் போனதுக்கப்புறம் உங்க குடும்பத்தப் பத்தி எங்களுக்கு எந்தத் தகவலும் தெரியல.
அதெல்லாம் நடந்து இத்தனை வருஷத்துக்கு அப்புறம், ராமலிங்கம் ஐயாவோட பேரன் நீங்க, எங்க ஊர்ப் பொண்ணுக்காக மறுபடியும் இந்த ஊருக்கு வந்திருக்கீங்க. எல்லாம் அந்தக் கடவுளோட விருப்பம்தான்”னாங்க.
“எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். கல்யாணம் பண்ணிக்கப் போறோம். அவ்ளோ தான். மேகாவோட குடும்பத்துக்காகத் தான் நான் அவ கூட இவ்வளவு தூரம் உங்கள மதிச்சி வந்து பஞ்சாயத்துல நின்னேன். இப்போ, என்னப் பத்திப் பேச்சு வந்ததுனால நான் யாருன்னு சொன்னேன். மத்தபடி யார் விரும்பினாலும் இல்லன்னாலும், எனக்கும் மேகாவுக்கும் இதே ஊர்ல கல்யாணம் நடக்கத் தான் போகுது.
ஊர்க் கட்டுப்பாடு, ஊர் வழக்கம், சாதி, மதம், பாகுபாடு இது எல்லாமே மனுஷன் அவங்க அவங்க சவுரியத்துக்காக மத்தவங்கள அடக்கி ஆள்றதுக்குக் கண்டுபிடிச்சது. அதுக்குள்ள அடங்கி நிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை. இங்க இருக்கிறவங்க எல்லாரும் மனுசங்கதான். யார் யாருக்குப் பிறந்திருந்தாலும், ஒரு வயசுக்கு மேல எல்லாரும் தனித்தனி ஆள்தான். அவங்கவங்க வாழ்க்கை எப்படி இருக்கணும்னு முடிவு பண்ண எல்லாருக்கும் உரிமை இருக்கு”ன்னான் விஷ்வா.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)