அத்தியாயம் 38
“நீ இப்ப சொன்னது எல்லாம், என் ஆளுங்க கலெக்ட் பண்ண உன்னைப் பத்தின டீடெயில்ஸ்லயே இருந்துச்சு. போதும், ரொம்ப பில்டப் பண்ணாம வா..!!” அப்படின்னு விஷ்வா அவள் கையைப் பிடிச்சுகிட்டு நடக்க ஆரம்பிக்க, தங்க அரண்மனைக்கு வந்த ராஜா ராணியை வரவேற்பதை மாதிரி, ரெண்டு பக்கமும் மேகாவோட சொந்தக்காரப் பொண்ணுங்க எல்லாம் வரிசையா நின்னு, அவங்க மேல பூவத் தூவி வரவேத்தாங்க.
மேல அண்ணாந்து அதையெல்லாம் ஆச்சரியமா பார்த்த விஷ்வா, “இப்போ எதுக்கு இதெல்லாம் பண்றாங்க..??”ன்னு கேட்க, “நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை விஷ்வா சார். உங்களை நாங்க முறைப்படி தடபுடலா வரவேற்க வேண்டாமா..?? இப்ப பண்றதெல்லாம் கம்மி தான். உங்களுக்கும் எங்க தங்கச்சிக்கும் கல்யாணம் முடிஞ்சு நீங்க இங்க வரும்போது, நாங்க எப்படி திருவிழா மாதிரி அந்தக் நாளை கொண்டாடுறோம்னு பாருங்க..!!”ன்னு சந்தோஷமா சொன்னான் மணிகண்டன்.
அவனை மேலும் கீழும் பார்த்த விஷ்வா, “நேத்து நீங்கதானே வேட்டிய மடிச்சுக் கட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்து, என்ன வெட்டுவேன், குத்துவேன்னு குதிச்சுகிட்டு இருந்தீங்க..??”ன்னு கேட்க, “ஐயோ மாப்ள.. இன்னுமா அதையெல்லாம் நீங்க மனசுல வச்சுகிட்டு இருக்கீங்க..?? அது ஏதோ எங்க பொண்ணோட வாழ்க்கை நாசமாப் போயிடக்கூடாதுன்ற பயத்துல ஒரு அண்ணனா பேசினது. மத்தபடி உங்க மேல எனக்கென்ன கோவம்..?? எப்போ எங்க அண்ணா உங்களுக்கும் மேகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுல சம்மதம்னு சொன்னாரோ.. அப்பவே நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை ஆகிட்டீங்க. இனிமே நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு.”ன்னு தன்னோட ரெண்டு கைகளையும் ஒன்னா சேத்து ஆக்ஷனோட செஞ்சுக் காட்டினான் மணி.
அந்தக் கூத்தை எல்லாம் அவங்க வாசல்ல சாணி போட்டு மெழுகிகிட்டே பார்த்துகிட்டு இருந்த ஒரு கிழவி, “என்னடி, இந்த ஊர்ல இல்லாத மாப்பிள்ளையப் போயி அசலூர்ல பிரசிடெண்ட் ஐயா புடிச்சுகிட்டு வந்திருக்காரு..!!”ன்னு பக்கத்து வீட்டு கிழவிகிட்ட சொல்ல, “அந்தக் கூத்த எதுக்குடி கேக்குற..?? இப்போ பவுசா காருல வந்து இறங்கியிருக்கானே ஒருத்தன்.. அவன் பட்டணத்துல பெரிய கோடீஸ்வரனாம்.. வெள்ளைக்காரன் மாளிகை மாதிரி பெரிய வீட்டுல தங்கியிருக்கானாம். அதான், அடிதடி பண்ணி அவங்க வீட்டுப் பிள்ளையை எப்படியாவது இழுத்துட்டு வந்திடணும்னு போன பிரசிடெண்டு, காசுப் பணத்துக்கு மயங்கி அந்தப் பிள்ளையை கட்டிக் கொடுக்க சம்மதிச்சுட்டாருன்னு, அவர்கூட அருவாளைத் தூக்கிட்டு சண்டைக்குப் போன என் மகன் நேத்து ராத்திரி வீட்டுக்கு வந்து அவன் பொண்டாட்டிக்காரி கிட்ட சொல்லிட்டுப் போனான்.”ன்னு அந்தக் கிழவி தன் பங்குக்குச் சொல்ல, இப்படியே ரெண்டு பேரும் மாறி மாறி ஊர்க் கதை பேசிக்கிட்டு இருந்தாங்க.
“விலகுங்க தம்பி.. ஊர்க் கண்ணு மொத்தமும் நம்ம புள்ளைங்க மேலதான் இருக்கு. முதல்ல வந்த புள்ளைங்களுக்கு சுத்திப் போடணும்..!!”ன்னு கையில ஆரத்தி தட்டோட அங்க போன வசந்தி சொல்ல, “சரிங்க மதினி, நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க..!!”ன்னு மணிகண்டன் ஓரமா நின்னுகிட, வசந்தி “ஊரு கண்ணு உறவு கண்ணு..”ன்னு ஆழம் கரைக்கும்போது சொல்ற எல்லா டயலாக்கையும் சொல்லி ஆரத்தி எடுத்து, அவங்களை உள்ள அனுப்பி வச்சா.
குளிச்சுட்டு வந்து, வெள்ளை வேட்டி சட்டையில கம்பீரமா இருந்த காளீஸ்வரன், “உள்ள வாங்க தம்பி..!! வாம்மா மேகா. நீங்க ரெண்டு பேரும் இங்க இருக்குற வரைக்கும் நம்ம அரண்மனையிலயே தங்கிக்கோங்க..!!”ன்னு மரியாதையா அவங்களை வரவேற்றார்.
அந்தப் பழைய அரண்மனையை சுத்திப் பார்த்துகிட்டே மேகாவோட உள்ள போன விஷ்வா, அவகூட ஹால்ல இருந்த நீளமான மர சேர்ல உக்காந்தபடி, “இந்தப் பேலஸ் நல்லாதான் இருக்கு.”ன்னு சொன்னான். அவனைப் பார்த்து அழகா சிரிச்ச மேகா, “எனக்கு எங்க ஊரும் இந்த அரண்மனையும் ரொம்பப் பிடிக்கும். இங்க மேல ரெண்டாவது மாடியில ஒரு பால்கனி இருக்கு. அங்க நின்னு பார்த்தா சுத்தி இருக்கிற நம்ம தோட்டம், வயல்வெளி எல்லாம் தெரியும். நான் சோகமா இருக்கும்போதெல்லாம், அங்க போய் உக்காந்துக்குவேன்.
பௌர்ணமி நிலாவை அங்க நின்னு பார்க்கிறதே ஒரு தனி ஃபீலிங்தான். இன்னும் மூணு நாள்ல.. பௌர்ணமி வந்திடும்.. அப்போ நம்ம அங்க போய் நிலாவ பார்க்கலாம்.”ன்னு ஆர்வமா உற்சாகமா சொன்னாள்.
“ஆமா, இதுக்கு முன்னாடி நான் நிலாவ பார்த்ததே இல்ல பாரு..!!”ன்னு விஷ்வா, அதைப் பார்க்க இன்ட்ரெஸ்ட் இல்லாதவன் மாதிரி சொல்ல, “உங்ககிட்டப் போய் சொன்னேன் பாருங்க..!! கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை..??”ன்னு தன்னோட உதட்டை சுழிச்சுட்டு முணுமுணுத்தா அவ.
“கழுதைக்கு எதுக்கு டி கற்பூர வாசனை தெரியணும்..?? முதல்ல சும்மா இருக்கிற கழுதைகிட்டப் போய் உங்களை யாரு கற்பூரத்தைக் காட்டச் சொல்றது??”ன்னு கேட்ட விஷ்வா லேசா சிரிக்க, “உங்களுக்கும் உங்க கூட வந்தவங்களுக்கும் தேவையான எல்லாமே உள்ள ரெடியா இருக்கு. நீங்க போயி ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல சூடா பிரேக்ஃபாஸ்ட் ரெடியாயிடும். சமைச்சதும் கொண்டு வந்திருவாங்க. எல்லாரும் இங்கேயே சேந்து சாப்பிடலாம்.”ன்னு அவன்கிட்ட பணிவா சொன்னான் முத்து.
“ரெஃப்ரெஷ் ஆகுறது எல்லாம் ஓகே. ஆனா அதுக்குள்ள பிரேக்ஃபாஸ்ட்டா..??”ன்னு விஷ்வா ஷாக் ஆகி கேட்க, “இது கிராமம் சார். நாங்க விடியறதுக்குள்ளேயே எந்திரிச்சு, கெளம்பி, சாப்பிட்டு முடிஞ்ச ஒடனே வயலுக்கு வேலை பார்க்கப் போயிடுவோம். அந்தப் பழக்கம்தான்.”ன்னு விஷ்வா கிட்ட சொன்ன முத்து, “சாருக்கு மாடியில இருக்குற பெரிய ரூமை அண்ணா கொடுக்க சொல்லி இருக்காரு. அப்படியே பக்கத்துல இருக்குற ரூம்ல அவரோட வந்தவங்களும் தங்கிகிட்டும். நீ மாப்பிள்ளைய மேல கூட்டிட்டுப் போய் ரூமை காமி. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு.”ன்னு மேகாகிட்ட சொல்லிட்டு, “பாத்துக்கோங்க சார். எதாவது வேணும்னா யார்கிட்டயாவது சொல்லி கூப்பிடுங்க. ஒடனே வந்துடுறேன்.”ன்னு விஷ்வாகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போனான் முத்து.
தொடரும்..