அத்தியாயம் 30
அதனால கோபத்துல எழுந்து நின்னுட்டான் காளீஸ்வரன். “அந்த நாசமாப் போறவனுக்கு இப்போ என்னவாம்…??” அவன் நம்ம வீட்டுப் புள்ளை மேல என்னத்தக் குறை கண்டான்னு பிராது குடுக்கிறானாம்??”ன்னு கேக்க, “நம்ம தான் ஏற்கனவே வெற்றிக்கும் மேகாவுக்கும் ஊர் அறிய பரிசம் போட்டு வச்சிருந்தோம்ல அண்ணே.. இப்போ மேகா அவ நிச்சயம் பண்ணுனவனை ஏமாத்திட்டு, புது மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கப் போறதா நியூஸ்ல சொன்னதுனால, ஊர்க் கட்டுப்பாட்ட மீறிட்டான்னு பிராது குடுத்திருக்காங்க,”ன்னு சொன்னான் முத்து.
“ஏன், நிச்சயம் பண்ணதுக்கப்புறம் கல்யாணம் நிக்கிறதெல்லாம் இந்த உலகத்துல நடக்குறது இல்லையாக்கும்??” என் வீட்டுல நடக்கிறது தான் இவனுங்க கண்ண உறுத்துதா?? அவனுங்களுக்காகவெல்லாம் நம்ம வீட்டுப் புள்ளையக் கொண்டு போய் பஞ்சாயத்துல நிக்கவச்சு அசிங்கப்படுத்த முடியாது!”ன்னு காளீஸ்வரன் உறுதியாச் சொல்ல,
“அந்தாளுக்கும் நமக்கும் ஏற்கனவே ஆகாது அண்ணா. இப்போ நம்ம பஞ்சாயத்துக்குப் போகலைன்னா, வேணும்னே இந்த விஷயத்த ஊதிப் பெருசாக்கி, நம்ம எல்லாருமே ஊர்க் கட்டுப்பாட்டை மீறிட்டோம்னு முத்திர குத்தி, மத்த பெருசுங்க மண்டையக் கழுவி நம்ம குடும்பத்த ஊரைவிட்டே ஒதுக்கி வச்சிடுவாங்க அண்ணா,”ன்னு சொன்னான் முத்து.
“என்னால நீங்க அவமானப்பட்டதுல்லாம் போதும். இப்ப என்ன, பஞ்சாயத்துல போய் நிக்கணும், அவ்வளவு தானே… நான் வரேன். அவங்க என்ன பண்ணுவாங்களோ பண்ணட்டும்,”ன்னு மேகா சொல்ல, “அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். நீ இங்கேயே மாப்பிள்ளைக்கூட இருந்து கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலைய எல்லாம் பாரு. கல்யாணத்தப்ப சொல்லி அனுப்புங்க. நாங்க குடும்பத்தோட வந்து நிக்கிறோம். உனக்கு என்ன செய்யணுமோ செஞ்சுட்டுப் போறோம்… நீ இனிமே நம்ம ஊருப் பக்கமே வர வேணாம்,”ன்னாரு காளீஸ்வரன்.
“சப்பா… இப்பத் தான் இவங்களக் கரெக்ட் பண்ணி மேரேஜ்க்கு ஓகே சொல்ல வெச்சேன். அதுக்குள்ள அங்க பஞ்சாயத்தக் கூட்டிட்டானுங்க… நான் என்ன பண்ணாலும் எவனுக்கும் பிடிக்க மாட்டேங்குது. ஆனா எங்க, எப்படி நீங்க சுத்தி சுத்தி அடிச்சாலும், இந்த விஷ்வா ஆல் ரவுண்டர்டா! எல்லாரையும் சமாளிப்பேன்,”ன்னு நெனைச்ச விஷ்வா, “நீங்க சொன்னதக் கேட்டதுக்கு அப்புறம், எங்களால எப்படி அப்படி எங்களப் பத்தி மட்டும் யோசிக்க முடியும்?? நான் முடிவு பண்ணிட்டேன்.
எங்க மேரேஜ் உங்க ஊர்ல… இல்லல்ல… நம்ம ஊர்ல தான் நடக்கும். நீங்க தான் நடத்தி வைக்கிறீங்க. நாம எல்லாரும் இப்பவே மதுரைக்குப் கிளம்புறோம். நாளைக்கு பஞ்சாயத்துல எவன் இவளை என்ன சொல்றான்னு நான் பார்க்குறேன்,”ன்னு சொன்னான்.
“அதெல்லாம் எதுக்கு? தேவையில்லாத வேலை. நான் என்ன சொன்னாலும் கேக்கக் கூடாதுன்னு இருக்கீங்களா நீங்க ரெண்டு பேரும்??”ன்னு கோபமா காளீஸ்வரன் கேக்க, “விடுங்க அண்ணா, அவங்க வரட்டும். பொறந்த ஊரைவிட்டு அவ எதுக்கு ஒதுங்கி நிக்கணும்?? மேகா பஞ்சாயத்துக்கு வராம இருந்தா, அவ மேலதான் தப்புன்னு நம்மளே ஒத்துக்கிட்ட மாதிரி ஆயிடும். வரட்டும். விஷ்வா சார் சொன்ன மாதிரி, எதாவா இருந்தாலும் பஞ்சாயத்துல பாத்துக்கலாம். நம்மள மீறி எவன் என்ன செஞ்சுடப் போறான்?”ன்னு கேட்டான் முத்து.
“இவன் சொல்றதும் சரியா தான் இருக்கு. கண்ட நாயப் பார்த்து நம்ம எதுக்கு பயப்படணும்??”ன்னு நெனச்ச காளீஸ்வரன், “சரி அப்போ கிளம்பலாம். இப்பக் கிளம்புனாதான் விடியறதுக்குள்ள ஊர் போய்ச் சேர முடியும்,”ன்னாரு. “யாருமே ஒழுங்கா சாப்பிடலை. எப்படியும் நீங்களும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. சோ, வாங்க சாப்பிட்டுக் கிளம்பலாம்,”ன்னு விஷ்வா சொல்ல, “பொண்ணு குடுக்குற வீட்ல முறையா சம்பந்தம் பண்றதுக்கு முன்னாடி நாங்க கை நனைக்க மாட்டோம் தம்பி,”ன்னாரு காளீஸ்வரன்.
“அப்போ கிளம்புங்க… போற வழியில ஏதாவது ரெஸ்டாரன்ட்ல சாப்பிட்டுப் போகலாம்,”ன்னு சொன்ன விஷ்வா ரெடியாகுறதுக்காகத் தன்னோட அறைக்குள்ள போய்ட்டான். போறவனையே பாத்துக்கிட்டிருந்த மேகா, “இவரைப் பார்த்தா எதையுமே கண்டுக்காத ஆள் மாதிரி கூலா இருக்காரு. ஆனா யாருக்கு என்ன வேணுமோ, எல்லாத்தையும் கரெக்ட்டாப் பாத்துச் செய்றாரு. இவர்கிட்ட ஆயிரம் குறை இருந்தாலும், கண்டிப்பா இவர் பெஸ்ட்தான். முக்கியமா எல்லா விதத்துலயும் அந்த ஆதித்யாவோட விஷ்வா 200% பெஸ்ட்,”ன்னு நெனச்சாள்.
அவளருகில் போன காளீஸ்வரன், “இந்த வீடு ரொம்பப் பெருசா இருக்குல்லம்மா?”ன்னு கேக்க, “இது வீடு இல்ல அண்ணா, பங்களா,”ன்னாள் அவள். “ஆமாமா… இது தான் அரண்மன கணக்கா இத்தாத்தண்டி இருக்கே… இதப் போயி எப்படி சாதாரணமா வீடுன்னு சொல்ல முடியும்?”ன்னு வெள்ளந்தியா காளீஸ்வரன் சொல்ல, “என்னதான் முரட்டுத்தனமா இருந்தாலும், இந்தக் கிராமத்துக்காரங்க எல்லாரும் அப்பாவியா, நல்லவங்களா இருக்காங்க,”ன்னு நெனச்ச மகேஷ், “நீங்களும் இங்க வந்ததுல இருந்து ஃபுல்லா நம்ம பங்களாவச் சுத்திப் பாக்கலையே… போங்க… உங்க அண்ணனக் கூட்டிட்டுப் போய்ச் சுத்தி காமிங்க மேடம்,”ன்னான்.
“ம்ம்… போறேன் ப்ரோ. பட் இனிமே நீங்க என்ன மேடம்ன்னு கூப்பிடாதீங்க. நீங்களும் எனக்கு எங்க அண்ணன் மாதிரிதான்,”ன்னு மேகா சொல்ல, “ம்ம்… சரிமா,”ன்னான் மகேஷ்.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)