அத்தியாயம் 70
தாத்தா நேர்மையாக முதலில் தன் பிரச்சனைக்காக ரிஷி ஒரு பிராஸ்டிடியூட்டை கண்டுபிடிக்க முயற்சி செய்ததையும், அப்படி வந்து தான் கீர்த்தனா அவர்களிடம் அறிமுகமானாள் என்பது பற்றியும், அதன் பிறகு அவள் நிலையை புரிந்துக் கொண்டு அவள் மீது காதல் வயப்பட்டு இப்போது ரிஷி அவளை திருமணம் செய்து கொள்ள நினைப்பது வரையிலும் எதையுமே மறைக்காமல் சொன்னதால், என்ன தான் ரிஷி அவன் தேவைக்கு தங்கள் வீட்டு பெண்ணை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்தான் என்று ஒரு பக்கம் நினைத்தாலும், இன்னொரு பக்கம் “ரிஷி கிட்ட மட்டும் நம்ம பொண்ணு கிடைக்காம இருந்திருந்தா, இந்நேரம் அவ வாழ்க்கையே நாசமா போயிருக்கும்.” என்று நினைக்கும் போது அவர்களுக்கு அவன் கடவுள் போலவே தெரிந்தான்.
தாத்தாவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட சுரேந்தர் “ரொம்ப நன்றி ஐயா! எங்க குடும்பத்தையே நீங்க காப்பாத்தி கொடுத்து இருக்கீங்க. நீங்க சொன்ன மாதிரியே எங்க வீட்டு பொண்ணை இத்தனை நாளா உங்க வீட்டு பொண்ணா பத்திரமா பாத்துகிட்டு இருக்கீங்க.
ஏதோ உங்கள மாதிரி நல்லவங்க கையில கிடைச்சதுனால எங்க பொண்ணுக்கு தப்பா எதுவும் நடக்காம போயிடுச்சு. இல்லைனா இந்த நிலைமையில இத்தனை நாளா வீட்டை விட்டு வெளிய போய் இருந்து அவ என்னென்ன கஷ்டத்தை அனுபவிச்சு இருப்பாளோ! அதை நினைச்சு பார்த்தாலே பயத்துல உடம்பெல்லாம் நடுங்குது. உங்கள நாங்க தப்பா நினைச்சதுக்கு தயவு செஞ்சு எங்களை மன்னிச்சிடுங்க.” என்று சொல்லிவிட்டு கண் கலங்கினார்.
கீர்த்தனாவின் அருகில் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்த அவள் அம்மா அமுதா ரிஷியின் கால்களை பிடித்துக் கொண்டு “என்ன தான் தலையில அடிபட்டு அவ எங்க எல்லாரையும் மறந்து போயிருந்தாலும், இத்தனை வருஷமா வாழ்ந்த வீட்டுக்கு வந்தும், அவள பெத்தவங்களையும், கூட பொறந்தவனையும் பார்த்து கூட அவளுக்கு எங்களை யாருன்னு அடையாளம் தெரியல.
எங்கள பாத்து பயந்து நடுங்கி அழுகுறா.. யாரை பார்த்து பயந்தாலும், எந்த பிரச்சனை வந்தாலும் கண்டிப்பா நீங்க அவளை காப்பாத்துவீங்கன்னு மனசார அவ நம்புறா.. அதனால தான் உங்க கிட்ட ஓடி வந்து உங்கள பிடிச்சுக்கிட்டு விடமாட்டேங்குற..
இதுல இருந்து எனக்கு ஒன்னு மட்டும் நல்லா தெரியுது தம்பி. நீங்க என் பொண்ண கண்ணுக்குள்ள வச்சு நல்லபடியா கவனிச்சுக்கிட்டு இருந்திருக்கீங்க. உங்க உண்மையான பாசத்தை புரிஞ்சுகிட்டதனால தான் இவளும் பதிலுக்கு உங்க மேல பாசமா இருக்கா.
இந்த சூழ்நிலையில நீங்க சுயநலமா யோசிச்சிருந்தா, எங்க பொண்ணை யார் கண்லயும் படாம உங்க வீட்டிலயே நீங்க வச்சிருந்து இருக்கலாம். நீங்க இருக்கிற ஓசரத்துக்கு அவ உங்க கூட இருக்கிறத காலம் முழுக்க தேடினாலும் எங்களால் கண்டுபிடிச்சு இருக்க முடியாது.
ஆனா நீங்க நிஜமாவே ரொம்ப நல்லவரு தம்பி. உங்க அம்மா உங்களை நல்லா வளர்த்து இருக்காங்க. அதான் இந்த அம்மாவோட பரிதவிப்ப புரிஞ்சுகிட்டு நீங்க என் புள்ளைய என் கிட்ட கொண்டு வந்து சேர்த்து இருக்கீங்க. நீங்க செஞ்ச இந்த உதவியை காலத்துக்கும் நான் மறக்க மாட்டேன். எங்க குடும்பம் உங்களுக்கு என்னைக்கும் கடன் பெற்றிருக்கும்.” என்று உடைந்த குரலில் சொல்லிவிட்டு அழுதாள்.
“ஐயோ அம்மா ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணாதீங்க.. உங்க வயசுக்கு நீங்க என் கால்ல போய் விழலாமா? எனக்கு ஒரு பிரச்சனைன்னு வரும்போது, வேற வழி தெரியாம என் குடும்பத்தை காப்பாத்துறதுக்கு முதல்ல நான் இவள சுயநலமா என் கூட வச்சுக்கணும்னு தான் நினைச்சேன்.
அப்படி பார்த்தா நீங்க சொல்ற அளவுக்கு எல்லாம் நான் நல்லவன் இல்லை. ஆனா தாத்தா சொன்னதுக்கு அப்புறமா, நீங்க சொன்ன மாதிரி உங்க இடத்துல இருந்து நான் யோசிச்சு பார்த்தேன். எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா. இப்ப உங்க பையன் பாஸ்கர் எப்படி என்ன பார்த்து கோவப்பட்டாரோ அதே மாதிரி தான் என் தங்கச்சி விஷயத்துல ஏதாவது ஒரு பிரச்சனை நடந்தா நானும் ரியாக்ட் பண்ணி இருப்பேன்.
நான் எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் என் வாழ்க்கையில யாருக்கும் எந்த தப்பும் பண்ணது கிடையாது. ஆனா மத்தவங்க என் கிட்ட அப்படி நடந்துக்கல. இப்ப கூட என் வாழ்க்கைய சரி பண்றதுக்கு வழி தெரியாம தான் நான் தவிச்சுக்கிட்டு இருக்கேன்.
எனக்கு இருக்கிற ஒரே ஒரு நம்பிக்கை என் அம்மு மட்டும் தான். நாங்க அவளை இங்க கூட்டிட்டு வந்தது உங்க கிட்ட அவளை காட்டுவதற்காக மட்டுமில்ல, உங்க வீட்டு பொண்ணு முறைப்படி எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்காகவும் தான்.
இதுக்கு முன்னாடி என்ன ஏமாத்துற, என் சொத்து மேல ஆசைப்படுற பொண்ணுக்கு பதிலா இவளை மாதிரி இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு பொண்டாட்டியாக வர்றது எவ்வளவோ மேல்ன்னு நினைச்சு தான் எங்க ஆபீஸ் மீட்டிங்ல கீர்த்தனாவுக்கு வாய் பேச வராதுன்னு பொய் சொல்லி அவளை நடிக்க வச்சு எல்லார் முன்னாடியும் அவளை என் கேர்ள் ஃபிரண்டுன்னு இண்ட்ரடியூஸ் பண்ணி வச்சேன்.
அத முழுக்க முழுக்க நான் என் கம்பெனியோட பியூச்சருக்காக பண்ணேன். ஆனா இப்ப என் மனசார சொல்றேன்.. உங்க பொண்ணை நான் சின்சியரா லவ் பண்றேன் மா. அவளுக்கு நான் சொல்ற மாதிரி என்னை லவ் பண்றேன்னு சொல்ல தெரியாம இருக்கலாம்.
ஆனா அவளால நான் இல்லாம இருக்க முடியாதுன்னு மட்டும் எனக்கு தெரியும். என்னாலையும் தான். அவ என் லைஃப்குள்ள வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. பட் அதுக்குள்ள அவ எங்க வீட்ல ஒருத்தி ஆயிட்டா.
எனக்கே தெரியாம ரொம்ப ஈசியா என் மனசுக்குள்ளயும் வந்துட்டா. இந்த செகண்ட்ல கூட நான் அவள என் பொண்டாட்டி தான் பார்க்கிறேன். தாத்தா சொன்ன மாதிரி இந்த ரிலேஷன்ஷிப்பை நாங்க ஒரு பொய்யில ஆரம்பிக்க விரும்பல.
அதனால தான் நடந்தது எல்லாத்தையும் மறைக்காம நாங்க அப்படியே உங்க கிட்ட சொல்லிட்டோம்.. இதுக்கப்புறம் நீங்க தான் சொல்லணும். உங்க வீட்டு பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்பி வைப்பீங்களா?” என்று கண்கள் கலங்க கேட்டான் ரிஷி.
அவன் பேசியதில் கீர்த்தனாவிற்கு பாதிப்பு புரியவில்லை என்றாலும், அவன் அவளை அவனுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என இவர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று மட்டும் அவளுக்கு புரிந்ததால் உடனே அவசரமாக ரிஷியை இறுக்கமாக அணைத்துக் கொண்டு “நான் ரிஷி கூட தான் இருப்பேன். எனக்கு இந்த வீடு வேணாம். எனக்கு இங்க இருக்க பிடிக்கல. நான் ரிஷி கூடவே போறேன்.” என்று பதட்டமாக சொன்னாள்.
எங்கே இப்போது புதிதாக வந்தவர்கள் தனது ரிஷியிடம் இருந்து தன்னை பிரித்து விடுவார்களோ என்ற பயம் அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. ரிஷியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அமுதா அவனையும் தன் மகளையும், தனது குடும்பத்தினரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தாள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)