அத்தியாயம் 60
ஒரு நடுத்தர வயது பெண்மணி மாலை 7 மணி அளவில் கோவிலுக்கு சென்று ஈஸ்வரனை வேண்டிக் கொண்டு இருந்தாள். அவளது கண்களில் இருந்து அவளையும் மீறி சோகத்தில் கண்ணீர் பெருக, அவளைக் கடந்து சென்ற அனைவரும் ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றார்கள்.
அவளை தேடிக் கொண்டு அங்கே வந்த அவள் கணவர் சுரேந்தர் “அப்பயும் நீ இங்கதான் இருப்பேன்னு நான் நினைச்சேன் அமுதா. நான் நெனச்சது சரியா போச்சு. ஏற்கனவே நம்ம பொண்ணை தொலைச்சிட்டு நம்ம கஷ்டப்படறது பத்தாதா?
வீட்ல இருந்து கிளம்பி வரும்போது இங்க போறேன்னு சொல்லிட்டு வந்தா என்ன உனக்கு? எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டியா? திடீர்னு உன்னை வீட்ல காணோம்னு தீபா ஃபோன் பண்ணி சொன்ன உடனே எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.
ஃபோனையும் வீட்ல வச்சுட்டு நீ பாட்டுக்கு யார் கிட்டயும் சொல்லாம இப்படி கிளம்பி வெளிய வந்துட்டா என்ன அர்த்தம்? நாங்க பயப்படுவோம்ன்னு தெரியாதா?” என்று கோபமாக கேட்டார்.
“அட போங்க எனக்கு என்ன ஆகப் போகுது… என் பொண்ணு எங்க போனா.. அவளுக்கு என்ன ஆச்சுன்னு இப்ப வரைக்கும் ஒரு தகவலும் கிடைக்கல.
பொம்பள புள்ளைங்க அவ.. யாராவது கெட்டவங்க கண்ணுல மாட்டி அவளுக்கே ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்றதுன்னு நினைச்சாலே ஒவ்வொரு நொடியும் என் மனசு கெடந்து தவிக்குது! அவளுக்கு பதிலா எனக்கு ஏதாவது ஆகி தொலஞ்சுட்டா கூட பரவால்ல..
இந்த வயசுக்கு அப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ண போறேன்? எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல. என் பொண்ணை எப்படியாவது திரும்ப என் கிட்ட கொண்டு வந்து சேர்த்து ஈஸ்வரான்னு வழக்கம்போல இந்த கடவுள் கிட்ட பிச்சை எடுக்கிறதுக்கு தான் வந்தேன்.
போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு. அவள தேடுறதுக்கு நம்மளால என்னென்ன பண்ண முடியுமோ அது எல்லாத்தையும் பண்ணியாச்சு. ஆனா அப்பயும் அந்த கடவுளுக்கு நம்ம மேல கருணை வரமாட்டேங்குதேங்க.. நம்ம பொண்ணு நம்ம கண்ணுல காட்டுவேன்னானு எதுக்கு தான் அவர் இப்படி அடம் பிடிக்கிறாரோ தெரியல!” என்ற அமுதா துக்கம் தாளமல் கோவில் என்று கூட பாராமல் மனம்விட்டு அழுதாள்.
“அழுகாத அமுதா.. இதுவரைக்கும் மனசறிஞ்சு யாருக்கும் நம்ம எந்த கெடுதலும் பண்ணது இல்ல. ஏதோ போராத காலம். அதான் நம்மள இப்படி போட்டு வாட்டி வதைக்கிது.
ஆனா எல்லா நேரமும் இப்படியே இருந்துராது. சீக்கிரமா நம்ம பொண்ணு நம்மள தேடி வருவான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. டாக்டரா இருந்து எத்தனை பேர் உசுரை அவ காப்பாத்தி கொடுத்திருக்கா.. அந்த புண்ணியம் கண்டிப்பா அவளை காப்பாத்தும்.
அவளை நீ கும்பிடுற சாமி கொண்டு வந்து சீக்கிரமா நம்ம கிட்ட சேர்க்கும். நம்ம எதை முழு மனசா நம்புறோமோ அது தான் நடக்கும்னு சொல்லுவாங்க. இந்த உலகம் எவ்ளோ மோசமா இருந்தாலும், நான் என் பொண்ணை நல்லவிதமா தானே வளர்த்தேன்..
அவள மாதிரி நம்மள மாதிரி இந்த உலகத்துல இன்னும் எங்கயாவது நல்லவங்க இல்லாம போயிருவாங்களா? அப்படி யாராவது ஒருத்தர் கூட அவ இருப்பான்னு நினைச்சு நம்ம மனச தேத்திக்க வேண்டியது தான்.” என்று சொல்லி தன் மனைவியை சமாதானப்படுத்திய சுரேந்தர் அவளை அழைத்துக் கொண்டு கோவிலில் இருந்து பொடிநடையாக அருகில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றார்.
ஒரு பாதி கட்டப்பட்டு இருந்த பிரம்மாண்ட பெரிய கட்டிடத்தில் இளைஞன் ஒருவனை சேரில் அமர வைத்து கட்டி போட்டு வைத்திருந்தார்கள். அவனை காலையில் இருந்து அவர்கள் அடித்து வெளுத்து வாங்கி இருந்ததால் அவனது உடல் முழுவதும் ஆங்காங்கே சிவந்து கன்னிபோய் காணப்பட்டது.
கொஞ்ச நேரம் கேப் விட்டிருந்த ரவுடிகள் மீண்டும் அவன் அருகில் சென்று அவன் முகத்தில் ஒரு குத்துவிட்டு அவனது தலை முடியை இறுக்கமாக பிடித்துக் கொண்டு “டேய் டாக்டரு.. ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லிரு. இப்படி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி அநியாயமா எங்க கையால உயிரை விட்டுறாத..
அந்த பொண்ணுக்கும் உனக்கும் நடுவுல கொஞ்ச நாள் லவுஸ் ஓடச்சாம்.. நாங்க கேள்விப்பட்டது எல்லாம் உண்மை தானே! அது தெரியாம எங்க பாஸ் உன்னையே வச்சு அவள போட்டுத்தள்ள பாத்திருக்காரு..
நீ எங்களுக்கு விசுவாசமா இருக்கிற மாதிரி நடிச்சிட்டு அந்தப்பக்கம் எங்க கிட்ட இருந்து உன் காதலியை காப்பாத்தி எங்கயோ தப்பிக்க விட்டுட்டா அப்படியே நீ சொல்றது எல்லாத்தையும் நம்பி நாங்க உன்ன சும்மா விட்ருவோம்னு நினைச்சியா?
உண்மைய சொல்லு டா.. அந்த பொண்ணு எங்க? அவள எங்க மறைச்சி வச்சிருக்க?” என்று கேட்டு அவனை பதில் சொல்ல வாயை கூட திறக்க விடாமல் மீண்டும் மீண்டும் அவன் முகத்திலேயே குத்தினார்கள்.
அதில் அவனது உதடு கிளிந்து ரத்தம் வர, கோபத்தில் பொங்கிய ஜோஸ்வா “யோவ் போதும் நிறுத்துங்கயா.. நான் தான் அவள பத்தி எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றேன்ல! நானே அவளைத் தான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்.
எனக்கே தெரியாம அவ அமெரிக்கா போகணும்னு ட்ரை பண்ணி இருக்கா. அதை மட்டும் தான் என்னால கண்டுபிடிக்க முடிஞ்சுது. ஆனா இன்னும் அவ அமெரிக்கா போகல. அவ குடும்பத்துல இருக்கிறவங்களும் அவளை தேடிக்கிட்டு தான் இருக்காங்க.
இப்ப வரைக்கும் அவ எங்க போனான்னு யாருக்குமே தெரியல. அவ வீட்டு ஆளுங்க கம்ப்ளைன்ட் கொடுத்ததனால போலீஸ் கூட அவளை தேடிட்டு தான் இருக்காங்க. அவளா எங்கேயோ போய் ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கா. நீங்க வந்து அவ எங்க இருக்கான்னு என் கிட்ட கேட்டா எனக்கு எப்படி டா தெரியும்?” என்று கோபமாக கேட்டான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)