அத்தியாயம் 56
தாத்தா கேட்ட கேள்வி அரைகுறையாக புரிந்தாலும் ரிஷியுடன் தன் எப்போதும் இருந்தால் அதுவே போதும் என நினைத்த நித்திலா உற்சாகமான முகத்துடன் “நான் எப்பவும் என் டிம்பிள் கூட தான் இருப்பேன் தாத்தா. அவன் என்னை விட்டுட்டு போக மாட்டேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணி இருக்கான். இங்க வந்த உடனே எனக்கு உங்களையும் ரொம்ப பிடிச்சிருச்சு.
நீங்க யாருமே என்னை திட்டுறதும் இல்ல, அடிக்கிறதும் இல்ல. அதுவும் இல்லாம இப்படி டேஸ்ட்டா சாப்பாடு கொடுக்குறீங்க! அதனால நான் ரொம்ப ரொம்ப ஹேப்பி. இனிமே நான் இங்க தான் இருப்பேன். வேற எங்கயும் என்னை அனுப்பிராதீங்க!” என்றாள்.
அவளது பதிலில் திருப்தியாக புன்னகைத்த தாத்தா “இல்ல டா கண்ணு, தாத்தா உன்ன எங்கேயும் அனுப்ப மாட்டேன். நீயும் என் பேரனும் கடைசி வரைக்கும் சந்தோஷமா ஒத்துமையா வாழனும். என் பேரனுக்குன்னு ஒரு வாரிசு வரணும். அது மட்டும் நடந்துட்டா, நீங்க நல்லா வாழ்றதை பார்த்துட்டு நான் நிம்மதியா கண்ண மூடுவேன்.” என்று சொல்ல, “வாரிசுன்னா என்ன தாத்தா?” என்று புரியாமல் கேட்டாள் நித்திலா.
அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தாத்தாவும் திருதிருவென்று விழிக்க, “அது ஒன்னும் இல்ல நித்திலா.. இப்ப நம்ம கூட தருண் இருக்கான்ல.. அந்த மாதிரி இந்த வீட்டுக்கு இன்னொரு குட்டி பாப்பா வந்தா நல்லா இருக்கும்னு தாத்தா சொல்றாரு.” என்றாள் நிரஞ்சனா.
“ஓஹோ தாத்தாவுக்கு குட்டி பாப்பா வேணுமா? சூப்பர் சூப்பர்.. எனக்கும் நிறைய குட்டி பாப்பா வேணும். இப்ப தருண் கூட விளையாடுற மாதிரி நான் அவங்க கூடயும் ஜாலியா விளையாடுவேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்ன நித்திலா ரிஷியை பார்த்து “அந்த புது குட்டி பாப்பா இங்க எப்ப வரும் ரிஷி? நீ போய் சீக்கிரம் கூட்டிட்டு வரியா? அந்த பேபியும் பாக்குறதுக்கு உன்ன மாதிரியே க்யூட்டா இருக்குமா?” என்று ஆர்வம் குறையாமல் கேட்டாள்.
“ஐயோ கடவுளே.. இவளே இன்னும் குழந்தையா இருக்கா. இதுல தாத்தா இந்த குடும்பத்துக்கு இவ வாரிசை பெத்து கொடுப்பான்னு எப்படி நம்புறாரோ தெரியல..
இவ வேற எப்ப குழந்தை வரும்னு எல்லார் முன்னாடியும் என் கிட்ட கேட்கிறா.. இதுக்கு நான் என்ன பதில் சொல்றது?” என்று நினைத்து ரிஷி வெட்கத்தில் தலை குனிய, அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்த திலீப் “உன்னால தான் சீக்கிரமா அந்த பேபியை இங்க கூட்டிட்டு வர முடியும் நித்திலா.” என்றான் நித்திலாவிடம்.
சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனை ஆச்சரியமாக பார்த்த நித்திலா “நானா? என்னால தான் கூட்டிட்டு வர முடியுமா? ஏன் அப்படி? நான் எங்க போய்க் கூட்டிட்டு வரணும்? எனக்கு எந்த இடமும் தெரியாதே!” என்று கேட்டுவிட்டு அனைவரையும் பார்த்து அப்பாவியாக முழிக்க,
“நீ எங்கயும் போய் கூட்டிட்டு எல்லாம் வர தேவையில்லை மா. நீ என் பேரன் ரிஷியை கல்யாணம் மட்டும் பண்ணிக்கோ மத்தது எல்லாம் தானா நடக்கும்..!!” என்று நமுட்டு சிரிப்புடன் சொன்ன தாத்தா ஓரக் கண்ணால் ரிஷியை பார்த்தார்.
இங்கே நடக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல வெட்கத்தில் தலை குனிந்து அமர்ந்து இருந்த ரிஷி அவசர அவசரமாக தன் தட்டில் உள்ள உணவுகளை வாய்க்குள் திணித்தான். தொடர்ந்து தாத்தாவிடம் திருமணம் என்றால் என்ன? அதை எப்படி செய்ய வேண்டும் என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொண்ட நித்திலா,
“ஓஹோ இதுக்கு பேரு தான் கல்யாணமா? எனக்கு இது இப்ப தான் தெரியும் தாத்தா. கல்யாணம் பண்ணா தான் குட்டி பாப்பா வரும் அப்படித் தானே.. அப்ப இப்பயே நான் டிம்ப்லை கல்யாணம் பண்ணிக்கிறேன்.
அப்ப தான் இவங்க ரெண்டு பேருக்கும் தருண் பாப்பா இருக்கிற மாதிரி எங்களுக்கும் God ஒரு குட்டி பாப்பா குடுப்பாரு.” என்று வெள்ளந்தியாக சொன்னாள்.
அவளிடம் பேசி பழக பழக தாத்தாவிற்கு அவளை மிகவும் பிடித்து போய்விட்டது. கண்டிப்பாக தன் குடும்பத்திற்கு இவள் தான் மருமகளாக வர வேண்டும். அந்த பிராப்தம் இருப்பதால் தான் தங்கள் வீட்டை தேடி இவள் வந்திருக்கிறாள் என்று மனதார நம்பிய தாத்தா “கண்டிப்பா நடக்கும் மா. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சா கடவுள் கண்டிப்பா உங்களை சந்தோஷமா வாழ வைப்பாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.” என்றார்.
சாப்பிட்டுக் கொண்டு இருந்த நித்திலாவிடம் நிரஞ்சனா ஏதோ பேசிக் கொண்டு இருக்க அதை கவனித்த தாத்தா “அதான் இந்த பொண்ணோட பேரு அது இல்லைன்னு எனக்கு தான் தெரிஞ்சிருச்சே.. இவ யாருன்னும் நம்ம எல்லாருக்கும் சொல்ல போறோம். அப்புறம் எதுக்கு இன்னும் நித்திலா நித்திலான்னு பொய்யான பேர சொல்லி இவளை கூட்டிட்டு இருக்கீங்க?
இதுக்கு அப்புறமாவது இந்த பொண்ணுக்கு அவ யாருன்னு தெரியட்டும். அவ அப்பா அம்மா கிட்ட பேசும்போது என் பேரு நித்திலான்னு இந்த பொண்ணு சொன்னா நல்லா இருக்கும்? இனிமே இவளை இவளோட உண்மையான பெயரை சொல்லி கூப்பிடுங்க.” என்று சொல்ல, அவளது உண்மையான பெயர் என்னவென்று தெரியாததால் நிரஞ்சனா கேள்வியாக தன் கணவன் திலீபையும் ரிஷியையும் மாறி மாறி பார்த்தாள்.
தனது பெயரைப் பற்றி அனைவரும் ஏதோ பேசுகிறார்கள் ஆனால் அது என்னவென்று தெளிவாக தெரியவில்லையே என்ற ரீதியில் நித்திலா ரிஷியை பார்க்க “கீர்த்தனா!” என்றான் அவன்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)