அத்தியாயம் 51
குஷியை எப்படி தீர்த்து கட்டலாம் என்று தீரஜ் தன் அம்மா ரேகாவிடம் கேட்க, “டேய் கொஞ்ச நேரம் சும்மா இரு டா. அந்த ஆளுக்கு ரிஷி அடிக்கடி அவரை எதிர்த்து பேசுறதுனால அவன் மேல தான் பாசம் குறைஞ்சு போச்சு. அதான் உன் மேல இருக்கிற பாசத்துல அவனை தீட்டு கட்டிட்டு உன்னை அந்த இடத்துக்கு கொண்டு வரணும்னு பார்க்கிறாரு.
ஆனா நமக்கு இருக்கிற ஒரே பொண்ணுன்னு அவருக்கு அந்த புள்ள குஷி மேல பாசம் அதிகம். அவ பேசாம சைலன்ட்டா இருக்கிறதுனால, எப்படியாவது மகள் கிட்ட பேசணும். அவ கூட பழையபடி உறவாடனும்னு பாத்துட்டு இருக்காரு. அவர் முன்னாடியே அவளை எப்படி தீர்த்து கட்டறதுன்னு பிளான் போடுற.. உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லையா?” என்று கேட்டு தன் மகனை கண்டித்தாள் ரேகா.
இப்படி அவர்கள் இருவரும் ஏதோ ரகசியம் பேசிக் கொண்டு இருப்பதை கவனித்த ஆனந்தகுமார் “எனக்கு தெரியாம அம்மாவும் பையனும் என்ன பிளான் பண்றீங்க? உங்க இஷ்டத்துக்கு ஏதாவது பண்ணி போலீஸ்ல மாட்டி ஜெயில்ல போய் உக்காந்துக்கிட்டீங்கன்னா, நான் காப்பாத்துவேன்னு மட்டும் நினைக்காதீங்க.
ரிஷி விஷயத்துல அவசரப்படாதீங்க அவன் கிட்ட ஏதாவது பேசிப் பார்க்கலாம் பொறுமையா இருங்கன்னு உங்க கிட்ட எத்தனை தடவ சொன்னேன்? அவனை கொஞ்சம் அனுசரிச்சு போய் இருந்தா, இந்நேரம் இவன் ஜென்ரல் மேனேஜராவாவது இருந்திருக்கலாம். அவனை மொத்தமா மேல அனுப்பிட்டு அவன் சீட்டை பிடிக்கணும்னு நீங்க ஆசைப்பட்டு ஒரு திட்டம் போட்டிங்க.
இப்ப அது உங்களுக்கே எப்படி ஆப்பு ஆயிடுச்சுன்னு பாக்குறீங்கல்ல.. அந்த கிழவன் வந்து மொத்தமா உங்க பிளானுக்கு சங்கு ஊதிட்டான். இதுக்கு தான் நான் சொல்றத கேட்கணும். இனிமே எனக்கு தெரியாம நீங்க எதுவும் பண்ணக் கூடாது. ஒவ்வொரு தடவையும் கட்டுன பாவத்துக்கும் பெத்த பாவத்துக்கும் நீங்க பண்ற எல்லா தப்புல இருந்தும் நான் உங்களை காப்பாத்திகிட்டே இருக்க மாட்டேன்.” என்று அவர்களை எச்சரித்துவிட்டு அங்கே இருந்து வெளியேறி விட்டான்.
“என்ன மா அப்பா நம்ம கிட்டயே இப்படி பேசுறாரு.. குஷி இன்னும் வரவே இல்ல.. அதுக்குள்ள ஏதாவது பிரச்சனைனா நமக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்னு பேசுறாரு.. நீங்க சொல்ற மாதிரி அவ வந்ததுக்கு அப்புறம் மக பாசத்துல ஆள் மாறிட்டா என்ன பண்றது?
ஏதோ அவர் நம்ம பக்கத்துல இருக்கறதுனால தான் இந்த கம்பெனியில நம்ம கொஞ்ச நஞ்சம் கவுரவத்தோட ஓரமா ஒட்டிக்கிட்டு இருக்கோம். அவரே மொத்தமா அந்தப் பையனும் பொண்ணும் தான் முக்கியம்னு அந்த பக்கம் சாஞ்சுட்டாருன்னா நீயும் நானும் தெருவுல தான் நிக்கணும். ஏதாவது பண்ணி சீக்கிரமா மொத்தமா அந்த குடும்பத்துகிட்ட இருந்து இவரை பிரிக்கணும். குஷி மேலையும் இவருக்கு வெறுப்பு வர மாதிரி பண்ணனும்.” என்று தீரஜ் சொல்ல,
“அதெல்லாம் பாத்துக்கலாம் டா. இந்த ஆள எத்தனை வருஷமா என் கைக்குள்ள வச்சிருக்கேன்.. அவரை எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்கு தெரியாதா? எது நடந்தாலும் அவர் நம்ம பக்கம் தான் இருப்பாரு. நீ இதை பத்தி எல்லாம் யோசிச்சு கவலைப்படாத.
புதுசு புதுசா நிறைய ப்ராஜெக்ட் எடுத்து சக்ஸஸ் பண்ணி இந்த கம்பெனியோட குரோத்துக்கு நான் சப்போர்ட் பண்ணி இருக்கேன்னு அந்த ரிஷி எப்படி எல்லாம் தற்பெருமை பேசினான்னு பாத்தில்ல.. அந்த மாதிரி முதல்ல நீயும் ஏதாவது பண்ணு. இந்த கம்பெனிக்கு நீயும் நிறைய செய்ய அப்பதான் நம்மளால சொல்ல முடியும். நம்ம இங்க ஒக்காந்து பேசுறது நல்லா இருக்காது. அதான் அவரே கிளம்பிட்டாரே அப்புறம் நமக்கு என்ன வேலை..?? நீ வா நம்ம கிளம்பலாம்.” என்ற ரேகா தீரஜுடன் கிளம்பி வெளியில் சென்று விட்டாள்.
தாத்தாவின் காரில் ரிஷியின் அருகில் அமர்ந்து இருந்த நித்திலா ஜன்னல் வழியாக வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். ரிஷி அவளைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, அவர்களை கண்ணாடி வழியாக பார்த்தபடி இருந்த தாத்தா “உண்மையான காதல்னா எப்படி இருக்கும்னு என் பேரன் ரிஷி இப்ப தான் தெரிஞ்சிக்கிறான் போல இருக்கு. என் பொண்ணு மோகனா இப்படித் தான் ஒருத்தனை காதலிக்கிறேன்னு வந்து நின்னா.
அவனை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு அடம் பிடித்து கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனா அந்த பாவி அவ கூடையே இருந்து ஸ்லோ பாய்சன் மாதிரி கொஞ்சம் கொஞ்சமா என் பொண்ண கொன்னுட்டான். எனக்கு பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிக்கிட்டாளேன்னு அப்ப அவ வாழ்க்கை எப்படி இருக்குன்னு கண்டுக்காம நான் அவளை ஒதுக்கி வச்சேன். இன்னிக்கி மொத்தமா இந்த உலகமே வேண்டாம் நீங்க யாரும் எனக்கு வேண்டாம் எங்க எல்லாரையும் உதறி தள்ளிட்டு அவ மேல போய்ட்டா.
இப்ப அவளோட பிள்ளைங்கள பாத்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்துருச்சு. மோகனா மாதிரியே ரிஷி தனு மாதிரி ஒரு மோசமான பொண்ணு பின்னாடி சுத்துறானேனு நான் கவலைப்படாத நாளே இல்லை. ஆனா இப்ப புதுசா வந்திருக்கிற இந்த பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்கணும். அப்ப தான் என் ரிஷிக்கு இவ தகுதியானவளா இல்லையான்னு நான் முடிவு பண்ண முடியும்.” என்று நினைத்து அவர்களையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்நேரம் திடீரென்று ரிஷியின் பக்கம் திரும்பிய நித்திலா அவன் கையைப் பிடித்துக் கொண்டு “இப்ப நம்ம எங்க போயிட்டு இருக்கோம் டிம்பிள்? எனக்கு ரொம்ப பசிக்குது.” என்று பாவமாக கேட்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம தாத்தா வீட்டுக்கு போய்டுவோம் அம்மு. அங்க போய் சாப்பிடலாம்.” என்று சாதாரணமாக சொன்னான் ரிஷி.
நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த தாத்தா ஆச்சரியத்துடன் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்.
தொடரும்.