அத்தியாயம் 40
மறுநாள் காலை நித்திலா தூங்கி எழுந்து கொள்ளும்போது அவளுக்கு எதிரில் இருந்த சோஃபாவில் அமர்ந்து கையில் ஒரு குழந்தையை வைத்து கொஞ்சிக் கொண்டு இருந்தாள் நிரஞ்சனா. திடீரென்று அந்த குழந்தை அழ, அதை தூக்கி தனது தோள்களில் போட்டுக் கொண்ட நிரஞ்சனா “சரிடா சரிடா.. அம்மா இங்க தான் இருக்கேன் அழுகாத. உங்க டாடி வெளிய தான் இருக்காரு. நம்ம வேணா போய் அவரை பார்க்கலாமா?” என்று குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
அந்த காட்சியை பார்த்து புன்னகைத்த நித்திலா அவள் இப்போது நிரஞ்சனாவை தனது உண்மையான சகோதரி என நம்பிக் கொண்டு இருந்ததால் உரிமையாக எழுந்து அவள் அருகில் சென்று “அக்கா இந்த பேபி க்யூட்டா இருக்கு. இது யாரோட பேபி?” என்று கேட்க,
“ம்ம்.. என் பையன் என்ன மாதிரி தானே க்யூட்டா இருப்பான்… இவன் பேரு தருண்.
தருண் செல்லம்.. இங்க பாரு உங்க சித்தி… எங்க நித்திலா சித்தி சொல்லு பாக்கலாம்!” என்ற நிரஞ்சனா குழந்தையை நித்திலாவின் பக்கம் நீட்டினாள்.
அந்த குழந்தை திடீரென்று கதறி கதறி அழுததால் அதனுடைய பால் நிற தேகம் சிவந்து போக, அவனது கொழு கொழு கன்னங்கள் அப்படியே பார்ப்பதற்கு ஆப்பிள் போல இருந்தது. தனது மெல்லிய விரல்களால் லேசாக அந்த குழந்தையின் கன்னங்களை அன்புடன் கில்லி விளையாடிய நித்திலா “அக்கா எனக்கு இந்த பேபியை ரொம்ப பிடிச்சிருக்கு.
நான் ஒரே ஒரு தடவை இவனை தூக்கி பார்க்கவா?” என ஆசையாக கேட்டாள்.
நித்திலாவுடன் பழகிய இந்த இரண்டு நாட்களில் அவள் மிகவும் இனிமையானவள் மற்ற புத்திஸ்வாதீனம் இல்லாதவர்களைப் போல ஆக்ரோஷமாக நடந்து கொள்ள மாட்டாள் என்ற நம்பிக்கை நிரஞ்சனாவிற்கு இருந்ததால் முழுவதாக குழந்தையை அவளிடம் கொடுக்காமல் அவள் பக்கம் கொண்டு சென்று அவள் முன்னே நீட்டினாள்.
ஆனால் சாதாரணமாக அந்த குழந்தையை கையில் வாங்கிய நித்திலா அதன் தலைக்கு அடியில் ஒரு கையை வைத்துக் கொண்டு என்னவோ பல குழந்தைகளை பெற்று வளர்த்தவள் போல குழந்தையை பக்குவமாக கையாண்டாள்.
அவள் குழந்தையை பத்திரமாக பிடித்துக் கொண்டிருக்கும் விதத்தை கண்டு ஆச்சரியப்பட்ட நிரஞ்சனா “பார்றா.. நித்திலாவுக்கு குழந்தைங்கள தூக்குறதுக்கு எல்லாம் தெரியுமா?” என்று கேட்க,
தன்னையும் அறியாமல் “ஓஓ.. நல்லா தெரியுமே! குழந்தைங்க பிறக்கும் போதே எத்தனை தடவ நான் அதை தூக்கி இருக்கேன்.. எனக்கு குழந்தைகளை தூக்க தெரியாதா அக்கா?” என்று கேட்ட நித்திலா குழந்தை தருணை பார்த்து,
“குட்டி பையா.. ஏன் டா அழுகுற? நான் உனக்கு சித்தியா? நீ வளர்ந்ததுக்கு அப்புறமா என்ன அப்படி தான் கூப்பிடுவியா?
நீ பெருசா ஆனதுக்கப்புறம் நான்உனக்கு நிறைய சாக்லேட் வாங்கி தரேன் ஓகேவா? அழுகாத பேபி!
உன்ன மாதிரி க்யூட்டான பேபிஸ் எல்லாம் அழுக்குவே கூடாது.” என சொல்லி கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
நிரஞ்சனா ஒரு பக்கம் இவளா இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள்? என்பதைப் போல அவளையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க, ரிஷியை எழுப்பிவிட்டு அங்கே வந்த திலீப் தன் மகனைப் பார்த்தவுடன் சந்தோஷமாக “எனக்கு முன்னாடி நீயே வீட்டுக்கு போய் பக்கத்து வீட்டுக்கார அக்கா கிட்ட இருந்து நம்ம தருணை வாங்கிட்டு வந்துட்டியா?” என்று கேட்டான். .
“ம்ம்.. ஆமா. நம்ம தான் இப்ப ரிஷி சாரோட வீட்டுக்கு போக போறோம்ல.. அதான் காலையில சீக்கிரமா போய் இவனுக்கு தேவையான திங்ஸ் எல்லாத்தையும் வீட்டில இருந்து எடுத்து கிட்டு இவனையும் கையோட தூக்கிக்கிட்டு வந்துட்டேன்.” என்றாள் நிரஞ்சனா.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)