Home சாபமாய் வந்த என் உயிரெசாபமாய் வந்த என் உயிரே CH 70

சாபமாய் வந்த என் உயிரே CH 70

by Thenaruvi Tamil Novels
201 views

நாயகன் 70 

அமுதாவை பின் வாசல் வழியாக வெளியில் வர சொன்னான் விஜய். அங்கே இருட்டாகவும் ஆள் நடமாட்டம் இல்லாமலும் இருந்ததால் பயத்தில் அவள் “சார்..!!” என்று இழுக்க, “என்ன இழுக்கிற? நான் தானே கூப்பிடுறேன்.. நான் கூப்பிட்டா வர மாட்டியா நீ?” என்று தன் குரலை உயர்த்தி கேட்டான் விஜய். 

அவன் அப்படி உரிமையாக கேட்டவுடன், எங்கிருந்தோ அவளுக்கு ஒரு திடீர் தைரியம் வந்தது. உடனே எதைப்பற்றியும் யோசிக்காமல் “கண்டிப்பா வருவேன் சார்.” என்று சொல்லிவிட்டு அவன் அருகில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு அவளை வர சொல்லி இருந்ததால் அந்த இடத்தை நோக்கி சுற்றி முற்றி பார்த்தபடி நடக்க தொடங்கினாள் அமுதா. அப்போது தெரு நாய் எல்லாம் கோரசாக குறைக்கும் சத்தம் அவளுக்கு கேட்டது.  

அதனால் உள்ளுக்குள் அவளுக்கு உதறல் எடுத்தாலும், லைனில் இருக்கும் விஜய் என்னவோ தன் அருகில் இருப்பதைப் போல நினைத்து அவளாக ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் சொன்ன இடத்திற்கு சென்றாள். அங்கே தனியாக நின்று கொண்டு இருந்த அமுதா சுற்றி முற்றி பார்த்தபடி “சார் நீங்க சொன்ன மாதிரி நான் பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்துல வந்து நின்னுட்டு இருக்கேன். இங்க யாருமே இல்ல சார். கோவில்ல விடிய காலையில பூஜை பண்ணுவாங்க. திடீர்னு பூசாரி எதுவும் வந்திடப் போறாரு.. எனக்கு பயமா இருக்கு.” என்று பதட்டமான குரலில் சொன்னாள் அமுதா. 

அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே இருந்தாலே தவிர மறுமுனையில் இருந்து விஜய் எந்த பதிலும் சொல்லவில்லை. அதனால் அவன் அழைப்பை துண்டித்து விட்டான் போல என்று நினைத்த அமுதா “ஹலோ சார்.. லைன்ல இருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டு காதில் இருந்த ஃபோனை எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவளை இடிப்பதைப் போல வந்து அவள் அருகில் நின்றது. 

அது தன்னை இடிக்கத்தான் போகிறது என்று நினைத்த அமுதா பதட்டத்தில் கையில் இருந்த மொபைல் ஃபோனை கீழே போட்டுவிட்டு “அம்மா!” என்று கத்தியபடி தன் முகத்தை மூடிக் கொண்டாள். அவளது பயந்த முகத்தை பார்த்தபடி தனது காரை ஆஃப் செய்துவிட்டு அதில் இருந்து கீழே இறங்கிய விஜய் மெல்ல நடந்து அவள் அருகில் சென்றான். 

அவனது காலடி சத்தம் கேட்டவுடன் வந்திருப்பது யார் என்று தெரியாமல் பயத்துடனே நடுங்கிக் கொண்டு அமுதா அவனைப் தன் இரு கைகளையும் விளக்கி இருந்த கொஞ்சமான கேப்பில் அங்கே இருந்த மங்களான வெளிச்சத்தில் பார்க்க, சோர்வாக இருந்தாலும் கூட பார்ப்பதற்கு அப்போதும் பிரகாசமான சூரியன் போல ஆளுமை பொருந்திய அவன் உருவத்தை அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. 

அவளுடைய மொபைல் ஃபோன் கீழே விழுந்து கிடப்பதை பார்த்த விஜய் அதையும் அவளையும் இரண்டு நொடிகள் மாறி மாறி பார்த்தான். என்ன நினைத்தானோ தெரியவில்லை சட்டென்று அவளை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டான். அவனுடைய அந்த எதிர்பாராத அணைப்பால் தடுமாறிய அமுதா திக்திக் இதயத்துடன் அவன் முகத்தை லேசாக தன் தலையை உயர்த்தி பார்த்தாள். 

அவள் இதயம் படபடப்பதை அவனாளும் உணர முடிந்தது. அதனால் அவளை இன்னும் இருக்கி அணைத்துக் கொண்ட விஜய் “சாரி டி. நான் உன்ன பயமுறுத்துட்டேன்னு நினைக்கிறேன்.” என்று அவனுடைய காந்த குரலில் இனிமையை கலந்து மென்மையிலும் மென்மையாக சொன்னான். தனது காதோரம் அவனுடைய இனிமையான குரலைக் கேட்ட அமுதாவிற்கு அப்படி ஒரு பரவசமாக இருந்தது. 

அந்த விடியற்காலை நேரத்தின் குளிர்ந்த காற்றாலோ, அல்லது அந்த ஆறரை அடி ஆண்மகனின் நெருக்கத்தாலோ தெரியவில்லை. அவளுடைய காது மடல்கள் கூட சிவந்து பிங்க் நிறத்தில் ஆனது.  அவனுடைய சூடான மூச்சுக்காற்று அவள் முகத்தோரம் வீச, அதில் இன்னும் அவள் உடல் ஏதோ மின்சாரம் பாய்ந்ததை போல உணர்ந்து சிலிர்த்து அடங்கியது. 

அவளை விடுவிக்க மனம் இன்றி தன்னோடு சேர்த்து அனைத்து பிடித்து வைத்திருந்த விஜய்க்கு இந்த நொடி இப்படியே நீண்டு கொண்டு இருந்தால் என்ன என்று இருந்தது. இதுவரை அவன் எத்தனையோ பெண்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறான். ஆன் ஸ்கிரீன் ஆன் ஸ்கிரீன் என்று அவன் மணிக்கணக்காக தன் வாழ்நாளில் செய்த ரொமான்ஸ்க்கு அளவே இல்லை. 

அப்படி இருந்தும் அந்த எளிய பெண்ணிடம் அவன் எதைக் கண்டானோ தெரியவில்லை. அந்த நொடி அவன் மனம் அவளுடைய நெருக்கத்திற்காகவும், அவள் அன்பிற்காகவும் ஏங்கியது. முதலில் பதட்டத்தில் இருந்த அமுதா அவன் தன்னை அணைத்துக் கொண்டு ஆறுதல் படுத்த தொடங்கியவுடன் என்னவோ தான் மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதைப் போல உணர்ந்து நிம்மதி அடைந்தாள். 

இதுவரை அவளிடம் விஜய் இப்படி அன்பாக நடந்து கொண்டது இல்லை என்பதால், உள்ளுக்குள் அவளும் அந்த தருணத்தை ரசிக்கத்தான் செய்தாள். மொத்தத்தில் அவர்கள் இருவரும் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அவர்களது வார்த்தைகள் சொல்ல மறந்த அனைத்தையும் அந்த பார்வை பரிமாற்றம் தங்களுக்குள் கடத்திக் கொண்டிருந்தது. 

முகத்தில் ஒரு துளி மேக்கப் இல்லாமல், வியர்த்து வடிய இருந்த அவளுடைய ஆயிலி ஃபேஸ் கூட இருட்டான வானத்தில் இருக்கும் பௌர்ணமி நிலா போல அவன் கண்களுக்கு பிரகாசமாக தெரிந்தது. அவளுடன் அத்தனை நெருக்கத்தில் இருக்கும்போது அவனையும் அறியாமல் வழக்கம் போல அவன் மனம் தடுமாற, அவளது இதழ்களை நோக்கி முத்தமிடுவதற்காக குனிந்தான் விஜய். 

அவன் சொல்லாமலே அதை உணர்வதைப் போல அமுதா தன்னையும் அறியாமல் தன் கண்களை மூடி அதற்கு தயாராக, அப்போது மூன்று நான்கு தெரு நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டபடி வல் வல் என்று ஹை பிட்ச்சில் குறைத்துக் கொண்டு அவர்களை நோக்கி ஓடி வந்தது. அந்த சத்தத்தை கேட்டு பயந்து போன அமுதா உடனே விஜயை விட்டு விலகி நின்றாள். 

அந்த நாய்கள் கூட்டம் அவர்களை நோக்கி ஓடி வந்ததால்,  அமுதா பயப்பட்டு இரண்டடி பின்னை செல்ல, தங்களை நோக்கி வரும் நாய்களை திரும்பி பார்த்த விஜய் அமுதாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தனது காருக்குள் சென்று அமர்ந்தான். அந்த வெறி பிடித்த தெரு நாய்கள் எல்லாம் தங்களை கடந்து செல்லும் வரை வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தால் அமுதா. அவள் முகத்தில் அப்படி ஒரு பயம் தெரிந்தது. 

அதனால் அவள் கையை பிடித்துக் கொண்ட விஜய் “இப்ப எதுக்கு இப்படி பயந்த சாகுற? அதுங்க கார்குள்ள வந்தா உன்ன கடிக்க போகுது?” என்று கேட்க, “வராது தான் இருந்தாலும் எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு சார். எனக்கு பேசிக்காவே dogs-ன்னா ரொம்ப பயம். அதனாலையே எங்க வீட்ல என்னை யாரும் தனியா வெளியே எங்கயும் அனுப்ப மாட்டாங்க.” என்று பயந்த முகத்துடனே சொன்னாள் அமுதா.

உடனே லேசாக புன்னகைத்த விஜய் “யாராவது நாயை பாத்து எல்லாம் பயப்படுவாங்களா? ஷூட்டிங்ல அந்த மாதிரி சீன் வந்தா என்ன பண்ணுவ? இந்த படத்துல நடிக்க மாட்டேன்னு ஓடிப் போயிடுவியா? இப்ப ஓடி வந்தியே அந்த மாதிரி!” என்று கிண்டலாக கேட்க, அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட அமுதா “அது ஒரு வேலை உங்க மூவியா இருந்துச்சுன்னா, உங்க பக்கத்துல வந்து உங்க கையை கேட்டியா பிடிச்சுக்குவேன். இந்த மாதிரி.. அப்புறம் எனக்கு பயம் போய்விடும்.” என்று சொல்லிவிட்டு அவனைப் பார்த்து அழகாக புன்னகைத்தாள் அமுதா. 

அவள் இரவு முழுவதும் தூங்காமல் அங்கும் இங்கும் பேயை போல பிணாத்திக் கொண்டு இருந்ததால் அவளுடைய தலைமுடி எல்லாம் கலைந்து பார்ப்பதற்கே ஒரு மார்க்கமாகத் தான் இருந்தாள்.  ஆனால் கலைந்து கிடக்கும் பொருட்களிலும் உள்ள கவிநயம் அதை ஒரு படைப்பாக படைக்கும் கலைஞருக்கு மட்டுமே தெரியும் என்பார்களே.. அதேபோலத் தான் விஜயின் கண்களுக்கு அமுதா ஒரு ஒப்பனை இல்லா பேரழகியாக ஜொலித்தாள். 

ஆனால் அவள் தன்னிடம் அப்படி உரிமையுடன் பேசும்போது அவன் இதயத்தில் ஏதோ ஒரு மாறுதலை உணரும் போது, அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள தயங்கியது. உடனே சட்டென்று அவள் கையை விட்டுவிட்டு வேறு புறமாக திரும்பி அமர்ந்து கொண்ட விஜய் “இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும். யாராவது வந்துட்டா பிராப்ளம் ஆயிடும்ன்னு நீதானே சொன்ன! அப்புறம் இங்க உக்காந்து என் கூட கடலை போட்டுட்டு இருக்க? 

அந்த dogs எல்லாம் போயிருச்சு. ஒன்னும் பிரச்சனை இல்ல. கீழ இறங்கி போ. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆயிடுச்சு இதுக்கு மேலயாவது போய் தூங்கு. நான் வேற காலை கட் பண்ண மறந்துட்டேன்.” என்று சொல்லிவிட்டு ப்ளூடூத்தில் கனெக்ட் ஆகி இருந்த அவளுடைய அழைப்பை கட் செய்தான். 

அவன் இவ்வளவு தூரம் தனக்காக தன்னை தேடி வந்திருக்கிறானா? என்று யோசித்து ஒரே சந்தோஷத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்த அமுதாவிற்கு அவன் எதுவும் சொல்லாமல் தன்னை மீண்டும் திரும்பி செல்ல சொன்னவுடன் புஸ் என்று இருந்தது. அதனால் அவள் அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருக்க, “என்ன திரும்ப வீட்டுக்கு போற ஐடியா இல்லையா உனக்கு?” என்று அவளை தனது கூர்மையான விழிகளால் பார்த்தபடி கேட்டான் விஜய். 

“நான் போறேன், வீட்டுக்கு போய் தானே ஆகணும்! அங்க போகாம வேற எங்க போக போறேன்? பட் அதுக்கு முன்னாடி நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமே! விடிய விடிய என் கிட்ட தானே பேசிட்டு இருந்தீங்க.‌.. இப்ப ஒரு ஃபைவ் மினிட்ஸ் பேச மாட்டீங்களா?” என்று அமுதா ஆர்வம் நிறைந்த கண்களுடன் அவனை பார்த்து கேட்க, “அதான் இவ்வளவு நேரம் பேசிட்டமே.. இன்னும் பேசுறதுக்கு என்ன இருக்கு உனக்கு?” என்று கேட்டுவிட்டு பெருமூச்சு விட்டான் விஜய். 

அவனாகவே அவளை தேடி இவ்வளவு தூரம் வந்தான். ஆனால் இப்போது அவன் அவள் அருகில் இருக்கும் போது ஏதோ தன்னை டிஸ்டர்ப் செய்வதாக உணர்ந்து எப்படியாவது இங்கே இருந்து கிளம்பி சென்று விட வேண்டும் என்ற நிலையில் இருந்தான் விஜய். “பேசணும்னு நினைச்சா நம்ம எவ்ளோ நேரம் வேணாலும் பேசிக்கிட்டே இருக்கலாம் சார். அதுக்கெல்லாம் ஒரு லிமிட்டே இல்ல. நீங்க திடீர்னு எதுக்காக சென்னையில இருந்து மதுரைக்கு வந்தீங்க? அதுவும் இந்த நேரத்துல.. என்ன பாக்குறதுக்கா?” என்று ஆர்வமான முகத்துடன் அவனைப் பார்த்து கேட்டாள் அமுதா. 

-காதல் மலரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured