அத்தியாயம் 61:
அனாமிகாவுடன் மீண்டும் விஜய் சேர்ந்து வாழ போகிறான் என்று நினைத்து சோகமாக அமர்ந்து இருந்தாள் அமுதா. அப்போது வெளியில் இருந்து “ஏண்டி அமுதா இன்னுமா தூங்கிட்டு இருக்க? மணி எட்டுக்கு மேல ஆகுது டி. நான் தோசை ஊத்திகிட்டு இருக்கேன். சீக்கிரம் வந்து சூடா சாப்பிடு.” என்று அமுதாவின் இரண்டாவது அண்ணி குரல் கொடுத்தாள்.
உடனே திடுக்கிட்டு எழுந்து அமர்ந்த அமுதா “இதோ வரேன் அண்ணி.” என்று சொல்லிவிட்டு எழுந்து கொட்டாவி விட்டபடி வெளியில் சென்றாள். அவள் எப்போது வருவாள் என்று அவளுடைய ரூம் கதவை பார்த்தபடியே முற்றத்தில் உள்ள தூணில் சாய்ந்து அமர்ந்தபடி காத்திருந்த வெற்றி எழுந்து அவள் அருகில் சென்று “என்ன அமுதா நல்ல தூக்கமா? டாக்டர் கொடுத்த டேப்லெட்டை சாப்டியா? கால் வலி இப்ப எப்படி இருக்கு? முகத்தில இருந்த வீக்கம் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி இருக்கு. நைட்டு தூங்கும்போது அந்த ஆயில்மெண்ட்டை போட்டுட்டு படு சரியா!” என்றபடி அவள் தாடயை படித்து அவள் முகத்தில் சிவப்பாக இருந்த அடையாளங்கள் இன்னும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தான்.
விஜயை பற்றிய சிந்தனைகளில் மூழ்கி இருந்த அமுதா அவன் கையை எடுத்துவிட்டு “நீ தொடாத. யாராவது கன்னத்தில கை வச்சாலே எனக்கு வலிக்குது.” என்று சொல்லிவிட்டு நேராக சென்று கை கழுவி விட்டு சென்று சாப்பிடுவதற்காக அமர்ந்தாள். தானும் அவள் அருகில் சென்று அமர்ந்த வெற்றி “அதான் இவ்வளவு நேரம் தூங்கிட்டியே.. இதுக்கு அப்புறம் போய் படுத்தா எப்படியும் ரொம்ப நேரத்துக்கு தூக்கம் வராது. நம்ம டிவில ஏதாவது படம் போட்டு பாக்கலாமா?” என்று அவளிடம் கேட்க, “இல்ல மாமா. எனக்கு படம் பாக்குற மூடு இல்ல. இப்பயும் எனக்கு தல சமய வலிக்குது. சாப்பிட்டு போய் படுத்தா விடிஞ்சு தான் தூங்கி எந்திரிப்பேன். நீ வேணா டிவி பாக்குறதுன்னா பாரு.” என்று விட்டாள் அமுதா.
ஆனால் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்த அமுதாவின் அண்ணன் மகள்கள் இருவரும் “மாமா நாளைக்கு எங்களுக்கு ஸ்கூல் லீவு தான். அதனால லேட்டா தூங்கி எந்திரிச்சாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல. புது படம் பாக்குறதுக்கு தியேட்டர் கூட்டிட்டு போங்கன்னா யாரும் கூட்டிட்டு போக மாட்டேங்குறாங்க. வீட்ல ஸ்மார்ட் டிவி இருக்குதுன்னு தான் பேரு. இந்த வீட்ல சீரியல தவிர வேற யாரும் அதுல பார்க்க மாட்டேங்கிறாங்க. இன்னிக்கி நம்ம எல்லாரும் ஏதாவது புது படம் பாக்கலாம். ப்ளீஸ் மாமா அத்தை படம் பாக்க வரலைன்னு சொன்னதுனால உடனே நீங்களும் வர மாட்டேன்னு சொல்லிடாதீங்க.” என்று கேட்டு வெற்றிடம் அடம் பிடிக்க,
“நான் தான் சந்தோசமா இல்ல. இந்த சின்ன பிள்ளைங்காவது சந்தோஷமா இருக்கட்டும். இவங்க சந்தோஷத்தை எதுக்கு கெடுக்கனும்?” என்று நினைத்த வெற்றி, “சரி, ஓகே பார்க்கலாம்.” என்றான். உடனே மகிழ்ந்த அந்த சிறுமிகள் இருவரும் “தேங்க்ஸ் மாமா, அம்மு அத்தை சொன்னா மட்டும் தான் நீங்க எதா இருந்தாலும் செய்வீங்ன்னு நாங்க இத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தோம். பரவால்ல நாங்க சொன்னாலும் கேட்கிறீங்க.. ரொம்ப சந்தோசம்.” என்று சொல்லிவிட்டு கிண்டலாக சிரித்தார்கள்.
“ஆமா, நான் என்ன சொன்னாலும் அப்படியே உங்க மாமா மண்டய மண்டைய ஆட்டிகிட்டு இருக்கிறதா உங்க எல்லாருக்கும் நினைப்பு.. இப்படியே நம்பிட்டு இருங்க.” என்று சொல்லிவிட்டு தன் உதட்டை சுளித்த அமுதா கையில் தட்டுடன் கிச்சனுக்கு சென்று அன்னபூர்ணியிடம் “நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி தோசை சுட்டு முடிச்சு எப்ப அண்ணி நான் சாப்பிடுறது? எனக்கு ரொம்ப பசிக்குது. எப்பயும் இட்லி ஊற்றி வைப்பீங்களே.. ஊத்தலையா இன்னைக்கு?” என்று கேட்டாள்.
உடனே சுமதி “பெரிய மாமா இட்லி தான் சாப்பிடுவாருன்னு ஒரு அடசை ஊத்தி வச்சிருக்கோம். அவர் நாலு இட்லி தான் சாப்பிடுவாரு. அதனால எப்படியும் மீதி இருக்கும். தட்டை குடு நான் போட்டு தரேன்.” என்று சொல்லிவிட்டு அவள் தட்டில் இட்லியை போட்டுக் கொடுத்தாள். “தேங்க்ஸ் அண்ணி” என்ற அமுதா அதை வாங்கிக் கொண்டு மீண்டும் வெளியில் அமர்ந்து சாப்பிட்டால் தன்னை சுற்றி நின்று கொண்டு பேச்சு கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் என நினைத்து நேராக தனது ரூமிற்கு சென்று விட்டாள்.
அவள் செல்வதை பார்த்தபடி சோகமாக அமர்ந்திருந்த வெற்றிக்கு சாப்பாடு கூட தொண்டைக்குள் இறங்க மறுத்தது. இருப்பினும் கடமைக்காக சாப்பிட்டு கொண்டு இருந்தான். அவனுக்கு அமுதாவை தாண்டி யோசிக்க இந்த உலகிலும், அவன் வாழ்க்கையிலும் வேறு எதுவுமே இல்லை. ஆனால் அமுதா தன்னை ஒரு ஆளாகவே அவன் வாழ்க்கையில் கன்சிடர் செய்வது இல்லையே என்று நினைக்கவே அவன் மனம் வலித்தது. என்னதான் சில நேரங்களில் தன்னிடம் அவள் அன்புடன் நடந்து கொண்டாலும் தாமரை இலையின் மீது இருக்கும் தண்ணீர் போல அவள் எப்போதும் தன்னுடன் ஒட்டாமலே இரண்டடி தள்ளி நிற்பதாக அவனுக்குள் உறுதி கொண்டே இருந்தது.
அனாமிகா என்ற பெயர் கொண்ட பிசாசிடம் விதிவசத்தால் மீண்டும் சிக்கிக் கொண்ட விஜய் வேறு வழியில்லாமல் வனிதாவை டிஸ்டன்ஸ் செய்து அழைத்து செல்லும்போது அவர்களுடன் தன் அப்பாவின் வீட்டில் தங்க வேண்டியதாகி விட்டது. அவனுக்கு நடக்கும் அனைத்தையும் நினைக்கும்போது ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? என்ற கோபம் ஒரு பக்கம், “அந்த பிரியா மட்டும் கரெக்டா இருந்திருந்தா என் லைஃப்ல இது எல்லாம் நடந்திருக்குமா? ஏன் அவ எனக்கு இப்படி எல்லாம் பண்ணனும்? வாழ் பொய் கத்தி வந்த மாதிரி அப்ப போனதுக்கு அப்புறம் இந்த அனாமிகா எதுக்கு என் லைஃப்ல வரணும்? ச்சே.. ஹாட்டான physic, name, popularity, fan base, unlimited wealth எல்லாமே இருந்தும் இப்படி நிம்மதியா சந்தோஷமா வாழ முடியாத ஒரு லைஃபை எதுக்கு தான் நான் வாழ்ந்துட்டு இருக்கனோ எனக்கு தெரியல!” என்று நினைத்து சோகம் ஒரு பக்கம் இருக்க, தலை வலியில் சிக்கி தவித்த விஜய் தனது ரூமிற்கு சென்றால் அங்கே அனாமிகா இருப்பாள் இருக்கும் கடைப்பில் அவள் முகத்தை எல்லாம் பார்க்க முடியாது என்று நினைத்தான்.
அதனால் நேராக தனது அப்பாவின் மினி பாருக்கு சென்ற விஜய் அங்கே அமர்ந்து குடித்துக் கொண்டு இருந்தான். விஜய் இப்போது அவனுடைய குடும்பத்தினருடன் வசிப்பதால், எப்போதும் அவனுடன் இருக்கும் தினேஷ் இங்கே அவனால் இருக்க முடியாது என நினைத்து தனது வீட்டிற்கு கிளம்பி சென்றிருந்தான். எப்போதும் தன் பின்னையே சுற்றிக் கொண்டு தன் நலனை பற்றியே யோசிக்கும் ஒரு ஜீவன் தினேஷ் தான் என்பதால் “இப்ப அவன் கூட என் பக்கத்துல இல்ல. அவனும் என்ன விட்டுட்டு போயிட்டான்.” என்று நினைத்து தனியாக புலம்பி கொண்டிருந்தான்.
இன்று அவனுக்கு தனியாக குடிக்க பிடிக்கவில்லை. அவனுடைய நண்பர்களில் பாதி பேர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அதனால் இப்போது யாருடன் சேர்ந்து குடிப்பது? என்று யோசித்தவன் வேறு வழியில்லாமல் தினேஷிற்கு கால் செய்து “டேய் எனக்கு தனியா குடிக்க போரடிக்குது. நீ உடனே கிளம்பி இங்க வா. விடியுற வரைக்கும் நீயும் நானும் இன்னைக்கு ஃபுல்லா குடிச்சிட்டு மட்டை ஆகுறோம்.” என்று போதை ஏறிய குரலில் சொன்னான்.
“பாஸ் ஆல்ரெடி டைம் 1 ஆயிடுச்சு. இதுக்கு மேல நான் அங்க கிளம்பி வரணும்னா, நான் ரீச் ஆகுறதுக்கே ஒன் ஹவர் மேல ஆகும். அதுவும் இல்லாம, நாளைக்கு உங்களுக்கு ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு மறந்துட்டீங்களா? நீங்க பேசுறத கேட்டாலே ஆல்ரெடி நீங்க நிறைய குடிச்சிருக்கீங்கன்னு தெரியுது. போதும் பாஸ், போய் தூங்குங்க.” என்று தினேஷ் அக்கறையுடன் சொல்ல,
“டேய் நான் ரூமுக்கு போனா அங்க அந்த பேய் இருக்கும் டா. என்னால எப்படி அங்க போய் நிம்மதியா தூங்க முடியும்? கடைசில மத்தவங்க மாதிரி நீயும் என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டில! உனக்கு என் மேல அக்கறை இருந்தா நீ என்ன இங்க விட்டுட்டு போயிருப்பியா? போடா தினேஷ் போ.. நீ கூட மாறிட்ட!” என்று சோகமான குரலில் அவனிடம் புலம்பினான் விஜய்.
“என்ன கொடுமை சார் இது.. இவர் குடிச்சா ஒன்னு இப்படி குழந்தை மாதிரி பேசி டார்ச்சர் பண்றாரு. இல்லனா அப்படியே அந்நியனா மாறி அட்ராசிட்டி பண்ணி இம்சை பண்றாரு. இவர் கிட்ட மாட்டிகிட்டு என்னால முடியல.” என்று நினைத்து பெருமூச்சு விட்ட தினேஷ், “பாஸ் உங்களை விட்டுட்டு நான் எங்க பாஸ் போக போறேன்? நீங்க ரொம்ப நல்லவரு பாஸ். இந்த அளவுக்கு நான் வேறு எங்கேயாவது போனா யார் எனக்கு சேலரி கொடுப்பாங்க சொல்லுங்க? என்ன ஆனாலும் நான் உங்களையும், இந்த வேலையையும் விட்டுட்டு போக மாட்டேன். ப்ளீஸ் பாஸ்.. ஆல்ரெடி நீங்க கோர்ட்டுக்கு வராததுனால உங்கள பத்தி இஷ்டத்துக்கு காசிப் பேசிட்டு இருக்காங்க. நாளைக்கு நீங்க ஆபீசுக்கு வராம போய்ட்டா, ஷேர் ஹோல்டர்ஸ் எல்லாருக்கும் நான் தனியா அங்க போய் நின்னு பதில் சொல்ற மாதிரி இருக்கும்.
சொல்றத கேளுங்க பாஸ் ப்ளீஸ்.. நீங்க குடிச்சது போதும். போய் தூங்குங்க. உங்களுக்கு இருக்கிற போதைக்கு கண்டிப்பா சீக்கிரம் தூக்கம் வந்துரும். யாரும் உங்கள டிஸ்டர்ப் பண்ண முடியாது.” என்று பொறுமையாக சொன்னான்.
“அப்படியா சொல்ற? டேய் தினேஷ்.. நான் உன் கிட்ட ஒன்னு கேக்குறேன். நீ உண்மைய சொல்றியா?” இன்று விஜய் கேட்க, “நான் பதில் சொல்லலைனா என்ன விடவா போறீங்க? கேளுங்க பாஸ் சொல்றேன்.” என்று சலிப்பான குரலில் சொன்னான் தினேஷ். “முழுசா இல்லைன்னாலும் என்ன பத்தி உனக்கு ஓரளவுக்கு எல்லாமே தெரியும். இப்ப நீ சொல்லு டா.. நான் நல்லவனா இல்ல கெட்டவனா? உன் கிட்ட பேசினதுக்கு அப்புறம் எனக்கு இப்ப திடீர்னு இந்த டவுட்டு வந்துருச்சு. எல்லாரும் நினைக்கிற மாதிரி ஒரு வேலை நான் ரொம்ப கொடூரக்கார சைக்கோவா இருப்பனோ?
அதான் இவன் கூட எல்லாம் வாழ முடியாதுன்னு என் பிரியா இன்னொருத்தன் கூட போயிட்டாளா? கடவுள் கூட அனாமிகா மாதிரி ஒரு பிசாசு அனுப்பி என்னை வச்சு செய்றாரே டா.. அதனாலயே எனக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் போயிருச்சு. இப்ப நீ எனக்கு உண்மையை சொல்ற.. நான் நல்லவனா இல்ல கெட்டவனா?” என்று போதையில் தினேஷிடம் உளறிக் கொண்டு இருந்தான் விஜய்.
அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான் தினேஷ். விஜயை பொறுத்தவரை அவனை எந்த ஒரு கேட்டகிரியிலும் உடனே கொடுத்து விட முடியாது. அவனிடம் எல்லா குணங்களும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது. அவன் கெட்டவன் என்று நினைக்கும் போது மற்றவர்களை பற்றி யோசித்து பெரிதாக ஏதாவது ஒன்று செய்து அனைவரையும் மகிழ்வித்து விடுவான்.
அதே சமயம் அவன் அனைவரின் மீதும் பாசம் கொண்டவன், குடும்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவன் என்று யோசித்துப் பார்த்தால்; திடீரென்று அந்த குடும்ப உறுப்பினரே தனக்கு எதிராக நடந்து கொண்டால் அவர்களின் உயிரை எடுக்க கூட தயங்க மாட்டான். இப்படி ஒருவனை குறிப்பாக இவன் இப்படித் தான் என்று எப்படி சொல்வது? அதனால் தினேஷ் “நான் உண்மையை சொன்னா நீங்க கோச்சுக்க மாட்டீங்களே பாஸ்!” என்று கேட்க, “கோச்சுக்க மாட்டேன் டா, சொல்லித் தொலை.” என்றான் விஜய்.
“நீங்க 50/50 பாஸ்.” என்றான் தினேஷ். நல்ல போதையில் இருந்த விஜய் “50/50 ஆ? நான் தானே குடிச்சிருக்கேன்.. நீ என்ன டா லூசு மாதிரி உளறிட்டு இருக்க? 50/50-ன்னா, பிஸ்கட் தானே.. என்னை பார்த்தா உனக்கு பிஸ்கட் மாதிரி இருக்கா? பிச்சுப்புடுவேன் உன்னை..!!” என்றான் கோபத்துடன்.
– காதல் மலரும் 🌹