அத்தியாயம் 55
சஞ்சனா தொடர்ந்து வனிதாவின் உடல் நிலையை நினைத்து அழுது கொண்டே இருந்ததால் “அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. டாக்டர் தான் மம்மியை செக் பண்ணிட்டு இருக்காருல்ல.. அவரை வந்து உங்களுக்கு எதுவும் இல்லைன்னு சொல்லுவாரு. நீ அழாம கொஞ்சம் வெயிட் பண்ணு சஞ்சு.” என்று சொல்லி அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் விஜய்.
அங்கே உள்ளே ஐசியூ வார்டில் உள்ள ரூமில் இருந்த வனிதா டாக்டர் அவளுக்கு ஆக்சிஜன் மாஸ்க் பொருத்த முயற்சி செய்ததால் அதை கையில் பிடித்துக் கொண்டு “டாக்டர் நான் தான் வந்தவுடனே சொன்னேனே.. நான் நல்லா தான் இருக்கேன். யாராவது உள்ள வந்தா மட்டும் இதை எல்லாம் மாட்டுங்க. நான் சும்மா இருக்கும்போது எதுக்கு ஆக்சிஜன் எல்லாம் வைக்கிறீங்க? இத பாத்தாலே பயமா இருக்கு. விஜய் இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு இங்க தான் இருக்கணும். அதுவரைக்கும் ஏதாவது ட்ரீட்மென்ட் குடுக்குற மாதிரி பாவலா பண்ணிட்டு அப்புறமா அவன் கிட்ட போய் இப்ப எல்லாம் சரியாயிடுச்சுன்னு பொய் சொல்லிருங்க. ஒரு ரெண்டு நாள் இங்க அட்மிட் ஆகணும்னு சொன்னா கூட பரவால்ல.” என்று சொல்ல,
“அது எல்லாம் பாத்துக்கலாம் மேடம். இப்படி பண்றது நமக்கு என்ன புதுசா? விஜய் சார் கிட்ட நாங்க என்ன சொல்லணும்னு மட்டும் நீங்க சொல்லுங்க. அதை அப்படியே சொல்லிடுறோம்.” என்றார் டாக்டர்.
அனைத்தையும் தயார் செய்துவிட்ட வனிதா என்னவோ தனது ரூமில் உள்ள பெட்டில் சாவகாசமாக படுத்திருப்பதைப் போல ஹாஸ்பிடல் பெட்டில் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்தபடி இருந்தாள். ஆனால் திடீரென யாராவது வந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என்று நினைத்த டாக்டர் பேஷண்ட்க்கு எப்படி ட்ரீட்மென்ட் கொடுப்பாரோ அதேபோல அவளை படுக்க வைத்து அவள் உடம்பில் சில பயிர்களை எல்லாம் மாட்டி வைத்திருந்தார்.
கோர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அங்கிருந்து விரைவாக கிளம்ப வேண்டும் என்று நினைத்த விஜய் கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு டாக்டர் வெளியில் வந்து வனிதாவின் உடல் நிலையை பற்றி எதுவும் சொல்லாததால் சஞ்சனா வேறு அழுது கொண்டே இருப்பதை பார்த்துவிட்டு “இரு, உள்ள போய் நானே டாக்டர் கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு சட்டென கதவைத் திறந்து உள்ளே சென்றான்.
விஜய்க்கு கொடுமை ரொம்ப குறைவு என்று அவனை வளர்த்த வனிதாவிற்காக தெரியாது? அதனால் நேரம் செல்ல செல்ல கண்டிப்பாக அவன் பொறுமை இழந்து எப்படியும் உள்ளே வந்து என்ன நடக்கிறது, தனது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று பார்ப்பான் என முன்கூட்டியே யோசித்து டாக்டரிடம் தனக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பதைப் போல நடிக்க சொல்லி இருந்தாள்.
அவரும் அதைப்போலவே பாவாளா செய்து கொண்டிருக்க, உள்ளே வந்த விஜய் டாக்டரிடம் “என்னாச்சு டாக்டர்? மம்மி இன்னும் மயக்கத்தில தான் இருக்காங்களா? அவங்களுக்கு ஏன் இப்படி திடீர் திடீர்னு ஆகுது? அவங்களுக்கு செஸ்ட் பெயிண்ட் இருக்குதுன்னு மயக்கமாகிறதுக்கு முன்னாடி சொன்னதா என் சிஸ்டர் சொல்லிட்டு இருந்தாங்க. Is she now alright?” என்று கேட்க, அவனுடைய ஆளுமை பொருந்திய தோற்றத்தை பார்த்த பிறகு டாக்டருக்கு அவனிடம் பொய் சொல்ல கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது.
ஆனால் வனிதாவின் குடும்பத்திற்கு அவர் ஃபேமிலி டாக்டராக மாறிய பிறகு இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் அடிக்கடி நடப்பதால் அவர் அதற்கு நன்றாகவே பழகியிருந்தார். அதனால் வழக்கம் போல இப்போதும் “இல்ல மிஸ்டர் விஜய். வனிதா மேடம் ஓட கண்டிஷன் இன்னும் ஸ்டேபிளாகல. ஏதோ ஸ்ட்ரெஸ்ல இவங்க இருந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதான் பிளட் பிரஷர் ரைஸ் ஆகி மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. அது மட்டும் இல்லாம இவங்களுக்கு மயில்ட் ஹார்ட் அட்டாக் வர்றதுக்கான அறிகுறிகள் எல்லாமே தெரியுது. அதனால எப்படியும் இவங்க ரெண்டு நாள் இங்க
அப்சர்வேஷன்ல இருக்கணும். அண்ட் இவங்களுக்கு முதல்ல மயக்கம் தெளியனும்.. அப்புறம் தான் செக் பண்ணிட்டு எதுவா இருந்தாலும் சொல்ல முடியும்.” என்று சொல்லி வாய்க்கு வந்ததை எல்லாம் அடித்துவிட்டார்.
தன்னை வளர்த்தவள் என்பதால் விஜய்க்கு வனிதாவின் மீது ஒரு தனி பாசம் இருந்தது. அதனால் மயக்கத்தில் கிடந்த வனிதாவை சோகமாக பார்க்க விஜய் “அவங்களுக்கு எதுவும் ஆகிடாதுல்ல டாக்டர்? என்ன நெனச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு இருந்ததனால தான் இவங்களுக்கு இப்படி ஆயிட்டுச்சுன்னு என் சிஸ்டர் சொன்னாங்க. சோ என்னாலையே இவங்களுக்கு இப்படி ஆயிடுச்சுன்னு நினைச்சாலே எனக்கு கில்ட்டியா இருக்கு.” என்று சோகமாக சொல்ல,
“டோன்ட் வரி மிஸ்டர் விஜய். அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சிட்டாலே பாதி சரியான மாதிரி தான். சீக்கிரம் அவங்களுக்கு கான்ஷியஸ் வரணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க. எல்லாமே நல்லா தான் நடக்கும்னு நம்புவோம். அவங்களுக்கு க்யூர் ஆகுற வரைக்கும் நான் இங்க இருந்து பர்சனலா உங்களை பார்த்துக்கிறேன்.” என்று பெருந்தன்மையுடன் சொன்னார் டாக்டர். “ஓகே டாக்டர் தேங்க்ஸ்” என்ற விஜய் அந்த அறை கதவை கொண்டு வெளியில் சென்றான்.
அவன் வந்தவுடன் வேகமாக அவன் அருகில் சென்ற சஞ்சய் சஞ்சனா இருவரும் வனிதாவின் உடல்நலத்தை பற்றி விசாரிக்க, “இவங்க கிட்ட அம்மா கூட கண்டிஷன் கிரிட்டிக்கலா தான் இருக்குன்னு சொன்னா பாவம் ரெண்டு பேரும் பயந்துருவாங்க.” என்று நினைத்த விஜய் “அம்மாவுக்கு சீக்கிரம் சரியாயிடும். அவங்க நார்மலா தான் இருக்காங்கன்னு டாக்டர் சொன்னாரு.” என பொய் சொன்னான். அதை நம்பிய சஞ்சனா கொஞ்சம் அழுவதை நிறுத்திவிட்டு நார்மலாக, “டேய் முட்டாள்.. அங்க எங்க அம்மா நடிச்சிட்டு இருக்கிறது தெரியாம நீ போய் டாக்டர் சொன்னத கேட்டுட்டு வந்து ரொம்ப நல்லவன் மாதிரி எங்க கிட்ட உண்மைய சொல்ல கூடாதுன்னு பொய் சொல்றியா? இப்ப வரைக்கும் நாங்க உங்கி ட்ட சொல்றது எல்லாமே பொய் தான் டா. அது கூட கண்டுபிடிக்க தெரியல. நீ எல்லாம் பெரிய விஜய்.. உனக்குன்னு அவ்ளோ பெரிய fan base. 10, 15 பிஸ்னஸ் வேற.. உன்னை நீ பெரிய இவன்னு நெனச்சிட்டு இருக்க இல்ல.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நீ எல்லாம் ஒரு ஆளே இல்லன்னு நீயே நினைக்கிற மாதிரி உன்ன நானும் என் மம்மியும் கண்டிப்பா மாத்துவோம். அந்த நாள் எப்ப வரும்னு தான் நாங்க டெய்லியும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.” என்று நினைத்த சஞ்சய் விஜய் என்னவோ மிகவும் கேவலமான ஒரு அற்ப புழுவை போல அவனை அலட்சியமாக பார்த்தான்.
வெற்றி வலுக்கட்டாயமாக அமுதாவை காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றான். அவர்களை தடுக்காமல் அப்படியே அனைவரையும் பார்த்தபடி மணிகண்டன் அமைதியாக நிற்க, அவர் அருகில் சென்ற கோவில் பூசாரி “ஐயா.. வடிவு அம்மா சொல்ற மாதிரி எனக்கும் நடக்கிறது ஒன்னும் சரியா படல. கல்யாணம்கிறது வாழ்க்கையில ரொம்ப முக்கியமான விஷயம். அது சம்பந்தமா ஒரு விஷயம் நடக்கும்போது, இப்படி அபசகுனமா நடக்கிறதை நம்ம சாதாரணமா பார்க்க முடியாது. கல்யாணம் பண்ணிக்க போற புள்ளைங்க ரெண்டும் பின்னாடி நல்லா இருக்கணும்ல! அதனால இந்த கல்யாண விஷயத்துல நீங்க ரொம்ப அவசரப்படுறீங்கன்னு எனக்கு தோணுது. இப்ப தான் சனி பெயர்ச்சி எல்லாம் நடந்திருக்கு. ஒருவேளை நேரம் காலம் சரி இல்லாததுனால கூட இப்படி எல்லாம் நடக்கலாம். நீங்க இந்த கல்யாணத்தை கொஞ்சம் பொருத்து பண்றத பத்தி யோசிச்சு பாருங்களேன்..!!” என்று தயக்கத்துடன் சொன்னார்.
அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அன்னபூரணி தன் கணவனின் அருகில் சென்று “ஆமாங்க எனக்கும் நம்ம சாமி சொல்றது தான் சரின்னு படுது. அமுதாவும் வெற்றியும் நம்ம வீட்டு பிள்ளைங்க. அவங்க எங்க போய்ட போறாங்க சொல்லுங்க? நம்ம எதுக்கு அவங்களுக்கு இப்படி அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி வைக்கணும்? ரெண்டு பேரோட வாழ்க்கை இதுல அடங்கி இருக்கு. கொஞ்சம் யோசிச்சு பாருங்க.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே சுமதியும் தன் பங்கிற்கு ஏதோ சொல்வதற்காக “மாமா” என்று வாயை திறந்தாள்.
உடனே அனைவரையும் முறைத்து பார்த்த மணிகண்டன் “போதும் இதுக்கு மேல யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். இந்த கல்யாணம் இப்ப நடந்தே ஆகணும்னு முடிவு பண்ணதுக்கு ஒரு காரணம் இருக்குல்ல.. இப்ப இந்த தடங்கல் வந்ததுனால அந்த காரணம் மரைஞ்சு போச்சா? எதுவுமே மாறவில்லைல்ல.. எல்லாமே அப்படியே தான் இருக்கு!
அதனால நானும் என் முடிவுல இருந்து மாற்றதா இல்ல. எனக்கு வெற்றியை விட அமுதாவை நினைச்சா தான் மனசுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கு. இப்ப கூட இத்தனை வருஷமா என்ன ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசாத புள்ள நான் ஏதோ கோபத்துல கை நீட்டிப்புட்டேன்னு அப்படி சாமி ஆடுன மாதிரி ஆடிட்டு போகுது. இவளை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது. அவளுக்கும் வெற்றிக்கும் கல்யாணம் பண்ணி வச்சா தான் என்னால் நிம்மதியா இருக்க முடியும். என்ன அத்த நீ என்ன சொல்ற? உனக்கு நான் சொல்றது சரின்னு தோனுதா? இல்ல இவங்கள மாதிரி நீயும் சகுனம் சங்கடம்ன்னு ஏதாவது சொல்லப் போறியா?” என்று கேட்க,
“எனக்கும் என்னமோ மனசுக்குள்ள உறுத்தலா தான் இருக்கு மணி. ஆனா என் மவன் வெற்றி அமுதா மேல உயிரையே வச்சிருக்கான். அவ இல்லைனா அதை அவனால தாங்கவே முடியாது. படத்துல எல்லாம் அந்த புள்ள நடிக்க போகுது. இப்ப ஏன் இப்படி எல்லாத்துக்கும் துடுக்குத்தனமா வாய் பேசிட்டு இருக்க புள்ளைய நம்ம நாளைக்கு சென்னைக்கு அனுப்ப வேண்டியது எல்லாம் வந்துச்சுன்னா, அவ மனசு மாறிட்டா என்ன பண்றது? அப்புறம் என் மவன் தான் வாழ்க்கையை தொலைச்சுப்புட்டமேன்னு உடைஞ்சு போயிருவான். சரியோ தப்போ கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிர வேண்டியதுதான்.” என்று நினைத்த வடிவு, “இந்த காலத்துல போய் சகுனமெல்லாம் யாரு மணி பார்க்கிறாங்க? எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். நம்ம நல்லது நெனச்சா எல்லாமே நல்லதாவே நடக்க போகுது! நீ விடு, எல்லாத்தையும் நம்ம ஆத்தா பாத்துக்கவா.” என்று சொல்லி விட்டாள்.
அதனால் அனைவரிடமும் இறுதியாக குறித்த தேதியில் வெற்றி மற்றும் அமுதாவின் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத்துக் கொண்டு ஜவுளிக்கடையை நோக்கி புறப்பட்டார் மணிகண்டன். ஹாஸ்பிடலில் அமுதாவிற்கு ட்ரீட்மென்ட் முடிந்தவுடன் அவளை கைத்தாங்களாக வெளியில் அழைத்து வந்த வெற்றி “நான் தான் உன்ன தூக்கிட்டு போய் கார்ல உட்கார வைக்கிறேன்னு சொல்றேன்ல ஏன் கேக்க மாட்டேங்குற? எல்லாத்துக்கும் உனக்கு அடம் புடிச்சே ஆகணுமா டி?” என்று அன்புடன் கேட்க, இன்னும் கோபம் குறையாமல் கொதிக்கும் குக்கர் போல சூடாகவே இருந்த அமுதா “நான் என்ன குழந்தையா? சும்மா சும்மா நீ என்ன தூக்கிட்டு போறதுக்கு? எனக்கு அதெல்லாம் பிடிக்காது நீ சும்மா இரு. நானே நடந்து வருவேன்.” என்று சொல்லிவிட்டு தன் காலை மெல்ல ஊனி நடக்க முடியாமல் நடந்து சென்றாள்.
அவர்கள் சென்று காரில் அமர்ந்தவுடன் அமுதாவின் சிவந்து போன கன்னத்தை தொட்டுப் பார்த்த வெற்றி “டாக்டர் கொடுத்த க்ரீமை கரெக்டா முகத்துல போட்டுடு. இல்லனா இந்த மார்க்ஸ் சீக்கிரம் சரியாகாது. இந்த பெரிய மாமாவ நான் வீட்ல போய் பேசிக்கிறேன். எதுக்குத் தான் இந்த அளவுக்கு அவருக்கு கோபம் வருதோ தெரியல. கோபம் வந்தா அதுக்குன்னு அவரு உன்ன இப்படி போட்டு அடிப்பாரா? எனக்கும் தான் கோவம் வருது. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நானும் பாக்குறேன் வரவர அவர் உன்ன ரொம்ப திட்டுறாரு. பேசாம நமக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா நீயும் நானும் தனிக்குடுத்தனம் போயிடலாம்.
நான் இப்பவே போய் இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நான் அவளை கூட்டிட்டு தனியா போயிடுவேன்னு சொல்லலாம்ன்னு தான் நினைக்கிறேன். அவர் என்ன சின்ன வயசுல இருந்து வளர்த்தினவரா போயிட்டாரு… அதான் அவர் கிட்ட அப்படி பேச மனசு வரமாட்டேங்குது. அதுவும் இல்லாம பொறந்ததில இருந்து வாழ்ந்த வீட்டை விட்டுட்டு எப்படி போறது? அதான் யோசனையாகவே இருக்கு.” என்று ஆற்றாமையில் அவளிடம் புலம்பி கொண்டிருந்தான்.
“யாராவது என்னை ஏதாவது சொன்னா இவனுக்கு இந்த அளவுக்கு கோவம் வருமா என்ன? வீட்டை விட்டு போற அளவுக்கு யோசிக்கிறான்? ஆனா நானே இவனை திட்டிக்கிட்டே இருக்கேன்.. என்னை ஒரு வார்த்தை கூட இவன் எதுவுமே சொல்லல. அந்த அளவுக்கு இவன் என்ன லவ் பண்றானா?” என்று நினைத்த அமுதா ஆச்சரியமாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
– காதல் மலரும்