அத்தியாயம் 52
வனிதா விஜய் மற்றும் அனாமிகாவின் டிவோர்ஸை என்ன செய்து தடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள். காலேஜ் செல்வதற்காக கிளம்பி வாசலை நோக்கி சென்று கொண்டிருந்த சஞ்சய் தன் அம்மா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு அவள் அருகில் சென்று அமர்ந்து “என்ன மா காலையிலயே என்ன யோசனை? அந்த அனாமிகா எப்படியோ விஜய் லைஃப்ல இருந்து போகப் போறாங்க. அடுத்து அவனுக்கு இன்னொரு பொண்ணு பாக்கலாமா, இல்லனா ஒரேடியா அவன மேல அனுப்பி வச்சிடலாமான்னு deep thinkingல இருக்கீங்களா?” என்று கிண்டலாக கேட்டான்.
உடனே அருகில் யாராவது இருக்கிறார்களா என சுற்றி முற்றி பார்த்த வனிதா “டேய் லூசு.. கொஞ்சம் கூட உனக்கு அறிவே இல்லையா? நடு வீட்ல உட்கார்ந்துட்டு என்ன பேசிட்டு இருக்க?” என்று கோபமாக கேட்க, “இந்த டைம்ல நம்ம வீட்ல உங்களையும் என்னையும் விட்டால் யாரு மா இருக்க போறா?” என்று சஞ்சய் கேட்டுக் கொண்டிருக்கும்போதே தனது ஹீல்ஸ் ஸ்லிப்பரை படியில் டொக் டொக் என்று அழுந்த ஊன்றி கீழே இறங்கி வந்துக் கொண்டு இருந்தாள் அவன் தங்கை சஞ்சனா.
அந்த காலடி சத்தத்தை வைத்து வந்திருப்பது தன் மகள் சஞ்சனா என கண்டுபிடித்து விட்ட வனிதா திரும்பி கூட பார்க்காமலேயே “இங்க நம்மளை விட்டா யார் இருக்காங்கன்னு உளறிட்டு இருந்தியே.. சஞ்சனாவும் நம்ம கூட தான் இருக்காங்க மறந்துட்டியா? அவ இப்ப நம்ம பக்கத்துல தான் வந்துட்டு இருக்கா. ஒழுங்கா வேற எதையாவது பத்தி பேசி சமாளிச்சுரு. அவ வரும்போது கரெக்டா நம்ம பேசுறத ஸ்டாப் பண்ணிட்டா அவளுக்கு நம்ம மேல டவுட் வந்துரும்..!!” என்று சஞ்சயின் காதுகளில் கிசுகிசுத்தாள்.
உடனே சஞ்சையும் என்னவோ தனக்குத் தான் இந்த உலகில் உள்ள அனைவரையும் விட விஜயின் மீது அக்கறை பொங்குகிறது என்பதைப் போல, “என்ன மா நம்ம விஜய் அண்ணா லைஃப்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது.. அவர் ஆசைப்பட்டு மேரேஜ் பண்ண ப்ரியா அண்ணி கூடையும் அவரால நிம்மதியா வாழ முடியல. நீங்க எல்லாரும் சேர்ந்து சூஸ் பண்ண அனாமிகா அன்னிக்குடையும் அவர் பால புடிக்காம டிவர்ஸ் பண்ண போறாரு. சரி இதுக்கு அப்புறமாவது அவருக்கு புடிச்ச மாதிரி அவர் லைஃப்ல ஒரு பொண்ணு வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சா, ஏற்கனவே ரெண்டு தடவை மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் அண்ணா ரொம்ப depressed ஆயிட்டாரு. 3rd time also மேரேஜ் பண்ணி ரிஸ்க் எடுக்கணும்னு அவருக்கு எப்படி தோணும்? அத நெனச்சா தான் எனக்கு கவலையா இருக்கு.” என்று வனிதாவிடம் சொல்லி புலம்புவதைப் போல பாவலா செய்ய தொடங்கினான் சஞ்சய்.
அதைக் கேட்டபடி அவர்கள் அருகில் வாடிய முகத்துடன் சென்ற சஞ்சனா “எனக்கும் அத நெனச்சா தான் கஷ்டமா இருக்கு சஞ்சய். அண்ணா எப்படியோ அனாமிகா அண்ணியை டிவேர்ஸ் பண்ணிருப்பாரு. ஆனா அதுக்கப்புறம் அவரோட லைஃப் என்ன ஆகும்? நான் அவர் கிட்ட அனாமிகா நீ கூட சேர்ந்து வாழ்றத பத்தி இன்னொரு தடவை consider பண்ணி பாருங்களேன் அண்ணான்னு காலைல கூட கால் பண்ணி கேட்டேன்.
பட் நான் சின்ன பொண்ணு. எனக்கு இதெல்லாம் சொன்னாலும் புரியாதுன்னு சொல்லிட்டு அண்ணா காலை கட் பண்ணிட்டாரு. நீங்களாவது ஏதாவது பண்ணிங்களேன் மா! விஜய் அண்ணா ரொம்ப பாவம். அவர் ஆசைப்பட்ட மாதிரி இப்ப வரைக்குமே அவர் லைஃப் அமையவே இல்ல.” என்று கேட்டபடி சென்று வனிதாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அவள் வனிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் “ப்ளீஸ் மா.. சஞ்சய் சொன்ன மாதிரி விஜய் அண்ணா இன்னொரு மேரேஜ் பண்ணிக்கறதுக்கு எல்லாம் possibilities-ஏ இல்லைன்னு தாங எனக்கும் தோணுது. சோ எப்படியாவது மறுபடியும் அனாமிகா அண்ணியும் அண்ணாவும் சேர்ந்து வாழணும். அது உங்களால மட்டும் தான் முடியும்.” என சொன்னதையே சொல்லி கெஞ்சி கொண்டே இருந்தாள்.
“நீ சொல்றது எனக்கு புரியுதும்மா சஞ்சு. ஆனா நான் என்ன பண்றது சொல்லு? எனக்கு மட்டும் என் பையன் விஜய் சந்தோஷமா வாழ்றதை பார்க்கணும்னு ஆசை இருக்காதா? அவனுக்கு எல்லாரையும் விட உன்ன தான் ரொம்ப பிடிக்கும். ஆனா நீ சொல்லியே அவன் கேக்கல.. இப்போ நான் போய் சொன்னா மட்டும் அவன் அனாமிகா கூட மறுபடியும் சேர்ந்து வாழ்றத பத்தி யோசிப்பானா?
உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி இந்த வீட்ல பொறந்தது அவன் தான். உங்களுக்கே கல்யாண வயசு வரப்போகுது. ஆனா அவரோட கல்யாண வாழ்க்கை இப்படி இருக்கேன்னு நினைச்சு எனக்கு படுத்தா நைட் எல்லாம் தூக்கம் கூட வர மாட்டேங்குது சஞ்சனா.. என் மனசே பாரமா இருக்கு. இப்ப கூட விஜய் வாழ்க நல்லா இருக்கணும்னு கோவிலுக்கு போய் வேண்டிக்கலாம்ன்னு தான் கிளம்பிட்டு இருந்தேன். சஞ்சய பாத்ததும் அப்படியே பேசிக்கிட்டே உட்கார்ந்துட்டேன்.” என்று சொல்லி என்னவோ விஜய் தனது சொந்த மகன் போல அவனது நலத்தின் மீது தனக்கு அக்கறை பொங்கி வழிவதைப் போல அழுது நாடகமாடி தன்னுடைய சொந்த மகளிடமே நடித்தாள் வனிதா.
சஞ்சய், சஞ்சனா இருவருமே வனிதாவின் வாரிசுகள் தான். விஜயின் அப்பா குருமூர்த்தியை தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் விஜய் மீது தனக்கு பாசம் எக்கச்சக்கமாக இருப்பதாக அவரை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு திருமணமாகும்போது நடிக்க தொடங்கிய வனிதா இன்றுவரையிலும் அனைவரின் முன்னிலையிலும் நடித்து கொட்டிக் கொண்டிருக்கிறாள்.
சஞ்சனா பிறந்த பிறகு விஜய் தனக்கு ஒரு குட்டி தங்கை பிறந்திருக்கிறாள் என நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டான். அதனால் அவளை எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டு தன்னுடைய பெரும்பாலான நேரத்தை அவன் ஓரளவிற்கு வரும் வரை சஞ்சனா உடனே செலவிட்டான். அவர்களுக்குள் சிறு வயது முதலே இருந்த அந்த பிணைப்பு சஞ்சனாவிற்கு தன் அப்பாவின் முதல் தாரத்திற்கு பிறந்த மகன் தான் விஜய் என்று தெரிந்தாலும் கூட, சஞ்சயை விட விஜயை ஒரு படி மேலே வைத்து பார்க்க பழகி விட்டிருந்தது. விஜய் அண்ணன் என்றால் அவளுக்கு எப்போதும் உயிர்.
ஏற்கனவே அனாமிகாவின் அப்பா ராஜேந்திரன் வனிதாவிடம் விஜய் கோர்ட்டுக்கு வராமல் பார்த்துக் கொள்ள சொல்லி கேட்டிருந்ததால், இப்போது சஞ்சனா தன்னிடம் விஜயை பற்றி பேசுவதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த வனிதா அவளிடம் பெரிதாக கதறி அழுது டிராமா போட்டு “ஐயோ சஞ்சனா.. ஆஆஆஆ.. அம்மா.. என்னன்னு தெரியல திடீர்னு எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு டி. விஜயை நினைச்சு எனக்கு இருக்கிற கவலையிலேயே நான் ஹார்ட் அட்டாக்கில போய் சேர்ந்திடுவேன் போல இருக்கு.” என்று பெரிதாக பில்டப் செய்து பேசினாள்.
தன் அம்மா நடிப்பது பற்றி தெரிந்திருந்தாலும் சஞ்சய் வனிதாவின் திட்டத்தை புரிந்து கொண்டு “ஐயோ அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு? அண்ணாவை நினைச்சு கவலைப்பட்டு உங்களுக்கு ஏதாவது ஆயிட போகுது. பிரஷர் டேப்லெட் எல்லாம் கரெக்டா போட்டிங்களா? நம்ம வேணா ஹாஸ்பிடலுக்கு போகலாமா?” என்று பதட்டமான முகத்துடன் கேட்க, உடனே “ஐயோ.. அப்பா.. என்னால முடியல டா சஞ்சய். அப்படியே முகமெல்லாம் வேர்க்குர மாதிரி இருக்கு. சரியா மூச்சே விட முடியல. நெஞ்சில குத்துற மாதிரி வலிக்குது டா. ஹைய்யோ கடவுளே.. எனக்கு என்னமோ ஆகுதே.. என் மூணு பிள்ளைகளும் கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழ்றத பாக்காமயே நான் போய் சேர்ந்துடுவேன் போல இருக்கே! சஞ்சனா.. என்னமோ தெரியல எனக்கு படபடன்னு வருது மா.” என்று சென்டிமென்டலாக டயலாக் பேசி ஓவராக நடித்துக் கொட்டினாள் வனிதா.
தன் அம்மாவிற்கு உண்மையாகவே உடல்நிலை சரியில்லை என நினைத்து பதறிப்போன சஞ்சனா “oh my God.. அம்மா நீங்க panic ஆகாதீங்க ப்ளீஸ்..!!” என்று சொல்லிவிட்டு சஞ்சையை பார்த்து “டேய் என்ன டா வேடிக்கை பாத்துட்டு இருக்க? இப்படியே விட்டா அம்மாவுக்கு ஏதாவது ஆய்டுபோகுது. நீ போய் காரை ஸ்டார்ட் பண்ணு. நம்ம உடனே அம்மாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்.” என்று சொல்லி வனிதாவை எழுந்து நிற்கவைக்க முயற்சி செய்தாள்.
உடனே ஓட்டமும் நடையுமாக வெளியில் ஓடிய சஞ்சய் காரை ஸ்டார்ட் செய்தான். கை தாங்கலாக தன் அம்மாவை அழைத்து சென்று காரில் ஏற்றினாள் சஞ்சனா. குருமூர்த்தியும் இப்போது ஊரில் இல்லை என்பதால் இந்த நேரத்தில் தன் அம்மாவிற்கு ஏதேனும் ஆகிவிட்டால் தங்களால் எப்படி சமாளிக்க முடியும் என்ற பதட்டம் அவளை தொற்றிக்கொள்ள, “விஜய் அண்ணா.. அவர் வந்த தான் அம்மா நார்மலாவாங்க. அவரைப் பார்த்தாலே அவங்களுக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கும். நான் இப்பவே அவருக்கு கால் பண்ணி அவர் இங்க வர சொல்றேன்.” என்று நினைத்த சஞ்சனா சஞ்சையை ஹாஸ்பிடலுக்கு காரைக்கு செலுத்த சொல்லிவிட்டு விஜய்க்கு கால் செய்தாள்.
குளித்து கிளம்பி அன்னபூரணி சொன்னதைப் போலவே புடவை கட்டிக் கொண்டு தனது அறையில் இருந்து வெளியில் வந்தாள் அமுதா. அவருக்கு கொலை பசி பசித்தது. அதனால் சாப்பிடலாம் என நினைத்து அவள் கிச்சன் பக்கம் சென்று கொண்டிருக்க, அவள் கையைப் பிடித்து இழுத்த சுமதி “ஜவுளி எடுக்க போறதுக்கு முன்னாடி கோவிலுக்கு போய் கல்யாண பத்திரிக்கையை படைத்த சாமி கும்பிடனுமாம். அதனால நீயும் வெற்றியும் விரதத்தோட கோவிலுக்கு வரணும்னு பெரிய மாமா சொல்லிட்டாரு.
இப்ப தான் வெற்றியும் பசிக்குதுன்னு சாப்பிட வந்தான். இதே மாதிரி தான் சொல்லி அவனையும் வெளிய அனுப்பி வச்சிட்டேன். கோவிலுக்கு போயிட்டு, அப்படியே ஜவுளி கடைக்கு போய் எல்லாருக்கும் டிரஸ் எடுத்துட்டு வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் நீங்க சாப்பிட முடியும். உனக்கு ரொம்ப பசித்ததுன்னா சொல்லு. நான் வேணா உங்க ரெண்டு பேருக்கும் பால் காய்ச்சி தரேன். விரதத்தில இருந்தாலும் பாலும், பழமும் சாப்பிடலாம்.” என்றாள்.
தன் அண்ணியை பாவமாக பார்த்த அமுதா “வெற்றி வேற ஏதாவது சாப்பிட்டானா?” என்று கேட்க, “யாரு அவனா? சும்மாவே அவன் உன் மேல கிறுக்கு புடிச்சு தெரியுவான். இப்ப உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகப்போகுது. கல்யாண பத்திரிக்கை வைக்க சாமி கும்பிட போறது எவ்வளவு பெரிய விஷயம்.. உங்க நல்லதுக்காக நீங்க ரெண்டு பேரும் விரதம் இருக்கணும்னு மாமா சொன்னத கேட்டு எல்லா நல்லபடியா முடிஞ்சு வீட்டுக்கு வர்ற வரைக்கும் என் பல்லுல பச்ச தண்ணி கூட படாதுன்னு ஒத்த கால்ல நிக்கிறான்.” என்றாள் சுமதி.
“ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கூட வெற்றி என் மேல எவ்ளோ பாசம் வச்சிருக்கான்னு காமிச்சிக்கிட்டே இருக்கான். நான் தான் எத பத்தியும் கவலைப்படாத மாதிரியே இருக்கேன். பெரிய அண்ணா இப்ப எல்லாம் நான் அவர் சொல்றத நான் கேக்க மாட்டேங்குறேன்னு என் மேல கோவப்பட்டுகிட்டே இருக்காரு. வெற்றி நமக்காகவும் சேர்த்து விரதம் இருக்கும்போது நம்ம மட்டும் எதுவும் சாப்பிட்டா நல்லா இருக்காது.” என்று நினைத்த அமுதா “அப்ப எனக்கு எதுவும் வேண்டாம் அண்ணி.” என்று சொல்லி விட்டாள்.
- காதல் மலரும்